ஜோதிடர் உதவியால் பெரும் கோடீஸ்வரரான டால்மியா, நேரு மருமகனால் சிறைக்குச் சென்றது எப்படி?

டால்மியா-ஜெயின் குழுமம்

படக்குறிப்பு, ராமகிருஷ்ண டால்மியா
  • எழுதியவர், விநாயக் ஹோகடே
  • பதவி, பிபிசி நிருபர்

இந்தியா போன்ற அதிக சந்தைப் போட்டி உள்ள நாட்டில், சுதந்திரத்திற்கு முன்பிருந்தே பல்வேறு துறைகளில் விரிவடைய விரும்பிய பல தொழில் குழுக்கள் இருந்தன.

சுதந்திரத்திற்குப் பிறகும், தொழில்முனைவோர் அல்லது தொழில்துறை குழுக்கள் நெறிமுறையற்ற நடைமுறைகளைப் பயன்படுத்துவதாகவும், ஊழல் அல்லது முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தொழிலதிபர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான உறவு மற்றும் எதிரணியினர் கூறும் குற்றச்சாட்டுகள் பொதுக் கருத்திலும் அரசியலிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்திய வரலாற்றில் ஒரு சக்திவாய்ந்த தொழில்துறை குழுமம், குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முதல் சம்பவம் சுதந்திரத்திற்குப் பிறகு நடந்தது.

1950களில் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியாவின் அப்போதைய மிகப்பெரிய தொழில்துறை நிறுவனம் ஒன்று அத்தகைய குற்றச்சாட்டுகளில் சிக்கியது.

அப்போதைய ஜவஹர்லால் நேரு அரசு அந்த குழுமத்திற்கு எதிராக விசாரணை நடத்தி குற்றவாளி என்று அறிவித்தது.

டால்மியா-ஜெயின் குழுமம்தான் அந்த தொழில் நிறுவனமாகும்.

சுவாரஸ்யமாக, நேருவின் சொந்த மருமகன் பெரோஸ் காந்திதான் டால்மியா-ஜெயின் குழுமத்தை குற்றம் சாட்டினார்.

டால்மியா-ஜெயின் குழுமத்தின் ஊழல் மற்றும் அதன் சுவாரஸ்யமான வரலாறு என்ன என்பதை இக்கட்டுரை விளக்குகின்றது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

டால்மியா-ஜெயின் குழுமம்

சுதந்திர இந்தியாவில் தொழில்மயமாக்கல் துரிதப்படுத்தப்பட்ட காலம் அது.

டால்மியா-ஜெயின் குழுமம் அந்த நேரத்தில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகவும் மற்றும் நாடு முழுவதும் பரவியிருந்த தொழில்துறை நிறுவனங்களில் முக்கியமானதாகவும் விளங்கியது.

இந்த குழுமம் தவறு செய்ததாக மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டப்பட்டாலும், சுதந்திர இந்தியாவில் தொழில்மயமாக்கலை விரைவுபடுத்துவதில் அதன் பங்களிப்பு இன்றும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.

சிமென்ட், வங்கி (பாரத் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி), காப்பீட்டு நிறுவனம்(பாரத் இன்சூரன்ஸ்), மீடியா (பெனட் கோல்மேன்), சர்க்கரை, காகிதம், ரசாயனம், ஜவுளித்துறை, விமானப் போக்குவரத்து, மோட்டார் வாகனங்கள், மின் விநியோகம், பிஸ்கட் உற்பத்தி மற்றும் பால் வணிகம் போன்ற பல்வேறு துறைகளில் டால்மியா-ஜெயின் குழுமத்தின் வணிகம் பரவியிருந்தது.

இந்தக் குழுமத்தின் தலைவர் ராமகிருஷ்ண டால்மியா.

சுதந்திரத்திற்கு முன்பே , அதாவது 1930களில் இருந்து ஒரு முக்கிய தொழிலதிபராக ராமகிருஷ்ண டால்மியா விளங்கினார்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் நாட்டின் மிகப்பெரிய தொழில்முனைவோர்களில் டால்மியாவின் பெயர் பரவலாக அறியப்பட்டது.

சுதந்திரத்திற்குப் பிறகு, பல்வேறு தொழில்களிலும் அவரது குழுமத்தின் செல்வாக்கு அதிகரித்தது. அப்போதைய டாடா மற்றும் பிர்லா குழுமத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் டால்மியா-ஜெயின் குழுமம் இருந்தது.

டால்மியா-ஜெயின் குழுமம்

பட மூலாதாரம், srishti publishers

படக்குறிப்பு, 1950 களில் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியாவின் அப்போதைய மிகப்பெரிய தொழில்துறை நிறுவனம் தவறான குற்றச்சாட்டுகளில் சிக்கியது.

சிறந்த வணிகர் மற்றும் தொழில்முனைவோர்

ஒரு காலத்தில் மிகவும் ஏழ்மையில் இருந்த டால்மியா எப்படி பெரிய தொழிலதிபரானார் என்ற கதை மிகவும் சுவாரஸ்யமானது.

1949 ஆம் ஆண்டு அமெரிக்க பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் டால்மியா தனது வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி பேசினார்.

பாஸ்கர் முகர்ஜி தனது ‘ Founding Fathers of Fraud’ என்ற புத்தகத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜஸ்தானின் சிடாவா எனும் ஊரில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த டால்மியா தனது குழந்தைப் பருவத்தை கொல்கத்தாவில் கழித்தார். தந்தையின் மரணத்திற்குப் பிறகு பதினெட்டு வயதில், ஒரு பெரிய குடும்பத்தின் பொறுப்பு அவர் தலையில் விழுந்தது.

அவர் தனது மாமா மோதிலால் ஜுன்ஜுன்வாலாவுடன் பணிபுரிந்தார். அங்கு பல தொழில்களையும் கற்றுக்கொண்டார்.

குறிப்பாக வெள்ளி வணிகத்தின் அனைத்து நுணுக்கங்களையும் டால்மியா கற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் நன்றாக சம்பாதித்த பிறகு, சூதாட்டத்திற்கு அடிமையாகி மீண்டும் பொருளாதாரச் சிக்கலில் விழுந்தார்.

கடனில் சிக்கிய டால்மியா, ஜோதிடரின் உதவியைப் பெற்று வெள்ளி வியாபாரத்தில் பெரும் லாபம் ஈட்டினார். இதை அவரே தனது வாழ்க்கை வரலாறு மற்றும் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

சம்பாதித்த பிறகு, டால்மியா சூதாட்டத்தை கைவிட்டு தொழிலில் கவனம் செலுத்தினார்.

இருப்பினும், காலப்போக்கில் அவரது குழுமம், நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகவும், அவரது காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஊழலை அம்பலப்படுத்திய நேருவின் மருமகன்

டால்மியா-ஜெயின் குழுமம்

பட மூலாதாரம், Nehru Memorial Museum and Library

படக்குறிப்பு, அப்போதைய ஜவஹர்லால் நேருவின் அரசு அந்தத் தொழில் குழுமத்திற்கு எதிராக விசாரணை நடத்தி அதனை குற்றவாளி என்று அறிவித்தது

அன்றைய 100 ரூபாயின் மதிப்பு இன்றைய 9,163.80 ரூபாய்க்குச் சமம் என்கிறது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (OECD) மற்றும் உலக வங்கி குறிப்பிடுகிறது.

முந்த்ரா ஊழல் சுதந்திர இந்தியாவின் முதல் நிதி மோசடியாக கருதப்படுகிறது. டால்மியா-ஜெயின் ஊழல் இல்லாமல் அந்த முந்த்ரா ஊழல் முழுமையடையாது. இந்த இரண்டு பெரிய ஊழல்களையும் ஜவஹர்லால் நேருவின் மருமகன் பெரோஸ் காந்திதான் அம்பலப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர இந்தியாவின் முதல் நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் இருந்து மக்களவைக்கு ஃபெரோஸ் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் பிரதிநிதியான பிறகு அவரது ஆற்றிய முதல் உரை அதுவாகும்.

1955 ஆம் ஆண்டில், ஒரு காப்பீட்டு நிறுவனத்தில், பெரிய அளவில் முதலீடு செய்த ஒருவரின் பணம் காணாமல் போனது விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, காப்பீட்டுச் சட்டங்களை வலுப்படுத்தும் வகையில், அப்போதைய குடியரசுத் தலைவர் நவம்பர் மாதம் அவசரச் சட்டம் ஒன்றை வெளியிட்டார்.

இந்த அவசரச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வந்தது. அந்த சட்டத்தை ஆதரித்து பெரோஸ் காந்தி சுமார் ஒரு மணி நேரம் ஐம்பது நிமிடங்கள் உரை நிகழ்த்தினார்.

ஃபெரோஸ் காந்தி கூறுகையில், “காப்பீட்டுத் தொழில் மிகவும் லாபகரமாக இருப்பதால், பல புதிய நிறுவனங்கள் இத்தொழிலில் இறங்கியுள்ளன. குறைந்த மூலதனத் தேவை மற்றும் மக்கள் செலுத்தும் பணத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை இந்த நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துகின்றன,” என்றார்.

ஃபெரோஸ் காந்தி இறுதியாக அதே உரையில் டால்மியா-ஜெயின் குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாரத் இன்சூரன்ஸ் எனும் காப்பீட்டு நிறுவனத்தை குறிவைத்துப் பேசினார்.

பாரத் இன்சூரன்ஸ் நிறுவனம், ஓய்வூதிய நிதியில் இருந்து 220 லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளது என்று ஃபெரோஸ் காந்தி குற்றம் சாட்டினார். அவரது இந்த உரை, காப்பீட்டுத் துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து அரசின் கவனத்தை ஈர்த்தது.

டால்மியா 1936-ஆம் ஆண்டில் பாரத் இன்சூரன்ஸ் நிறுவனத்தை வாங்கினார், ஒரே வருடத்தில் நிறுவனத்தின் வருமானம், ரூ. 25 கோடி ஆக உயர்ந்தது.

ஃபெரோஸ் காந்தி தனது உரையில் டால்மியா குழுமத்தின் செயல்பாடுகளை கேலி செய்து அதன் பத்திரங்களை முன்வைத்ததாக பாஸ்கர் முகர்ஜி தனது ‘ஃபவுண்டிங் ஃபாதர்ஸ் ஆஃப் ஃபிராட்’ எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரோஸ் காந்தி பேசும் போது, அமெரிக்கப் பத்திரிகைகளுக்கு டால்மியா அளித்த பேட்டியை குறிப்பிட்டு கேலி செய்தார்.

டால்மியா எப்படி வெள்ளி வியாபாரம் செய்ய ஆரம்பித்தார், ஜோதிடரின் ஆலோசனைப்படி எப்படி பணக்காரர் ஆனார் என்பதும் நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது.

டால்மியா இப்போது காப்பீடு மற்றும் வங்கித் துறையில் பொதுப் பணத்தை வைத்து சூதாடுகிறார் என்றும் பெரோஸ் காந்தி விமர்சித்தார்.

இது தொடர்பாக டால்மியாவின் மகள் நீலிமா டால்மியா, ‘ஃபாதர்ஸ் டியர்ஸ்ட்: தி லைஃப் அண்ட் டைம்ஸ் ஆஃப் ஆர். கே. டால்மியா’ என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

அந்த புத்தகத்தில், “1955-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் பெரோஸ் காந்தி முன்வைத்த வலுவான கோரிக்கை, நேரு எதிர்பார்த்துக் காத்திருந்த வாய்ப்பைத் தந்தது. அதன் பேரில் விவியன் போஸ் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டதன் மூலம், டால்மியா மிக மோசமான சூழ்நிலையில் சிக்கினார்.”என்று நீலிமா டால்மியா குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை, குற்றம் மற்றும் தண்டனை

டால்மியா-ஜெயின் குழுமம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டால்மியா-ஜெயின் குழுமத்தின் முறைகேடுகளை வெளிப்படுத்தியவர் நேருவின் சொந்த மருமகன் பெரோஸ் காந்தியே தவிர வேறு யாருமல்ல.

அதன் பிறகு, நேரு தலைமையிலான இந்திய அரசு 1956-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி அன்று டால்மியா-ஜெயின் குழும நிறுவனங்கள் மீதான விசாரணையைத் தொடங்கியது. அந்த குழும நிறுவனங்களில் மோசடி, நேர்மையின்மை அல்லது சட்டவிரோத பரிவர்த்தனைகள் உள்ளதா என்பதை ஆராய்வதே இதன் நோக்கம்.

மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். ஆர். டெண்டுல்கர் மற்றும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி விவியன் போஸ் தலைமையிலான ஆணையம் விசாரணையைத் தொடங்கியது.

டெண்டுல்கரைத் தவிர, ஏஎஃப் பெர்குசன் அன்ட் கோ நிறுவனத்தின் பட்டயக் கணக்காளர் என். ஆர். மோதி மற்றும் வருமான வரித்துறை ஆணையர் எஸ். சி. சௌத்ரி ஆகியோர் விசாரணை ஆணையத்தின் உறுப்பினர்களாக இருந்தனர்.

1958-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி அன்று டெண்டுல்கர் உடல் நலக்குறைவால் இறந்த பிறகு நீதிபதி விவியன் போஸ் விசாரணைக்கு தலைமை தாங்கினார்.

விசாரணைக் குழு தனது 815 பக்க அறிக்கையை 15 ஜூன் 1962 அன்று சமர்ப்பித்தது.

பொதுமக்களின் முதலீடுகளை டால்மியா குழுமம் முறைகேடாகப் பயன்படுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், கார்பரேட் நிறுவனங்களின் பணம் தனிப்பட்ட தேவைக்கு பயன்படுத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

விசாரணை ஆணையத்தை நோக்கி கேள்வி எழுப்பி டால்மியா குழுமம் நீதிமன்றத்தின் அணுகியது.

விசாரணை ஆணையச் சட்டம் – 1952 இன் கீழ் இந்த விசாரணை செல்லாது என்றும், தனியார் நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது என்றும் அவர் முறையிட்டார்.

ஆனால், டால்மியா குழுமத்தின் வாதங்களை நீதிமன்றம் நிராகரித்தது.

டால்மியா குழுமத்தின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், டால்மியா குழுமத்தில் நடந்த தவறுகள் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், இது பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்றும் கூறியது.

இறுதியில் டால்மியாவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

ஃபெரோஸ் காந்தி இந்த ஊழலை அம்பலப்படுத்திய பிறகு, 1956-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி அன்று இந்தியாவில் காப்பீட்டுத் துறை தேசியமயமாக்கப்பட்டது. பின்னர் டால்மியா குழுமம் வீழ்ச்சியடைத் தொடங்கியது.

தலைவர்களுடன் நட்பாகப் பழகிய டால்மியா

டால்மியா-ஜெயின் குழுமம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி டால்மியா-ஜெயின் குழும நிறுவனங்கள் மீது இந்திய அரசு விசாரணையைத் தொடங்கியது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சி துரிதப்படுத்தப்பட்டது. பல இந்தியத் தொழிலதிபர்கள் இந்த காலகட்டத்தை தங்கள் தனிப்பட்ட செல்வத்தை பெருக்குவதற்கான வாய்ப்பாக கருதினர். இதற்கு டால்மியாவும் விதிவிலக்கல்ல.

ஒரு பெரிய தொழிலதிபராக இருப்பதால், முகமது அலி ஜின்னா, ஜம்னாலால் பஜாஜ், ஜே. கே. பிர்லா, ஜெய்ப்பூர், தர்பங்கா, ஜோத்பூர் மற்றும் ஜாம்நகர் மகாராஜாக்கள் மற்றும் ஹைதராபாத் நிஜாம் ஆகியோருடன் டால்மியா மிகவும் நல்ல உறவைக் கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில் காங்கிரஸ் மற்றும் மகாத்மா காந்தி மீது மரியாதைக்குரிய உணர்வுகளைக் கொண்டிருந்தார் டால்மியா. பின்னர் அதே டால்மியா ஜவஹர்லால் நேருவை விமர்சித்தார்.

சுதந்திரத்திற்கு முன்பு, டாக்டர். ராஜேந்திர பிரசாத், சுபாஷ் சந்திரபோஸ், வல்லபாய் படேல், ஜெய்பிரகாஷ் நாராயண் போன்ற பல தலைவர்களுடனும், புரட்சியாளர்களுடனும் டால்மியா நல்லுறவு கொண்டிருந்தார்.

அவர் ஜவஹர்லால் நேருவுடன் ஒருபோதும் பழகவில்லை. ஆனால் முகமது அலி ஜின்னாவுடன் நல்ல உறவைக் கொண்டிருந்தார். அவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ஜின்னாவின் வீட்டிலிருந்து ஐந்து நிமிட தூரத்தில் டால்மியாவின் வீடு அமைந்திருந்தது. அவர்கள் அடிக்கடி ஒன்றாக நேரம் செலவழித்தனர்.

டெல்லியில் ஜின்னாவின் பங்களா, நம்பர் 10, ஔரங்கசீப் சாலையில் உள்ளது(தற்போது ஏபிஜே அப்துல் கலாம் சாலை) .

நாட்டில் பிரிவினை ஏற்பட்ட பிறகு இரண்டு லட்சம் ரூபாய்க்கு டால்மியாவால் அந்த பங்களா வாங்கப்பட்டது.

டால்மியா மிகுந்த மத நம்பிக்கை கொண்டவர். பசு வதையைத் தடை செய்ய பல பணிகளை மேற்கொண்டுள்ளார்.

டால்மியாவை தொலைபேசியில் அழைத்த கோட்சே

டால்மியா-ஜெயின் குழுமம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜின்னாவின் வீட்டிலிருந்து ஐந்து நிமிட தூரத்தில் டால்மியாவின் வீடு அமைந்திருந்தது. அவர்கள் அடிக்கடி ஒன்றாக நேரம் செலவழித்தனர்

மகாத்மா காந்தியை படுகொலை செய்வதற்கு முன்பாக விரிவாக கண்காணிப்பு பணிகளை நாதுராம் கோட்சே மேற்கொண்டுள்ளார். 1948-ஆம் ஆண்டு ஜனவரியில் டெல்லி வந்த நாதுராம் கோட்சே, டெல்லி ரயில் நிலையத்திலிருந்து டால்மியாவை அழைத்துள்ளார்.

இந்தத் தகவலை டால்மியாவின் மகள் நீலிமா டால்மியா தனது ‘ஃபாதர்ஸ் டியர்ஸ்ட்: தி லைஃப் அண்ட் டைம்ஸ் ஆஃப் ஆர். கே. டால்மியா எனும் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

நீலிமா தனது புத்தகத்தில், “டால்மியா ஒரு பணக்கார மற்றும் சக்தி வாய்ந்த இந்து. அவருடைய குரல் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றடையக் கூடியது என்று கோட்சே நினைத்தார். அதனால் டால்மியாவால் தனக்கு உதவ முடியும் என்று கோட்சே நம்பினார். டால்மியாவைப் பற்றி அவருக்கு வேறு எதுவும் தெரியாது. டால்மியா பக்தியானவர் மற்றும் இந்து மதத்தை கடைபிடிப்பவர் என்பதும், காங்கிரஸின் மீதான தனது அவமதிப்பை பகிரங்கமாக வெளிப்படுத்தியதும் அவருக்கும் தெரிந்திருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அழைத்த நபர், பணம் கேட்டு அழைக்கலாம் என நினைத்து டால்மியா அந்த அழைப்பை எடுக்கவில்லை. இருப்பினும், அந்த முடிவு பின்னர் டால்மியாவுக்கு சாதகமாக அமைந்தது.

காரணம், காந்தியின் கொலைக்குப் பிறகு நாதுராம் கோட்சே கைது செய்யப்பட்ட போது, ​​டால்மியாவின் தொடர்பு எண் கோட்சேயின் குறிப்பேட்டில் இருந்தது. ஆனால் காந்தியின் கொலையில் டால்மியாவின் தொடர்பை காவல்துறையால் கண்டறிய முடியவில்லை.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.