- எழுதியவர், பிரியங்கா ஜக்தாப்
- பதவி, பிபிசி மராத்தி
உலக புகழ் பெற்ற புகைப்பட கலைஞரான கேகி மூஸ் தன்னுடைய காதலிக்காக 50 ஆண்டுகள் சாலிஸ்காவ் என்ற ஊரில் உள்ள தனது வீட்டின் வாசல் படியைக் கூட தாண்டி வராமல் காத்திருந்தார். இப்படி இருந்த நிலையிலும் அவர் தனது கலைப் படைப்புகளுக்காக 300க்கும் மேற்பட்ட தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது வீட்டிற்கு உள்ளே இருந்து கொண்டு அவர் பல்வேறு அற்புதமான புகைப்படங்கள் மற்றும் கலைப் படைப்புகளை உருவாக்கியுள்ளார்.
ஒவ்வொரு நாளும் தனது காதலி வரும் ரயில் வண்டிக்காக , அந்த வீட்டிலே வழி மேல் விழி வைத்து அவருக்காக காத்திருப்பார்.
வாழ்வின் கடைசி தருணம் வரை தன்னுடைய காதலிக்காகவே வாழ்ந்த கேகி மூஸைப் பற்றி இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம். காதலி வருகைக்காக ஒரே வீட்டில் 50 ஆண்டுகள் காத்திருந்த இவர் என்ன ஆனார்? காதலி எங்கே போனார்?
காதலி வருகைக்காக 50 ஆண்டுகள் காத்திருப்பு
கேகி மூஸின் காதல் கதை வியத்தகு ஒன்றாகும். தனது காதலி தன்னிடம் செய்த சத்தியத்தை நம்பி, கேகி மூஸ் அவருக்காக 50 ஆண்டுகள் காத்திருந்தார். தனது காதலி வருவதாக கூறியிருந்த பஞ்சாப் மெயில் ரயில் வந்த பிறகுதான் அவர் தினமும் உணவு உண்பார்.
மகாராஷ்டிராவில் கந்தேஷ் என்ற பகுதியை சேர்ந்தவர்தான் கேகி மூஸ். தனது காதலிக்காக செய்த கலைப் படைப்புகளை வைத்து ‘மூஸ் கலைக்கூடம்’ என்ற ஒரு இடத்தை சாலிஸ்காவ் ஊரில் அவர் உருவாக்கினார்.
இந்த கலைக்கூடத்தின் அறங்காவலர் மற்றும் நிர்வாகச் செயலாளராக இருக்கும் கமலாகர் சமந்த் என்பவர், முதன் முதலாக கேகி மூஸை தனது பள்ளிப் பருவத்தில் சந்தித்தார்.
கேகி மூஸுக்கு ஒரு காதலி இருந்ததாக கமலாகர் சமந்த் தெரிவிக்கிறார்.
மும்பையை விட்டு சாலிஸ்காவ் பகுதிக்கு கேகி மூஸ் வந்த போது, அவரது காதலி மும்பையில் உள்ள விக்டோரியா ரயில் நிலையத்திற்கு (தற்பொழுது சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்) வந்து இவரை வழியனுப்பி வைத்துள்ளார்.
அப்போது, கேகி மூஸின் கைகளை பற்றிக்கொண்டு அவரது காதலி, தான் ஒரு நாள் நிச்சயம் பஞ்சாப் மெயில் ரயிலில் ஏறி சாலிஸ்காவுக்கு வருவதாகவும், அவருடன் ஒன்றாக உணவு அருந்துவதாகவும் அவருக்கு சத்தியம் செய்து கொடுத்தார்.
இந்த சத்தியத்தை நம்பி 50 ஆண்டுகள் கேகி மூஸ் காத்திருந்தார். பஞ்சாப் மெயில் ரயில் வரும் நேரத்துக்கு மட்டும் தனது வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை அவர் திறந்து வைப்பார். தனது காதலிக்காக, வீட்டின் தோட்டத்தில் உள்ள பூக்களை வைத்து பூச்செண்டுகளை தயாரித்தார்.
தோட்டத்தில் பூக்கள் இல்லாத போது அவர் காகிதத்தை வைத்து என்றும் வாடாமல் இருக்கும் காகிதப்பூக்கள் கொண்ட பூச்செண்டுகளை உருவாக்கினார்.
தனது காதலி நிச்சயம் வருவார் என்ற நம்பிக்கையில் தினமும் அவர் இரண்டு பேர் சாப்பிடும் அளவில் உணவை சமைத்தார்.
“தனது காதலிக்காக அவர் கொடுத்த வாக்கை கடைசி வரை காப்பாற்றினார். பஞ்சாப் ரயில் சென்றபின்புதான் அவர் உணவு உண்பார். அவரது வாழ்க்கையின் கடைசி உணவை கூட அவர் அந்த ரயில் கடந்து சென்ற பின்புதான் உண்டார். அவர் 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி அன்று உயிரிழந்தார்”, என்று கமலாகர் சமந்த் குறிப்பிடுகிறார்.
கேகி மூஸ் இறந்த பிறகு அவரது இடத்தில் இருந்து இரண்டு கடிதங்கள் கிடைத்ததாக கமலாகர் சமந்த் கூறுகிறார். ஒரு கடிதம் அவரின் காதலியிடமிருந்தும் மற்றொன்று அவரின் உறவினர் ஹாதிகான்வாலாவிடம் இருந்தும் வந்ததுள்ளது.
தனது காதலி லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும் தனது கடிதத்தில் கேகி மூஸின் உறவினர் ஹாதிகான்வாலா குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்த கடிதத்தை கேகி மூஸ் படிக்கவே இல்லை என்று கமலாகர் சமந்த் தெரிவித்தார்.
அவருடைய காதலி யார்?
மும்பையில் படித்து வந்த போது கேகி மூஸுக்கு, நிலோஃபர் என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. பிறகு அந்த நட்பு காதலாக மாறியது.
படித்து முடித்த பிறகு, தனது பெற்றோருடன் சாலிஸ்காவிலே சேர்ந்து வாழ கேகி மூஸ் முடிவெடுத்தார். ஆனால் இந்த முடிவினால் கேகி மூஸ் – நிலோஃபர் இருவருக்கு இடையேயான காதலில் நிரந்தர பிரிவை ஏற்படுத்தியது.
பொருளாதார நிலையில் கேகி மூஸின் குடும்பம் ஒரு நல்ல நிலையில் இருந்தாலும், நிலோஃபர் மிகவும் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் ஆவர்.
இருவருக்குமான காதலை நிலோஃபரின் குடும்பம் விரும்பவில்லை. ஆனாலும் இவர்களின் திருமணத்திற்கு ஒப்புதல் தெரிவித்தனர்
ஆனால் மும்பை போன்ற ஒரு பெரிய நகரை விட்டு சாலிஸ்காவ் போன்ற இடத்திற்கு நிலோஃபரை அனுப்பி வைக்க அவரது பெற்றோர் சம்மதிக்கவில்லை.
கேகி மூஸூடன் செல்ல நிலோஃபர் தயாராக இருந்தும் அவரது பெற்றோர் அதற்கு அனுமதியளிக்கவில்லை.
ஆனால் கேகி மூஸ் மும்பையை விட்டு செல்லும் போது, தான் ஒரு நாள் கண்டிப்பாக சாலிஸ்காவுக்கு வருவதாக நிலோஃபர் அவருக்கு சத்தியம் செய்துகொடுத்தார்.
இந்த ஒரு சத்தியத்திற்காக கேகி மூஸ், தனது மொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்தார்.
ஒரே வீட்டில் 50 ஆண்டுகள்
50 ஆண்டுகளில், கேகி மூஸ் தனது வீட்டைவிட்டு இருமுறை மட்டுமே வெளியே சென்றிருக்கிறார்.
“கேகி தன்னைத் தானே 50 ஆண்டுகள் சிறையில் வைத்துக்கொண்டார்”, என்று பிபிசி மராத்தியிடம் பேசிய கமலாகர் சமந்த் கூறினார்.
1939 முதல் 1989 ஆம் ஆண்டு வரை இரண்டு முறைகள் மட்டுமே அவர் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். 1957 ஆம் ஆண்டு தன்னுடைய தாயின் இறுதி சடங்கிற்காக கேகி மூஸ் அவுரங்காபாத் சென்றார். இரண்டாவது முறையாக சாலிஸ்காவ் ரயில் நிலையத்திற்கு வந்திருந்த வினோபா பாவேவின் புகைப்படத்தை எடுக்க சென்றிருந்தார்.
வினோபா பாவேவின் சகோதரரான ஷிவாஜி நார்ஹர் பாவே என்பவர் கேகி மூஸின் நெருங்கிய நண்பர். ஷிவாஜி நார்ஹரின் வற்புறுத்தலின் பெயரிலே கேகி மூஸ் வீட்டை விட்டு வெளியே வந்தார்.
முன்னாள் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு கூட கேகி மூஸை சந்திக்க வேண்டும் என்பதற்காக அவரை சாலிஸ்காவ் ரயில் நிலையத்திற்கு அழைத்தார். ஆனால் இந்த அழைப்பை கேகி மூஸ் மறுத்துவிட்டார்.
“இதற்கு கேகி மூஸ் தனது பதிலை அனுப்பி வைத்திருந்தார். ‘நீங்கள் என்னை பார்க்க வேண்டும் என்றால் என்னுடைய வீட்டுக்கு நீங்கள் வர வேண்டும். நான் உங்களை எனது வீட்டுக்கு வரவேற்கிறேன்’, என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அந்த சமயத்தில், ஜவஹர்லால் நேரு கேகியின் வீட்டுக்கு வந்து அவரை சந்தித்து பேசினார்”, என்று கமலாகர் சமந்த் தெரிவித்தார்.
வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்த போதிலும் கேகி மூஸை காண பல முக்கிய தலைவர்கள் அவரது வீட்டுக்கே வந்து அவருடன் உரையாடியுள்ளனர்.
ஜவஹர்லால் நேரு, பாபா அம்தே, ஆச்சார்யா அத்ரே, ஜெயபிரகாஷ் நாராயண், மகரிஷி தோண்டோ கேசவ் கார்வே, வசந்த் தேசாய் போன்ற பலர், கேகி மூஸை அவரது வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்து சென்றுள்ளனர். இந்த முக்கிய பிரமுகர்கள் கேகி மூஸூடன் எடுத்துக்கொண்ட படங்கள் அந்த கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
கலை மீது காதல் கொண்ட கேகி
கேகி மூஸ் உலக புகழ் பெற்ற ஒரு புகைப்பட கலைஞர். அவர் ஒரு ஓவியர், இசை பிரியர், சிறந்த சிற்பி மற்றும் ஒரு சிறந்த ஓரிகாமி கலைஞர். (ஓரிகாமி என்பது காகிதத்தை பல்வேறு விதமாக மடித்து பல வடிவங்களை உருவாக்கும் ஒருவகைக் கலை)
அது மட்டுமல்லாமல் கேகி ஒரு சிறந்த எழுத்தாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், தத்துவஞானியாகவும் அறியப்பட்டார். இவர் அனைத்து மத நூல்களையும் கற்றுத் தேர்ந்துள்ளார். பேராசிரியர் நாசிர் கான் மற்றும் உஸ்தாத் தின் முகமது கான் ஆகியோரிடம் இருந்து சித்தார் வாசிக்க கற்றுக்கொண்டார்.
அவர் ஆங்கிலம், ஃபிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, குஜராத்தி, உருது மற்றும் மராத்தி ஆகிய மொழிகளை அறிந்திருந்தார். தனக்கென சொந்தமான ஒரு நூலகத்தை உருவாக்க அவர் நான்காயிரம் புத்தகங்களை சேகரித்தார். அவர் உருது கவிதைகளின் மிகப்பெரிய ரசிகராக இருந்தார்.
பிற கலைஞர்கள் உருவாக்கிய கலைப் பொருட்கள், மரச் சிற்பங்கள், சிலைகள் மற்றும் பழைய பாத்திரங்கள், பொம்மைகள், பழைய மரச்சாமான்கள் மற்றும் காசுகள் ஆகியவற்றையும் அவர் சேகரித்தார்.
பல்வேறு விதமான இசை கேசட்டுகள் மற்றும் கிராம போன் ஆகியவற்றை சேகரிப்பது அவருக்கு பொழுதுபோக்காக இருந்தது. ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, ராஜஸ்தானி ஆகிய மொழிப்பாடல்களின் கேசட்டுகளை அவர் சேகரித்திருந்தார். குழந்தைகளுக்கான பாடல்கள், உணர்வுப்பூர்வமான பாடல்கள், பக்திப் பாடல்கள், அபங்காஸ், கஜல்கள், கவாலி போன்ற பல்வேறு இசை கோப்புகளையும் அவர் சேகரித்தார்.
அவரது பல்வேறு வகையான புகைப்படங்களுக்காகவும் அவர் புகழ்பெற்றார். சூனியக்காரி, சிவன் பார்வதி, குளிர்காலம், திரிசார்தா, வாத்சல்யா ஆகியவற்றை பற்றிய புகைப்படங்கள் அதில் மிகப் பிரபலமானவை.
டேபிள் டாப் புகைப்படங்கள்
டேபிள் டாப் புகைப்படங்களுக்காக கேசி மூஸ் மிகவும் புகழ் பெற்றார். இந்த கலையை அவர் இந்தியாவின் முதல் டேபிள் டாப் புகைப்பட கலைஞரான ஜெ. என். உன்வாலாவிடம் இருந்து கற்றுக்கொண்டார்.
டேபிள் டாப் புகைப்படம் என்பது புகைப்படங்களை வரிசைப் படுத்தி அதனை உயரத்தில் இருந்து புகைப்படம் எடுப்பதாகும். இதில் அப்பொருட்களின் நிழலுக்கு முக்கியத்துவம் கொடுத்து புகைப்படங்களை எடுக்க வேண்டும்.
இந்த வகைப் புகைப்படங்கள் உயிரோட்டம் மிகுந்தவை. தன் வீட்டில் இருந்த பொருட்களை வைத்தே கேகி மூஸ் இந்த புகைப்படங்களை எடுத்தார்.
டேபிள் டாப் புகைப்படங்களை எடுப்பதற்காக அவர் பயன்படுத்திய பொருட்கள் இன்றும் ‘கேகி மூஸ் கலைக்கூடத்தில்’ வைக்கப்பட்டுள்ளன. 1500க்கும் மேற்பட்ட அவரது கலைப் படைப்புகள் அந்த கலைக்கூடத்தில் பாராமரிக்கப்பட்டு வருகின்றன.
‘The Witch of Chalisgaon’ என்ற புகைப்படத்திற்காக அவருக்கு ‘பெல்ஜியம் ஃபைன் ஆர்ட் சொசைட்டி’ சார்பாக தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
கேகி மூஸ் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் செய்துள்ள மற்றும் பல கட்டுரைகளை எழுதியுள்ள வழக்கறிஞர் கிராந்தி அத்வாலே-படன்கர், “ஒரு போட்டிக்காக, கேகி மூஸுக்கு புகைப்படம் எடுக்க சரியான மாடல் கிடைக்கவில்லை. புகைப்படத்தை சமர்ப்பிக்கும் நாள் நெருங்கிக்கொண்டே இருந்தது. இதற்கான சரியான மாடலை அனுப்புமாறு அவர் கடவுளிடம் வேண்டிக்கொண்டார்”, என்றார்.
அடுத்த நாள் காலையில் தனது வீட்டின் வாசலில் நின்றுகொண்டு கேகி மூஸ் தலை துவட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக நடந்து சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவர் கேகி மூஸை மருத்துவர் என்று நினைத்து மருந்து கேட்பதற்காக அவரது வீட்டிற்குள்ளே நுழைந்தார்.
இந்த வயதானவர்தான் தான் தேடிக்கொண்டிருந்த மாடல் என்று அறிந்த கேகி மூஸ், அவருக்கு நாலணா பணத்தை வழங்கி, புகைப்படம் எடுப்பதற்கு தயாரானார்.
கேகி மூஸ், அந்த பெண்ணை மொட்டை மாடிக்கு அழைத்து சென்று சுமார் 40 புகைப்படங்கள் எடுத்திருப்பார். பிறகு அவருடைய இருட்டு அறையில் 24 மணி நேரம் வேலை பார்த்து அதிலிருந்து ஒரு புகைப்படத்தை அவர் போட்டிக்கு அனுப்பி வைத்தார். அந்த புகைப்படம்தான் அந்த போட்டியில் வெற்றிபெற்றது.
கேகியின் டேபிள் டாப் புகைப்படங்கள் 300-க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளன.
கேகி எவ்வாறு சாலிஸ்காவ் சென்றார்?
கேகியுடைய இயற்பெயர் கைகுஸ்ரோ மானெக்ஜி மூஸ். ஆனால் அவருடைய தாய் அவரை கேகி என்று அழைத்ததால், அதுவே அவருடைய அடையாளமாக மாறிவிட்டது. இவரை பாபுஜி என்றும் சிலர் அழைப்பர். சாலிஸ்காவ் ரயில் நிலையத்திற்கு அருகில் கற்களால் ஆன வீடு ஒன்றில் அவர் வசித்து வந்தார்.
1912 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி அன்று மும்பையில் உள்ள மலபார் ஹில் என்ற இடத்தில் அவர் பிறந்தார். அவருடைய பெற்றோர் பிரோஜ் மற்றும் மானெக்ஜி பிராம்ஜி மூஸ் ஆவர்.
தன்னுடைய ஒன்பது வயதில் இருந்தே, கேகி மூஸ் ஒரு ஓவியராக விரும்பினார். மும்பையில் உள்ள வில்சன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பிறகு, உயர் கல்விக்காக கேகி மூஸ் பிரிட்டன் சென்றார்.
ஆனால் கேகி மூஸ், தனது சோடா நிறுவனத்தையும், மதுபானக் கடையையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று மானெக்ஜி விரும்பினார். 1934-35 காலகட்டத்தில் மானெக்ஜி இறந்த போது அக்கடையின் பொறுப்பை பிரோஜ் தன் கைகளில் எடுத்துக்கொண்டார்.
தன்னுடைய மகனின் கனவை நிறைவேற்ற அவர் கேகியை பிரிட்டன் அனுப்ப முடிவு செய்தார். 1935 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ஷெஃபீல்டின் பென்னட் கல்லூரியில் கேகி மூஸ் சேர்ந்தார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கமர்ஷியல் கலையில் டிப்ளமோ பட்டம் பெற்றார்.
இந்த பட்டப்படிப்பில் புகைப்பட கலையும் ஒரு பாடமாக இருந்தது. அதனை 1937 ஆம் ஆண்டு கேகி படித்தார். இதன் பின்பு ‘தி ராயல் சொசைட்டி ஆஃப் க்ரேட் பிரிட்டன்’ அவரை கௌரவ உறுப்பினராக சேர்த்துக்கொண்டது.
இதன் பிறகு அவர் அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றார். அங்கு பல புகைப்பட கண்காட்சிகளை கேகி மூஸ் கண்டார். பல்வேறு கலைஞர்களையும் அவர் சந்தித்து பேசினார். இதன் பிறகு அவர் 1938 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார்.
இந்தியா வந்த பிறகு அவர் மும்பையில் இருந்து நேராக சாலிஸ்காவுக்கு சென்று தனது வீட்டில் சுமார் 50 ஆண்டுகள் கழித்தார்.
டச்சு ஓவியரான ரெம்ப்ராண்ட் என்பவரை கேகி மிகவும் விரும்பினார். அதனால் அவருடைய வீட்டின் பெயரை ‘ஆஷிர்வாத்’ என்பதில் இருந்து ‘ரெம்ப்ராண்ட்ஸ் ரெட்ரீட்’ என்று மாற்றினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் கலை மற்றும் இலக்கிய மன்றம் கேகி மூஸை பற்றியும் அவரது புகைப்படக் கலையை பற்றியும், ‘கேகி மூஸ்: லைஃப் அன்ட் ஸ்டில் லைஃப்’ என்ற தலைப்பில் ஒரு நூலை 1983 ஆம் ஆண்டு வெளியிட்டது.
தனது காதலிக்காக தன்னுடைய மொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்த கேகி மூஸ், அவரது இல்லத்தில் 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி உயிரிழந்தார்.
கேகியின் சுயசரிதை நூலான ‘வென் ஐ ஷெட் மை டியர்ஸ்’ இன்னும் வெளியாகவில்லை என்று கமலாகர் சமந்த் பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார்.
அவருடைய நினைவு நாளன்று அவரை போற்றும் வகையில் கலாமகரிஷி கேகி மூஸ் கலைக்கூடத்தில், கேகி மூஸ் அறக்கட்டளையானது ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.