மத்ஸயா 6000: பெருங்கடலில் 6000 மீட்டர் ஆழத்திற்கு செல்லப் போகும் இந்திய விஞ்ஞானிகள்

  • எழுதியவர், க.சுபகுணம்
  • பதவி, பிபிசி தமிழ்

“கடல் உங்கள் ஆணவத்தைக் கொன்றுவிடும்.”

தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மூத்த விஞ்ஞானி சுப்பிரமணியன் அண்ணாமலையைச் சந்தித்தபோது அவர் கூறிய வார்த்தைகள் இன்னமும் எதிரொலிக்கிறது.

முனைவர் சுப்பிரமணியன், இந்தியாவின் சமுத்ரயான் திட்டத்தின்கீழ் உருவாகி வரும் மத்ஸயா 6000 நீர்மூழ்கியின் ஆற்றல் பிரிவின் தலைவராக இருக்கிறார்.

“இந்த உலகில் எதைப் பற்றியும் யாருக்கும் முழுதாகத் தெரிந்துவிடாது. பெருங்கடல் அதை மிகச் சரியாக உணர்த்திக் கொண்டே இருக்கிறது. அத்தகைய பெருங்கடலுக்குள் நேரில் மனிதர்களை அனுப்பிப் பார்ப்பது கடல் ஆய்வில் எவ்வளவு உதவிகரமாக இருக்கும். அதைத்தான் மத்ஸயா 6000 நீர்மூழ்கி செய்யப் போகிறது,” என்று கூறினார் அவர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சமுத்ரயான் திட்டத்தின்கீழ் கடந்த மூன்று ஆண்டுகளாக தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழு மத்ஸயா 6000 என்ற நீர்மூழ்கியை வடிவமைத்து வருகின்றனர்.

சென்னை பள்ளிக்கரணையில் அமைந்திருக்கும் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகளின் கருத்துரு மற்றும் வடிவமைப்பில், அதன் வளாகத்திலேயே உருவாக்கப்பட்டு வரும் இந்த நீர்மூழ்கியை பிபிசி தமிழ் குழுவினர் பார்வையிட்டோம்.

இந்த நீர்மூழ்கியை சென்னை கடல் பகுதியில் விரைவில் விஞ்ஞானிகள் பரிசோதனை செய்யவிருக்கின்றனர். இந்தியாவிலேயே முதல்முறையாக 2026இல் ஆழ்கடலுக்கு மனிதர்களை அனுப்பும் இந்தத் திட்டம் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மத்ஸயா 6000 குழுவினரை சந்தித்தோம்.

ஆழ்கடலுக்குச் செல்லப்போகும் இந்திய விஞ்ஞானிகள்

மத்ஸயா 6000: பெருங்கடலில் 6000 மீட்டர் ஆழத்திற்கு செல்லப் போகும் இந்திய விஞ்ஞானிகள்

படக்குறிப்பு, மத்ஸயா 6000 நீர்மூழ்கியில் மூன்று பேர் ஆழ்கடலுக்குச் செல்வார்கள் என்று தெரிவித்தார் திட்ட இயக்குநர் முனைவர் வேதாச்சலம்

இந்த ஆண்டு முழுவதும் பல கட்ட பரிசோதனைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள விஞ்ஞானிகள், அனைத்தும் வெற்றிகரமாக முடிந்தால் 2026இல் மத்திய இந்தியப் பெருங்கடலின் 6000 மீட்டர் ஆழத்தில் இந்திய விஞ்ஞானிகள் தடம் பதிப்பார்கள்.

கடந்த 2020ஆம் ஆண்டு சீனா, உலகின் மிகவும் ஆழமான மரியானா ஆழ்கடல் அகழிக்கு 10,909 மீட்டர் ஆழத்திற்கு மனிதர்களை நீர்மூழ்கியில் அனுப்பியது. அதோடு, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் மட்டுமே ஆழ்கடலுக்கு மனிதர்களை இதுவரை அனுப்பியுள்ளன. அந்தப் பட்டியலில் விரைவில் இந்தியாவும் இணையப் போவதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

கடந்த 30 ஆண்டுகளாக கடல் தொழில்நுட்பங்களை உருவாக்கி வரும் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம், பல நீர்மூழ்கிகளை வடிவமைத்துள்ளது.

