கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக ஏ.எல்.எம்.அஸ்மி நியமனம் ! on Monday, January 06, 2025
இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட (SLAS – I) அதிகாரியான ஏ.எல்.எம்.அஸ்மி கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இவர் தனது கடமைகளை அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அஸ்மியின் சேவைத் தரம், தகுதி மற்றும் உள்ளூராட்சி நிர்வாகத்தில் ஒரு தசாப்த அனுபவம் என்பவற்றின் அடிப்படையிலும் உள்ளூராட்சி நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு வழங்கிவந்த தலைமைத்துவ வழிகாட்டுதல்கள், நிர்வாக மற்றும் முகாமைத்துவ செயற்பாட்டு திறமைகள் என்பவற்றை கருத்திற்கொண்டும் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
10 வருடங்கள் உள்ளூராட்சி மன்ற அனுபவத்தில் திளைத்து கிழக்கு மாகாணத்தில் ஒரு சிறந்த உள்ளூராட்சி மன்றமாக அக்கரைப்பற்று மாநகரசபை மற்றும் கல்முனை மாநகரசபை என்பவற்றை மிளிரச் செய்வதற்காக அவர் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியுள்ளார். பொத்துவில், அக்கரைப்பற்று உதவி பிரதேசசெயலாளர், அக்கரைப்பற்று மாநகராட்சி ஆணையாளர், கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளரும், பதிவாளரும், கல்முனை மாநகராட்சி ஆணையாளர், மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (ஆளணி மற்றும் பயிற்சி) என பல்வேறு பொறுப்புமிக்க பதவிகளை வகித்து அவர் அளப்பெரும் சேவைகளை ஆற்றியுள்ளார்.