வெலிகம துப்பாக்கிச் சூடு – வௌியான மேலதிக தகவல்கள் ! on Saturday, January 04, 2025
மாத்தறை, வெலிகமவில் இன்று (04) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வருகைதந்ததாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிள் வெலிகம, மூனமல்பே பகுதியில் உள்ள ஏரியில் வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை சிறைச்சாயைில் மாத்தறை சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அரச மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்த கைதியின் சடலம் அடக்கம் செய்யப்பட்ட துர்க்கி கிராமத்தில் உள்ள வீட்டிற்கு நேற்று (03) இரவு ஐவர் குழு சென்றுள்ளது.
இந்நிலையில், இன்று (04) அதிகாலை ஒரு மணியளவில் குறித்த குழுவினர் கால்நடையாக வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வெலிகம, கப்பரதொட்ட, வள்ளிவெல வீதியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் ரிவோல்வர் மற்றும் T-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில், ஐவரில் இருவர் காயமடைந்ததோடு, இருவரும் மாத்தறை வலான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இருவரில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதுடன், மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கப்பரதொட்ட பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஆகாஷ் தருக என்பவரே உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் காயமடைந்த இளைஞன் 29 வயதான செஹான் துலாஞ்சல எனவும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.