“இந்தியாவிலேயே நீர்மூழ்கியை தயாரிக்கும் திறனுடைய ஒரே நிறுவனம் இதுதான். ஆகவே, எங்கள் விஞ்ஞானிகளே இதை முற்றிலுமாகத் திட்டமிட்டு, வடிவமைத்து, நாட்டில் முதல்முறையாக மனிதர்களை ஆழ்கடலுக்குக் கொண்டு செல்லக்கூடிய நீர்மூழ்கியை உருவாக்கியுள்ளோம்,” என்கிறார் திட்ட இயக்குநர் முனைவர் வேதாச்சலம்.

”மத்ஸயா 6000 நீர்மூழ்கி, அதை இயக்கப்போகும் ஒரு மாலுமி, அவருக்குத் துணையாக இருக்கும் இணை-மாலுமி மற்றும் ஒரு விஞ்ஞானி ஆகியோரை ஆழ்கடலுக்குள் கொண்டு செல்லும்” என்று விளக்கினார் அதன் திட்ட இயக்குநரான முனைவர் வேதாச்சலம்.

இதன் வடிவமைப்புப் பணியில் இருந்தே இதில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் விஞ்ஞானியான ரமேஷ் ராஜுவே மாலுமியாக நீர்மூழ்கியை இயக்கப் போவதாகக் கூறும் வேதாச்சலம், “அவருக்குத் துணைபுரியும் இணை-மாலுமியாக இந்திய கடற்படையைச் சேர்ந்த ஒருவர் இருப்பார் மற்றும் மூன்றாவதாக ஆழ்கடலை ஆய்வு செய்யப் போகும் விஞ்ஞானி ஒருவர் உடன் செல்வார்,” என்று தெரிவித்தார்.

“இந்த நீர்மூழ்கியின் மூலம், உலகளவில் இதைச் சாதித்துக் காட்டிய மிகச் சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணையும்” என்று பிபிசி தமிழிடம் கூறிய மத்ஸயா 6000 குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் முகம் பெருமிதத்தால் பூரித்தது.

இந்தியா மனிதர்களை ஆழ்கடலுக்கு அனுப்பப்போவது எப்படி?

மத்ஸயா 6000: பெருங்கடலில் 6000 மீட்டர் ஆழத்திற்கு செல்லப் போகும் இந்திய விஞ்ஞானிகள்

பட மூலாதாரம், NIOT

திட்ட இயக்குநர் வேதாச்சலத்தின் கூற்றுப்படி, மத்ஸயா 6000 நீர்மூழ்கி, ஆய்வு செய்யவுள்ள பகுதிக்கு கப்பலில் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கடலில் இறக்கப்படும்.

“கப்பலில் இருந்து பெருங்கடலின் மேற்பரப்பில் இறக்கிவிடப்பட்டு, மனிதர்களை அமர வைத்த பிறகு, அங்கிருந்து நேராகக் கீழ்நோக்கி அனுப்பப்படும்,” என்று அவர் விளக்கினார்.

நீளமான டைட்டானியம் உலோகத்தால் ஆன ஒரு கட்டமைப்பில் பேட்டரி முதல் நீர்மூழ்கி இயங்கத் தேவையான அனைத்து தொழில்நுட்பங்களையும் விஞ்ஞானிகள் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர். அதன் முன்பகுதியில் இருந்த உருளை வடிவ பாகத்தில்தான் மூன்று பேர் உட்கார்ந்து பயணிக்கப் போகிறார்கள்.

மத்ஸயாவின் மின்னணு அமைப்புகளை வடிவமைக்கும் முனைவர் ரமேஷ்தான் அதை இயக்கவும் போகிறார். தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளில்லா தானியங்கி நீர்மூழ்கிகளைக் கடலில் இயக்கிய அனுபவமுள்ளவர்.

நீர்மூழ்கி கீழ்நோக்கிச் செல்லும்போது அதிக ஆற்றலைச் செலவழிப்பதைத் தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட ஆழத்தை நெருங்கும்போது நீர்மூழ்கியின் அனைத்து செயல்பாடுகளும் தொடங்கும் எனவும் கூறுகிறார் ராஜேஷ்.

சமுத்ரயான் திட்டத்தின் நோக்கம் என்ன?

மத்ஸயா 6000: பெருங்கடலில் 6000 மீட்டர் ஆழத்திற்கு செல்லப் போகும் இந்திய விஞ்ஞானிகள்

இந்தியப் பெருங்கடலின் மத்தியப் பகுதி பல்லுலோகம் (Polymetal) நிறைந்துள்ளதாகக் கூறுகிறார் மத்ஸயா குழுவின் மூத்த விஞ்ஞானியான முனைவர் சத்யநாராயணன்.

“நிக்கல், தாமிரம், மாங்கனீசு, கோபால்ட் போன்ற உலோகங்களின் கலவையான பல்லுலோகம் இந்திய பெருங்கடலில் மிக அதிக அளவில் இருக்கிறது. இது சர்வதேச கடற்பரப்பில் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியின் ஆழ்கடலில் தரைப் பரப்பில் பரவிக் கிடக்கிறது,” என்று கூறினார் அவர்.

அவை குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் முதல்கட்டமாக ரோசுப் 6000 (ROSUB 6000) என்ற ஆளில்லா நீர்மூழ்கியை உருவாக்கியது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, மனிதர்களைக் கடலுக்குள் அனுப்பி அப்பகுதிகளை ஆய்வு செய்ய கடந்த மூன்று ஆண்டுகள் உழைப்பில் மத்ஸயா உருவாக்கப்பட்டுள்ளது.

அதுகுறித்துப் பேசியபோது, “நாம் எவ்வளவுதான் ஆளில்லா தொழில்நுட்பங்களை அனுப்பினாலும், நமது கண்களால் பார்த்து ஆய்வு செய்யும்போது இன்னும் பல விஷயங்கள் நமக்குத் தெரிய வரும்,” என்று தெரிவித்தார் சத்யநாராயணன்.

“இந்திய பெருங்கடலின் ஆழ்கடல் பரப்பில் இருக்கும் கனிம வளங்கள் முதல் உயிரினங்கள் வரை பலவற்றையும் மத்ஸயா ஆய்வு செய்யும். மத்ஸயாவின் முன்பகுதியில் இரண்டு நீளமான ரோபோடிக் கைகள் இருக்கின்றன. அதோடு ஒரு கூடை வடிவ சேமிப்பு அமைப்பும் இருக்கிறது. அதில் 200 கிலோ வரை மாதிரிகளைச் சேகரிக்க முடியும்,” என்கிறார் ரமேஷ்.

அவரது கூற்றுப்படி, ஆழ்கடல் ஆய்வுகளில் பாறை அல்லது கனிமம் போன்ற மாதிரிகளைச் சேகரிக்க வேண்டிய தேவை ஏற்படும்போது, ரோபோடிக் கைகளைப் பயன்படுத்தி அவற்றை எடுத்து, சேமிப்புக் கூடையில் வைத்து மேலே கொண்டுவர முடியும்.

இந்திய விஞ்ஞானிகளின் புதுமையான பேட்டரி தொழில்நுட்பம்

மத்ஸயா 6000: பெருங்கடலில் 6000 மீட்டர் ஆழத்திற்கு செல்லப் போகும் இந்திய விஞ்ஞானிகள்

படக்குறிப்பு, தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மத்ஸயா 6000 நீர்மூழ்கியில் லித்தியம் பாலிமர் பேட்டரிகளை பயன்படுத்துகின்றனர்

இந்த நீர்மூழ்கியில், இதுவரை எந்தவொரு நாடும் செய்திராத, வழக்கத்திற்கு மாறான அணுகுமுறையைக் கையில் எடுத்துள்ளதாக மத்ஸயா குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வழக்கமாக லெட்-ஆசிட் பேட்டரி, சில்வர்-துத்தநாக பேட்டரி, லித்தியம் அயான் பேட்டரி போன்றவையே பயன்படுத்தப்படும். ஆனால், மத்ஸயா நீர்மூழ்கியில் விஞ்ஞானிகள் லித்தியம் பாலிமர் பேட்டரிகளை பயன்படுத்துகின்றனர்.

அதுகுறித்துப் பேசியபோது, “இந்தியாவில்தான் முதல்முறையாக இத்தகைய மேம்பட்ட பேட்டரிகளை பயன்படுத்துகிறோம்,” என்று கூறினார் சுப்பிரமணியன் அண்ணாமலை.

