- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்புவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணிதான் முதலிடத்தில் இருந்தது, 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்றும் கணிக்கப்பட்டது.
ஆனால், நியூசிலாந்து அணியிடம் 3-0 என்று டெஸ்ட் தொடரை இழந்து ஒயிட்வாஷ் ஆனதிலிருந்து இந்திய அணியின் சறுக்கல் தொடங்கியது. புள்ளி அட்டவணையில் 2வது இடத்துக்கு பின்தங்கியது.
அபார வெற்றியும் அடுத்தடுத்த தோல்விகளும்
பார்டர்- கவாஸ்கர் தொடருக்காக ஆஸ்திரேலியா புறப்படுவதற்கு முன்பு வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும் என்றே ரசிகர்கள் நம்பினர். பெர்த் டெஸ்டில் இந்தியாவின் வெற்றி அந்த நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தியது.
ஆனால், அடுத்தடுத்து இந்திய அணி சந்தித்த தோல்விகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு 3வது முறையாக தகுதி பெறாமல் செய்துவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் 10 ஆண்டுகளாக வசப்படுத்தி வைத்திருந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பையையும் 3-1 என்ற கணக்கில் இழந்து வெறுங்கையுடன் தாயகம் திரும்புகிறது இந்திய அணி.
மோசம் போன டாப்ஆர்டர் பேட்டர்கள்
சீனியர் வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா, அஸ்வின், கே.எல்.ராகுல், சுப்மான் கில், ரிஷப் பந்த் ஆகியோர் இருந்தும் முதல் போட்டியைத் தவிர்த்து வேறு எந்த போட்டியிலும் இந்திய அணியால் வெற்றியை நெருங்கவே முடியவில்லை.
இந்த தொடரில் இந்திய அணி சார்பில் ஜெய்ஸ்வால், விராட் கோலி, நிதிஷ் குமார் ரெட்டி ஆகிய 3 பேர் மட்டுமே சதம் அடித்துள்ளனர். மற்ற எந்த பேட்டர்களும் சதம் அடிக்கவில்லை.
அணியின் சராசரியே இவ்வளவுதான்
இந்திய அணியில் முதல் டெஸ்ட் போட்டியைத் தவிர அடுத்த எந்த போட்டியிலும் பேட்டர்கள் தரப்பில் ஒட்டுமொத்த பங்களிப்பு பெரிதாக இல்லை. பிங்க் டெஸ்ட் போட்டியிலிருந்து சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டிவரை இந்திய அணி தொடர்ந்து 2 இன்னிங்ஸ்களிலும் 300 ரன்னை ஒருமுறை கூட கடக்கவே இல்லை. சராசரியாகப் பார்த்தால் இந்திய அணியின் ஒரு இன்னிங்ஸ் ஸ்கோர் என்பது 200 ரன்களுக்குள்ளாகவே அமைந்துள்ளது.
பும்ரா தலைமை ஏற்று செயல்பட்ட முதல் டெஸ்ட் போட்டிக்குப் பின் அடுத்து வந்த 4 போட்டிகளிலும் இந்திய அணியில் டாப்ஆர்டர் பேட்டர்கள் ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்தது இந்திய அணியை பெரிய பாதாளத்தில் தள்ளியது.
பும்ரா எனும் கருப்புக் குதிரை
பந்துவீச்சில் பும்ரா என்ற ஒரே கருப்புக் குதிரையை நம்பித்தான் இந்திய அணி 5 டெஸ்ட்களிலும் பயணித்தது. சிராஜ், ஆகாஷ் தீப், ஹர்சித் ராணா, பிரிசித் கிருஷ்ணா, நிதிஷ் ரெட்டி ஆகியோர் அவ்வப்போது நன்றாகப் பந்துவீசினாலும் பும்ராவின் சுமையைக் குறைக்கும் வகையில், அவருக்கு துணையாக யாரும் நிலையாக பந்துவீசவில்லை.
மற்றொரு சீனியர் பந்துவீச்சாளரான சிராஜ் 5 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். கடைசி டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் பும்ரா இல்லாத சூழல் ஏற்பட்டவுடன் அந்த நெருக்கடியை சமாளிக்க முடியாமல் எளிதாக இந்திய அணி தோல்வியை ஒப்புக்கொண்டது.
பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இழப்பதற்கு தனித்த வீரர்களின் செயல்பாடு, கேப்டன்ஷி தோல்வி, திட்டமிடல் இல்லை, ஆடுகளத்தை புரிந்து கொள்ளாதது, அனுபவ வீரர்கள் இல்லாதது, பும்ராவை அதிகம் சார்ந்திருத்தது என 7 முக்கிய காரணங்களைக் கூறலாம். அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
1. ரோஹித் சர்மா, கோலியின் ஏமாற்றம்
இந்திய அணி பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இழந்ததில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கும் முக்கிய பங்களிப்பு இருக்கிறது. இந்திய அணியில் சீனியர் வீரர்களான இருவருக்கும், ஆஸ்திரேலிய மண்ணில் அதிகம் ஆடிய அனுபவம் இருக்கிறது. ஆனால், இரு சீனியர் பேட்டர்களுமே தொடர் முழுவதும் பெரிதாக ஸ்கோர் செய்யாமல் ஏமாற்றினர்.
பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கு முன்பாகவே கோலி, ரோஹித் சர்மா இருவருமே மோசமான ஃபார்மில் இருந்தனர். சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் அவர்கள் சொதப்பலாக பேட் செய்தனர்.
விராட் கோலி பெர்த் டெஸ்டில் சதம் அடித்தபின் அடுத்த 4 டெஸ்ட் போட்டிகளிலும் ஒரே மாதிரியாக, 8 முறை ஆட்டமிழந்தார். 4 டெஸ்ட்களிலும் சேர்த்து 85 ரன்கள்தான் சேர்த்துள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் கோலியின் சராசரி 25 ரன்களைக் கூட தாண்டவில்லை. ஒரு சீனியர் பேட்டர் சதம் அடித்து தொடரைத் தொடங்கி அதன்பின் சறுக்கியது கிரிக்கெட் வரலாற்றில் அரிதான நிகழ்வாகும்.
8 இன்னிங்ஸ்களிலும் 8 முறையும் ஒரே மாதிரியாக, ஆப்சைடு விலகிச் செல்லும் பந்தை தொட்டு விராட் கோலி ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியது. சீனியர் பேட்டராக இருக்கும் கோலி, தனது தவறை திருத்திக் கொள்ளாமல் தொடர்ந்து ஒரே மாதிரியாக ஆட்டமிழந்ததும், கோலியின் பலவீனம் தெரிந்து எளிதாக அவரை ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தியதும் இந்திய அணியின் தோல்வியை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றது.
ரோஹித் சர்மாவின் நிலை இதைவிட மோசம். அவர் ஆடிய 6 இன்னிங்ஸ்களிலும் ஒட்டுமொத்தமாகச் சேர்த்துக் கூட 100 பந்துகளை ட சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டாப்ஆர்டரில் ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சுப்மான் கில், விராட் கோலி என 5 பேட்டர்களும் எந்த போட்டியிலும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கூட அமைக்கவில்லை. எந்த டெஸ்டிலும் நிலைத்தன்மையான பேட்டிங்கை இவர் வெளிப்படுத்தவில்லை.
விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் பேட்டிங்கில் பெரிய ஏமாற்றத்தை அளித்தது அணியின் ஒட்டுமொத்த தோல்விக்கும் காரணமாக அமைந்துவிட்டடது.
2. நிலைத்தன்மை, பார்ட்னர்ஷிப் இல்லை
இந்திய அணியிடம் இருந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத்துடனே தொடக்கத்திலிருந்தே ஆஸ்திரேலிய அணி அணுகியது.அதனால்தான் 2018, 2021ம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஆடுகளங்களை மாற்றிவிட்டு, முற்றிலும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான “க்ரீன் டாப்” பிட்சுகளை அமைத்தது. இந்த ஆடுகளங்களில் புதிய பந்தில் பேட்டர்கள் பேட் செய்வது கடினமாக இருக்கும். அதனால், 40 ஓவர்கள் வரை பேட்டர்கள் ரன்களைப் பற்றி கவலைப்படாமல் விக்கெட்டை இழக்காமல் நிதானமாக டிபென்ஸ் ஆட்டத்தை கையாள வேண்டும். 40 ஓவர்குக்குப் பின் பேட்டர்கள் எளிதாக அடித்து ஆடி ஸ்கோர் செய்யலாம்.
ஏனென்றால், ஆஸ்திரேலியா பயன்படுத்தும் கூக்கபுரா பந்து தேய்ந்துவிட்டால் பேட்டர்கள் விளையாட ஏதுவாக இருக்கும், நன்றாக அடித்து ஆட முடியும். ஆக, க்ரீன் டாப் ஆடுகளங்களில் பேட்டர்கள் 40 ஓவர்கள் வரை நிலைத்து ஆடுவது அவசியம்.
ஆனால், இந்திய அணியின் டாப்ஆர்டர் பேட்டர்கள் 40 ஓவர்களுக்குள் பெவிலியன் திரும்பி, நடுவரிசை பேட்டர்களையும் காவு கொடுத்துவிட்டனர். பந்து தேய்ந்தபின் பேட்டிங்கில் பெரிதாக அனுபவம் இல்லாத கீழ்வரிசை பேட்டர்களே களத்தில் இருந்தால் எதிர்பார்த்த ஸ்கோர் வருவது கடினமாக இருக்கும்.
இந்திய பேட்டர்களில் யாரிடமும் பேட்டிங்கில் நிலைத்தன்மை(consistency) இல்லை. இந்த நிலைத்தன்மை இருந்திருந்தாலே பார்ட்னர்ஷிப் தானாகவே வந்திருக்கும். ஜெய்ஸ்வால், கோலி, ரோஹித், ராகுல், கில் என எந்த பேட்டரும் நிலைத்தன்மையுடன் ஆடவில்லை, பெரிய பார்ட்னர்ஷிப்பும் அமைக்கவில்லை.
இதில் முதல் டெஸ்டில் ராகுல், ஜெய்ஸ்வால் பார்ட்னர்ஷிப் மட்டும்தான் விலக்காகும். இந்த பேட்டர்கள் ஒருவர்கூட களத்தில் 2 மணிநேரம் வரை நின்று பேட் செய்திருந்தாலே ஆடுகளத்தின் தன்மை, பந்துவீச்சாளர்களின் லைன் லென்த் குறித்து அறிந்து பேட்டிங் முறையை மாற்றியிருப்பார்கள்.
கடந்த 5 டெஸ்ட்களிலும் புதிய பந்தில் எதிரணியினர் பந்துவீசும் போது ஸ்விங்கை சமாளிக்க முடியாமல் டாப்ஆர்டர் பெரிய சரிவை சந்தித்தது.
3. புஜாரா, ரஹானே இல்லாததும் ஒரு காரணம்
ஆஸ்திரேலியா போன்ற வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் பேட் செய்ய டெஸ்ட் போட்டியில் களத்தில் நீண்ட நேரம் நின்று தற்காப்பு ஆட்டம் ஆடக்கூடிய பேட்டர்கள் அவசியம். ஆனால், இந்திய அணியில் கோலி, ரோஹித் தவிர எந்த பேட்டரும் டெஸ்ட் ஆடிய அனுபவம் இல்லாதவர்கள்.
சத்தேஸ்வர் புஜாரா, ரஹானே இருவருமே பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் தொடங்கும் முன் உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்தனர். ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வுக்குழுவினர் இருவரையும் பரிசீலிக்காதது நிச்சயம் அவர்களுக்கு ஏமாற்றம் அளித்திருக்கும். ரஹானே, புஜாரா போன்ற அனுபவம் நிரம்பிய டெஸ்ட் வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களை வைத்து பெரிய டெஸ்ட் தொடரை அணுகியதற்கு பெரிய விலையை இந்திய அணி கொடுத்தது.
4. பும்ராவை மட்டும் அதிகம் நம்பியது
இந்திய அணி ஒவ்வொரு போட்டியிலும் ஆஸ்திரேலியாவுக்கு ஓரளவு சவால் விடும் வகையில் ஆடியதற்கு பும்ராவின் பந்துவீச்சு முக்கியக் காரணமாகும். இந்தத் தொடர் முழுவதும் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக பும்ராவின் பந்துவீச்சு இருந்தது. பல போட்டிகளில் பும்ரா ஒற்றை நபராக திருப்புமுனையை ஏற்படுத்தினார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால், பும்ரா என்ற ஒரு பந்துவீச்சாளரை மட்டும் தொடர்ந்து நம்பி இந்திய அணி பயணித்தது தோல்விக்கான காரணங்களில் ஒன்று. பும்ரா பந்துவீச முடியாத சூழல் அவர் இல்லாத கடைசி டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் தார்மீக ரீதியாக அணி வீரர்கள் நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்று கூற முடியும்.
சிராஜ், ஜடேஜா, ஹர்சித் ராணா, ஆகாஷ் தீப் ஆகியோர் பந்துவீசியபோதிலும் பும்ராவின் சுமையை இவர்களால் குறைந்துவிட்டது என்றோ, பும்ராவின் அழுத்தத்தை, சுமையை குறைத்தார்கள் என்றோ கூற முடியாது.
பும்ரா என்ற தனிமனிதருக்கு கொடுக்கப்பட்ட அதீத சுமை, அழுத்தம், அவரையே அதிகம் சார்ந்திருந்தது சக வீரர்களை நம்பிக்கையிழக்கச் செய்துவிட்டது. அதேநேரம், பும்ராவும் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட கேப்டன்ஷி பொறுப்பையும், பந்துவீச்சாளர் பணியையும் சிறப்பாகவே செய்தார். இந்த டெஸ்ட் தொடரில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர்நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
5. கேப்டன்சி தவறுகளும், சரியான திட்டமிடல் இல்லாததும்
ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் மும்பை இந்திய அணிக்கு அதிகமான கோப்பையை பெற்றுத் தந்திருக்கலாம், டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்கு பெற்றுத் தந்திருக்கலாம். ஆனால், டெஸ்ட் தொடர் என்பது வழக்கமான கேப்டன்சியிலிருந்து மாறுபட்டது.
இந்திய அணி பல நேரங்களில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டதற்கு கேப்டன்சி தவறுகளும், சரியான முடிவை உரிய நேரத்தில் எடுக்கத் தவறியதும் காரணம். அடிலெய்ட், காபா டெஸ்டில் இந்திய அணியின் கை ஓங்கி இருந்த தருணங்களை சரியாகப் பயன்படுத்த கேப்டன் ரோஹித் சர்மா தவறிவிட்டார். பல போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் டெய்லெண்டர்கள் பேட்டர்களை விரைவில் அவுட்டாக்க முடியாமல், பந்துவீச்சை சரிவர மாற்ற முடியாமல் ரோஹித் சர்மா திணறினார்.
எதிரணி பேட்டர்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் பந்துவீச்சில் மாற்றம் செய்யவும், பீல்டிங்கை நுட்பமாக அமைத்து அதற்கு ஏற்றபடி பந்துவீசச் செய்து விக்கெட்டுகளை வீழ்த்தும் வியூகங்களை அமைக்கவும் ரோஹித் சர்மா கேப்டனாகத் தவறிவிட்டார்
அது மட்டுமல்ல ஆஸ்திரேலியாவில் ஆடுகளங்களில் வெயில் அடித்தால் பிட்ச் காய்ந்து சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும். அதைக் கணித்து இந்திய அணியில் உள்ள சுழற்பந்துவீச்சாளர்களை ரோஹித் சர்மா சரியான நேரத்தில் பயன்படுத்தவில்லை. மாறும் சூழலைக் கண்டறிந்து அதற்கு ஏற்றபடி துரிதமாக செயல்பட்டு, தருணத்தை கைப்பற்றுவதுதான் கேப்டன்ஷியின் தனித்தன்மை ஆனால், அதில் எதிலுமே ரோஹித் சர்மா சிறப்பாகச் செயல்படவில்லை.
திட்டமிடல் என்பது கடைசி 4 டெஸ்ட்களிலும் பெரிதாக ரசிகர்களாலும், எதிரணியாலும் உணரப்படவில்லை.
6. ரிஷப் பந்த், நிதிஷ் ரெட்டியை சிறப்பாக பயன்படுத்தாமை
இந்த டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த், நிதிஷ் ரெட்டியை கேப்டன் ரோஹித் சர்மா முறையாகப் பயன்படுத்தவில்லை. தேய்ந்த பந்தில் ரிஷப் பந்த் சிறப்பாக பேட் செய்யக்கூடியவர், விரைவாக ஸ்கோர் செய்யும் திறமை படைத்தவர். ஆனால், பெரும்பாலான இன்னிங்ஸ்களில் ரிஷப் பந்த் புதிய பந்தில் பேட் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அதாவது டாப்ஆர்டர் பேட்டர்கள் நிலைத்து ஆடாமல் தோல்வி அடைந்ததால் விரைவாகவே நடுவரிசை பேட்டர்கள் களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது, சுமை அவர்கள் மீது ஏற்றப்பட்டது.
ஒருவேளை டாப்ஆர்டர் பேட்டர்கள் ஓரளவு களத்தில் நிலைத்து ஆடி இருந்தால், ரிஷப் பந்த் அவரின் இயல்பான பேட்டிங்கை வெளிப்படுத்த உதவியாக இருந்திருக்கும். கடந்த 2021-ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் பல போட்டிகளில் ரிஷப் பந்த் கீழ் வரிசையில் களமிறக்கப்பட்டதால் பெரிதாக ஜொலித்தார்.
இந்த டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா, கோலி, ரிஷப் பந்த் 3 பேரும் சேர்ந்து 476 ரன்கள்தான் சேர்த்துள்ளனர், ஜெய்ஸ்வால் ஒருவர்மட்டுமே 391 ரன்கள் சேர்த்துள்ளார்.
அதேபோல நிதிஷ் குமார் கீழ்வரிசையில் சிறப்பாக பேட் செய்வதை அறிந்தபின் அவரின் பேட்டிங் வரிசையை மாற்றி இருக்கலாம். சுப்மான் கில், ராகுல் இருவரில் ஒருவரை கீழ்வரிசைக்கு மாற்றி நிதிஷ் குமாரை டாப்ஆர்டரில் கொண்டு வந்திருக்கலாம். ஏனென்றால் புதிய பந்தில் நிதிஷ் குமார் சிறப்பாக பேட் செய்தார், ஆஸ்திரேலிய பந்துவீச்சை அநாசயமாக அவர் எதிர்கொண்டார்.
7. பயிற்சியாளர் கம்பீரின் பங்கு என்ன?
இந்திய அணியின் மோசமான தோல்விக்கு கேப்டன்சி தோல்வி எந்த அளவு முக்கியமோ அதே அளவு பயிற்சியாளர் கெளதம் கம்பீருக்கும் பங்கிருக்கிறது. களத்துக்குள் ரோஹித் சர்மா வியூகம் அமைத்தார் என்றால், களத்துக்கு வெளியே வியூகத்தை உருவாக்குபவர் பயிற்சியாளர்தான்.
இந்திய அணியின் தோல்விக்கு பயிற்சியாளர் கம்பீர் சரியான வியூகத்தை அமைத்துக் கொடுக்கவில்லையா, அல்லது ஆஸ்திரேலிய அணியைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லையா எனத் தெரியவில்லை. அணியில் எந்தெந்த வீரர்களைத் தேர்ந்தெடுப்பது, சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில் பெரிய டெஸ்ட் தொடரை எதிர்கொள்வதில் இருக்கும் சிக்கல்கள் ஆகியவற்றை பயிற்சியாளர் கம்பீர் உணர்ந்தாரா என்பது கேள்வியாக இருக்கிறது.
ரவி சாஸ்திரி, ராகுல் திராவிட் ஆகிய தலைமைப் பயிற்சியாளர்களிடம் இருந்த நுணுக்கம், வீரர்களிடம் இருந்த நட்பு, தனிப்பட்ட ரீதியில் நெருக்கம், வியூகங்களை வகுத்துக் கொடுத்தல், தவறு செய்வதைத் திருத்தல் போன்றவை பயிற்சியாளர் கம்பீரிடம் காணப்படவில்லை. ஒருவேளை இவை இருந்திருந்தால் விராட் கோலி 8 முறையும் ஒரே மாதிரியாக ஆட்டமிழந்திருக்கமாட்டார்.
“அனுபவம் வாய்ந்த டெஸ்ட் பேட்டர்கள் இல்லை”
இந்திய அணியின் தோல்வி குறித்து விளையாட்டுத்துறை மூத்த பத்திரிகையாளர் முத்துக் குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில் ” இந்திய அணி தோல்வி என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். அணியில் அனுபவன வீரர்களே இல்லை. கோலி, ரோஹித் இருவருமே ஃபார்மின்றி இருந்த போது இந்தத் தொடருக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். ஆனால், உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி நல்ல ஃபார்மில் இருந்த புஜாரா, ரஹானேவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்திய அணியில் எந்த பேட்டரிடமும் நிலைத்தன்மை என்ற விஷயமே காணப்படவில்லை. எந்த பேட்டராவது தொடர்ந்து இரு இன்னிங்ஸ்களிலும் குறைந்தபட்சம் 50 ஓவர்கள் பேட் செய்தார்களா என்று கூற முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
“பும்ராவுக்கு கூடுதல் சுமை”
பும்ராவின் சுமையைக் குறைக்க மாற்று வீரர் இல்லை என்று கூறிய முத்துக் குமார், சரியான துணைப் பந்துவீச்சாளர்கள் அமைந்திருந்தால் ஆட்டம் வேறுவிதமாக திரும்பியிருக்கும் என்றார். மேலும் அவர் கூறுகையில் ” பும்ராவுக்கு துணையாகப் பந்துவீச ஷமி போன்ற தேர்ந்த ஸ்விங் பந்துவீச்சாளர்கள் இல்லாதது பும்ராவுக்கு சுமையை அதிகப்படுத்தியது. ஒருவேளை பும்ரா, ஷமி, சிராஜ் மூவரும் இந்தத் தொடரில் பந்துவீசியிருந்தால் நிச்சயமாக தொடரை இந்திய அணி கைப்பற்றி இருந்திருக்கம்.
சிட்னியில் நடந்த கடைசி டெஸ்டில் கூட இந்திய அணி போராடித்தான் தோற்றது. க்ரீன் டாப் ஆடுகளத்தில் பேட் செய்வது கடினம். 162 ரன்கள் இலக்கே அந்த மைதானத்தில் பெரியது. பும்ரா ஒருவேளை கடைசி இன்னிங்ஸில் பந்துவீசியிருந்தால் இந்திய அணி வென்று தொடரை தக்கவைத்திருக்கும்” எனத் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.