ஸ்க்ரப் டைபஸ் தொற்று, தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) என்ற பாக்டீரியா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

‘ரிக்கட்ஸியா’ என்ற பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகளால் இந்த பாதிப்பு ஏற்படுவதாக பொது சுகாதாரத்துறையின் சுற்றறிக்கை கூறுகிறது.

தொற்று பாதிப்புக்கு உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஸ்க்ரப் டைபஸ் பரவல் அதிகரித்துள்ளது ஏன்? தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் வெளியிட்ட வழிகாட்டுதல்கள்

தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர்களுக்கு புதன் அன்று சுற்றறிக்கை மூலம் சில வழிகாட்டுதல்களை (guidelines) வழங்கினார்.

அதில், ரிக்கெட்ஸியா (Rickettsia) எனப்படும் பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒட்டுண்ணிகள் மற்றும் பூச்சிகள் மனிதர்களைக் கடிக்கும் போது ஸ்க்ரப் டைபஸ் தொற்று ஏற்படுவதாகக் கூறியுள்ளது.

மனிதர்களை இந்தவகையான தொற்று பாதித்த பூச்சிகள் கடிக்கும்போது காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்ற அறிகுறிகள் ஏற்படும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஸ்க்ரப் டைபஸ் தொற்றின் பாதிப்பு அதிகம் உள்ளதாக, பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தென்மாவட்டங்களிலும் கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஸ்க்ரப் டைபஸ் தொற்று பாதிப்பு இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்க்ரப் டைபஸ் தொற்று, தமிழ்நாடு

படக்குறிப்பு, தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம்

எங்கெல்லாம் பரவல் அதிகம்?

புதர் மண்டிய பகுதிகள், வனப்பகுதிகள், விவசாய நிலங்கள் ஆகியவற்றுக்கு அருகில் வசிப்பவர்கள், மலையேற்றம் செல்வோர், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்க்ரப் டைபஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வருகிறவர்களுக்கு அசித்ரோமைஸின் (azithromycin), டாக்ஸிசைக்ளின் (doxycyline), ரிஃவேம்பிசின் (rifampicin) ஆகிய மருந்துகளைக் கொடுக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை கூறியுள்ளது.

இதன்பிறகும் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால், இதயம், நுரையீரல், சிறுநீரகம் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட்டால் உயர் சிகிச்சைகளை அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

ஸ்க்ரப் டைபஸ் தொற்று, தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதர் மண்டிய பகுதிகள், வனப்பகுதிகள், விவசாய நிலங்கள் ஆகியவற்றுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு இந்த நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது

எவ்வாறு கண்டறிவது?

ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பால் என்ன பிரச்னை? என சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு இணைப் பேராசிரியர் மருத்துவர் பெருமாள் பிள்ளையிடம் பிபிசி தமிழ் கேட்டது.

“ஒட்டுண்ணியால் மனிதர்களுக்கு ஏற்படும் கடுமையான தொற்று நோய் இது. சுசுகாமுசி (tsutsugamushi) என்ற ஒட்டுண்ணிப் பூச்சிகளில் இருந்தும் மனிதர்களுக்கு ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பு ஏற்படுகிறது.

பூச்சியால் கடிபட்டு 10 அல்லது 12 நாட்களில் ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பு ஏற்படும். ஒட்டுண்ணி கடித்த இடத்தில் சிவப்பு நிறம் அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் புண் இருக்கும். இதை எஸ்கார் (Eschar) என்கிறோம்.

தொடர்ந்து நான்கைந்து நாட்களாக காய்ச்சல் இருப்பதாகக் கூறி சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை சோதிக்கின்றோம்” என்கிறார்.

காதுகளின் பின்புறம், தொடை இடுக்கு, அக்குள் போன்ற பகுதிகளில் பூச்சி கடித்த பாதிப்பு உள்ளதா என்பதை நோயாளிகளிடம் சோதனை செய்வதாகவும் அவர் கூறுகிறார்.

“சாதாரண காய்ச்சல் அல்ல”

பூச்சி கடித்த பிறகு பெரும்பாலான மக்கள் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்வதாகக் கூறும் மருத்துவர் பெருமாள் பிள்ளை, “அதன் வீரியம் அவர்களுக்குத் தெரிவதில்லை. இதை சாதாரண காய்ச்சலாக எடுத்துக் கொள்ளக் கூடாது” எனக் கூறுகிறார்.

” நோய் எதிர்ப்பு மருந்துகளைக் கொடுக்கும்போது 48 மணிநேரத்துக்குள் நோயாளி குணமடைந்துவிடுவார். இளஞ்சிவப்பு நிற புண் மூலம் காய்ச்சலை உறுதிப்படுத்திக் கொண்டாலும் எலிசா பரிசோதனை முறையிலும் ஸ்க்ரப் டைபஸ் தொற்று இருப்பதை உறுதி செய்யலாம்” எனக் கூறுகிறார் பெருமாள் பிள்ளை.

முறையாக சிகிச்சை கொடுக்கும்போது இரண்டு நாள்களில் காய்ச்சலில் இருந்து நோயாளி விடுபடுவதாகக் கூறும் அவர், “தொடர்ச்சியான மருந்துகளால் பத்து நாட்களில் ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபட முடியும்” என்கிறார்.

“இதைக் கண்டுகொள்ளாமல் இருந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்” எனக் கூறும் பெருமாள் பிள்ளை, ”காலம் தாழ்த்தும்போது இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்” எனக் கூறினார்.

ஸ்க்ரப் டைபஸ் தொற்று, தமிழ்நாடு

பட மூலாதாரம், Special Arrangement

படக்குறிப்பு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு இணைப் பேராசிரியர் மருத்துவர் பெருமாள் பிள்ளை

ஏழு மாவட்டங்களில் அதிகரிப்பது ஏன்?

சென்னை, காஞ்சிபுரம் உள்பட ஏழு மாவட்டங்களில் மட்டும் ஸ்க்ரப் டைபஸ் அதிகரிப்பதற்கு நகர்மயமாதல் பிரதான காரணமாக உள்ளதாகக் கூறுகிறார் பொது சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி.

ஆனால், பருவநிலை மாற்றமும் வடகிழக்குப் பருவமழைக்குப் பிறகான ஒட்டுண்ணிகளின் பெருக்கமும் ஒரு காரணமாக உள்ளதாகக் கூறுகிறார் மருத்துவர் பெருமாள் பிள்ளை.

வடக்கு மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயல் மற்றும் மழையின் பாதிப்பு அதிகம் இருந்ததையும் அவர் மேற்கோள் காட்டினார்.

ஸ்க்ரப் டைபஸ் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மருத்துவர் குழந்தைசாமி, “இது எளிதில் குணப்படுத்தக் கூடிய நோய். ஆனால் ஏதோ எறும்பு, கொசு கடித்துவிட்டதாக மக்கள் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. காய்ச்சல் வந்த பிறகு கவனிக்காமல் இருந்தால் உள் உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும். முறையாக சிகிச்சை அளித்தால் போதும்” என்கிறார்.

சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதும் எந்தக் காய்ச்சல் வந்தாலும் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவதும் ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும் எனவும் அவர் கூறுகிறார்.

ஸ்க்ரப் டைபஸ் தொற்று, தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தொற்று பாதித்த பூச்சிகள் கடிக்கும்போது காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்ற அறிகுறிகள் ஏற்படும்

“கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு”

கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் ஸ்க்ரப் டைபஸ் தொற்று அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார் மருத்துவர் பெருமாள் பிள்ளை. கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு, குறைப்பிரசவம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறுகிறார்.

குறிப்பாக, கர்ப்பிணிகளின் உடல்நலத்தில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகளை ஸ்க்ரப் டைபஸ் ஏற்படுத்துவதாகக் கூறும் அவர், “தொற்று அறிகுறிகளைக் கண்டவுடன் விரைந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்கிறார்.

‘ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் மாநகராட்சி நகர்நல அலுவலர்களும் ஏற்படுத்த வேண்டும்’ எனவும் சுற்றறிக்கையில் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ‘தொற்று பாதித்த மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பதையும் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்’ எனவும் பொது சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.