“இதன் அளவு, கொள்ளளவு, எடை ஆகியவை குறைவு. அதனால், நீர்மூழ்கியில் இது எடுத்துக்கொள்ளப் போகும் இடத்தின் அளவும் குறைவு. உதாரணமாக, நமது வீடுகளில் பயன்படுத்தும் பேட்டரிகளைவிட ஐந்து முதல் ஆறு மடங்கு குறைவான இடத்தையே இவை எடுத்துக்கொள்ளும். ஆனால், அதிகளவிலான மின்சாரத்தை இவற்றால் வழங்க முடியும்,” என்று விவரித்தார் அவர்.

நீர்மூழ்கி பெருங்கடலில் 6000 மீட்டர் ஆழம் வரை செல்வதற்கு நான்கு மணிநேரம் ஆகும். ஆழ்கடலில் ஆய்வுப் பணிகளை நான்கு மணிநேரம் மேற்கொள்ளும். மொத்தமாக 12 மணிநேரம் ஆழ்கடலில் இந்த நீர்மூழ்கி இயங்கும்.

ஆனால், பாதுகாப்பு கருதி சுமார் 108 மணிநேரத்திற்குத் தேவையான மின்சார இருப்பு இருக்கும் அளவுக்கு பேட்டரிகளை பொருத்தியுள்ளதாகக் கூறுகிறார் திட்ட இயக்குநர் வேதாச்சலம்.

ஆழ்கடலில் சந்திக்கப்போகும் சவால்கள் என்ன?

மத்ஸயா 6000: பெருங்கடலில் 6000 மீட்டர் ஆழத்திற்கு செல்லப் போகும் இந்திய விஞ்ஞானிகள்

படக்குறிப்பு, ஆழ்கடலில் ஜிபிஎஸ் கருவிகள் பயன்படாது என்கிறார் முனைவர் பால நாக ஜோதி

முதல் சவால் காரிருள். மேற்பரப்பில் இருப்பதைப் போன்று ஆழ்கடலில் சூரிய ஒளி புகாது. அதுமட்டுமின்றி, அங்கு செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் வேலை செய்யாது.

அத்தகைய சூழலில் நீர்மூழ்கியின் இருப்பிடத்தைக் கண்டறிவது முதல் அதன் பாதையில் இருக்கும் இடர்பாடுகளை அறிவது வரை அனைத்துமே சவால் நிறைந்திருக்கும்.

இதைச் சமாளிக்க ஒலி நிலைப்படுத்தல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. திமிங்கிலம், டால்பின் போன்ற ஆழ்கடல் உயிரினங்களைப் போல ஒலியைப் பயன்படுத்தி தனது சுற்றத்தை அறிந்துகொள்ளும் தொழில்நுட்பமே ஒலி நிலைப்படுத்தல் தொழில்நுட்பம். இதே வகையில் ஒலி அலைகளை அனுப்புவதன் மூலமே மேலே கப்பலில் இருந்து நீர்மூழ்கியுடனான தொடர்புகளும் அமையும்.

மத்ஸயா 6000 நீர்மூழ்கியின் திசையறிதல் குறித்த பிரிவைச் சேர்ந்த விஞ்ஞானியான முனைவர் பால நாக ஜோதி இதுகுறித்து பிபிசி தமிழிடம் விளக்கினார்.

மத்ஸயா 6000: பெருங்கடலில் 6000 மீட்டர் ஆழத்திற்கு செல்லப் போகும் இந்திய விஞ்ஞானிகள்

“ஆழ்கடலில் ஒரு பொருளின் நிகழ்நேர இருப்பிடத்தைக் கண்டறிவது மிகவும் சவாலானது. அங்கு ஜிபிஎஸ் பயன்படுத்த முடியாது. அதற்குப் பதிலாக, ஒலி நிலைப்படுத்தல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். அதாவது, ஆழ்கடல் உயிரினங்களைப் போலவே, கடலடியில் மத்ஸயா 6000இன் இருப்பிடத்தை அறிவது, அதன் பாதையைத் தீர்மானிப்பது, அதில் பயணிப்போருடன் தொடர்புகொள்வது ஆகியவற்றைச் செய்வோம்,” என்று விளக்கினார் பால நாக ஜோதி.

இதைவிட மிக முக்கியமான மற்றொரு சவால் அதீத அழுத்தம். நிலப்பரப்பில் இருக்கும் சரசாரி அழுத்தத்தைவிட ஆழ்கடலில் அழுத்தம் பல நூறு மடங்கு அதிகமாக இருக்கும் என்று விவரித்தார் சத்யநாராயணன்.

“ஆழ்கடலில் ஒவ்வொரு 1000 மீட்டருக்கும் அழுத்தம் 100 மடங்கு அதிகரித்துக்கொண்டே போகும். ஆக, 6000 மீட்டர் ஆழத்தில் இங்கு நாம் உணரும் அழுத்தத்தைவிட 600 மடங்கு அதிக அழுத்தம் இருக்கும். அதைச் சமாளிக்க, டைட்டானியம் உலோகத்தில் நீர்மூழ்கி உருவாக்கப்படுகிறது,” என்று அவர் விளக்கினார்.

மேலும், மனிதர்கள் அமர்ந்து பயணிக்கும் உருளை வடிவ உட்பகுதியை டைடானியம் உலோகத்தில் தயாரித்துக் கொடுக்க இஸ்ரோ உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மத்ஸயா 6000 ஆபத்துகளை சமாளிக்கும் திறன் கொண்டதா?

மத்ஸயா 6000: பெருங்கடலில் 6000 மீட்டர் ஆழத்திற்கு செல்லப் போகும் இந்திய விஞ்ஞானிகள்

படக்குறிப்பு, இந்தியாவில் முதல்முறையாக ஆழ்கடலுக்கு பயணிக்கும் குழுவில் இருப்பது குறித்துப் பெருமைப்படுவதாகத் தெரிவித்தார் முனைவர் ரமேஷ் ராஜு

அடிப்படையில் இந்த நீர்மூழ்கி ஆழ்கடலில் செயல்படப் போவது மொத்தமாக 12 மணிநேரம் மட்டுமே. ஆனால், எதிர்பாராத விதமாக ஏதேனும் சவால்கள் அல்லது தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு மேலே வருவதில் சிக்கல் ஏற்பட்டால், அதிலுள்ள மூன்று பேரும் பாதுகாப்பாக இருக்க ஏதுவாக 96 மணிநேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டிருக்கும்.

அதுமட்டுமின்றி, மத்ஸயாவின் இரட்டையர் கட்டமைப்பு ஒன்று பெருங்கடலின் மேற்புறத்தில் கப்பலில் அமைக்கப்பட்டிருக்கும். அங்கு அதை இயக்கும் மாலுமி, இணை-மாலுமி, விஞ்ஞானி ஆகிய மூவருக்கும் மாற்றாக வேறு மூன்று பேர் இருப்பார்கள்.

அவர்கள் தொடர்ச்சியாக ஆழ்கடல் பணியின்போது கண்காணித்துக் கொண்டிருப்பார்கள் என்றும் நீர்மூழ்கியில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதைச் சரிசெய்வதில் வழிநடத்துவார்கள் என்றும் கூறினார் திட்ட இயக்குநர் வேதாச்சலம்.

தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இந்த நீர்மூழ்கி, ஆழ்கடல் தேடுதல், மீட்புப் பணி, கனிம வளங்களின் ஆராய்ச்சி, அங்கு வாழும் உயிரினங்கள் குறித்த ஆய்வு எனப் பலவற்றுக்கும் இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் உதவிகரமாக இருக்கும் என்கிறார் சத்யநாராயணன்.

“இந்தியாவில் இப்படியொரு விஷயத்தை செய்ய முடியும் என்பதை நிரூபிப்பது மட்டுமின்றி, இந்தத் திட்டத்தின் மூலம் மேலும் பல்வேறு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நிகழும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று சமுத்ரயான் திட்டம் குறித்து பிபிசி தமிழிடம் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, இந்தியாவின் கடல் ஆய்வுகளில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமையும்.

அத்தகைய திட்டத்தின்கீழ் ஆழ்கடலுக்குள் பயணிக்கப் போகும் நாட்டின் முதல் குழுவில் தானும் உள்ளது பெருமையாக இருப்பதாகக் கூறுகிறார் ரமேஷ் ராஜு. அதோடு, இது முழுவதுமாக தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகளின் கைகளிலேயே தயாராவாதல், அச்சம் ஏதுமின்றி முழு நம்பிக்கையோடு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு