on Monday, January 06, 2025
சீனாவில் வேகமாக பரவும் HMPV வைரஸ் இந்தியாவில் இருவருக்கும் பரவியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.
எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் பாதிப்பு காரணமாக வைத்தியசாலைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
பலருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இது குளிர்காலத்தில் சகஜம் தான் என அரசு கூறினாலும் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.
சீனாவில் வைரஸ் பரவலால் மற்ற நாடுகளும் எச்சரிக்கையாக உள்ளன.
இந்தியாவில் உள்ள கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு தீவிர கண்காணிப்புடன் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் முதல் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வைரஸ் தொற்று பாதிப்பு கர்நாடகாவில் கண்டறியப்பட்டுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த 8 மாத குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குழந்தை எங்கும் அழைத்துச் செல்லப்படாதபோதிலும் வைரஸ் பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
எச்.எம்.பி.வி வைரஸ் பாதிப்பை உறுதி செய்த தனியார் மருத்துவமனை அறிக்கையை கர்நாடக மாநில சுகாதரத்துறையும் உறுதி செய்துள்ளது.
மேலும் கர்நாடகாவிலேயே மற்றொரு 3 மாத குழந்தைக்கும் இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் கண்காணிப்பில் உள்ளதாகவும், இந்திய மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக சுவாச நோய்களை, கண்காணிப்பு வழிமுறைகளுடன் கையாள இந்தியா முழுமையாகத் தயாராக உள்ளதுடன், இந்த தொற்று பாதிப்புகளில், அசாதாரண பரவல் என்பது இல்லை என இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்திருந்தது.