கோவை: எரிவாயு டேங்கர் கவிழ்ந்தபோது என்ன நடந்தது? விபத்து தடுக்கப்பட்டது எப்படி? முழு விவரம்

எரிவாயு டேங்கர்

  • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
  • பதவி, பிபிசி தமிழ்

கோவை நகரின் மையப் பகுதியில் இருந்த அவினாசி மேம்பாலத்தில் எரிவாயு டேங்கர் இன்று அதிகாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஏற்பட்ட எரிவாயு கசிவு உடனடியாகத் தடுக்கப்பட்டது. மேலும், பத்தரை மணிநேர மீட்புப் பணிக்குப் பிறகு எரிவாயு டேங்கர் பாதுகாப்பாக அகற்றப்பட்டது.

கொச்சியில் இருந்து வந்துகொண்டிருந்த டேங்கர் கவிழ்ந்தது எப்படி? எரிவாயு கசிவை தொடர்ந்து என்ன நடந்தது?

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை கணபதி பகுதியிலுள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்குச் சொந்தமான பாட்டிலிங் யூனிட்டுக்கு எரிவாயு டேங்கர் லாரி வந்துள்ளது. இன்று காலையில் பாலக்காட்டில் இருந்து புறப்பட்ட அந்த லாரியை ராதாகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வழக்கமாக, இத்தகைய கனரக வாகனங்கள், ‘எல் அண்ட் டி’ புறவழிச்சாலை வழியாக வந்து அவினாசி சாலை வழியாக, சத்தி சாலையில் உள்ள கணபதி பகுதிக்குச் செல்லும்.

ஆனால் இந்த லாரி, நகருக்குள் வந்து உக்கடம், மரக்கடை வழியாக, அவினாசி சாலையிலுள்ள பழைய மேம்பாலத்தைக் கடந்து சென்றுள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில், பாலத்திலுள்ள ரவுண்டானாவை கடந்து மேடான பகுதிக்குத் திரும்பும்போது, லாரியின் பின்புறம் இருந்த 18 டன் எடையுள்ள எரிவாயு டேங்கர் கவிழ்ந்துள்ளது.

உடனடியாக தீயணைப்புத் துறைக்கும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கும் ஓட்டுநர் தகவல் தெரிவித்துள்ளார்.

தீயணைப்புத்துறையினர் வந்து தண்ணீர் பாய்ச்சி, திரவமாக வெளிவந்த எரிவாயுவால் விபத்து ஏற்படாமல் இருக்க அதைக் கரைத்துள்ளனர். சிறிது நேரத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பொறியாளர்கள் வந்து, கசிவைத் தடுத்தனர். அதன்பின் மீட்புப் பணி துவங்கி எட்டு மணிநேரத்தில், டேங்கர் துாக்கி நிறுத்தப்பட்டது.

விபத்து நடந்து பத்தரை மணிநேரம் கழித்து வேறு வாகனத்தில் இணைக்கப்பட்டு, கணபதி பாட்டிலிங் யூனிட்டுக்கு அந்த டேங்கர் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டது.

இந்தச் சம்பவம் நடந்த இடத்தில் பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டபோது கிடைத்த தகவல்கள் என்ன? இந்த விபத்து எப்படி நடந்தது?

விபத்து எப்படி நடந்தது?

எரிவாயு டேங்கர்

படக்குறிப்பு, லாரியை இயக்கிய ஓட்டுநர் ராதாகிருஷ்ணன்

லாரியை இயக்கியவர் தென்காசியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற ஓட்டுநர். அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, “இன்று காலையில் நான் மட்டுமே தனியாக லாரியை இயக்கி வந்தேன். வேகமாக வரவில்லை, அதிகபட்சம் 10–15 கி.மீ. வேகத்தில்தான் வந்து கொண்டிருந்தேன்.

காலை 3 மணியளவில், பாலத்தில் திரும்பும்போது, டர்ன் பின் உடைந்து விபத்து ஏற்பட்டது அப்போது லாரி கேபினும், டேங்கரும் தனியாகிவிட்டது. உடனே தீயணைப்புத் துறைக்கும், போலீசுக்கும் தகவல் கொடுத்தேன். அவர்கள் அடுத்த சில நிமிடங்களில் வந்து விட்டார்கள்” என்றார்.

சம்பவ இடத்துக்கு எப்போது தீயணைப்புத்துறை வந்தது?

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை ரவுண்டானாவில் திரும்பும்போது டேங்கர் கவிழ்ந்ததில் எரிவாயு திரவமாகக் கசிந்து கொண்டிருந்ததை கவனித்ததாக கூறுகிறார் கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி. “அதை நாங்கள் உடனே தண்ணீரைப் பாய்ச்சி கரைத்துவிட்டோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

கோவை: எரிவாயு டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

லாரியின் 'டர்ன் பின்'

படக்குறிப்பு, லாரியின் ‘டர்ன் பின்’ கழன்றதால் விபத்து ஏற்பட்டதாகக் கூறுகிறார் ஓட்டுநர் ராதாகிருஷ்ணன்.

மேற்கொண்டு பேசிய அவர், அந்த எரிவாயுவை கரைக்கும் முயற்சியின்போது 100 மீட்டர் தொலைவில் யாராவது சிகரெட் பற்ற வைத்திருந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என்று கூறினார்.

அதன்பின் நடந்ததை விவரித்த அவர், ”விபத்து நடந்த ஒரு மணிநேரத்திற்குள் பாரத் பெட்ரோலியத்தின் பொறியாளர்களும் வந்து எரிவாயு கசிவைத் தடுத்து விட்டனர்” என்றார்.

சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திலிருந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் தலைமையில் 2 உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் 20 தீயணைப்பு வீரர்கள் சென்று, எரிவாயுவை தண்ணீரில் கரைத்து, ஆபத்து வாய்ப்பைக் குறைத்துள்ளனர்.

எரிவாயு கசிவு எப்படி தடுக்கப்பட்டது?

எரிவாயு டேங்கரின் கொள்ளளவு எவ்வளவு? அதிலிருந்து எவ்வளவு எரிவாயு கசிந்திருக்கும்? அந்த கசிவு எப்படி தடுக்கப்பட்டது?

இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய பாரத் பெட்ரோலியத்தின் பொறியாளர் சங்கர், ”லாரியையும், டேங்கர் லாரியையும் இணைக்கும் ‘டர்ன் பின்’ துண்டானதால்தான் டேங்கர் தனியாகக் கழன்று கவிழ்ந்திருந்தது. இங்கு வந்து பார்த்தபோது, டேங்கரின் பின்புறம் இருந்த பிரஷர் கேஜ் உடைந்து அதிலிருந்து எரிவாயு திரவமாகக் கசிந்து கொண்டிருந்தது. ஒரு கிராம் திரவ எரிவாயு 250 மடங்கு ஆவியாகும் திறனுடையது. அதனால் உடனடியாக கசிவைத் தடுக்க வேண்டியிருந்தது” என்றார்.

மேலும், ”உடைந்த ‘பிரஷர் கேஜ்’ ஓட்டை முற்றிலுமாக அடைக்கப்பட்டது. மொத்தம் 18 டன் கொள்ளளவு கொண்ட டேங்கரில் இருந்து கசிந்த திரவத்தின் எடை மொத்தம் 100 கிலோ மட்டுமே இருக்கும்” என்றும் சங்கர் தெரிவித்தார்.

எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் யாவை?

எரிவாயு டேங்கர்

படக்குறிப்பு, எரிவாயு டேங்கர்

எரிவாயு டேங்கர் கவிழ்ந்ததாக மாநகர காவல்துறைக்குத் தகவல் வந்ததும், உடனடியாக பாலத்திற்கு வரும் அனைத்துப் பாதைகளும் அடைக்கப்பட்டு, போக்குவரத்து தடுத்து நிறுத்தப்பட்டது.

அதுபற்றி செய்தியாளர்களிடம் விளக்கிய கோவை மாநகர காவல்துறை ஆணையர் சரவண சுந்தர், ”தகவல் வந்தவுடன், அதிகாலையிலேயே போலீசார் சுற்றிலும் உள்ள பாதைகளை ஒரு கி.மீ. துாரத்திலேயே அடைத்துவிட்டோம். தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது” என்றார்.

விபத்து நடந்த பாலத்திற்குக் கீழே தேசிய நெடுஞ்சாலை உதவிக் கோட்டப் பொறியாளர் அலுவலகம் உள்ளது. அதையொட்டி, தேசிய பஞ்சாலைக் கழகத்துக்குச் சொந்தமான இயங்காத மில் வளாகம் உள்ளது.

பல ஏக்கர் பரப்பளவிலுள்ள அந்த வளாகம் முழுவதும் மரங்கள் அடர்ந்த காடுகளாக உள்ளது. மற்றொரு பகுதியில் கோவை ரயில் சந்திப்பில் ரயில் தடங்கள் நுழையும் பகுதி உள்ளது. மற்ற இரு புறங்களிலும் பெரும்பாலும் வணிகப் பகுதியாகவும் இடையிடையே சில குடியிருப்புகளும் உள்ளன.

டேங்கர் கவிழ்ந்ததும் அப்பகுதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, ”அதிகாலை நேரத்தில் விபத்து நடந்ததால், மைக் வைத்து அறிவிப்பது, பெரும் பீதியை ஏற்படுத்திவிடும் என்பதால், மாநகராட்சி ஊழியர்கள் 200 பேரை வைத்து, இந்தப் பகுதிகளில் உள்ள கவுன்சிலர்கள் சிலருடைய உதவியுடன் வீடு வீடாகச் சென்று, இதுபற்றி ‘அலர்ட்’ செய்தோம். அதன்பின் ஒரு கி.மீ. சுற்றளவிலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவும் உத்தரவிட்டேன்” என்றார்.

எரிவாயு டேங்கர் எப்படி துாக்கி நிறுத்தப்பட்டது?

எரிவாயு டேங்கர்

பட மூலாதாரம், Xavier Selvakumar

படக்குறிப்பு, எண்ணெய் நிறுவனங்களின் தொழில்நுட்ப ஒப்பந்ததாரர் ராபர்ட்

பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் கிரேன் கொண்டு வரப்பட்டு, ஆயில் நிறுவனங்களின் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் உதவியுடன் 8 மணிநேர முயற்சிக்குப் பிறகு, பிற்பகல் 11 மணியளவில் எரிவாயு டேங்கர் இணைப்பு வாகனத்தில் துாக்கி நிறுத்தப்பட்டது.

இதுபற்றி செய்தியாளர்களிடம் விளக்கிய எண்ணெய் நிறுவனங்களின் தொழில்நுட்ப ஒப்பந்ததாரர் ராபர்ட், “மொத்தம் 80–100 கிலோ கிராம் எரிவாயு கசிந்திருக்கும். துாக்கி நிறுத்தப்பட்ட டேங்கர், மற்றொரு வாகனத்தில் இணைக்கப்பட்டு கணபதி பாட்டிலிங் யூனிட்டுக்கு கொண்டு செல்லப்படும். இப்போது டேங்கரில் இருந்து எந்தக் கசிவும் இல்லாததால் அதை எடுத்துச் செல்வதில் எந்த பாதிப்பும் ஏற்படாது” என்றார்.

லாரி பாலத்தில் இருந்து நஞ்சப்பா ரோட்டில் குறுகலான இடத்தில் திரும்புவதற்கு வசதியாக அங்கிருந்த ‘டிவைடர்’கள் அகற்றப்பட்டன. முன்பும் பின்புமாக 4 தீயணைப்பு வாகனங்கள், 2 ஆம்புலன்ஸ்கள் மற்றும் திருச்சி பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் இருந்து வந்த அவசர மீட்பு வாகனம் பின்தொடர டேங்கர் லாரி சென்றது.

விபத்து குறித்த தகவலறிந்து திருச்சி பாரத் பெட்ரோலியம் யூனிட்டில் இருந்து அவசர மீட்பு வாகனம் மதியம் கோவை வந்தடைந்தது. அதன் ஊழியர்கள், டேங்கரில் எரிவாயுக் கசிவு மேலும் இருக்கிறதா என்பதைப் பரிசோதித்தனர்.

அதுபற்றி விளக்கிய அந்த ஊழியர், ”ஒரு கி.மீ. துாரத்தில் எரிவாயு கசிவு இருந்தாலும் மொபைல் கேஸ் மானிட்டரிங் சிஸ்டம் என்ற கருவியில் பரிசோதிக்கும்போது சைரன் ஒலித்துவிடும். ஆனால், இப்போதைய ஆய்வில் எரிவாயுக் கசிவு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

பாலம் குறுகலாக இருந்ததால்தான் விபத்து ஏற்பட்டதா?

எரிவாயு டேங்கர்

கோவையில் பழமையான பாலங்களில் ஒன்றான அவினாசி மேம்பாலத்தில், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் பெரும்பாலும் அனுமதிக்கப்படுவது இல்லை. ஆனால் அதிகாலை நேரம் என்பதால் இந்த டேங்கர் லாரி எவ்வித அனுமதியும் இன்றி இந்த வழியில் வந்துள்ளது.

பாலம் குறுகலாக இருப்பதால் பெரிய டேங்கரை திருப்ப இயலாமல் ‘டர்ன் பின்’ உடைந்திருக்கலாம் என்று பொறியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதுகுறித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, ”இந்த பாலத்தை இடிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இதன் கீழே துாண்கள் அமைக்கப்படவில்லை. முழுவதுமாக மண் நிரப்பப்பட்டு சாலை போலவே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் இப்போதுள்ள நிலையிலேயே இதை விரிவுபடுத்தினால் போதுமானது” என்று தெரிவித்தார்.

மேலும், அவினாசி மேம்பாலத்தை விரிவுபடுத்தும் திட்டதிற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மீட்புப்பணி முடிந்த பிறகு பேசிய ஆட்சியர், ”கோவைக்கு நிகழவிருந்த மிகப்பெரிய விபத்து, நல்வாய்ப்பாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த மீட்புப் பணியில் அனைத்து அரசுத்துறையினர் நன்கு ஒத்துழைத்தனர். அதனால்தான் இவ்வளவு விரைவாகவும், எந்தவித பாதிப்பும் இன்றியும் மீட்புப் பணியை விரைவாக முடிக்க முடிந்தது” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு