‘ரூ.25 லட்சத்தை இழந்தேன்’ – இந்தியாவில் வேலைக்குச் செல்லும் மணமான பெண்கள் ஊதியத்தை என்ன செய்கிறார்கள்?
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
“திருமணமாகி 10 ஆண்டுகளாகிவிட்டன. தொடர்ந்து வேலைக்கு சென்றிருக்கிறேன். குழந்தை பிறந்தவுடன் மட்டும் சிறிய இடைவெளி எடுத்தேன். என் இத்தனை ஆண்டுகால வருமானம் முழுவதையும் குடும்பத்திற்கு செலவழித்தேன். கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்யலாம் என முடிவெடுத்து வீட்டிலிருந்து வெளியே வந்தபோது எனக்கென சேமிப்பு ஒன்றும் இல்லை.”
சென்னையை சேர்ந்த 35 வயது கார்த்திகா, தற்போது கணவருடன் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெறுவதற்கான சட்ட நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறார். காதலித்து திருமணம் செய்துகொண்ட அவருக்கு 8 வயதில் மகன் இருக்கிறார். தற்போது கணவன் – மனைவி இருவரும் மகனின் கல்விச் செலவுகளை பகிர்ந்துகொள்கின்றனர்.
ஆனால், இருவரும் சேர்ந்து வாழ்ந்தபோது அப்படியில்லை. ஒன்றாக வாழும் போது, தினசரி செலவுகள், குழந்தைக்கான செலவுகள் என தன் முழு வருமானத்தையும் குடும்பத்திற்காக செலவழித்திருக்கிறார் கார்த்திகா.
“எல்லாம் நன்றாகத்தானே போய் கொண்டிருக்கிறது. குடும்பத்திற்காக தானே செலவு செய்கிறோம், நாம் பாதுகாப்பாக தான் இருக்கிறோம் என நினைத்தேன். என் கணவர் தன் வருமானத்தை சேமிப்பாக வைத்திருக்கிறார். நான் என் வருமானத்தை குடும்ப செலவுகளில் கரைத்துவிட்டேன்.” எனக் கூறுகிறார் அவர்.
திருமணமான பெண்களின் நிதி சுதந்திரம் இந்திய சமூகத்தில் பெரும்பாலும் ஆண்களால் கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது என பல தரவுகள் கூறுகின்றன.
கடந்த 2022ம் ஆண்டு, அக்டோபர் மாதம் டாடா ஏ.ஐ.ஏ ஆயுள் காப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, நிதி சார்ந்த திட்டமிடுதலில் 89% பெண்கள் தங்கள் கணவரை சார்ந்து இருப்பதாக கூறுவதாக, லிவ் மிண்ட் இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
அந்த புள்ளிவிவரத்தின்படி, 39% பெண்கள், குடும்பத்தின் மாத பட்ஜெட்டை திட்டமிடுவதுடன் அவர்களின் நிதிசார் முடிவுகள் வரையறுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் பங்கெடுத்த பெண்களில் 42% பெண்களுக்கே நிதிசார் திட்டமிடுதலில் விழிப்புணர்வு இருப்பதாகவும் அதில் 12% பெண்கள்தான் குடும்ப தலைவிகளாக இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்திய சமூக கட்டமைப்பில் பெண்களை பொருத்தவரை, தந்தை, அதையடுத்து கணவர், அவருக்கு பின் மகன் என்றே அவர்களின் பொருளாதார உலகம் கட்டமைக்கப்பட்டுள்ளதாக பெண்ணிய செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
‘செலவு என்னுடையது, சேமிப்பு கணவருடையது’
கார்த்திகாவின் வழக்கைப் பொருத்தவரை அவருடைய வருமானம் முழுவதும் குடும்பத்திற்காக செலவழிக்கப்பட்டுள்ளது. விவாகரத்து பெற வேண்டும் என்ற நிலையில், “எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாக நிற்க நேர்ந்ததாக” கூறினார்.
“என் கணவரின் பெற்றோர் வீடு கட்டுவதற்கு, அவர்களின் 60-ம் கல்யாணம் என பலவற்றுக்கு வங்கிக்கடன் வாங்கினேன். குழந்தைக்கான செலவுகள், வீட்டுச் செலவுகளையும் நான் தான் கவனிப்பேன். என்னுடையது காதல் திருமணம். திருமணத்திற்கு முன்பும் அவருக்காக நிறைய செலவு செய்திருக்கிறேன்” என்கிறார் கார்த்திகா.
10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ. 20,000 வருமானத்தில் வேலைக்கு செல்ல ஆரம்பித்தார். தற்போது, ரூ. 50,000 வருமானத்தில் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார் கார்த்திகா.
பயணம் செய்வது தனக்குப் பிடிக்கும் என்று கூறும் கார்த்திகா, அதற்காக சேமிக்கும் பணத்தை க்கூட ஒருகட்டத்தில் குடும்பத்திற்காக செலவழிக்க வேண்டியிருந்ததாக கூறுகிறார். “இதுவரை என் வருமானத்திலிருந்து சுமார் ரூ. 25 லட்சம் செலவு செய்திருப்பேன்.”
திருமண வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தபிறகுதான் மனநல ஆலோசனை, ரூட் கேனல் சிகிச்சை (பல் சிகிச்சை) ஆகிய தனக்கான ஆவசிய செலவுகளை கூட செய்ய முடிந்ததாகக் கூறுகிறார் அவர்.
“என் கணவர் மாதம் ரூ.1.5 லட்சம் சம்பாதிக்கிறார். ஆனால், வீட்டுக்காக செலவு செய்ய மாட்டார். எல்லா செலவுகளையும் நான் பார்க்க வேண்டும். அவருடையது முழுக்க சேமிப்பாக இருக்கிறது. நம் வீட்டுக்காகத்தானே செலவு செய்கிறோம் என நினைத்தேன். ஆனால், வெளியே வீட்டு வாடகைக்குக்கூட என்னிடம் பணம் இல்லை. கடன் வாங்கி அதற்கான முன்பணத்தை செலுத்தினேன். என் அம்மா அந்த சமயத்தில் தான் இறந்திருந்தார். அதற்கு ரூ. 1.5 லட்சம் செலவு செய்தேன்.”
கணவரிடமிருந்து பிரிந்து வரும்போது, அவருடைய சம்பளத்தில் வீட்டுக்காக வாங்கிய பொருட்களைக் கூட கணவர் வீட்டார் தன்னிடம் தரவில்லை என்று கூறுகிறார் அவர். நகைகளை மட்டும் தன்னுடன் எடுத்து வந்ததாக கூறுகிறார்.
“கர்ப்ப காலம், குழந்தைப்பேறு என எல்லாவற்றையும் என்னுடைய வருமானத்திலிருந்துதான் பார்த்தேன். என்னுடையது நடுத்தர குடும்பம். ‘என் பெற்றோரால் இதற்கான செலவுகளை பார்க்க முடியவில்லையென்றால், நானே அந்த செலவுகளை பார்த்துக்கொள்ள வேண்டும்’ என கணவரின் பெற்றோர் கூறிவிட்டனர்.” என்று அவர் கூறுகிறார்.
‘தாமதமாகவே பெண்களுக்கு புரிகிறது’
விவாகரத்து என்று வரும் போதுதான் இத்தகைய பிரச்னைகள் பெண்களுக்குப் புரிவதாகக் கூறுகிறார், கார்த்திகாவின் வழக்கறிஞர் நிலவுமொழி செந்தாமரை.
“இந்த குறிப்பிட்ட சம்பவம் என்று இல்லை. பல சம்பவங்களை அன்றாட வாழ்க்கையில் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். இந்த வழக்கில், அப்பெண் செலவு செய்ததில் குறைந்தபட்சம் ரூ. 15 லட்சத்தையாவது திருப்பித் தர வேண்டும் என பேசி வருகிறோம்” என்கிறார் அவர்.
மற்றொரு சம்பவத்தையும் வழக்கறிஞர் நிலவுமொழி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
கல்லூரி ஒன்றில் சுமார் ரூ. 1.5 லட்சம் சம்பளம் வாங்கும் பேராசிரியர் அவர். வீட்டு வாடகை, குழந்தைகளுக்கான செலவுகள் எல்லாவற்றையும் அவர்தான் கவனித்துக்கொள்கிறார். கணவரின் பெற்றோருக்கு மாதம் ரூ. 20,000 வழங்கிவருவதாகக் கூறுகிறார் நிலவுமொழி. வங்கிக்கடன் எடுத்து கார் வாங்கியவர் அந்த பேராசிரியர் தான் என்றாலும், அந்த காரை அவருடைய கணவர் தான் பயன்படுத்துகிறார் என்கிறார் அவர். “ஆனால், அவர் ஏதும் கணவரிடம் கேட்க மாட்டார்.” இந்த வழக்கில் விவாகரத்து வரை செல்லவில்லை எனினும், விவாகரத்து வழக்குகள் பலவற்றில் நிதிசார் பிரச்னைகள் முக்கிய அங்கம் வகிப்பதாகவே கூறுகிறார் வழக்கறிஞர் நிலவுமொழி.
“நமது குடும்பம், குழந்தைகளுக்காகத்தான் செலவு செய்கிறோம் என்றுதான் பெண்களுக்குத் தோன்றும். ஆனால், அதேசமயம் கணவன் – மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் கணவர்கள் வீட்டுக்காக குறைவாகவே செலவு செய்கின்றனர்.” என்கிறார் அவர்.
வீட்டுக்கு அவசரத் தேவை என வரும்போதும் பெண்களின் பெயரில் உள்ள சொத்துக்களைதான் விற்பார்கள் என்றும் அவர் கூறுகிறார்.
பெரும்பாலும் குடும்ப உறவுகளில் கணவன் – மனைவிக்கு இடையே ஏதேனும் பிரச்னை ஏற்படும் என்பதற்காக, நிதிசார்ந்த முடிவுகளை கணவரிடம் விட்டுவிடுவதை நான் பேசிய சில பெண்களிடம் கவனிக்க முடிந்தது. தங்களின் வருமானம் மீதான தங்களின் உரிமையை எடுத்துக் கூறுவதே பல சமயங்களில் குடும்பங்களில் பிரச்னைகளை ஏற்படுத்துவதாக அவர்கள் கூறினர்.
என்றாலும், குடும்ப உறவுகளில் உள்ள சில பெண்கள், தங்களின் வருமானம் சார்ந்து அவர்களே முடிவெடுப்பதையும் பார்க்க முடிந்தது. என்றாலும், அதிலும் சில கட்டுப்பாடுகளை அவதானிக்க முடிந்தது.
வங்கியொன்றில் பணிபுரியும் மதுரையை சேர்ந்த காவ்யா, மாதம் சுமார் ரூ. 30,000 வருமானம் பெறுகிறார்.
“கணவருக்காக நான் வாங்கிய கடனுக்காக ரூ. 7,000 வரை இ.எம்.ஐ செலுத்துவேன். என் பெற்றோருக்கு கொஞ்சம் பணமும் அதுபோக என் சேமிப்புக்காகவும் கொஞ்சம் பணம் எடுத்துக்கொள்வேன். குழந்தையின் சில செலவுகளை நான் கவனிப்பேன்,” என்கிறார் அவர்.
தன்னை விட தன் கணவரின் வருமானம் அதிகம் என்பதால், வீட்டு வாடகை, அன்றாட செலவுகளை தன் கணவர் கவனித்துக்கொள்கிறார் என அவர் கூறுகிறார். எனினும், தன் பெற்றோருக்கு பணம் கொடுப்பது கணவருக்குத் தெரியாது என்கிறார் அவர்.
“கணவர் அடிக்கடி செலவுக்காக என்னிடம் பணம் கேட்பார். நான் என்னிடம் இருப்பதில் சொற்ப தொகையைத்தான் அவருக்குத் தருவேன். முழுவதையும் கொடுத்துவிட்டால் எனக்கென என்ன இருக்கிறது? அப்படியிருக்கும் போது, என் பெற்றோருக்கு பணம் கொடுப்பது தெரிந்தால், எங்களுக்குள் பிரச்னை வரும்.” என்கிறார் காவ்யா.
வேலைக்கு செல்லாத பெண்களின் நிலை
“ஏற்கனவே திருமணமாகி, வேலைக்கு செல்லும் பெண்கள் இரட்டை உழைப்பை செலுத்துகின்றனர். குடும்ப வேலைகளையும் பார்க்க வேண்டும். வேலைக்கும் செல்ல வேண்டும். ஆனால், நிலம், வீடு என வாங்க வேண்டும் என்றால், பெண்களின் பெயரில் வாங்குவதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. அவர்களிடம் சொத்துகளோ, சேமிப்போ இல்லை,” என்கிறார் வழக்கறிஞர் நிலவுமொழி.
திருமணமாகி வேலைக்கு செல்லாத திருச்சியை சேர்ந்த ஜெயப்பிரியாவிடம் பேசினேன். 32 வயதான அவர், இரண்டு குழந்தைகளின் தாய்.
“பட்டப்படிப்பு முடித்தும் குழந்தைகளுக்காக நான் வேலைக்கு செல்லவில்லை. என் கணவர் லேத் பட்டறை வைத்து நடத்திவருகிறார். முன்பு என் கணவரின் தந்தையின் கட்டுப்பாட்டில்தான் ஒட்டுமொத்த குடும்பமும் இருந்தது. அதனால், திருமணமான ஆரம்பத்தில் என் செலவுகளுக்காக பணம் கேட்கக்கூட தயங்குவேன். இப்போது, என் கணவர்தான் கவனித்துக்கொள்கிறார். என்னிடம் பணம் கொடுப்பார். குடும்ப செலவுகளை நானே கவனிப்பேன். ஆனால், நான் என்னென்ன செலவு செய்கிறேன் என்பது அவருடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.” என்கிறார் அவர்.
நான் பேசிய இன்னும் சில பெண்கள், தங்களின் வீட்டுக்குப் பணம் வழஙகுவதில் கணவருடன் தங்களுக்கு அடிக்கடி பிரச்னைகள் எழும் என்றனர்.
சென்னையை சேர்ந்த மொழிபெயர்ப்பாளராக பணிபுரியும் பெண் ஒருவர், தனக்கென உணவு, உடை போன்றவற்றுக்காக செலவு செய்யு ம்போது தன் கணவர், “நீ சம்பாதிக்கிறாய் என்பதால் உன் விருப்பத்திற்கு செலவு செய்கிறாயா?” என கேட்பதாக கூறினார்.
பெயரை வெளிப்படுத்த விரும்பாத அவர், தன்னுடைய சம்பளம், வங்கிக்கணக்கில் உள்ள பணம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளும் கணவர், அவரது சம்பளம் குறித்துத் தன்னிடம் இன்றுவரை வெளிப்படையாக கூறியதே இல்லை என்றார்.
“தங்களுக்கென நிதி ஆதாரம் இல்லாத பெண்களை அவர்களின் கணவர்கள் பொருளாதார ரீதியாக அதிகாரப்படுத்த வேண்டும். குறிப்பாக, அவர்களின் தனிப்பட்ட செலவுகள் சார்ந்து அவர்களை அதிகாரப்படுத்த வேண்டும். அதாவது, நிதி ஆதாரங்களுக்கான அணுகலை அப்பெண்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்,” இது கடந்த ஜூலை மாதம் வழக்கு ஒன்றின் விசாரணையின்போது உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கூறியதாக, ‘தி இந்து’ ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
ஏன் இந்த நிலை? என்ன செய்ய வேண்டும்?
ஏன் நிதி சார்ந்த முடிவுகளில் பெண்கள் இன்னும் குடும்பங்களில் இரண்டாம் நிலையில் பார்க்கப்படுகிறார்கள் என்ற கேள்வியை டெல்லியில் உள்ள தேசிய மகளிர் வளர்ச்சி ஆய்வு மையத்தின் இயக்குநர் மணிமேகலையிடம் எழுப்பினேன்.
“இந்திய குடும்ப அமைப்பே அப்படித்தான். முக்கியமான நிதிசார் விவகாரங்களில் பெண்கள் தலையிடுவது குறைவுதான். அவர்கள் வளர்ந்த விதமே அப்படியாக உள்ளது. குடும்பத்தின் அன்றாட செலவுகளுக்கான மென் பொருளாதாரம் சார்ந்த முடிவுகளைதான் அவர்கள் எடுப்பார்கள். சொத்துகள், முதலீடுகளில் தலையிட மாட்டார்கள். தந்தை, கணவர், மகனிடம் விட்டுவிடுவார்கள். நிதி சார்ந்த முடிவுகளில் பெண்கள் சுதந்திரமாக இருக்காவிட்டால், தனித்து வாழும் போதோ அல்லது வயதான காலத்திலோ பொருளாதார ரீதியாக பெரும் அடியை சந்திக்க நேரிடும்” என்கிறார் அவர்.
என்ன செய்ய வேண்டும் என சில ஆலோசனைகளையும் வழங்கினார். அவை பின்வருமாறு…
- திருமண வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே செலவுகள் குறித்து கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். தினசரி குடும்ப செலவுகள், முதலீடுகள் என எல்லாவற்றையும் இருவருமே பகிர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
- நிதி சார்ந்த விவகாரங்களில் என்ன நினைக்கிறீர்கள் என்பதை வெளிப்படையாக கூற வேண்டும்.
- பெண்கள் தங்களுக்கென சேமிப்பு கணக்கை வைத்திருக்க வேண்டும். முதலீடுகள் குறித்த விழிப்புணர்வை பெற வேண்டும்.
- கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து ‘ஜாயின்ட் அக்கவுன்ட்’ ஆரம்பித்து அதில் செலவுகளை பகிர்ந்துகொள்ளலாம்.
- சொத்துகள் வாங்கும்போது தன்னை உரிமையாளராகவோ அல்லது இணை உரிமையாளராகவோ ஆக்குவதற்கு தயங்காமல் கேட்க வேண்டும். கணவர் அல்லது மகனின் பெயரில் இருக்கட்டும் என அதில் தலையிடாமல் இருக்கக்கூடாது.
- ஒருவேளை, உரிமையாளராக இல்லை என்றால், சொத்துகளுக்கான வங்கிக்கடனில் எவ்வளவு நாம் செலுத்துகிறோம் என்பதை ஏதோவொரு வகையில் பெண்கள் ஆவணங்களாக வைத்திருக்க வேண்டும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு