on Sunday, January 05, 2025
அநுராதபுரத்தின் பல பகுதிகளில் இருந்து காட்டு யானைகளை வில்பத்து வரை விரட்டுவதற்கு GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்த வனஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, காட்டு யானைகளுக்கு GPS தொழில்நுட்பம் கொண்ட கழுத்துப் பட்டிகளை அணியும் நடவடிக்கை ஒயாமடுவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்காக வனவிலங்கு அதிகாரிகள், இலங்கை கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து செயற்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
காட்டு யானைகள் நடமாடும் இடங்களை கண்டறிந்து அவற்றின் வழித்தடங்களை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வுகளுக்கு அமைவாக, இலங்கையில் பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளில் யானைக்கு முக்கிய இடம் உண்டு.
அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், நாட்டின் பல பகுதிகளில் இருந்து தினமும் காட்டு யானையால் ஏற்படும் சேதங்கள் தொடர்பான செய்திகள் பதிவாகி வருகின்றன.
அதன்படி, அநுராதபுரம் மாவட்டத்தில் பயிர்ச்சேதம் அதிகம் உள்ள பகுதிகளிலிருந்து காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கை தொடங்கப்பட்டது.
அதற்கமைவாக அநுராதபுரம் காட்டு யானைகளை வில்பத்து தேசிய பூங்காவிற்கு விரட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதன் மூலம் பல பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.