சதொச ஊடாக நெல் கொள்வனவு செய்ய திட்டம் !

by sakana1

சதொச ஊடாக நெல் கொள்வனவு செய்ய திட்டம் ! on Saturday, January 04, 2025

இம்முறை பெரும்போக நெல் அறுவடையை சதொச மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக கொள்வனவு செய்து அரிசியை உற்பத்தி செய்து விநியோகிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என வர்த்தக மற்றும் வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அவ்வப்போது நாட்டில் ஏற்படும் அரிசித் தட்டுப்பாட்டை போக்கவும், விலையைக் கட்டுப்படுத்தவும் அரசு தலையிட்டு விவசாயிகளுக்கு உத்தரவாத விலையை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அநுராதபுரம் ஓயா மடுவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அரச நெல் களஞ்சியசாலைகள் தொடர்பில் ஆராய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சந்தையில் நிலவும் பாரிய முரண்பாடுகளை சாதகமாக பயன்படுத்தி சில அரிசி ஆலை உரிமையாளர்கள் அசாதாரண இலாபம் ஈட்டி வருவதாகவும் அந்த முரண்பாடுகளுக்கு விடை காண அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

நாட்டின் நெல் உற்பத்தியில் ஏறக்குறைய முப்பது சதவீதத்தை பாரிய ஆலைகள் கொள்வனவு செய்வதாகவும், எஞ்சிய உற்பத்தி சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைகளால் கொள்வனவு செய்யப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சந்தையில் நிலவும் அசாதாரணத்தை குறைக்கும் வகையில் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

மேலும், நாட்டில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டைக் குறைக்கும் வகையில் கடந்த மாதம் 31ஆம் திகதி வரை 86,000 மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு இறக்குமதி செய்து பிரச்சினைக்கு தீர்வு கண்டதாகவும், அரிசி இறக்குமதிக்கான இலவச எல்லை இம்மாதம் 10ஆம் திகதிக்குப் பின்னர் நீக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்