கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஓரிரு நாட்களில் பதவி விலகலா? புதிய தகவல்கள்

கனடா, ஜஸ்டின் ட்ரூடோ

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
  • எழுதியவர், டாம் ஜியோகெகன்
  • பதவி, பிபிசி செய்தி

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அடுத்த சில நாட்களில் தனது பதவி விலகலை அறிவிக்கலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவில் ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவது குறித்து அவர் பரிசீலித்து வருகிறார், இது அவரது ஒன்பது ஆண்டு கால பிரதமர் பதவி காலத்தையும் முடிவுக்கு கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.

கனேடிய பொருட்களுக்கு அமெரிக்கா கடுமையான வரிகளை விதிக்கும் என்ற டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தலை எவ்வாறு சமாளிப்பது என்ற விவகாரம் உட்பட சில கருத்துவேறுபாடுகளை மேற்கோள் காட்டி கடந்த மாதம் அவரது நிதி அமைச்சர் பதவி விலகினார்.

ட்ரூடோவின் புகழ் கனடா மக்கள் மத்தியில் சரிந்துள்ளது. அவரது கட்சி இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் தோல்வியை சந்திக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கனடா, ஜஸ்டின் ட்ரூடோ

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஓரிரு நாட்களில் பதவி விலகலா?

ட்ரூடோ தனது சொந்த எம்.பி.க்களால் கட்டாயப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார் என்பது போன்ற ஒரு பிம்பம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, புதன்கிழமை நடக்கவுள்ள தனது கட்சியின் எம்.பி.க்கள் கூட்டத்திற்கு முன்பே பதவி விலகுவது குறித்து அவர் அறிவிப்பு வெளியிடலாம் என்று `குளோப் அண்ட் மெயில்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

`குளோப் அண்ட் மெயில்’ தகவலின்படி, ட்ரூடோ உடனடியாக பதவி விலகுவாரா அல்லது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமராக நீடிப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அவர் தனது எதிர்காலம் குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்ரூடோவுக்குப் பிறகு யார் பொறுப்பேற்றாலும், அமெரிக்காவுடன் சாத்தியமான வர்த்தகப் போரை எதிர்கொள்ளும் அதேவேளையில், வலுவான பிரசாரத்தின் மூலம் தேர்தலில் கட்சியை வழிநடத்தவும் வேண்டியிருக்கும்.

கனடாவில் பொதுத்தேர்தல் அக்டோபர் மாதத்திற்கு முன் நடக்க வேண்டும். ஆனால் லிபரல் கட்சியின் தலைமையில் ஏற்படும் மாற்றம் வரவிருக்கும் மாதங்களிலேயே தேர்தல் நடப்பதற்கான சாத்தியங்களை உருவாக்கலாம்.

ட்ரூடோ மீது சொந்தக் கட்சியிலேயே அதிருப்தி

ட்ரூடோவின் பதவி விலகல் என்பது கனடா அரசியல் களத்தில் ஒரு சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும்.

அவர் யாரும் எதிர்பாராத சமயத்தில், 2015 இல் தனது கட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வந்தார்.

அப்போது 43 வயதாக இருந்த ட்ரூடோ, அரசியலில் புதிய முகமாகவும் இளம் தலைவராகவும் இருந்தார். வெளிப்படையான குடியேற்றக் கொள்கையை மையமாகக் கொண்ட ஒரு புதிய வகையான அரசியலை உறுதியளித்தார். செல்வந்தர்கள் மீதான வரிகளை அதிகரித்தார் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திட்டங்களுக்கு ஆதரவளித்தார்.

ஆனால் அவரது முதல் பதவிக்காலத்தில் ஊழல் புகார்கள் எழுந்தன. மிக சமீபத்திய ஆண்டுகளில், கனடாவில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம் மற்றும் அவரது ஆட்சி மீதான விரக்தி காரணமாக அவரின் செல்வாக்கு குறைந்து வருகிறது.

கியூபெக், ஒன்டோரியோ மற்றும் அட்லாண்டிக் கனேடிய மாகாணங்களைச் சேர்ந்த டஜன்கணக்கான, ட்ரூடோவின் சொந்தக் கட்சி எம்.பி.க்கள் அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தியுள்ளனர். கருத்துக்கணிப்புகளில் பங்கேற்ற மூன்றில் இரு பங்கு பேர் ட்ரூடோ மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் மாதம் `Ipsos’ தளத்திற்கு பதிலளித்தவர்களில் 26% பேர் மட்டுமே ட்ரூடோ பிரதமருக்கான சிறந்த தேர்வு என்று கூறினர். அந்த கருத்துக்கணிப்பில் கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரேவை விட 19 புள்ளிகள் பின்தங்கி இருந்தார் ட்ரூடோ.

கனேடிய அரசியல் வரலாறும் ட்ரூடோவுக்கு சாதகமாக இல்லை. கனடாவில் இதுவரை இரண்டு பிரதமர்கள் மட்டுமே தொடர்ந்து நான்கு முறை பதவி வகித்துள்ளனர்.

வரிகளைக் குறைப்பது, பண வீக்கத்தைச் சமாளிப்பது மற்றும் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாப்பது போன்ற வாக்குறுதியின் பேரில் 2022 இல் பொய்லிவ்ரே (Poilievre) தனது கட்சியின் உயர்மட்டத்திற்கு உயர்ந்தார்.

45 வயதான அவர் கோவிட் ஆணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஃப்ரீடம் கான்வாய் டிரக்கர்களுக்குப் பின்னால் ஆதரவைத் திரட்டினார் – இது ஒட்டாவா உள்ளிட்ட கனேடிய நகரங்களை ஸ்தம்பிக்கச் செய்த முற்றுகை ஆகும்.

கனடாவின் அடுத்த பிரதமர் டிரம்பின் அச்சுறுத்தலுக்கு தீர்வு காண வேண்டும்.

ஒழுங்கற்ற குடியேற்றம், சட்ட விரோத போதைப்பொருள் விற்பனை ஆகியவற்றுக்கு எதிராக, அமெரிக்காவுடனான தனது எல்லையை கனடா பாதுகாக்கவில்லை என்றால் கனேடியப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இது “கடுமையான சவால்” என முன்னாள் கனடா நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்டின் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் தனது வருடாந்திர பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு பதவி விலகினார்.

“நான் ட்ரூடோ அரசாங்கத்தின் உயர்மட்ட பொருளாதார ஆலோசகராக இருப்பதை அவர் விரும்பவில்லை என என்னிடம் தெரிவித்தார்” என்றும் கிறிஸ்டியா கூறினார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு