மதுரையில் காவி உடுத்தி, பூணூல் அணிந்து மதமாற்ற பணி செய்த பாதிரியார்- கிறிஸ்தவ மிஷனரிகள் எப்படி செயல்பட்டன?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
மிஷினரிகளின் வருகையால் இந்தியாவில் ஏற்பட்ட தாக்கம் குறித்து வரலாற்றாசிரியர் மனு பிள்ளை எழுதியிருக்கும் புதிய புத்தகமான ‘Gods, Guns and Missionaries’ பல சுவாரஸ்யமான தகவல்களைத் தருகிறது.
வரலாற்றாசிரியரான மனு பிள்ளையின் முந்தைய புத்தகங்களான The Ivory Throne: Chronicles of the House of Travancore, Rebel Sultans: The Deccan from Khilji to Shivaji, False Allies: India’s Maharajahs in the Age of Ravi Varma மிகுந்த கவனத்தைப் பெற்றவை. இந்த வரலாற்று நூல்கள், அவை எழுதப்பட்ட சுவாரஸ்யமான விதத்திற்காகவே மிகவும் பாராட்டப்பட்டவை.
மனு பிள்ளை எழுதி தற்போது வெளிவந்திருக்கும் Gods, Guns and Missionaries: The Making of the Modern Hindu Identity நூலும் அதைப் போலவே பெரும் கவனத்தைப் பெற்றிருக்கிறது.
இந்தப் புத்தகம் அடிப்படையில், கிறிஸ்தவ மிஷனரிகள் இந்தியாவில் எப்படி செயல்பட்டன, அவர்களுடைய மதம் பரப்பும் முயற்சிகள் எப்படி பலதரப்பட்ட தன்மையில் இருந்தன, அதற்கு உள்ளூர் மக்கள் எப்படி எதிர்வினையாற்றினார்கள் என்பதைச் சொல்லும் புத்தகம்.
அக்பரின் காலத்திலிருந்து சாவர்க்கரின் காலம் வரை
பொதுவாக இந்த நூல், அக்பரின் காலத்திலிருந்து சாவர்க்கரின் காலம் வரை இந்தியாவில் எப்படி கிறிஸ்தவ மிஷினரிகள் செயல்பட்டன என்பதை சுவாரஸ்யமாகச் சொல்கிறது. அதில் ஒரு கதை, மதுரையில் செயல்பட்ட ராபர்ட் டி நொபிலியினுடையது.
மதரீதியான படிப்பை முடிந்த ராபர்ட், 1603வாக்கில் முதலில் கோவாவிற்கும் அங்கிருந்து மதுரைக்கும் வந்து சேர்ந்தார். அந்த காலகட்டத்தில், இந்தியாவில் மதம் பரப்பும் பணிக்கு வந்திருந்த பாதிரியார்கள் ஒரு முடிவுக்கு வந்திருந்தனர். அதாவது, ‘ஏசுவை ஏற்றுக்கொள்ளச் செய்ய, உள்ளூர் மக்களின் வழிபாட்டு முறைகளை கேலிசெய்யவோ, புறக்கணிக்கச் சொல்லவோ தேவையில்லை. கடவுளை மட்டும் மாற்றினால் போதும்’
இந்த காலகட்டத்தில் மதுரைக்கு வந்திறங்கிய ராபர்ட் டி நொபிலி, இதே பாணியில் ‘இந்தியர்களை மீட்க நானும் இந்தியனாவேன்’ என்றார்.
ராபர்ட் டி நொபிலி மதுரைக்கு வருவதற்கு முன்பாகவே, பத்தாண்டுகளாக ஜெசுவிட் பாதிரியார்கள் அங்கே பணியாற்றி வந்தார்கள். ஆனால், பெரிய வெற்றியேதும் கிடைக்கவில்லை.
ஒருவரைக்கூட மதம் மாற்ற முடியவில்லை. காரணம், அங்கிருந்த கத்தோலிக்கர்கள் போர்ச்சுகீசியர்களுடன் அடையாளப்படுத்தப்பட்டார்கள். மதுரை வாழ் மேட்டுக்குடியினரைப் பொறுத்தவரை, போர்ச்சுக்கீசியர்கள் தூய்மையற்றவர்கள்.
மேலும் வேறு பகுதிகளில் மதம் மாறியவர்கள் ஜாதி அடுக்கில் கீழ் இருப்பவர்களாக கருதப்பட்டவர்கள். ஆகவே கத்தோலிக்க மதமும் அந்த ஜாதியுடனேயே அடையாளப்படுத்தப்பட்டது.
ஆகவே, டி நொபிலி உயர் ஜாதியினர் சிலரை மதம் மாற்றினால், நிலைமை மாறும் என நினைத்தார். மேலும் உள்ளூர் மக்களைப் போல மாறவும் முடிவுசெய்தார். கிறிஸ்தவ பாதிரியார்களுக்கான ஆடையை விட்டுவிட்டு, காவியை உடுத்தினார். 1610வாக்கில், அவர் பூணூல் அணிந்துகொண்டதோடு, மாமிசம் சாப்பிடுவதையும் விட்டுவிட்டார் என்ற செய்தி கோவாவில் இருந்த ஜெசுயிட்களை வந்தடைந்தது.
ஏசு என்ற பெயரையே அவர் உச்சரிக்காததால், அவர் ஏதோ புதிய மதத்தைப் பற்றிப் பேசுகிறார் என மக்கள் நினைத்தார்கள்.
சிலுவையுடன் கூடிய பூணூல்
பிராமணர்கள் மதம் மாறினால், அவர்கள் அணிந்திருந்த பூணூலை மாற்றிவிட்டு சிலுவையுடன் கூடிய பூணூலை வழங்கினார். மதுரையில் மதம் மாறிய கத்தோலிக்கர்கள் இந்துக்களைப் போலவே நெற்றியில் சந்தனம் பூசினார்கள். கிறிஸ்தவ தேவாலயத்தில் திருப்பலிக்கு முன்பாக பூஜைகள் நடந்தன. மதுரை மக்களால், ‘ஐயா’ என மரியாதையோடு அழைக்கப்பட ஆரம்பித்தார் டி நொபிலி. தன்னை ஒரு இத்தாலிய பிராமணனாக முன்னிறுத்தினார்.
அவருடன் பணிபுரிந்த போர்ச்சுகீசைச் சேர்ந்த பாதிரிகளுக்கு இது உடன்பாடானதாக இல்லை. தவிர, சாதி ரீதியாக பிரித்து பிரார்த்தனைகளை நடத்துவதும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. கோவாவுக்கு புகார்களை அனுப்பினார்கள். இது போல செய்யக்கூடாது என டி நொபிலிக்கு கடிதம் வந்தது. ஆனால், அவர் தான் செய்வதை நிறுத்தவில்லை.
விரைவிலேயே, போப்பாண்டவரிடமும் தன் தரப்பு வாதங்களை வலியுறுத்த ஆரம்பித்தார். வாட்டிகனும் அவர் செய்வதை அங்கீகரித்தது. 1656ல் ராபர்ட் டி நொபிலி மரணமடையும்போது, மதுரையில் ஆயிரக்கணக்கானவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். இப்படி மதம் மாறியவர்களில் பிராமணர்களின் எண்ணிக்கை அதிகமில்லை என்றாலும் பல உயர் சாதியினரை அவர் மதம் மாற்றியிருந்தார்.
கோவாவில் இருந்து ஜெசுவிட் பாதிரியார்களைப் பொறுத்தவரை, மதமாற்றம் செய்தால் மட்டும் போதாது, அவர்களை ஐரோப்பிய வாழ்க்கை முறையையும் ஏற்கச்செய்ய வேண்டும் என நினைத்தார்கள்.
ஆனால், தமிழ்நாட்டில் இருந்த கிறிஸ்தவர்களோ, இந்துக் கடவுள்களுக்குப் பதிலாக ஏசுவையும் மேரியையும் வணங்கினார்கள், வேறு எதையும் மாற்றிக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் இந்த முறைக்கு அளித்துவந்த ஆதரவை 1744ல் வாட்டிகன் விலக்கிக்கொண்டது. ஆனால், நிலைமை அதற்குள் கையை மீறி போயிருந்தது.
மேரியை வைத்து தேர் இழுக்க ஆரம்பித்திருந்தார்கள். நொபிலி வழிவந்த ஒரு பாதிரி ஆரம்பித்திருந்த தேவாலயத்தில் ஆடு பலியிடுதல்கூட நடந்தது.
இதுபோன்ற மதம் பரப்புதல் உள்ளூர் ஆட்சியாளர்களுக்கு பெரிய அச்சுறுத்தலாகத் தெரியவில்லை. சிவகங்கை மாவட்டம் சருக்கணி கிராமத்தில் இருந்த தேவாலயத்திற்கு ஒரு கிராமத்தின் வருவாய் எழுதிவைக்கப்பட்டது. இது தொடர்பான ஆவணங்களில், இந்துக் கோவில்களுக்கு எழுதிவைக்கப்படும் சொத்துகள் குறிக்கப்படுவதைப் போலவே, “சந்திர சூரியர் உள்ள வரையும்” என குறிக்கப்பட்டது.
நொபிலி பின்பற்றிய இந்த முறையை விரிவாக விளக்கியிருக்கும் மனு பிள்ளை, இந்து மதமும் இப்படித்தான் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள பல்வேறு வழிபாட்டு முறைகளையும் தனக்குள் இணைத்துக்கொண்டது என்கிறார்.
தமிழ்நாட்டிற்கு வந்த பர்தலோமேயு சீகன்பால்க்
ராபர்ட் டி நொபிலிக்கு நேர் எதிர் திசையில் செயல்பட்ட மற்றொருவரும் இருந்தார். 17-ஆம் நூற்றாண்டில் பிறந்து பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் மதம் பரப்பியவர். அவர், பர்தலோமேயு சீகன்பால்க்.
மதுரையில் இருந்த ஜெசுவிட்கள் உள்ளூர் ஆடையை அணிந்து மதம் பரப்பிவந்த அந்த காலகட்டத்தில், அதாவது 18-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தனது பணியை ஆரம்பித்தார் ஜீகன்பால்க். ஆனால், மதுரை ஜெசுவிட்களைப் போலில்லாமல் தமிழ்நாட்டின் கடுமையான வெக்கையையும் பொருட்படுத்தாமல் நீண்ட கறுப்பு அங்கி அணிந்தபடியே வலம்வந்தவர் இவர்.
ஜீகன்பால்க் ஜெர்மானியராக இருந்தாலும் டென்மார்க் நாட்டின் சார்பில்தான் மதம் பரப்ப வந்தார். 1706 அவர் தமிழ்நாட்டின் தரங்கம்பாடியில் வந்திறங்கியபோது, அங்கிருந்த கம்பனிக்காரர்கள் அவரைப் பெரிதாக வரவேற்கவில்லை.
அந்த காலகட்டத்தில் இந்தியாவில் இருந்த போர்ச்சுகீசியர்கள் மதம் பரப்பியதில் ஆர்வம் காட்டியதைப்போல, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி ஆர்வம் காட்டவில்லை. பிறகு ஒருவழியாக ஒரு இடம் கிடைத்து தங்கினார் ஜீகன்பால்க்.
விரைவிலேயே போர்ச்சுக்கீசிய மொழியையும், அழகப்பா என்பவரிடமிருந்து தமிழையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார் ஜீகன்பால்க். 1707வாக்கிலேயே தமிழில் பிரசங்கம் செய்யும் அளவுக்கு மொழியைக் கற்றுக்கொண்டார் ஜீகன்பால்க். இந்தியாவைப் பற்றியும் தமிழர்களைப் பற்றியும் எதுவும் தெரியாத ஆரம்ப காலகட்டத்தில், தமிழர்களைக் காட்டுமிராண்டிகள் எனக் கருதினார் அவர். ஆனால், பழகப்பழக அவரது எண்ணம் மாறியது.
ஆனாலும், மற்றவர்களுடன் கடுமையாக விவாதிப்பது அவரது வழக்கமாக இருந்தது. ஒரு கட்டத்தில் தரங்கம்பாடியிலிருந்து தஞ்சாவூருக்குள் போக முயன்றபோது, மன்னர் அனுமதிக்கவில்லை.
“நீங்கள் செல்லுமிடங்களில் எல்லாம் எங்கள் தெய்வங்களைப் பழிக்கிறீர்கள்” என்று சொல்லி அனுமதி மறுக்கப்பட்டது. இந்துப் பழக்கவழக்கங்களை ஜீகன்பால்கிற்கு சொல்லிக்கொடுத்ததற்காக, அழகப்பா சிறிது நாட்கள் கைதுசெய்து வைக்கப்பட்டிருந்தார்.
ஐரோப்பாவில் இருந்த அவருடைய தலைமையகமும் அவர் செயல்பாடுகள் குறித்து மகிழ்ச்சியாக இல்லை. காரணம், அவர் வந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் 117 பேர் மட்டுமே மதம் மாறியிருந்தார்கள். மாறாக, ஜீகன்பால்க் உள்ளூர் மக்கள் மீதும் புத்தகங்கள் மீதும் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருந்தார்.
‘தோல்வியடைந்த மதப்பிரச்சாரகர்’
தரங்கம்பாடி மிஷின்ஆரம்பித்து 2 ஆண்டுகளுக்குள் 119 புத்தகங்கள் அங்கே சேகரிக்கப்பட்டன. 1714ல் அங்கே 14 மொழிகளில் 600 புத்தகங்கள் சேர்ந்தன. தொல்காப்பியம், திருக்குறள் ஆகியவை குறித்து மிக உயர்வாகக் குறிப்பிட்டார் ஜீகன்பால்க். விரைவிலேயே இந்து வழிபாட்டு முறைகளைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தார். Genealogy of the South-Indian Gods என்ற புத்தகத்தையும் எழுதினார். இதற்காக தலைமையகம் அவரைக் கடுமையாகக் கண்டித்தது.
இதற்கிடையில் ஒரு முறை ஜெர்மனி சென்ற அவர், திருமணம் செய்துகொண்டு தரங்கம்பாடி திரும்பினார். அவருக்குப் பிறந்த மூன்று குழந்தைகளில் 2 இறந்துவிட்டது. வயிற்றுவலி வேறு அவரை நோகச் செய்தது. பணச் சிக்கல்கள் வேறு இருந்தன.
இதனால், அவருடைய திருமண வாழ்வு சிறப்பானதாக இல்லை. எல்லாம் சேர்ந்து அழுத்த 36வது வயதில் 1719ல் இறந்துபோனார். அவரது மறைவுக்குப் பிறகு, டென்மார்க்கில் அவரது தலைமையகத்திலிருந்து வந்த ஒரு கடிதம், அவரது செயல்பாடுகளைக் கடுமையாகக் கண்டித்திருந்தது. டென்மார்க்கைப் பொறுத்தவரை, அவர் ஒரு தோல்வியடைந்த மதப்பிரச்சாரகர்.
இதுபோல மதப் பிரச்சாரகர்கள் தவிர, சில மன்னர்களைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் மனு பிள்ளையின் புத்தகம் தருகிறது. அவர்களில் ஒருவர் தஞ்சையின் மன்னரான இரண்டாம் சரபோஜி.
தஞ்சையின் மன்னன் இரண்டாம் சரபோஜி
கல்கத்தாவின் பிஷப்பான ரெஜினால்ட் ஹீபர், 1826ல் தஞ்சாவூருக்கு வந்து சேர்ந்தார். அங்கே அவர் தஞ்சையின் மன்னனான இரண்டாம் சரபோஜியைப் பார்த்தபோது சற்று அசந்துதான் போனார் என்கிறார் மனு பிள்ளை. அவ்வளவு சிறப்பாக ஆங்கிலம் பேசிய இரண்டாம் சரபோஜி, மிகச் சிறப்பான நூலகம் ஒன்றையும் வைத்திருந்தார்.
இந்திய மன்னர்கள், இளவரசர்கள் பற்றி பொதுவாக மோசமான அபிப்பிராயமே ஆங்கிலேயர்களுக்கு இருந்த நிலையில், சரபோஜி ரெஜினால்ட் ஹீபருக்கு பெரும் ஆச்சரியமளித்தார்.
ஆங்கிலேயர்களால், ஐரோப்பியக் கல்வி அளித்து வளர்க்கப்பட்ட சரபோஜி, வெகு விரைவிலேயே சிறப்பான ஆங்கிலம் பேச ஆரம்பித்தார். கார்ன்வாலிஸ் முதல் திப்பு சுல்தான்களின் சந்திப்புவரை அவருக்குக் கிடைத்தது. அவர் அரசராகப் பதவியேற்ற காலத்தில் அவருக்கு இருந்த அதிகாரம் வெகு குறைவு என்றாலும், அதை வைத்து தஞ்சையில் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார் என்கிறார் மனு பிள்ளை.
ஆனால், சரபோஜியின் முக்கியமான பங்களிப்பு ஐரோப்பிய பாணியில் 21 பள்ளிக்கூடங்களை நிறுவியதுதான். பொதுமக்களுக்கு கல்வியளிக்கும் நிலையங்களை கம்பனி செலவில் நடத்த வேண்டுமென என கிழக்கிந்தியக் கம்பனியே தீர்மானிக்காத காலத்தில் அவர் இதனைச் செய்தார்.
மிகப் பெரிய கோவிலும் அரண்மனையும் உள்ள தஞ்சையில், மற்றொரு மகத்தான அடையாளத்தையும் அவர் உருவாக்கினார். அது, சரஸ்வதி மகால் நூல்நிலையம் என்கிறார் மனு பிள்ளை.
இதுபோல பல சுவாரஸ்யமான கதைகளை ஒரு பக்கம் இருக்க, இந்து மதம் எப்படி பல்வேறு மக்களையும் கடவுகள்களையும் உண்டு செரித்தது என்கிறார் மனு பிள்ளை. உதாரணமாக ஆந்திராவில் உள்ள செஞ்சு பழங்குடியினர் ஒரு புராணக் கதையின் மூலம் விஷ்ணுவுடன் இணைக்கப்பட்டனர்.
அசாமின் அகோம் மன்னர்கள் தென்கிழக்காசியாவின் தாய் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் 14-ஆம் நூற்றாண்டிலிருந்து இந்து மன்னர்களாக்கப்பட்டார்கள். தமிழ்நாட்டில், அய்யனார் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த மகனாக்கப்பட்டார். மகாராஷ்டிராவில் மேய்ப்பர்கள் வணங்கும் கடவுளான விட்டல், விஷ்ணுவின் அவதாரமாக்கப்பட்டார் என்கிறார் மனு பிள்ளை.
புத்தகத்தின் இறுதிப் பகுதி, 20-ஆம் நூற்றாண்டில் இந்து ஒருங்கிணைப்பு நடந்த விதம், மதமாற்றத்தை தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் ஆகியவற்றைப் பேசுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், நான்கு நூற்றாண்டு கால இந்தியாவின் மத வரலாறாக இந்தப் புத்தகத்தைச் சொல்லலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.