யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இடம்பெறும் சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதிகளில் சட்டவிரோதமான முறையிலும் , வழங்கப்பட்ட அனுமதிகளுக்கு மேலதிகமாகவும் சுண்ணக்கல் அகழ்வுகள் இடம்பெறுவதாக அப்பகுதி மக்களால் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.
அந்நிலையில் கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் , சுண்ணக்கல் ஏற்றி சென்ற கனரக வாகனங்களை பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
அதனை அடுத்து , சுண்ணக்கற்களை உரிய அனுமதிகளுடனேயே எடுத்து செல்வதாகவும் , கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக சுண்ணக்கல் வர்த்தகத்தில் தாம் ஈடுபட்டு வருவதாகவும் , சிற்றி ஹாட்வெயாரின் உரிமையாளர் யாழில் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் , சடடவிரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்படுவதாக கூறப்பட்ட பகுதிகளுக்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கடற்தொழில் அமைச்சர் இ. சந்திரசேகர் , நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று , சுண்ணக்கல் அகழப்பட்டு பாரிய பள்ளங்களாக காணப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கடற்தொழில் அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போது, யாழில் இடம்பெறும் சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கைகளுக்கும் , அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் அரச அதிகாரிகளே பொறுப்பு கூற வேண்டும். இது தொடர்பிலான விசாரணைகள் விரைந்து முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.