by adminDev2

தேசிய இனப்பிரச்சினைக்கு ஏற்புடைய தீர்வை வழங்காதவரை தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியை நம்பப்போவதில்லை தேர்தல் முடிவுகள் எமது மக்கள் தமிழ்த்தேசியத்தை நிராகரித்திருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்கவில்லை. இம்முறை வடக்கில் தமிழ் தரப்பினருக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் வீழ்ச்சி ஏற்படவில்லை. இருப்பினும் அவ்வாக்குகள் தமிழ்க்கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் எதிர்வருங்காலங்களில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எவ்வாறு கையாளப்போகிறது என்பதிலேயே அதற்கான ஆதரவு தங்கியிருக்கிறது. இனப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க நியாயமான தீர்வு வழங்கப்படாதவரை, தமிழர்கள் தேசிய மக்கள் சக்தியை நம்பப்போவதில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாராந்த கேள்வி – பதில் பகுதியில் அண்மையில் நடைபெற்றுமுடிந்த பொதுத்தேர்தலில் வட, கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு என்ன காரணம் என எழுப்பப்பட்டிருக்கும் கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்திருக்கும் விக்னேஸ்வரன், அதுபற்றி மேலும் கூறியிருப்பதாவது:

தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியே தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்குக் காரணமாகும். தமிழ் மக்கள் அவர்களது பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வொன்றை எதிர்பார்த்தனர். இருப்பினும் அத்தீர்வு வழங்கப்படவில்லை. மாறாக அவர்கள் தமது பிரதிநிதிகள் பாராளுமன்ற வரப்பிரசாதங்களை அனுபவிப்பதையும், சுயநல நோக்கங்களுக்காக அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதையும் அவதானித்தனர். எனவே நடைபெற்றுமுடிந்த தேர்தல் முடிவுகளில் ஒருபகுதி தமிழ்பேசும் மக்களின் கோபத்தின் வெளிப்பாடாகும்.

இருப்பினும் அத்தேர்தலில் வட மாகாணத்தில் வாக்குகள் அளிக்கப்பட்டிருக்கும் விதத்தை அவதானிக்கும்போது, தமிழ் மக்கள் தமிழ்த்தேசியத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். ஏனெனில் தெற்குக்கு நேயமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் அங்கஜன் இராமநாதன் போன்றோர் கடந்த முறை தேர்தலில் பெற்றதை விட மிகக்குறைந்தளவு வாக்குகளையே இம்முறை பெற்றனர்.

அதேபோன்று தேசிய மக்கள் சக்தியினர் அவர்களது தேர்தல் பிரசாரத்தின்போது, மக்களின் தேவைப்பாடுகளை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஊடாக நேரடியாகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கவனத்துக்குக் கொண்டுசெல்லமுடியும் எனவும், ஆகவே டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன் போன்ற இடைத்தரப்பினர்கள் தேவையில்லை எனவும் எடுத்துக்கூறினர். எனவே அவர்களது வாக்குகள் இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு அண்மையில் 18 வயதை அடைந்த புதிய வாக்காளர்கள் தொடர்பிலும் தேசிய மக்கள் சக்தி விசேட கவனம் செலுத்தியிருந்தது.

இந்நிலையில் தமிழ்த்தேசியவாதிகளுக்கான வாக்குகள் இம்முறை தமிழ்த்தேசிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கும், சுயேட்சை வேட்பாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. எது எவ்வாறிருப்பினும் இம்முறை தமிழ்மக்கள் சுயநல எண்ணமுடைய, நம்புவதற்குத் தகுதியற்ற உறுப்பினர்கள் யார் என்பதை இனங்கண்டிருக்கிறார்கள். ஆகவே எதிர்வரும் தேர்தல்களில் பொதுக்கூட்டணியொன்று உருவாக்கப்பட்டாலும், மக்கள் அந்த உறுப்பினர்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள்.

தேர்தல் முடிவுகள் எமது மக்கள் தமிழ்த்தேசியத்தை நிராகரித்திருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்கவில்லை. இம்முறை வடக்கில் தமிழ் தரப்பினருக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் வீழ்ச்சி ஏற்படவில்லை. இருப்பினும் அவ்வாக்குகள் தமிழ்க்கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் எதிர்வருங்காலங்களில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எவ்வாறு கையாளப்போகிறது என்பதிலேயே அதற்கான ஆதரவு தங்கியிருக்கிறது. இனப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க நியாயமான தீர்வு வழங்கப்படாதவரை, தமிழர்கள் தேசிய மக்கள் சக்தியை நம்பப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்