மனு ஸ்மிருதி வழக்கில் திருமாவளவன் விடுதலை – நீதிமன்றம் சொன்னது என்ன?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
மனு ஸ்மிருதியை முன்வைத்து பெண்களை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணி என்ன?
திருமாவளவன் மனு ஸ்மிருதியை முன்வைத்து இந்துப் பெண்களை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், அவரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020ம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மனு ஸ்மிருதியை முன்வைத்து இந்துப் பெண்களை தரக்குறைவாகவும் இழிவாகவும் ‘பெரியார் டிவி’ என்ற யூடியூப் சேனலில் பேசியதாகவும் அதனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறி, மதுரை பேரையூர் உரிமையியல் நீதிமன்றத்தில் டாக்டர் வி. வேதா என்ற தாமோதரன் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜரான திருமாவளவன் தரப்பு வழக்கறிஞர், “செப்டம்பர் 27ம் தேதி ஐரோப்பிய வாழ் பெரியாரிய உணர்வாளர்கள் இணையவழி கருத்தரங்கம் ஒன்றை நடத்தினர். ‘பெரியார் மற்றும் இந்திய அரசியல்’ என்ற தலைப்பில் திருமாவளவன் பேசினார். அதன் பதிவுகளே பெரியார் டிவியில் மீண்டும் பதிவிடப்பட்டன.” என வாதாடினார்.
மேலும், “மனு ஸ்மிருதியில் என்ன எழுதப்பட்டுள்ளதோ, அதைத்தான் மேற்கோள்காட்டி பேசப்பட்டது. அந்தப் புத்தகத்தில் இல்லாததைப் பேசவில்லை. மனு ஸ்மிருதியில் இருந்ததைக் கூறியதால் மனுதாரருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை” என வாதிடப்பட்டது.
இந்த வழக்குக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி புகார்தாரரான தாமோதரனுக்கு உத்தரவிடப்பட்டது.
டிசம்பர் 20ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரரோ, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் யாருமோ ஆஜராகவில்லை. மனுவுக்கும் பதிலளிக்கவில்லை.
இதையடுத்து, இந்த வழக்கில் நீதிபதி பி. வேல்முருகன் தீர்ப்பளித்தார்.
அந்தத் தீர்ப்பில், “வழக்கு விவரங்களைப் படித்துப் பார்த்ததில் மனு ஸ்மிருதி புத்தகத்தில் என்ன இருக்கிறதோ அதைத்தான் திருமாவளவன் பேசியிருக்கிறார். புகார்தாரரால் கூறப்பட்ட குற்றங்கள் எதையும் மனுதாரர் செய்துள்ளதாகத் தெரியவில்லை. அவரது பேச்சால் யாரும் பாதிக்கப்படவில்லை. வெறுப்புணர்வுடன் பேச வேண்டும் என்ற உள்நோக்கமும் அவருக்கு இல்லை. அதனால் அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி ஐரோப்பிய வாழ் பெரியாரிய உணர்வாளர்கள் இணையவழி கருத்தரங்கம் ஒன்றை நடத்தினர். ‘பெரியார் மற்றும் இந்திய அரசியல்’ என்ற தலைப்பில் திருமாவளவன் பேசினார். சுமார் 40 நிமிடங்கள் நீண்ட அந்த பேச்சில் மனு ஸ்மிருதியை முன்வைத்தும் பேசினார்.
இதற்குப் பிறகு, அந்த வீடியோவில் இருந்து துண்டாக வெட்டப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. அதனை முன்வைத்து திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. பாஜகவினர் இந்த விவகாரத்தைத் தீவிரமாக முன்னெடுத்தனர். இதையொட்டி, அவர் மீது காவல் துறையில் பா.ஜ.க. நிர்வாகிகள் புகார் அளித்தனர். வழக்கும் தொடரப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக பேட்டியளித்த பா.ஜ.க நிர்வாகி குஷ்பு, “பெண்கள் குறித்து திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கு, அவர்களது கூட்டணிக் கட்சியான தி.மு.க. ஏன் பதில் சொல்லவில்லை? காங்கிரஸ் ஏன் பதில் சொல்லவில்லை? பெண்களிடம் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர்கள் ஓட்டு போடுவார்களா?” என்றார்.
இருந்தாலும், பிற்படுத்தப்பட்டோரை சிறுமைப்படுத்துவதாகவும் இழிவுபடுத்துவதாகவும் கூறி, மனுஸ்மிருதியை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அக்டோபர் 24 ஆர்ப்பாட்டம் ஒன்றையும் திருமாவளவன் நடத்தினார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு