ஜி.எஸ்.டி. கவுன்சில்: மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துகிறதா? முடிவுகள் எடுக்கப்படுவது எப்படி?

ஜி.எஸ்.டி. கவுன்சில், சரக்கு மற்றும் சேவை வரி, நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது ஜி.எஸ்.டி. கவுன்சிலின் தலைவராக இருக்கிறார்.
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரிகளை நிர்ணயிக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சிலில், பல மாநிலங்களின் கருத்துகளும் விருப்பங்களும் நிறைவேறுவதில்லை என்று அவ்வப்போது குரல்கள் எழுகின்றன. உண்மையில், இந்த கவுன்சிலில் முடிவுகள் எப்படி எடுக்கப்படுகின்றன?

கடந்த வாரம் நடந்து முடிந்த சரக்கு மற்றும் சேவை வரிக்கான கவுன்சில் (ஜிஎஸ்டி கவுன்சில்) கூட்டத்தில் வெவ்வேறு வகையான பாப்கார்ன்களுக்கு விதிக்கப்பட்ட வெவ்வேறு விதமான வரிகள், நாடு முழுவதும் விவாதங்களையும் விமர்சனங்களையும் எழுப்பின.

ஒவ்வொரு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடியும்போதும் இதுபோன்ற விவாதங்கள் எழுவதும் சர்ச்சைகள் எழுவதும் வழக்கமாகவே இருக்கிறது. பெரும்பாலான தருணங்களில் மத்திய அரசின் முடிவு மட்டுமே அங்கே செல்லுபடியாவதாகக் குற்றச்சாட்டும் இருக்கிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சரக்கு மற்றும் சேவை வரி

இந்தியாவில் சரக்குகளுக்கும் சேவைகளுக்கும் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விகிதத்தில் மதிப்புக் கூட்டு வரிகளை விதித்து வந்த நிலையில், நாடு முழுவதும் சரக்குகளின் போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கில், ஒரு பொருளுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விகிதங்களோடு 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்படி, நாடு முழுவதும் சரக்குகளுக்கும் சேவைகளுக்கும் 0 முதல் 28 சதவீதம் வரை (0%, 5%, 12%, 18%, 28%) சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிக்கப்படுகிறது.

பெட்ரோல், மதுபானங்கள், மின்சாரம் ஆகியவை ஜி.எஸ்.டியின் வரம்புக்குள் வருவதில்லை. இவற்றுக்கு அந்தந்த மாநில அரசுகளே வரி விதித்துக்கொள்கின்றன.

ஜிஎஸ்டி கவுன்சில்

ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஆதிக்கம் செலுத்துகிறதா மத்திய அரசு? முடிவுகள் எப்படி எடுக்கப்படுகின்றன?

பட மூலாதாரம், Getty Images

இந்த வரி விதிப்பு தொடர்பான பல்வேறு விஷயங்களைத் தீர்மானிக்க குறிப்பிட்ட கால அளவில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டப்படுகிறது.

இந்த கவுன்சிலுக்கு மத்திய நிதியமைச்சர் தலைவராக இருக்கிறார். மத்திய நிதித்துறை இணையமைச்சர், மாநில நிதியமைச்சர்கள் கவுன்சிலின் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றியமைப்பது, சில பொருட்களுக்கு வரி விலக்கு அளிப்பது உள்ளிட்ட விவகாரங்களை இந்த கவுன்சில் கூடி முடிவு செய்து மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவிக்கும்.

இந்த கவுன்சிலில் எடுக்கும் முடிவுகள் நிறைவேற்றப்பட வேண்டுமானால் நான்கில் மூன்று மடங்கு பெரும்பான்மை தேவை. ஆகவே, ஜிஎஸ்டி கவுன்சிலில் பெரும்பாலான மாநிலங்கள் கூடி முடிவு செய்தால் அதை நிறைவேற்றிவிட முடியும் எனத் தோன்றலாம்.

ஆனால், ஜிஎஸ்டி கவுன்சில் உருவாக்கப்பட்டிருக்கும் விதம் அப்படியானதல்ல என்கிறார் அரசியல் மற்றும் கொள்கை உருவாக்க விவகாரங்களில் நிபுணரான தாரா கிருஷ்ணஸ்வாமி.

மாநில அரசுகளின் பங்கு எப்படி உள்ளது?

ஜி.எஸ்.டி. கவுன்சில், சரக்கு மற்றும் சேவை வரி, நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

“ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பிரதிநிதித்துவம் இருக்கிறது. 28 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்கள் என 31 பிரதிநிதிகள் மாநிலங்களிடம் இருப்பார்கள். மத்திய அரசை இரண்டு பேர் பிரதிநிதித்துவம் செய்வார்கள்,” என்கிறார் தாரா.

“ஆனால், வாக்கின் மதிப்பு என்று வரும்போது மத்திய அரசை பிரதிநிதித்துவம் செய்யும் இருவரின் வாக்கு மதிப்பு 3இல் ஒரு பங்காக உயர்ந்துவிடும். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் 31 பிரதிநிதிகளின் வாக்கு மதிப்பு 3இல் இரண்டு பங்காக இருக்கும்.”

மேலும், அடுத்ததாக ஒரு விதி இருக்கிறது என்கிறார் அவர். அவரது கூற்றுப்படி, ஒரு தீர்மானம் கவுன்சிலில் நிறைவேற்றப்பட வேண்டுமெனில், நான்கில் 3 மடங்கு வாக்குகள் அதற்குத் தேவை. அதாவது 75 சதவீத வாக்குகள் தேவை. “ஏற்கெனவே, மத்திய அரசிடம் 33 சதவீத வாக்குகள் இருக்கும். ஆகவே, மத்திய அரசு விரும்பாத எதையும் அந்த கவுன்சிலில் கொண்டுவர முடியாது” என்று விளக்கினார் தாரா.

தற்போது இந்தியாவில் 14 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் நிலையில், தற்போதைய மத்திய அரசு விரும்பும் எதையும் கவுன்சிலில் நிறைவேற்றிவிட முடியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால், வரி விதிப்பு தொடர்பாக கவுன்சிலில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்துமே எல்லோரும் ஒப்புக்கொண்டே எடுக்கப்படுகின்றனவா என்பதைக் கவனிக்க வேண்டும் என்கிறார்கள் வேறு சில நிபுணர்கள்.

“வரி விதிப்பு தொடர்பான முடிவுகள் எல்லா மாநிலங்களும் ஒப்புக்கொண்டே எடுக்கப்படுகின்றன. இதுபோன்றவற்றை மாநிலங்கள் பொதுவாக எதிர்ப்பதும் இல்லை. அதற்குக் காரணம், வரி அதிகரிக்கும்போது மாநிலங்களின் பங்கும் அதிகரிக்கும்.

கடந்த 2017ஆம் ஆண்டில் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது வரை 55 கூட்டங்கள் நடந்துவிட்டன. எத்தனை முறை எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பார்த்தால், விரல்விட்டு எண்ணிவிடலாம். லாட்டரி மீதான வரி விதிப்பு தொடர்பாக மட்டும் அதிக அளவில் எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டன. மற்றபடி, எல்லா முடிவுகளுமே ஒருங்கிணைந்தே எடுக்கப்பட்டன” என்கிறார் ஜி.எஸ்.டி. விவகாரங்களின் நிபுணரான கே.வைத்தீஸ்வரன்.

பாப்கார்ன் விவகாரம்

ஜி.எஸ்.டி. கவுன்சில், சரக்கு மற்றும் சேவை வரி, நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

ஏனென்றால், மாநிலங்களுக்கு வேறு வழியே இல்லை என்கிறார் தாரா கிருஷ்ணஸ்வாமி.

“ஜிஎஸ்டி கூட்டங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடக்குமெனக் கூறப்பட்டது. ஆனால், அப்படி உரிய கால இடைவெளியில் நடப்பதில்லை. இந்த கவுன்சிலில்தான் வரி தொடர்பான எல்லா விஷயங்களையும் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால், வரி திருத்தம் தொடர்பான எல்லாவற்றையும் விவாதித்து, தனித்தனி தீர்மானமாக நிறைவேற்ற நேரம் இருப்பதில்லை,” என்று விளக்கினார் அவர்.

“ஆகவே, வரி திருத்தங்கள் எல்லாவற்றையும் ஒரே தீர்மானமாக கொண்டு வருகிறார்கள். மாநிலங்களைப் பொறுத்தவரை இதில் சில திருத்தங்கள் ஏற்புடையதாக இருக்கலாம். சில திருத்தங்களை ஏற்க விரும்பாமல் இருக்கலாம். ஆனால், தாம் விரும்பும் திருத்தங்கள் நிறைவேற ஒட்டுமொத்தத் தீர்மானத்தையும் ஏற்பதைத் தவிர வேறு வழியே இருப்பதில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், “ஒரு மாநிலத்திற்கு ஒரு விஷயத்தில் எதிர்ப்பு இருந்தால், தம் எதிர்ப்பைப் பதிவு செய்யலாம் அல்லது புதிய தீர்மானம் அல்லது திருத்தங்களைக் கொண்டு வரலாம். அப்படி எத்தனை முறை நடந்திருக்கிறது?” எனக் கேள்வியெழுப்புகிறார் கே. வைத்தீஸ்வரன்.

“பாப்கார்ன் விவகாரத்தைப் பொறுத்தவரை அது தேவையில்லாமல் விளம்பரமாக்கப்படுகிறது. இதுபோன்ற வரி விதிப்புகள், ஒரு சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்படும். இந்த சுற்றறிக்கைகள் கவுன்சில் கூட்டத்தை ஒட்டி வெளியாவதால், கூடுதல் கவனம் கிடைக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பல மாநில நிதியமைச்சர்கள் இதற்கு முன்பாக ஜி.எஸ்.டி. கவுன்சில் செயல்படும் விதம் குறித்துப் பல விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

தமிழக நிதியமைச்சராக பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பதவி வகித்தபோது, அவர் பங்கேற்ற கூட்டத்தில் கவுன்சில் செயல்படும்விதம் குறித்துப் பல விமர்சனங்களை முன்வைத்தார்.

ஜி.எஸ்.டி. கூட்டங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சரியாக நடப்பதில்லை, கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ள அம்சங்கள் பல தருணங்களில் முன்கூட்டியே அளிக்கப்படுவதில்லை, ஐஜிஎஸ்டியில் மாநிலங்களின் பங்கு எப்படி கணக்கிடப்படுகிறது என்பதில் தெளிவில்லை எனக் குற்றம் சாட்டினார்.

அதேபோல, மேற்கு வங்கத்தின் நிதியமைச்சராக இருந்த அமித் மித்ராவும் கவுன்சில் செயல்படும் விதம் குறித்துப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கூட்டாட்சி உணர்வையே கவுன்சில் செயல்படும் விதம் குலைப்பதாகக் கூறிய அவர், அமைச்சர்கள் அளிக்கும் பரிந்துரைகள் மீது முடிவுகள் எடுக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தார். சில தருணங்களில் கவுன்சிலின் முடிவு குறித்துத் தனது எதிர்ப்பையும் அவர் பதிவு செய்திருக்கிறார்.

உற்பத்தியில் ஈடுபடும் மாநிலங்களுக்கு சிக்கலா?

ஜி.எஸ்.டி. கவுன்சில், சரக்கு மற்றும் சேவை வரி, நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

தற்போதைய ஜிஎஸ்டி கவுன்சிலில் வேறு சில பிரச்னைகள் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார் South Vs North: India’s Great Divide நூலின் ஆசிரியரான ஆர்.எஸ். நீலகண்டன்.

“இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற சில மாநிலங்கள்தான் பெரிய அளவில் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால், கவுன்சிலில் எல்லா மாநிலங்களுக்கும் ஒரு வாக்குதான் இருக்கிறது. இந்த நிலையில், எந்த மாநிலங்கள் அதிக உற்பத்தியில் ஈடுபடுகின்றனவோ, அவற்றால் தாம் விரும்பும் வகையில் தம்முடைய உற்பத்திப் பொருட்களுக்கு வரிகளை நிர்ணயிக்க முடியாது. பெரும்பான்மையாக இருக்கும் நுகரும் மாநிலங்கள்தான் அதைத் தீர்மானிக்க முடியும்.

இதனால், எப்போதுமே நுகரும் மாநிலங்கள்தான் கவுன்சிலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. பெருமளவில் உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு எந்த அதிகாரமும் அந்த கவுன்சிலில் இல்லை”, என்கிறார் அவர்.

இதுபோன்ற அமைப்புகளை உருவாக்கும்போது மத்திய அரசு தனக்குச் சாதகமான விதத்திலேயே அவற்றை உருவாக்குவதாகக் கூறுகிறார் தாரா கிருஷ்ணஸ்வாமி. இந்திய தேர்தல் ஆணையம், மத்திய நிதி ஆணையம் போன்ற எல்லாமே இப்படித்தான் இருப்பதாகவும் கூறுகிறார் அவர்.

“இந்தியா சுதந்திரம் பெற்ற தருணத்தில் இந்தியாவை ஒரு ஒருங்கிணைந்த நாடாக உருவாக்க மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரங்கள் தேவைப்பட்டன. 1980கள் வரைகூட இந்தப் போக்கை சரி எனச் சொல்லலாம்.

அதனால்தான், மத்திய நிதி ஆணையம் எப்படி நிதியைப் பகிர வேண்டும் என்பதற்கான விதிமுறைகளை (terms of reference) மத்திய அரசு அளித்து வந்தது. ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. பல இடங்களில் இருந்து மத்திய அரசுக்கு நிதி வரும்போது, மத்திய அரசு மட்டும் இதைச் சொல்வது எப்படி சரியாக இருக்க முடியும்?” என்று தாரா கேள்வியெழுப்புகிறார்.

அதேபோல மாநிலங்களுக்கு இடையிலான இடைவெளியும் அதிகரித்துவிட்டதாகக் கூறும் அவர், “1960களில் மாநிலங்களுக்கு இடையிலான இடைவெளி மிகக் குறைவு. இப்போது வளர்ந்த மாநிலங்களுக்கும் பின்தங்கிய மாநிலங்களுக்கும் இடையிலான இடைவெளி மிக அதிகம். தமிழ்நாட்டுக்கும் உத்தரப்பிரதேசத்துக்கும் இடையிலான வளர்ச்சி இடைவெளி மிகமிக அதிகம். இம்மாதிரியான சூழலில் இரு வகையான மாநிலங்களையும் ஒரே மாதிரி நடத்த முடியாது,” என்கிறார்.

ஆனால், “இன்னமும் புதிய அமைப்புகளை உருவாக்கும்போது 1960களில் செயல்பட்டதைப் போலவே மத்திய அரசு விதிமுறைகளை உருவாக்குகிறது. இந்த அமைப்புகளில் கூடுதல் அதிகாரங்கள் மாநிலங்களுக்கு இருக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள அமைப்புகளிலும் அதற்கேற்றபடி விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும்,” என்று தாரா கிருஷ்ணஸ்வாமி அறிவுறுத்துகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.