நிமிஷா பிரியா: மரண தண்டனையை தடுக்க வல்ல குருதிப் பணம் என்றால் என்ன?
குற்றவாளியை மன்னிப்பதற்கும் மரண தண்டனையைத் தவிர்ப்பதற்கும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி இழப்பீடான குருதிப் பணம் அல்லது தியா என்பது என்ன?
கேரளாவை சேர்ந்த நிமிஷா பிரியா என்ற செவிலியர் 2008ஆம் ஆண்டு தனது 19வது வயதில் ஏமன் நாட்டுக்குச் சென்றார். குடும்பத்தின் வறுமையைப் போக்க வேண்டும் என்ற கனவோடு வீட்டைவிட்டு வெளியேறினார். பெரும்பாலும் கேரளாவை சேர்ந்த பல பெண்கள் இப்படியான கனவுகளோடு பணி வாய்ப்புகளுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கிறார்கள்.
ஆனால் இப்போது நிமிஷாவின் குடும்பத்தினர் அவரை இழக்கும் சூழலில் தவித்து வருகின்றனர். நிமிஷா தற்போது ஏமன் நாட்டில் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்று சிறையில் உள்ளார்.
நிமிஷாவின் குடும்பம் அவருக்காக குருதிப் பணம் செலுத்திய பின்னர், கொல்லப்பட்ட நபரின் குடும்பத்தினர் அவரை மன்னித்தால் மட்டுமே நிமிஷா இப்போது பிழைக்க முடியும்.
குருதிப் பணம் என்றால் என்ன? எந்தவொரு கொலைக் குற்றவாளியும் அதைச் செலுத்திவிட்டுத் தப்பிக்க முடியுமா?
நிமிஷா பிரியாவின் முழு கதையையும், பஞ்சாபை சேர்ந்த ஒரு இளைஞர் குருதிப் பணத்தைச் செலுத்தி மரண தண்டனையில் இருந்து தப்பி வீடு திரும்பிய கதையையும் விவரிக்கிறது இந்தக் கட்டுரை.
குருதிப் பணம் என்றால் என்ன?
பிபிசி ஆப்பிரிக்கா அறிக்கையின்படி, ஷரியா என்று அழைக்கப்படும் இஸ்லாமிய சட்டத்தில் தியா அல்லது குருதிப் பணம் என்பது ஒரு வகையான நீதியாகக் கருதப்படுகிறது.
கொலை, காயப்படுத்துதல் அல்லது சொத்துகளைச் சேதப்படுத்துதல் போன்ற பல்வேறு வகையான குற்றங்களுக்கு இது பொருந்தும்.
இதன்மூலம் தண்டனையைக் குறைக்கலாம் அல்லது முழு மன்னிப்பும் பெறலாம். இந்த வகையிலான சட்ட முறை தற்போது மத்திய கிழக்குப் பகுதி மற்றும் ஆப்பிரிக்காவில் சுமார் 20 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.
நைஜீரிய இஸ்லாமிய அறிஞர் ஷேக் ஹுசைனி ஜகாரியாவின் கூற்றுப்படி, குருதிப் பணம் இஸ்லாமியரின் புனித நூலான குர்ஆனிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கொலை வழக்குகளுக்கு, 100 ஒட்டகங்கள் போன்ற இழப்பீடுகளை வழங்கலாம் என்று முகமது நபியால் விளக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
ஆனால் இப்போது இந்த இழப்பீடு தியா எனப்படும் பணமாகப் பெரும்பாலும் வழங்கப்படுகிறது. எவ்வளவு இழப்பீடு வழங்கப்படும் என்பது கொலை வழக்கு மற்றும் அந்நாட்டின் சட்டங்களைப் பொறுத்தது.
இதனுடன் குருதிப் பணமாகப் பெறப்படும் தொகையை யாருக்கு வழங்குவது என்பதும் முடிவு செய்யப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பணம் பெறுவதற்கு உரிமையுடையவர்கள் என்றால், அவர்களிடையே அதை விநியோகிப்பதற்கும் விதிகள் உள்ளன.
நிமிஷாவின் வழக்கு என்ன?
நிமிஷா பிரியா என்ற செவிலியர் கேரளாவில் இருந்து 2008ஆம் ஆண்டு ஏமன் சென்றுள்ளார். ஏமன் தலைநகர் சனாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அவருக்கு வேலை கிடைத்தது.
கடந்த 2011ஆம் ஆண்டு டாமி தாமஸ் என்பவரைத் திருமணம் செய்ய கேரளா வந்துள்ளார் நிமிஷா. பின்னர் இருவரும் ஏமன் சென்றனர். அவர்களுக்கு டிசம்பர் 2012இல் ஒரு பெண் குழந்தை பிறந்தது, ஆனால் தாமஸுக்கு சரியான வேலை கிடைக்காததால், நிதிச் சிக்கல்கள் அதிகரித்தன. பின்னர் 2014இல் அவர் தனது மகளுடன் கொச்சிக்கு திரும்பினார்.
அதே ஆண்டு, நிமிஷா தனது வேலையை விட்டுவிட்டு ஒரு கிளினிக் திறக்க முடிவு செய்தார். ஏமன் சட்டத்தின் கீழ், அவ்வாறு செய்ய ஒரு உள்ளூர்க் கூட்டாளி இருப்பது அவசியம். அப்போதுதான் தலால் அப்தோ மஹ்தி என்ற நபர் நிமிஷாவின் வாழ்க்கையில் அறிமுகமாகிறார்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நிமிஷா இந்தியா வந்தபோது, அவருடன் மஹ்தியும் வந்துள்ளார்.
நிமிஷாவும் அவரது கணவரும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் பணம் பெற்று சுமார் ரூ.50 லட்சம் திரட்டினர். ஒரு மாதம் கழித்து நிமிஷா தனது சொந்த கிளினிக்கை திறக்க ஏமன் திரும்பினார்.
ஏமனில் உள்நாட்டுப் போர் தொடங்கியபோது, 4,600 குடிமக்களையும், 1,000 வெளிநாட்டினரையும் ஏமனில் இருந்து இந்தியா வெளியேற்றியது. ஆனால் நிமிஷா நாடு திரும்பவில்லை.
நிமிஷாவின் கணவர் தாமஸுக்கு 2017இல் மஹ்தி கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்தது. மஹ்தியின் துண்டாக்கப்பட்ட உடல் ஒரு தண்ணீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் நிமிஷா ஒரு மாதம் கழித்து ஏமனில், சௌதி அரேபிய எல்லையில் கைது செய்யப்பட்டார். அவரது சூழ்நிலை சீக்கிரமே மோசமடையத் தொடங்கியது.
கடந்த 2023ஆம் ஆண்டு, நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மஹ்திக்கும் நிமிஷாவுக்கு இடையில் இருந்த பிரச்னை குறித்துக் கூறியுள்ளார்.
அதில், “முன்பு மஹ்தி நிமிஷாவை பலமுறை மிரட்டியதாகவும், அவரது பாஸ்போர்ட்டை கைப்பற்றி வைத்திருந்ததாகவும்” நிமிஷாவின் தாயார் குற்றம் சாட்டினார்.
அதோடு, “நிமிஷா இது குறித்து போலீசில் புகார் செய்தபோதும், மஹ்திக்கு பதிலாக நிமிஷாவை 6 நாட்கள் சிறையில் அடைத்ததாக” அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
அடுத்து என்ன நடக்கும்?
குருதிப் பணத்தைச் செலுத்திய பிறகு பொது மன்னிப்பு கிடைக்கும், ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பது அவசியமில்லை.
நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு ஏமன் அதிபர் ரஷாத் முஹம்மது அல்-அலிமி கடந்த திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார். மரண தண்டனையில் இருந்து நிமிஷாவை காப்பாற்ற சர்வதேச நடவடிக்கைக் குழு என்ற பெயரில் அவரது சொந்த ஊரிலும் சர்வதேச அளவிலும் பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் இந்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று பிரசாரக் குழுவைச் சேர்ந்தவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளது.
இன்று (ஜனவரி 3), இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இந்த விவகாரத்தில் அங்கு நடக்கும் விவகாரங்களை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். இதில் அரசால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்கிறது,” என்று கூறியுள்ளார்.
ஏமனில் நிமிஷாவின் விடுதலைக்கு மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகளுக்கு தலைமை தாங்கிய சாமுவேல் ஜெரோம் கூறுகையில், நிமிஷா கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் மஹ்தியின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்கும் முயற்சிகள் தோல்வியடைந்ததால், விஷயம் மரண தண்டனை வரை சென்றதாகக் கூறினார். இப்போது நிமிஷா பிரியாவை காப்பாற்ற இன்னும் ஒரு மாத காலம் உள்ளது.
மரணத்தின் விளிம்பில் இருந்து திரும்பிய பஞ்சாபி இளைஞர்
பஞ்சாபிலும் இதுபோன்ற சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
முக்த்சார் மாவட்டத்தின் மல்ஹான் கிராமத்தைச் சேர்ந்த பல்விந்தர் சிங் 2008ஆம் ஆண்டில் சௌதி அரேபியாவுக்கு சென்றார். கடந்த 2013ஆம் ஆண்டு சௌதி அரேபியாவை சேர்ந்த ஒருவருடன் அவருக்கு மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலின்போது சௌதி அரேபியாவை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். கருணை கோரிய பல்விந்தர் சிங், மேல்முறையீட்டில் இறந்தவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரியால்கள் (இந்திய மதிப்பில் இரண்டு கோடி) செலுத்தியுள்ளார். அதன் பிறகு அவரை மன்னித்து, தண்டனையை ரத்து செய்யுமாறு நீதிமன்றம் கூறியது.
அவரது குடும்பத்தினர், கிராம மக்கள் மற்றும் பிற மக்கள் ஒன்றிணைந்து 2023ஆம் ஆண்டில் இந்திய அரசின் உதவியுடன் 2 கோடி ரூபாய் குருதிப் பணம் செலுத்தி, இறுதியாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு