இந்தியா தொடர் தோல்வி ஏன்? பயிற்சியாளர் கம்பீரின் முடிவுகள் பற்றி எழுப்பப்படும் கேள்விகள்

கௌதம் கம்பீர்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.
  • எழுதியவர், மனோஜ் சதுர்வேதி
  • பதவி, மூத்த விளையாட்டு பத்திரிகையாளர், பிபிசி இந்தி

இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் தொடரை இழந்ததை தொடர்ந்து, அணியில் மாற்றம் தேவை என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது. அதோடு, அணியின் தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மீதும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் பல வெற்றிகளை குவித்த இந்திய அணி, திடீரென துவண்டு போய் காணப்படுகிறது.

கம்பீர் பயிற்சியாளராக பதவியேற்ற பிறகு வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. ஆனால் அதன் பிறகு, நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் முதல் முறையாக இந்திய அணி `ஒயிட் வாஷ்’ ஆனது.

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழந்த இந்தியா அணி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை எதிர்கொண்டது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கம்பீரின் முடிவுகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகள்

இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது

இந்தியா இந்த டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கியது என்பதே உண்மை. ஆனால் இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்திலிருந்து இந்திய பேட்டிங் பலவீனம் வெளிப்படத் தொடங்கியது.

மூன்றாவது டெஸ்டில் இந்தியா பலவீனமான பேட்டிங் காரணமாக தோல்வியடைந்தது. இந்நிலையில் நான்காவது டெஸ்டில் பேட்டிங்கை வலுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு அணியில் இடம் கொடுப்பதற்காக சுப்மன் கில் வெளியேற்றப்பட்டது இந்திய அணியின் பேட்டிங்கை மேலும் பலவீனப்படுத்தியது.

சிட்னி டெஸ்டில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் இடம்பெறச் செய்தது தவறான முடிவு. இரண்டாவது சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சுடன் பேட்டிங்கும் வலுப்பெறும் வகையில் ஆல்ரவுண்டராக கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அந்த டெஸ்ட் போட்டி முழுவதும் அவர் ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசினார். பேட்டிங்கிலும் அவரால் சிறப்பாக எதுவும் செய்ய முடியவில்லை.

ஆகாஷ்தீப் அல்லது ஹர்ஷித் ராணா போன்ற மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் சிட்னியில் விளையாடி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும், இந்திய அணிக்கு சாதகமான முடிவுகள் கிடைத்திருக்கலாம்.

கம்பீர், உதவியாளர்கள் மீது கவாஸ்கர் விமர்சனம்

 கவாஸ்கர்

பட மூலாதாரம், Izhar Khan/Getty Images

படக்குறிப்பு, சுனில் கவாஸ்கர்

பயிற்சியாளரின் விருப்பத்திற்கேற்பவே உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போதைய உதவியாளர்களின் நியமனமும் அப்படி தான் நடந்துள்ளது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் கவாஸ்கர் பேசுகையில், உதவியாளர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்க வேண்டும்’ என்று கூறினார். பேட்டிங்கில் ஏன் முன்னேற்றம் இல்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

“நம்முடைய பேட்ஸ்மேன்களால் சிறப்பான பந்துவீச்சை எதிர்க்கொள்ள முடியாது என்பது கூடபரவாயில்லை. சில சமயம் பெரிய பேட்ஸ்மேன்களுக்கு கூட சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்வதில் சிக்கல்கள் இருக்கும். ஆனால் சாதாரண பந்துகளை கூட அவர்களால் எதிர்கொள்ள முடியாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது” என்று கவாஸ்கர் குறிப்பிட்டார்.

ஜூன்-ஜூலையில் இங்கிலாந்துக்கு எதிராக அடுத்த தொடர் நடைபெற உள்ளது. அந்த நேரத்தில் இந்த உதவியாளர்களை தக்க வைப்பதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றார் கவாஸ்கர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அடுத்த சுழற்சி இங்கிலாந்துக்கு எதிரான தொடருடன் தொடங்கும் என்றும், இந்த சுழற்சியின் இறுதிப் போட்டி ஜூன் 2027 இல் நடைபெறும் போது, ​​அணியின் மூத்த வீரர்கள் யார் என்பதை மனதில் வைத்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தற்போதைய சூழலை மனதில் வைத்து இளம் வீரர்கள் மீது கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றார் கவாஸ்கர்.

டெஸ்ட் தொடர்களுக்கான சுற்றுப்பயணங்களின் போது பயிற்சி போட்டிகளை நடத்துவது தேவை என்று கவாஸ்கர் கருதுகிறார். சில காலமாக பயிற்சி ஆட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை.

“சிறப்பாக விளையாடும் வீரர்கள் பயிற்சி போட்டிகளில் விளையாட விரும்பாமல் இருக்கலாம். ஆனால் ப்ளேயிங் லெவனில் இல்லாத வீரர்களை தயார்படுத்த இந்த போட்டிகள் மிகவும் முக்கியம். அந்த வீரர்கள் தேவைப்படும் நேரத்திற்கு ஏற்றவாறு தயாராக முடியும்.” என்றார் கவாஸ்கர்.

கம்பீர் பயிற்சியின் கீழ் நடக்கும் அடுத்த டெஸ்ட் தொடரும் கடினமானது

கம்பீர்

பட மூலாதாரம், LightRocket via Getty Images

இங்கிலாந்துக்கு எதிரான கடினமான தொடருடன் கெளதம் கம்பீர் பயிற்சியாளராக ஓராண்டு காலத்தை நிறைவு செய்வார்.

இதுவரை அவரின் பயிற்சியின் கீழ் நடந்த அனைத்து ஆட்டங்களையும் பார்க்கும் போது, டி20யில் மட்டும் தான் இந்திய அணி விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதுதவிர 10 டெஸ்ட்களில் மூன்றில் வெற்றியும், 6 தோல்வியும், ஒன்று டிராவும் ஆகியுள்ளது. மூன்று ஒருநாள் போட்டிகளில் இரண்டில் இந்தியா தோல்வியடைந்தது, ஒன்று டையில் முடிந்துள்ளது.

இங்கிலாந்தில் ஒரு தொடரில் விளையாடுவது எளிதல்ல. இங்கிலாந்தில் கம்பீரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்றால், அவர் மீதான விமர்சனம் மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.

‘வெளிப்படையாகப் பேசத் தயக்கம்’

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி

பட மூலாதாரம், PATRICK HAMILTON/AFP

படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஆட்டம் சிறப்பாக இல்லை

இந்த தொடரில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இரு சிறந்த இந்திய வீரர்களின் மோசமான ஆட்டம் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

ஆனால் போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் அணியில் மாற்றம் வருமா என்பது குறித்து கேட்டபோது, ​​கம்பீர், “இதை விவாதிப்பதற்கான சரியான நேரம் இது இல்லை. ஐந்து மாதங்கள் உள்ளது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு நாம் எங்கே இருப்போம் என்பதே கேள்வி? விளையாட்டில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. விளையாட்டின் வடிவம் மாறுகிறது. வீரர்கள் மத்தியில் மாற்றம் ஏற்படுகிறது, அணுகுமுறை மாறுகிறது, எல்லாம் மாறுகிறது.”

“இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஆனால் எது நடந்தாலும் அது இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காகவே இருக்கும்” என்றார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது அணி தொடர்பாக சில கடினமான முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதை கம்பீரின் இந்த கருத்துகள் சுட்டிக்காட்டுகின்றன. அவர் தனது முடிவுகளை பற்றி இப்போது வெளிப்படையாக கூறவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.

உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட அறிவுறுத்தும் கம்பீர்

கம்பீர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய அணி வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளதாகவும், அதன் பிறகு சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட உள்ளதாகவும் கம்பீர் கூறினார்.

இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர்.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, சர்வதேச அளவில் சிறப்பாக விளையாட முடியாத வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இந்தியா வரையறுக்கப்பட்ட ஓவர்கள் (டி20, ஒருநாள்)கொண்ட தொடர்களில் விளையாட உள்ளதாகவும், அதன் பிறகு சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட உள்ளதாகவும் கம்பீர் கூறினார்.

இப்போட்டிகளில் பங்கேற்காத வீரர்கள், வரும் ஜனவரி 23-ஆம் தேதி முதல் மீண்டும் துவங்கும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இந்த போட்டிகளில் விளையாடினால் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் செயல்திறனை மேம்படுத்த முடியும்.

உண்மையில் முன்பு, வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டை விளையாடுவதன் மூலம் தங்கள் ஆட்டத்தின் குறைபாடுகளை மேம்படுத்திக் கொண்டனர். ஆனால் இப்போது வீரர்களின் விளையாட்டில் உள்ள குறைபாடுகள் நீண்ட காலமாக சரி செய்யப்படாமல் உள்ளன. இதற்குக் காரணம், இந்த குறைபாடுகளை மேம்படுத்த எந்த முயற்சியும் செய்யப்படவில்லை.

உதாரணமாக, விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அடிக்க முயன்று அவுட் ஆகிறார். இந்த தொடரிலும் பலமுறை இதே முறையில் அவுட்டாகியுள்ளார்.

ஆனால் அவர் பல ஆண்டுகளாக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடவில்லை. உள்நாட்டு கிரிக்கெட்டை விளையாடுவது, பல்வேறு வகையான ஆடுகளங்களில் விளையாடுவதற்கு வீரர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது.

(இந்த கட்டுரையில் இடம் பெற்ற கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளே.)

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.