சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் வைரஸ் தொடர்பான நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு அறிவித்துள்ளது.
வைரஸ் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதை உறுதிப்படுத்திய பிரிவு மேலும் முழுமையான ஆய்வு மற்றும் நிலைமையை பகுப்பாய்வு செய்த பின்னர் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்று இன்று வெள்ளிக்கிழமை (03) வெளியிடப்பட்ட அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
கோவிட்-19 தொற்றுநோய்க்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், மனித மெட்டாப்நியூமோவைரஸின் (HMPV) வெடிப்பை சீனா கையாள்வதாகக் கூறப்படுகிறது.
இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதாக அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக பதிவுகள் தெரிவிக்கின்றன. மருத்துவமனைகள் மற்றும் தகனங்கள் நிரம்பி வழிகின்றன என்று சிலர் கூறுகின்றனர்.
இன்ஃப்ளூயன்ஸா ஏ, எச்எம்பிவி, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கோவிட்-19 உள்ளிட்ட பல வைரஸ்கள் பரவி வருவதாக சில பயனர்கள் கூறியுள்ள நிலையில், ஆன்லைனில் பகிரப்பட்ட வீடியோக்கள் நெரிசலான மருத்துவமனைகளைக் காட்டுகின்றன.
HMPV காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது மற்றும் கோவிட்-19 போன்ற அறிகுறிகளையும் வெளிப்படுத்தலாம். வைரஸ் பரவி வருவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.