வக்ஃப் வாரியத்தில் 50% இட ஒதுக்கீடு, இந்திய முஸ்லிம் மகளிர் இயக்கம்

படக்குறிப்பு, செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் முஸ்லிம் மகளிர் இயக்கத்தின் தலைவர்
  • எழுதியவர், அல்பேஷ் கர்கரே
  • பதவி, பிபிசி மராத்தி செய்தியாளார்

தற்போதுள்ள முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் விதிகள் காரணமாக முஸ்லிம் பெண்கள் இப்போதும் பாதிப்புக்கு உள்ளவதாக இந்திய முஸ்லிம் மகளிர் இயக்கம் கூறுகிறது.

இந்திய முஸ்லிம் மகளிர் இயக்கத்தின் பிரதிநிதிகளும், முஸ்லிம் மகளிரும், தங்கள் சமூகத்தின் பெண்களுக்கு எதிரான அநீதியைக் கண்டித்து டிசம்பர் 30ஆம் தேதி மும்பையில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.

முஸ்லிம் குடும்பச் சட்டம் மற்றும் ஒரே சீரான சிவில் சட்டத்தில் முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்கான விதிகள் இடம்பெற வேண்டும் என்பது அவர்கள் அரசிடம் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் அடங்கும்.

அவர்கள் மனதில் தோன்றுவதைக் கேட்கிறார்கள், இந்த கோரிக்கைகளுக்கு அர்த்தமில்லை என்று முஸ்லிம் சமூகத் தலைவர்களும், மௌலவிகளும் தெரிவித்தனர். கூடவே மகளிருக்கு சுதந்திரம் இருக்கிறது, எனவே அவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள் என்றும் அவர்கள் கூறினர்.

வக்ஃப் வாரியத்தில் 50% இட ஒதுக்கீடு, இந்திய முஸ்லிம் மகளிர் இயக்கம்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

முஸ்லிம் பெண்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜகியா சோமன், நூர்ஜஹான், ஜுபைதா காத்தூன் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

“சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், முஸ்லிம் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராட வேண்டியுள்ளது. முஸ்லிம் பெண்களுக்கு நீதி வழங்க சட்டம் எதுவும் இல்லாததால், நீதிமன்றங்களும் பலவீனமாகிவிட்டன. அரசு இதை ஆய்வு செய்து மீண்டும் சட்டம் இயற்ற வேண்டும். ஆனால் நமது அரசு அப்படி ஒரு சட்டம் கொண்டு வருவதில் அலட்சியம் காட்டி வருகிறது.”

“மறுபுறம், ஒரே சீரான சிவில் சட்டத்தின் கீழ் முஸ்லிம் பெண்களுக்கு உரிமைகளை வழங்க அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நீதி கிடைக்கும் வரை முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்காக நாங்கள் போராடுவோம்.”

‘முஸ்லிம் பெண்கள் அதிகம் போராட வேண்டியுள்ளது’

மேலும், “முஸ்லிம் பெண்கள் நிறைய போராட வேண்டியுள்ளது. வறுமை, கல்வியறிவின்மை, வேலையின்மை, வீட்டிலும் உரிமை இல்லை, குடும்ப சண்டைகள் உள்ளன, நீதி இல்லை. அரசியலமைப்பின்படி இந்தியாவில் குடும்பச் சட்டம் இல்லை. எனவே ஷரியா சட்டம் அதில் பொருந்தும் என்று நம்பப்படுகிறது. முன்பு மூன்று முறை ‘தலாக்’, என்று சொன்னால் விவாகரத்து நடைமுறைக்கு வந்தது.

ஆனால் 2017இல் நாங்கள் அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றோம். நீதிமன்றம் அது செல்லாது என்று அறிவித்தது. 2019இல் இது தொடர்பாக ஒரு சட்டமும் இயற்றப்பட்டது. ஆனால் குர்ஆன் மற்றும் பிற சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் இன்னும் முஸ்லிம் பெண்களுக்குக் கிடைக்கவில்லை. முஸ்லிம் பெண்கள் இன்னும் அரசமைப்புச் சட்டம் தந்துள்ள உரிமைகளைப் பெறவில்லை,” என்று இந்திய முஸ்லிம் மகளிர் இயக்கத்தின் இணை நிறுவனர் ஜகியா சோமன் பிபிசியிடம் தெரிவித்தார்.

வக்ஃப் வாரியத்தில் 50% இட ஒதுக்கீடு, இந்திய முஸ்லிம் மகளிர் இயக்கம்

“டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சிக்குப் பிறகு இந்த பெண்களின் கோரிக்கைகளை எல்லா அரசுகளிடமும் முன்வைத்து வருகிறோம். இப்போது முஸ்லிம் பெண்களின் கோரிக்கைகளை சட்ட ஆணையத்தின் முன்பாகவும் வைத்துள்ளோம். மகளிர் ஆணையத்திடமும் இந்த கோரிக்கைகளை அளித்துள்ளோம். ஆனால் எங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. அரசியல் சாசனம் மற்றும் குர்ஆன் விதிகளின்படி தங்கள் உரிமைகளைப் பெறுவதற்கு முஸ்லிம் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

“ஒரே சீரான சிவில் சட்டம் மற்றும் வக்ஃப் வாரியச் சட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் முஸ்லிம் பெண்களின் உரிமைப் பிரச்னை மீண்டும் ஒருமுறை முன்னுக்கு வந்துள்ளது. எனவே இந்திய முஸ்லிம் மகளிர் இயக்கம் மீண்டும் ஒருமுறை முஸ்லிம் பெண்களின் உரிமைக்காகப் போராடும்” என்றார் அவர்.

இந்திய முஸ்லிம் மகளிர் இயக்கம் கடந்த 18 ஆண்டுகளாக முஸ்லிம் பெண்களின் உரிமைகள் மற்றும் பிரச்னைகளுக்காகப் போராடி வருகிறது. இதன்கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் முஸ்லிம் பெண்களின் கோரிக்கைகள் அரசிடம் முன்வைக்கப்பட்டன.

’75 ஆண்டுகளுக்குப் பிறகும் நாங்கள் போராடுகிறோம்’

இந்திய முஸ்லிம் பெண்களின் கோரிக்கைகள் குறித்து பிபிசியிடம் பேசிய ஒருங்கிணைப்பாளர் நூர்ஜஹான், “பல ஆண்டுகளாக முஸ்லிம் பெண்கள் போராடி வருகின்றனர். அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் எங்களின் குரலுக்கு செவி சாய்க்கப்படுமா என்பது தெரியவில்லை,” என்று குறிப்பிட்டார்.

“நாட்டில் ஒரு பெரிய முஸ்லிம் சமூகம் உள்ளது. அதனால்தான் முஸ்லிம் குடும்ப சட்டம் நடைமுறைக்கு வந்தது. மற்ற மதங்களிலும் குடும்ப சட்டம் இருக்க வேண்டுமா? ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணும் போராட்டத்தைத் தொடர வேண்டாமா? எந்தவிதமான பழக்க வழக்கங்கள் இருந்தாலும் அரசு அவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்பி அவற்றைத் தடுக்க வேண்டும். ஒரே சீரான சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டுமென்றால் அதில் முஸ்லிம் பெண்களுக்கும் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும்.”

“கடந்த 2007 முதல் நாட்டின் 15 மாநிலங்களில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். தற்போது முஸ்லிம் மகளிர் இயக்கத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இன்று இந்த செய்தியாளர் சந்திப்புக்கு ஏழு மாநிலங்களில் இருந்து முஸ்லிம் பெண்கள் வந்துள்ளனர். தங்கள் பிரச்னைகளைத் தீர்க்க பெண்கள் முன்வர வேண்டும் என்று கடந்த 18 ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம். இதுவரை சமூகத்தின் அரசியல் அதிகாரம் முஸ்லிம் ஆண்களின் கைகளில் இருந்தது. இன்று இதன் விளைவை நாம் காண்கிறோம். அவர்கள் சமூகத்தின் 50 சதவீதம் பேரை முன்னேறவிடாமல் செய்துள்ளனர். அதை மாற்ற நாங்கள் முயன்று வருகிறோம்,” என்று நூர்ஜஹான் குறிப்பிட்டார்.

“இந்தப் போராட்டத்தில் ஆண்களும் எங்களுடன் இருக்கிறார்கள். ஒருபுறம் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் பெண்களின் உரிமைக்கான எங்கள் சட்டப் போராட்டமும் தொடர்ந்து வருகிறது,” என்றார் அவர்.

“சில சமூகங்களுக்கு 70 ஆண்டுகளுக்கு முன்பே உரிமைகள் கிடைத்துவிட்டன. அவை எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. மக்கள்தொகை அடிப்படையில் முஸ்லிம் சமூகம் மிகப்பெரியது. அப்படியும் அரசு ஏன் எங்களைக் குடிமக்களாகப் பார்க்கவில்லை? அங்கும் அரசியல் நடக்கிறது. இதன் விளைவாக முஸ்லிம் பெண்கள் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது” என்று நூர்ஜஹான் கூறினார்.

வக்ஃப் வாரியத்தில் 50% இட ஒதுக்கீடு, இந்திய முஸ்லிம் மகளிர் இயக்கம்

பட மூலாதாரம், Getty Images

இந்திய முஸ்லிம் மகளிர் இயக்கத்தின் கோரிக்கைகள்

  • மணமகளின் வெளிப்படையான ஒப்புதல் இல்லாமல் திருமணம் செய்யப்படக் கூடாது.
  • திருமணம் தொடர்பாக இருவருக்கும் இடையே எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் இருக்க வேண்டும்.
  • எல்லா முஸ்லிம் திருமணங்களும் பதிவு செய்யப்பட வேண்டும்.
  • நிக்காஹ்நாமா ஒரு கட்டாய அரசு ஆவணமாக இருக்க வேண்டும்.
  • நிக்காஹ் நேரத்தில், மணமகனின் ஓர் ஆண்டு வருமானம் மணமகளுக்கு மெஹராக (அன்பளிப்பு) வழங்கப்பட வேண்டும்.
  • திருமணத்தை நடத்தும் காஜி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டும்
  • மகளிர் காஜிகள் தங்களை காஜிகளாக பதிவு செய்துகொள்வதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
  • காஜியின் பொறுப்புகள் தெளிவாகக் கூறப்பட வேண்டும்
  • நிக்காஹ் விழாவுக்கான வழிமுறைகள் தெளிவாக விளக்கப்பட வேண்டும்
  • திருமணத்திற்கு சாட்சியாக இருப்பவர்களின் ஆவணச் சான்றுகள் சரியாக இருக்க வேண்டும்.
  • சாட்சிகள் இல்லாமல், சம்மதம் இல்லாமல், காரணம் இல்லாமல் திருமணம் நடக்கக்கூடாது.
  • ஹலாலா, மிஸ்யார், முத்தாவிவாஹ் ஆகியவை சட்ட விரோதமாக அறிவிக்கப்பட வேண்டும்
  • விவாகரத்துப் படிவம், ஃபஸ்க்/குலா/முபாரா ஆகியவை பெண்களின் வசதிக்காகச் சேர்க்கப்பட வேண்டும்.
  • விவாகரத்து செயல்முறை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்
  • குழந்தைத் திருமணம் சட்ட விரோதமாக அறிவிக்கப்பட வேண்டும்
  • நீதிமன்றத்திலும் நீதிமன்றத்திற்கு வெளியேயும் விவாகரத்து செயல்முறை கட்டாயமாக்கப்பட வேண்டும்
  • திருமணமான முஸ்லிம் ஆணோ அல்லது பெண்ணோ இஸ்லாத்தை விட்டு வெளியேறியோ அல்லது தனது சொந்த விருப்பத்தின் பேரில் வேறு எந்த மதத்தை ஏற்றுக்கொண்டாலோ, திருமணத்தை உடைக்க முடியாது.
  • இத்தத் (காத்திருப்பு காலம்) காலத்தின்போது ஒரு பெண்ணுக்கு திருமணத்தைத் தவிர வேறு எந்தத் தடையும் விதிக்கக்கூடாது. குடும்பத்துக்கு உள்ளும் பொதுவெளியிலும் தன் எல்லா செயல்பாடுகளையும் தொடர பெண்ணுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும்.
  • ஒரு முஸ்லிம் பெண் இன்னும் தனது குழந்தைகளின் இயற்கையான பாதுகாவலராக இருக்கிறார் (விவாகரத்து பெற்றவராக இருந்தாலும் அல்லது விதவையாக இருந்தாலும் சரி) என்றால், பாதுகாவல் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் அவரது நலன்களும் சம்மதமும் முதன்மையாக இருக்க வேண்டும்.
  • பெற்றோரின் மதமாற்றம் அல்லது மறுமணம், குழந்தையின் பாதுகாவலை இழக்கும் காரணமாக இருக்கக் கூடாது.
  • ஜேஜே (சிறார் நீதி) சட்டத்தின் கீழ் தத்தெடுப்பு அனுமதிக்கப்பட வேண்டும்.
  • அரசியலமைப்பு விதிகளின்படி, விவாகரத்துக்குப் பிறகான பராமரிப்பு செலவு இருவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.
  • திருமணத்திற்குப் பிறகு கணவருடைய சொத்தில் சம உரிமை இருக்க வேண்டும்.
  • குடும்பச் சட்டத்தின் கீழ் வரும் அனைத்து விவகாரங்களையும் கையாள ஒரு காஜி/மத்தியஸ்தர்/நடுவர், அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

வக்ஃப் வாரியத்தில் 50% இட ஒதுக்கீடு, இந்திய முஸ்லிம் மகளிர் இயக்கம்

பட மூலாதாரம், GETTYIMAGES/ROLLINGEARTH

மற்ற கோரிக்கைகள்

  • வக்ஃப் வாரிய சட்டத்தில் திருத்தம் செய்யும்போது பெண்களுக்கு 50% முன்னுரிமை அளிக்க வேண்டும்.
  • முஸ்லிம் சமூகம் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும்.
  • நிலுவையில் உள்ள அனைத்து நீதிமன்ற வழக்குகளும் விரைவில் முடிக்கப்பட வேண்டும்

முஸ்லிம் குடும்ப சட்டம் வந்தால்…

முஸ்லிம் மகளிர் இயக்கத்துடன் தொடர்புடைய மும்பையைச் சேர்ந்த காஜி ஜுபைதா காத்தூன் ஷேக் பிபிசி மராத்தியிடம், “குடும்பச் சட்டம் இருந்திருந்தால் மும்பையில் பல பெண்களுக்கு அநீதி நடந்திருக்காது. நான் பிண்டி பஜார் பகுதியில் வளர்ந்தேன். ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் நுழைய அனுமதி இருக்கவில்லை. ஆனால் நாங்கள் மற்ற தர்காக்களுக்கு படிக்கச் சென்றோம், அத்தகைய பாரம்பரியம் அங்கு இருக்கவில்லை,” என்று தெரிவித்தார்.

“மாஹிம் சிஎஸ்டி பகுதியில் சில மசூதிகளில் முஸ்லிம் பெண்கள் நுழைவதற்கு அனுமதி இருந்தது. எனவே நாங்கள் ஓர் ஆய்வை நடத்தினோம். பின்னர் நாங்கள் ஹாஜி அலி தர்காவில் பெண்கள் நுழைவுக்காகப் போராடினோம். குர்ஆனில் அப்படி எதுவும் எழுதப்படவில்லை. ‘இன்று இப்படிச் சொல்கிறீர்கள், நாளை மசூதிக்குள் நுழைவதற்கும் அனுமதி கேட்பீர்கள்’ என்று எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களே எங்களிடம் சொன்னார்கள். ஆனால் நாங்கள் கேட்கிறோம், ‘அல்லாஹ் எங்களை சமமாகப் படைத்திருக்கிறார், எங்களைத் தடுக்க நீங்கள் யார்?”

ராஜஸ்தானின் ராய்பூரில் முஸ்லிம் மகளிர் உரிமைகளுக்காகப் பாடுபடும் நிஷாத் ஹுசைன், பிபிசி மராத்தியிடம் பேசினார். “முஸ்லிம் பெண்களின் இருப்பே இல்லாததால் போராட்டம் முடிந்து போய்விட்டது. அப்போதுதான் நமக்காக யாரும் போராட மாட்டார்கள் , நாம்தான் அதைச் செய்ய வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. எங்கள் சொந்த பலத்தில் நாங்கள் நிற்கிறோம். நான் ஒரு இந்தியக் குடிமகன். அரசமைப்புச் சட்டம் எனக்கு முழு உரிமைகளை வழங்குகிறது. என் உரிமைகள் மீறப்பட்டால் நான் ஏன் பேசக்கூடாது? நாங்கள் கண்ணியத்துடன் வாழ விரும்புகிறோம், எனவே நாங்கள் எங்கள் உரிமைகளைக் கோருகிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“முஸ்லிம் சமூகத்தின் தற்போதுள்ள சட்டங்களில் முஸ்லிம் பெண்களுக்கு இதுவரை எந்த உரிமையும் இல்லை. அதனால்தான் எங்கள் கோரிக்கைகளை முன்வைப்பதற்காக பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். முஸ்லிம் பெண்களின் இந்தக் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் என நம்புகிறோம்,” என்றார் அவர்.

‘இந்த கோரிக்கைகளுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை’

முஸ்லிம் பெண்களின் இந்தக் கோரிக்கைகள் குறித்து முஸ்லிம் சமூகத் தலைவரும், ரஸா அகாடமியின் நிறுவக தலைவருமான முஹமது சயீத் நூரியிடம் பிபிசி பேசியது.

“எந்த மதத்திலும், கொள்கையிலும் நம்பிக்கை இல்லாத சிலர் சமுதாயத்தில் உள்ளனர். எந்த மதத்தையும் நம்பாதவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் என்று சொல்லிக்கொள்வதில்லை. ஏதாவது ஒன்றைப் பின்பற்றுங்கள். ஒரு சமூகத்தில் இருவேறு கருத்துகளை உருவாக்க இவர்கள் விரும்புகிறார்கள். அவர்களின் கருத்துகள் மற்றும் கோரிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல,” என்று அவர் தெரிவித்தார்.

“மதத்தையும் சமூகத்தையும் மதிப்பவர்கள் அந்த பாதையில் சரியாக நடக்கிறார்கள். கோரிக்கை வைப்பவர்கள் தங்கள் மனதில் தோன்றுவதை மட்டுமே செய்கிறார்கள். அவர்களின் கோரிக்கைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. அவர்கள் சுதந்திரமானவர்கள் என்பதால் வெறுமனே பேசுகிறார்கள்” என்று அவர் கூறினார்.

இந்திய முஸ்லிம் மகளிர் இயக்கத்தின் வரலாறு

பாரதிய முஸ்லிம் மஹிளா அந்தோலன் (பிஎம்எம்ஏ) என்பது முஸ்லிம் பெண்கள் தலைமையிலான ஒரு சுயாட்சியுள்ள, மதச்சார்பற்ற, உரிமைகள் அடிப்படையிலான மக்கள் அமைப்பாகும். இது இந்தியாவில் முஸ்லிம்களின் சம உரிமைகளுக்காகப் போராடுகிறது.

இந்த அமைப்பு 2007 ஜனவரியில் நிறுவப்பட்டது. நாட்டில் ஒரு லட்சம் பெண்கள் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளனர். முஸ்லிம் சமூகம் குறிப்பாக முஸ்லிம் பெண்கள், வறுமை மற்றும் ஓரங்கட்டப்பட்டதைக் கடந்து, சமத்துவம், நீதி மற்றும் மனித உரிமைகள் நிறைந்த வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்திய முஸ்லிம் மகளிர் இயக்கம் செயல்படுகிறது.

வக்ஃப் வாரியத்தில் 50% இட ஒதுக்கீடு, இந்திய முஸ்லிம் மகளிர் இயக்கம்

பட மூலாதாரம், Getty Images

இந்த இயக்கம் கடந்த 18 ஆண்டுகளாக முஸ்லிம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அவர்களின் சமூக, பொருளாதார, அரசியல், சிவில், சட்ட மற்றும் மத உரிமைகளை உறுதிப்படுத்தவும் செயல்பட்டு வருகிறது.

பிஎம்எம்ஏ, எல்லா முஸ்லிம் பெண்களையும் பிரதிநிதித்துவம் செய்வதில்லை

நாட்டில் முஸ்லிம் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைப்புகள் உள்ளன. உதாரணமாக தேசிய முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு, முஸ்லிம் பெண்கள் சங்கம் மற்றும் பிற அமைப்புகள் உள்ளன. ஒவ்வோர் அமைப்பும் பல்வேறு நிலைகளில் போராடி, கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.

நாட்டின் எல்லா முஸ்லிம் பெண்களும் இந்திய முஸ்லிம் மகளிர் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல. சமூக மற்றும் சட்டப் போராட்டங்களில் ஈடுபடும் முஸ்லிம் பெண்களை இந்த அமைப்பு பிரதிநிதித்துவம் செய்கிறது.

இந்த அமைப்பில் பணியாற்றுபவர்கள் வலதுசாரிகள் என்று சில முஸ்லிம் அமைப்புகள் மற்றும் தலைவர்களால் அடிக்கடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவர்கள் முன்வைக்கும் விவகாரங்கள், வலதுசாரி மக்களின் கோரிக்கைகளுடன் இணக்கமாக இருப்பதாக மௌலானாக்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் கருதுகின்றன.

ஆனால் இந்திய முஸ்லிம் மகளிர் இயக்கம் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறது. அரசியலமைப்பு சட்டப்படி முஸ்லிம் பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காகவே போராடுவதாக இந்த இயக்கம் கூறுகிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.