அமெரிக்க ஜனாதிபதி விருது சர்ச்சை; மெஸ்ஸியின் பதில்!

by wp_shnn

உலகெங்கிலும் அமைதி மற்றும் கலாச்சார முயற்சிகளுக்கான தனி நபர்கள் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரித்து, 19 பெறுநர்களுக்கு பதவி விலகும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சனிக்கிழமை (04) சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கத்தை வழங்கினார்.

“சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கம்” என்பது அமெரிக்காவின் செழிப்பு, மதிப்புகள் அல்லது பாதுகாப்பு, உலக அமைதி அல்லது பிற குறிப்பிடத்தக்க சமூக, பொது அல்லது தனியார் முயற்சிகளுக்கு முன்மாதிரியான பங்களிப்புகளை வழங்கிய தனிநபர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய சிவிலியன் கௌரவமாகும்.

அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஆற்றிய பங்களிப்பிற்காக வொஷிங்டனின் முன்னாள் வெளிவிகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, சர்ச்சைக்குரிய பரோபகாரர் ஜார்ஜ் சோரோஸ் மற்றும் நடிகர் டென்சல் வொஷிங்டன் ஆகியோரும் இந்த விருதுக்காக பெயரிடப்பட்டனர்.

எனினும், அமெரிக்காவின் உயரிய சிவிலியன் விருதினை பெறுவதற்காக லியோனல் மெஸ்ஸி வெள்ளை மாளிகையில் நேரடியாக கலந்து கொள்ளவில்லை.

மெஸ்ஸியின் இந்த செயற்பாடு குறித்து சமூக தளங்களில் சர்ச்சைகள் எழுந்தன.

இந்த நிலையில், திட்டமிடல் முரண்பாட்டின் காரணமாக உயரிய விருது விழாவில் கலந்து கொள்ள முடியாது போனதாக முன்னணி கால்பந்து நட்சரத்திம் மெஸ்ஸி அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், எதிர்காலத்தில் ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்க எதிர்பார்த்துள்ளதாகவும் எட்டு முறை பலன்டிஓர் (Ballon D’or) விருதினை வென்றுள்ள மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.

மெஸ்ஸி தற்சமயம் அமெரிக்காவில் உள்ள மேஜர் லீக் சாக்கரில் (MLS) இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.

37 வயதான அவர் இந்த விருதைப் பெறும் முதல் ஆர்ஜென்டினர் மற்றும் முதல் ஆண்கள் தொழில்முறை கால்பந்து வீரர் ஆவர்.

மேலும், லியோ மெஸ்ஸி அறக்கட்டளை மற்றும் யுனிசெஃப் நல்லெண்ண தூதராக உலகளவில் சுகாதாரம் மற்றும் கல்வித் திட்டங்களில் அவர் ஆற்றிய பணிக்காக மெஸ்ஸி பாராட்டப்பட்டார்.

2023 ஜூலையில் இண்டர் மியாமியில் இணைந்ததில் இருந்து, மெஸ்ஸி 39 போட்டிகளில் 34 கோல்களை அடித்துள்ளார்.

மேலும், கடந்த பருவத்தில் தலைவராக முதல்முறையாக கழகத்தை சப்போர்ட்டர்ஸ் ஷீல்ட் பட்டத்திற்கு இட்டுச் சென்றார்.

அதே நேரத்தில் ஒரே சீசனில் மேஜர் லீக் சாக்கர் புள்ளிகள் சாதனையை முறியடித்தார்.

2023 இல் கழகம் லீக் கிண்ணத்தை வெல்ல உதவிய மெஸ்ஸி, அமெரிக்காவில் நடைபெற்ற ஆர்ஜென்டினாவுடன் 2024 கோபா அமெரிக்காவை வென்றார்.

மேலும் அவர் 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் லா அல்பிசெலெஸ்டெக்காக விளையாடுவாரா என்பதை இன்னும் வெளியிடவில்லை.

இந்தப் போட்டிகள் கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ முழுவதும் நடைபெறும்.

தொடர்புடைய செய்திகள்