தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட வரைவு குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகள் அவரை முன்னிலைப்படுத்துவதையும், தமிழரசுக்கட்சியைப் பலவீனப்படுத்துவதையும் இலக்காகக்கொண்ட உபாயம் மாத்திரமேயாகும்.
ஆகவே இவ்விடயம் தொடர்பில் அவருடன் சிறிதரன் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது தமிழர் நலனுக்கோ, கட்சிக்கோ உகந்ததல்ல எனக் குறிப்பிட்டு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கொழும்புக்கிளை தலைவர் சி.இரத்தினவடிவேல் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கத்துக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 2015 – 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அனைத்துக் கட்சிகளும் 84 தடவைகள் கூடி ஒரு அரசியலமைப்பு வரைவைத் தயாரித்தன.
அதில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்ற ரீதியில் தமிழரசுக்கட்சி முழுமூச்சாக ஈடுபட்டு, அவ்வரைவில் முன்னேற்றகரமான சமஷ்டி அம்சங்கள் சேர்க்கப்படுவதற்கு உந்துதல் அளித்தது. சுமார் ஐந்து ஆண்டுகால முயற்சியின் பின்னர் அதில் உள்ளடங்கியிருந்த சிறந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு இரா.சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
தற்போது ஆட்சியிலிருக்கும் தரப்பும் அதனை ஏற்றுக்கொண்டது. அவ்வரைவில் அவசியமான திருத்தங்களைச்செய்து, புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தேர்தல் பிரசாரங்களின்போது இவ்வரசாங்கம் வாக்குறுதியளித்திருந்தது.
இருப்பினும் இதில் பங்கேற்காத கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தற்போது எமது கட்சியினதும், தலைவர்களினதும் ஐந்து ஆண்டுகால முயற்சியை செல்லாக்காசாக்க முயற்சிக்கிறார். அதுமாத்திரமன்றி எப்போதும் தமிழர்களின் நலன்களை விட, தமிழரசுக்கட்சியை மலினப்படுத்துவதையே முன்னிலைப்படுத்தி செயற்பட்டுவரும் அவர், இம்முன்னேற்றகரமான வரைவையும் குறை கூறினார்.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது அவர் இந்த வரைவைப் புறந்தள்ளி, சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் தயாரிக்கப்பட்ட வரைவை முன்னிலைப்படுத்த முற்படுகிறார். அந்த வரைவில் உள்ள யோசனைகளைத் தமிழரசுக்கட்சி எப்போதுமே ஏற்றுக்கொண்டதில்லை.
இந்நிலையில் தமிழரசுக்கட்சிக்குள் நிலவுவதாகக் கருதப்படும் உள்ளக முரண்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தும் நோக்குடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கட்சியைப் புறந்தள்ளி, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு முற்படுகிறார்.
எனவே தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட வரைவு குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகள் அவரை முன்னிலைப்படுத்துவதையும், தமிழரசுக்கட்சியைப் பலவீனப்படுத்துவதையும் இலக்காகக்கொண்ட உபாயம் மாத்திரமேயாகும்.
ஆகவே இவ்விடயம் தொடர்பில் அவருடன் சிறிதரன் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது தமிழர் நலனுக்கோ, கட்சிக்கோ உகந்ததல்ல என்பதைக் கருத்திற்கொள்ளவேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.