சீனா: உளவு சர்ச்சையில் சிக்கிய ஷி ஜின்பிங்கின் ‘மந்திர ஆயுதம்’ என்ன? அதன் பணிகள் யாவை?
- எழுதியவர், கோ ஈவ் & லாரா பிக்கர்
- பதவி, பிபிசி நியூஸ்
சீன மக்கள் குடியரசின் நிறுவன தலைவர் மாவோ சேதுங் மற்றும் அதன் தற்போதைய அதிபர் ஷி ஜின்பிங்கின் கருத்துப்படி, சீனாவிடம் ஒரு ‘மந்திர ஆயுதம்’ உள்ளது.
அது ‘ஐக்கிய முன்னணி பணித் துறை’ (United Front Work Department- யு.எஃப்.டபுள்யு.டி) என்று அழைக்கப்படுகிறது. சீனாவின் வளர்ந்து வரும் ராணுவ ஆயுத பலத்தைப் போலவே, இதுவும் மேற்குலக நாடுகளில் ஓர் எச்சரிக்கையை எழுப்புகிறது.
யாங் டெங்போ, இளவரசர் ஆண்ட்ரூவுடன் தொடர்புடைய ஒரு முக்கிய தொழிலதிபர். யு.எஃப்.டபுள்யு.டி உடனான அவரது தொடர்புகளுக்காகக் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, பிறகு தண்டிக்கப்பட்ட சமீபத்திய வெளிநாட்டு சீன குடிமகன் இவர்.
யு.எஃப்.டபுள்யு.டி துறையின் இருப்பு ரகசியத்துக்கும் அப்பாற்பட்டதாக உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லாண்டுகள் பழமையான மற்றும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட ஓர் அங்கமான இது, இதற்கு முன்னரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா வரையிலான புலனாய்வாளர்கள் யு.எஃப்.டபுள்யு.டி-யை பல உளவு வழக்குகளில் மேற்கோள் காட்டியுள்ளனர்.
சீனா தனது வெளிநாட்டு விவகாரங்களின் தலையீட்டிற்கு இதைப் பயன்படுத்துவதாக அவர்கள் அடிக்கடி குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் சீனா அனைத்து உளவு குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது, அவற்றை நகைப்புக்குரியது என்றும் விவரித்துள்ளது. இந்த ஐக்கிய முன்னணி பணித் துறை, அதாவது யு.எஃப்.டபுள்யு.டி என்பது என்ன? அந்தப் பிரிவின் பணிகள் யாவை?
ஐக்கிய முன்னணி என்றால் என்ன?
ஐக்கிய முன்னணி என்பது ஒரு பரந்த கம்யூனிஸ்ட் கூட்டணியைக் குறிப்பிடுகிறது. பல ஆண்டுகள் நீடித்த சீன உள்நாட்டுப் போரில், கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிக்கான திறவுகோலாக இது செயல்பட்டதாக மாவோ ஒருமுறை பாராட்டினார்.
கடந்த 1949இல் போர் முடிவடைந்து, கட்சி சீனாவை ஆட்சி செய்யத் தொடங்கிய பின்னர், ஐக்கிய முன்னணியின் நடவடிக்கைகளுக்கான முன்னுரிமை குறைந்தது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் ஷி ஜின்பிங் ஆட்சியின் கீழ், ஐக்கிய முன்னணி ஒரு வகையான மறுமலர்ச்சியைக் கண்டுள்ளது.
அதிபர் ஜின்பிங்கின் ஐக்கிய முன்னணி என்பது ஐக்கிய முன்னணியின் முந்தைய அவதாரங்களுடன் பரவலாக ஒத்துப் போகிறது. அதாவது, “சீனாவின் அனைத்து சமூக சக்திகளுடனும் ஒரு சாத்தியமான, பரந்த கூட்டணியை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் ஒத்துப் போகிறது” என்கிறார் ஜெர்மன் மார்ஷல் நிதியத்தின் மூத்த உறுப்பினர் மரெய்க் ஓல்பெர்க்.
யு.எஃப்.டபுள்யு.டி துறைக்கு ஒரு இணையதளம் உள்ளது, அதன் பல செயல்பாடுகளை அதில் பதிவு செய்கிறது. ஆனால் அதன் நடவடிக்கைகளின் ஆழம் மற்றும் அதன் வரம்பு குறித்த தகவல்கள் குறைவாகவே உள்ளன.
ஓல்பெர்க்கின் கூற்றுப்படி, “ஐக்கிய முன்னணியின் வேலைகளில் கணிசமானவை உள்நாட்டில்தான் என்றாலும், அதற்கு வரையறுக்கப்பட்ட ஒரு முக்கிய இலக்கு என்பது வெளிநாட்டு சீனர்கள் தொடர்பானதுதான்.”
இன்றைய சூழலில், தைவான் விவகாரம் முதல் (சீனா அதைத் தனது பிரதேசம் என்று உரிமை கோருவது) திபெத் மற்றும் ஷின்ஜியாங்கில் இன சிறுபான்மையினரை ஒடுக்குவது வரையிலான முக்கியப் பிரச்னைகள் பற்றிய பொது விவாதங்களில் தாக்கம் செலுத்த யு.எஃப்.டபுள்யு.டி முயல்கிறது.
வெளிநாட்டு ஊடகங்களில் சீனாவை பற்றிய பிம்பங்களை வடிவமைக்கவும், வெளிநாட்டில் உள்ள சீன அரசாங்க விமர்சகர்களைக் குறிவைக்கவும், செல்வாக்கு மிக்க வெளிநாட்டு சீன பிரமுகர்களை இணைக்கவும் இந்தப் பிரிவு முயல்கிறது.
“ஐக்கிய முன்னணியின் பணியில் உளவு வேலையும் அடங்கும். ஆனால் அது உளவு பார்ப்பது என்பதைவிட மிகப்பெரிய ஒரு விஷயம்” என்று தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் (அரசியல்) ஆட்ரி வோங் பிபிசியிடம் கூறுகிறார்.
“ஐக்கிய முன்னணியின் நடவடிக்கைகள் என்பது வெளிநாட்டு அரசாங்கத்திடம் இருந்து ரகசிய தகவலைப் பெறும் செயலுக்கு அப்பால், வெளிநாட்டு சீனர்களின் மிகப்பெரிய அணி திரட்டலை மையமாகக் கொண்டுள்ளன,” என்று கூறும் அவர், “அத்தகைய நடவடிக்கைகளில் சீனா தனித்துவமானது” என்றும் கூறினார்.
சீனாவின் சமீபத்திய எழுச்சி
சீனா எப்போதுமே அத்தகைய சர்வதேச செல்வாக்கு மீதான ஒரு லட்சியத்தைக் கொண்டுள்ளது, ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் அதன் எழுச்சி, அதை முயற்சி செய்து பார்ப்பதற்கான திறனை சீனாவுக்கு கொடுத்துள்ளது.
ஷி ஜின்பிங் 2012இல் அதிபர் பதவிக்கு வந்ததில் இருந்து, உலகுக்கான சீனாவின் செய்தியை வடிவமைப்பதில் முனைப்புடன் செயல்பட்டார். ராஜ்ஜீய விவகாரங்களில் ‘ஓநாய் போர்வீரன்’ எனும் கடுமையான மோதல் அணுகுமுறையை ஊக்குவித்தார். “சீனாவின் பிம்பத்தை நன்றாக கட்டமைக்க வேண்டும்” என்று வெளிநாட்டில் வசிக்கும் சீன மக்களை வலியுறுத்தினார்.
யூ.எஃப்.டபுள்யு.டி பல்வேறு வெளிநாட்டு சீன சமூக அமைப்புகள் மூலம் செயல்படுகிறது, அவை கம்யூனிஸ்ட் கட்சியை அதன் எல்லைகளுக்கு அப்பால்கூட தீவிரமாகப் பாதுகாத்தன. அவர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான கலைப் படைப்புகளைத் தணிக்கை செய்துள்ளனர், திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திபெத்தியர்கள், உய்குர்கள் போன்ற வெளிநாடுகளில் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்களுடன் யூ.எஃப்.டபுள்யூ.டி தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
ஆனால் யூ.எஃப்.டபுள்யூ.டி பிரிவின் பெரும்பாலான பணிகள், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மற்ற முகமைகளுடன் பொருந்திப் போகின்றன. அந்த முகமைகள் ‘பொறுப்புத் துறப்பு அல்லது நம்பத்தகுந்த மறுப்பு’ (plausible deniability) எனும் அடிப்படையில் இயங்குபவை என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த இருட்டடிப்புதான், யூ.எஃப்.டபுள்.யு.டி பற்றி இவ்வளவு சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. யாங் தனது தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்தபோது, நீதிபதிகள், “தேசிய பாதுகாப்புக்கான ஓர் ஆபத்தை யாங் பிரதிநிதித்துவப்படுத்தினார்” என்ற அப்போதைய வெளியுறவுத்துறையின் அறிக்கையை ஏற்றுக் கொண்டனர்.
யூ.எஃப்.டபுள்யு.டி உடனான தனது உறவை அவர் குறைத்து மதிப்பிட்டதை மேற்கோள் காட்டி, அது அந்த முடிவுக்கு அவர்களை இட்டுச் சென்றது என்று கூறப்பட்டது.
எவ்வாறாயினும், தான் சட்டத்திற்குப் புறம்பாக எதையும் செய்யவில்லை என்றும், உளவுக் குற்றச்சாட்டுகள் ‘முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது’ என்றும் யாங் கூறுகிறார்.
அதிகரிக்கும் சீனர்களுக்கு எதிரான வழக்குகள்
யாங் விவகாரம் போன்ற வழக்குகள் அதிகரித்து வருகின்றன. 2022ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் சீன வழக்கறிஞர் கிறிஸ்டின் லீ, பிரிட்டனில் செல்வாக்கு மிக்கவர்களுடனான யூ.எஃப்.டபுள்யு.டி பிரிவின் உறவுகளை வளர்ப்பதற்காகச் செயல்பட்டதாக பிரிட்டனின் எம்ஐ5 (MI5) அமைப்பால் குற்றம் சாட்டப்பட்டார்.
அதற்கு அடுத்த ஆண்டு, பாஸ்டனில் சீன உணவகம் நடத்தி வந்த அமெரிக்க குடிமகன் லியாங் லிடாங், யூ.எஃப்.டபுள்யு.டி-இல் உள்ள தனது தொடர்புகளுக்கு அந்தப் பகுதியில் உள்ள சீன எதிர்ப்பாளர்கள் பற்றிய தகவல்களை வழங்கியதற்காக குற்றம் சாட்டப்பட்டார்.
செப்டம்பரில், நியூயார்க் கவர்னர் அலுவலகத்தின் முன்னாள் உதவியாளரான லிண்டா சன், சீன அரசாங்க நலன்களுக்கு சேவை செய்யத் தனது பதவியைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். அதற்குப் பதிலாக பயணச் சலுகைகள் உள்படப் பல பலன்களை அவர் பெற்றதாகவும் கூறப்பட்டது.
சீன அரசு ஊடக அறிக்கைகளின்படி, அவர் 2017இல் யூ.எஃப்.டபுள்யு.டி உயர் அதிகாரி ஒருவரை அவர் சந்தித்தார். அந்த அதிகாரி,, “சீன-அமெரிக்க நட்பின் தூதராக லிண்டா இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
முக்கியமான மற்றும் வெற்றிகரமான சீன மக்கள் கட்சியுடன் இணைந்திருப்பது அசாதாரணமானது அல்ல. குறிப்பாக வணிக உலகில் கட்சியின் ஒப்புதல் அவர்களுக்கு அடிக்கடி தேவைப்படுகிறது.
இந்த நிலையில், செல்வாக்கைப் பெறுவதற்கும் உளவு பார்ப்பதற்கும் இடையே உள்ள எல்லைக் கோடு எது?
‘சாத்தியமான உளவாளிகளாக மாற்றுகிறது’
“சீனாவின் செயல்பாடுகள் என்று வரும்போது செல்வாக்கு மற்றும் உளவு பார்ப்பதற்கு இடையே உள்ள எல்லை சற்று பலவீனமாக இருப்பதாக” ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் அரசியல் பேராசிரியர் ஹோ-ஃபங் ஹங் கூறுகிறார்.
சீன அரசுடன் தகவல்களைப் பகிர்வது உள்பட உளவுத்துறை ஆய்வுகளுடன் ஒத்துழைக்க சீன நாட்டவர்கள் மற்றும் நிறுவனங்களைக் கட்டாயப்படுத்தும் சட்டத்தை சீனா 2017இல் இயற்றிய பிறகு இந்தத் தெளிவின்மை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை ‘அனைவரையும் சாத்தியமான உளவாளிகளாக மாற்றுவதாகவும்’ டாக்டர் ஹங் கூறுகிறார்.
வெளிநாட்டு உளவாளிகள் எல்லா இடங்களிலும் இருப்பதாகவும், “அவர்கள் தந்திரமானவர்கள் மற்றும் ஊடுருவக் கூடியவர்கள்” என்றும் பொதுமக்களை எச்சரிக்கும் விதத்தில் பிரசார வீடியோக்களை சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளுக்குச் சிறப்புப் பயணங்களுக்கு அனுப்பப்பட்ட சில மாணவர்களுக்கு, வெளிநாட்டினருடனான தொடர்பைக் குறைக்குமாறு அவர்களது பல்கலைக்கழகங்களால் கூறப்பட்டதுடன், அவர்கள் திரும்பியவுடன் அவர்களின் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையும் கேட்கப்பட்டது.
உலகுக்கு சீனாவை பற்றி மேலும் விளம்பரப்படுத்த ஷி ஜின்பிங் ஆர்வமாக உள்ளார். அதனால் வெளிநாட்டில் சீனாவின் பலத்தை முன்னிறுத்த, கட்சியின் நம்பிக்கைக்குரிய ஒரு பிரிவை அவர் பணித்துள்ளார்.
மேற்கத்திய சக்திகளுக்கு இதுவொரு சவாலாக மாறி வருகிறது. பாதுகாப்பு குறித்த கவலைகள் ஒருபுறம், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவுடன் வணிகம் மறுபுறம். இதை மேற்கத்திய நாடுகள் எவ்வாறு சமநிலைப்படுத்துகின்றன?
சீன சக்தியுடனான மோதல்
சீனாவின் கடல் கடந்த செல்வாக்கு மீதான உண்மையான அச்சங்கள், மேற்கத்திய நாடுகளில் மிகவும் மோசமான உணர்வுகளை ஏற்படுத்துகின்றன. இது பெரும்பாலும் அரசுகளை இக்கட்டான நிலைக்குத் தள்ளுகிறது.
ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகள், உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகக் கருதப்படும் தனிநபர்களைக் குற்றவாளியாக்கும் புதிய வெளிநாட்டுச் சட்டங்கள் மூலம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயல்கின்றனர். 2020ஆம் ஆண்டில், யூ.எஃப்.டபுள்யு.டி நடவடிக்கைகளில் தொடர்ந்து செயல்படுவதாகக் கருதப்படும் நபர்களுக்கு, அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதித்தது.
இதனால் கோபமடைந்த சீனா, இத்தகைய சட்டங்கள் மற்றும் அவர்கள் போட்ட வழக்குகள், இருதரப்பு உறவுகளுக்கு இடையூறாக இருப்பதாக எச்சரித்துள்ளது.
கடந்த டிசம்பர் 17ஆம் தேதியன்று, யாங் பற்றிய கேள்விக்கு செய்தியாளர்களிடம் பதிலளித்த வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், “சீனா மீதான உளவுக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அபத்தமானவை. சீனா-பிரிட்டன் உறவுகளின் வளர்ச்சி இரு நாடுகளின் பொதுவான நலன்களுக்கு உதவுகிறது” என்றார்.
சில நிபுணர்கள் சீனாவின் ஐக்கிய முன்னணியின் நீண்ட, வலிமையான கரம் உண்மையில் கவலைக்குரியது என்கிறார்கள்.
“மேற்கத்திய அரசுகள் இப்போது சீனாவின் ஐக்கிய முன்னணியின் பணிகளைப் பற்றிக் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இதை தேசிய பாதுகாப்புக்கு மட்டுமல்ல, பல சீன குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கும் கடுமையான அச்சுறுத்தலாகவும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்” என்று டாக்டர் ஹங் கூறுகிறார்.
‘சீன மக்களை குறிவைப்பதற்கான ஆயுதம்’
கடந்த டிசம்பரில், வியட்நாமில் பிறந்த சீன தலைவரான டி சான் டுவோங் மீது ஆஸ்திரேலியாவில், ‘வெளிநாட்டு சக்தியின் தலையீட்டைத் திட்டமிட்டதாக’ குற்றம் சாட்டப்பட்டது.
ஆஸ்திரேலிய அமைச்சருடன் இணக்கமாக இருக்க முயல்வதற்காக இவ்வாறு கூறப்பட்டது. அவர் 1990களில் தேர்தலில் போட்டியிட்டதாலும், சீன அதிகாரிகளுடன் நல்ல உறவைக் கொண்டிருந்ததாலும், யூ.எஃப்.டபுள்யு.டி-க்கு அவர் ஒரு ‘சிறந்த இலக்கு’ என்று வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
ஒரு தொண்டு நிகழ்வில் ஆஸ்திரேலிய அமைச்சரைச் சேர்ப்பது ‘சீனர்களான எங்களுக்கு’ நன்மை பயக்கும் என்று டுவோங் கூறியதை மையமாகக் கொண்டுதான் வழக்கின் விசாரணை இருந்தது. அவர் ‘சீனர்கள்’ எனக் குறிப்பிட்டது ஆஸ்திரேலியாவில் உள்ள சீன சமூகத்தையா அல்லது சீனாவின் பிரதான நிலப்பரப்பையா என்பதுதான் கேள்வியாக இருந்தது.
இறுதியில், டுவோங்குக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இத்தகைய பரந்த உளவு எதிர்ப்புச் சட்டங்கள் மற்றும் வழக்குகள் சீன இன மக்களைக் குறிவைப்பதற்கான ஆயுதங்களாக எளிதில் மாறும் என்ற தீவிர கவலையை இந்த விவகாரம் எழுப்பியது.
“சீன இனத்தைச் சேர்ந்த அனைவருமே சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள் அல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியம். மேலும் இந்த புலம்பெயர் அமைப்புகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் சீனாவின் மீதான தீவிர விசுவாசத்தால் உந்தப்பட்டவர்கள் அல்ல” என்று டாக்டர் வோங் கூறுகிறார்.
“இனத்தை அடிப்படையாகக் கொண்ட கடுமையான கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள், ‘வெளிநாடுகளில் சீன இனத்தவர்கள் விரும்பத்தகாதவர்கள்’ என்ற சீன அரசாங்கத்தின் செய்தியை வலுப்படுத்த மட்டுமே உதவும், இறுதியில் புலம்பெயர்ந்த சமூகங்களை சீனாவின் கரங்களுக்கு இன்னும் நெருக்கமாகத் தள்ளும்” என்கிறார் வோங்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.