தென் கொரியாவின் ஒரு மாத கால அரசியல் நெருக்கடி, ஆறு மணி நேர மோதலுக்குப் பின்னர், இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோலை (Yoon Suk Yeol) கைது செய்யத் தவறியதால் மற்றொரு திருப்பத்தை வெள்ளிக்கிழமை (03) கண்டது.
கடந்த டிசம்பர் தொடக்கத்தில் யூனின் குறுகிய கால இராணுவ சட்ட அறிவிப்பு தொடர்பாக அவரை கைது செய்ய அதிகாரிகள் முயன்றனர் – ஆனால் அவர்கள் ஜனாதிபதியின் பாதுகாப்புக் குழுவுடன் மோதலில் பாதி நாள் செலவிட்டனர்.
இது முன்னோடியில்லாத சில வாரங்களைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி ஆதிக்கம் செலுத்தும் நாடாளுமன்றம் யூனை பதவி நீக்கம் செய்ய வாக்களித்தது, பின்னர் அவருக்குப் பிறகு செயல் ஜனாதிபதியாக பதவியேற்க வழிவகுத்தது.
கைது செய்யப்பட்டதை எதிர்த்து நூற்றுக்கணக்கான யூன் ஆதரவாளர்கள் ஜனாதிபதி இல்லத்திற்கு வெளியே கூடினாலும், அவரது எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது.
அதாவது, இராணுவச் சட்ட அறிவிப்பு மீதான குற்றவியல் விசாரணையின் ஒரு பகுதியாக அவரைக் கைது செய்ய அதிகாரிகள் முயன்றனர்.
ஆனால் அவரது தலைவிதி நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் கைகளில் உள்ளது, இது குற்றச்சாட்டு வாக்கெடுப்பை நிறைவேற்றுவதன் மூலம் அவரை பதவியில் இருந்து நீக்க வழி அமைக்கும்.
யூன் ஏன் இராணுவச் சட்டத்தை விதித்தார்?
தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் யோல் இராணுவச் சட்டத்தை அறிவித்தபோது டிசம்பர் 3 ஆம் திகதி நள்ளிரவு ஒரு மணி நேரம் ஆகும் – இது 1987 இல் நாடு ஜனநாயக நாடாக மாறியதிலிருந்து ஒருபோதும் நடக்காத விடயம்.
வட கொரியாவுக்கு அனுதாபம் காட்டும் “அரசுக்கு எதிரான” சக்திகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதாக யூன் கூறினார் – ஆனால் அவர் தனது சொந்த அரசியல் பிரச்சினைகளால் தூண்டப்பட்டார் என்பது விரைவில் தெளிவாகியது.
2022 மே மாதம் அவர் பதவியேற்றதிலிருந்து, யூன் ஊழல்கள் மற்றும் குறைந்த மதிப்பீடுகளை எதிர்கொண்டார்.
2024 இல், பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி மகத்தான பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு, அவர் பொம்மை ஜனாதிபதியானார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 3 ஆம் திகதிக்கு சில நாட்களுக்கு முன்பு, யூனின் அரசாங்கம் முன்மொழிந்த பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் குறைத்துள்ளன.
மேலும் ஊழலில் சிக்கிய முதல் பெண்மணி கிம் கியோன் ஹீயை விசாரிக்கத் தவறியதற்காக அமைச்சரவை உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யவும் எதிர்க்கட்சிகள் நகர்ந்தன.
இந்த அரசியல் சவால்களுக்கு எதிராக, மூத்த உதவியாளர்களின் ஆலோசனையின் கீழ், யூன் இராணுவச் சட்டத்தை விதிக்க முடிவு செய்தார்.
ஆனால் இந்த முடிவு எதிர்ப்புகளையும் பொதுமக்களின் கோபத்தையும் தூண்டியது.
இராணுவ சட்டம் விதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரகடனத்தை நிராகரித்தனர்.
வேலிகள் மற்றும் தடுப்புகளை உடைத்து பலத்த பாதுகாப்பு கொண்ட தேசிய சட்டமன்றத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழையவும் இது வழிவகுத்தது.
அரசியல் வட்டாரங்கள் முழுவதும் உள்ள சட்டமியற்றுபவர்கள் இந்த நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கண்டனம் செய்தனர்.
அதேநேரம், பல்லாயிரக்கணக்கான மக்கள் யூனை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்து, பகல்-இரவு பாராது எதிர்ப்புக்களை வெளியிட்டனர்.
அடுத்து என்ன நடந்தது?
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் விரைவில் யூனை பதவி நீக்கம் செய்வதற்கான ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தனர் – அதை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை.
300 இடங்களில் 192 இடங்கள் கைவசம் இருப்பதால், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு இன்னும் எட்டு மக்கள் சக்தி கட்சி உறுப்பினர்கள் பதவி நீக்கத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
ஆனால் யூனின் கட்சி உறுப்பினர்கள் அந்த முதல் வாக்கெடுப்பில் வரிசையாக நின்று, அதனை புறக்கணித்தனர்.
ஆனால் எதிர்க்கட்சியானது யூனுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்படும் வரை ஒவ்வொரு வாரமும் ஒரு குற்றச்சாட்டுத் தீர்மானத்தை தாக்கல் செய்வதாக உறுதியளித்தது.
அதன்படி, டிசம்பர் 14 அன்று அவர்களின் இரண்டாவது முயற்சி வெற்றியடைந்தது,
யூனின் மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியுடன் இணைந்து பதவி நீக்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அதற்கு அமைவாக யூன் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் மற்றும் இப்போது அவரின் எதிர்காலத்துக்காக அரசியலமைப்பு நீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருக்கிறார்,
இது குற்றச்சாட்டு வாக்கெடுப்பில் ஆறு மாதங்களுக்குள் அரசியலமைப்பு நீதிமன்றினால் முடிவு செய்ய வேண்டும்.
எதிர்வரும் பெப்ரவரிக்குள் நீதிபதிகள் தீர்ப்பை வழங்குவார்கள் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
யூன் பதவி நீக்கப்பட்டால், நாடு அடுத்த 60 நாட்களுக்குள் தேர்தலை நடத்தி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வாக்களிக்க வேண்டும்.
தொடரும் அரசியல் நிச்சயமற்ற நிலை
இதற்கிடையில், தென்கொரியாவில் அரசியல் நிச்சயமற்ற நிலை தொடர்கிறது.
யூனினை அடுத்து செயல் ஜனாதிபதியாக வந்த பிரதமர் ஹான் டக்-சூவும் பதவி நீக்கம் செய்யப்பட்டார் – அவர் யூனின் பதவி நீக்க நடவடிக்கையை முடக்கியதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியது.
நிதியமைச்சர் சோய் சாங்-மோக் இப்போது தற்காலிக ஜனாதிபதி மற்றும் தற்காலிகப் பிரதமராக உள்ளார்.
பல முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் யூனின் ஜனாதிபதியின் உதவியாளர்கள் டிசம்பர் 3 அன்று நடந்த நிகழ்வுகளுக்காக இராஜினாமா செய்துள்ளனர்.
அவர்களில் சிலர் ஊழல் விசாரணை அலுவலகத்தால் (CIO) தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், இது யூன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காகவும் இராணுவச் சட்டத்தின் மூலம் கிளர்ச்சியைத் தூண்டியதற்காகவும் விசாரணை நடத்தி வருகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூனும் அடங்குவார், அவர் யூனுக்கு இராணுவச் சட்ட அறிவிப்பை பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.
கிம் காவலில் இருந்தபோது தனது உயிரை மாய்த்துக் கொள்ளவும் முயன்றார்.
யூனைக் கைது செய்யும் முயற்சி தோல்வி
தேசத் துரோகம் உள்ளிட்ட பல குற்றச்சட்டுகளை எதிர்கொள்ளும் யூனுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு பல அழைப்பாணைகள் அனுப்பப்பட்டது.
எனினும், அந்த அழைப்பாணைகள் தொடர்பான யூனின் புறக்கணிப்பானது சியோல் நீதிமன்றினால் யூனுக்கு எதிரான பிடியாணை உத்தரவினை பிறப்பிக்க வழிவகுத்தது.
ஜனவரி 3 அன்று, மத்திய சியோலில் உள்ள அவரது வீட்டில் ஜனாதிபதியின் பாதுகாப்புக் குழுவிற்கு எதிராக சுமார் 100 பொலிஸார் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கான ஊழல் விசாரணை அலுவலக அதிகாரிகள் (CIO) சென்றனர்.
நூற்றுக் கணக்கான யூனின் ஆதரவாளர்களது எதிர்ப்பு மற்றும் ஜனாதிபதி பாதுகாப்பு குழுவுடான மோதலின் பின்னர் இறுதியாக CIO, அதன் செயல்பாட்டை ஆறு மணி நேர முட்டுக்கட்டைக்குப் பிறகு நிறுத்திக் கொண்டது.
பிடியாணை காலாவதியாகும் முன் அவரைக் கைது செய்ய ஜனவரி 6 ஆம் திகதி வரை புலனாய்வாளர்களுக்கு அவகாசம் உள்ளது – அதன் பிறகு அவர்கள் அவரைத் தடுத்து வைக்க மற்றொரு நீதிமன்ற உத்தரவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதனிடையே, ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வதாக செயல் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்,
ஆனால் அவர் ஒத்துழைக்கவில்லை என எதிர்க்கட்சிகள் நினைத்தால் அவரையும் பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுக்கலாம்.
தென் கொரியாவில் இது ஒரு முன்னோடியில்லாத குழப்ப நிலை ஆகும்.
கைது செய்யப்பட பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முதல் பதவியில் இருக்கும் ஜனாதிபதி யூன் ஆவார்.
இந்த திருப்பங்களுக்கு மத்தியில் தென்கொரிய நிதிச் சந்தைகள் நிச்சயமற்ற தன்மைக்கு மோசமாக எதிர்வினையாற்றியுள்ளன.
தென் கொரியா உலகின் மிக முக்கியமான பொருளாதாரங்களில் ஒன்றாகும் மற்றும் ஒரு முக்கியமான அமெரிக்க நட்பு நாடு – எனவே அதன் கொந்தளிப்பானது சர்வதேச ரீதியிலும் பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.