ஓற்றையாட்சியின் கீழானதும் 13வது திருத்தத்தை விட மோசமானதுமென கூறப்படும் நல்லாட்சி கால அரசியல் தீர்வை தருவிக்க தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட எம்.ஏ.சுமந்திரன் முனைப்பு காண்பித்துவருகின்றார்.
இந்நிலையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றினால் மாத்திரமே புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான பூரண ஆதரவை வழங்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளார்.
அதிகாரப் பகிர்வு மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல் என்பன புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதாக உறுதியளித்துள்ள நிலையில் அதற்கான பணிகளை விரைவில் ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசியலமைப்பு தயாரிப்பதை தற்போதைய அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான கலந்துரையாடல் கூட்டங்கள் அதிகளவானவற்றில் அப்போதைய மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்ட நிலையில் பொதுத் தேர்தலின் பின்னர் மூன்று சந்தர்ப்பங்களில் தான் ஜனாதிபதியை சந்தித்ததாகவும் அதன்போது புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும்,புதிய அரசியலமைப்பு தொடர்பான தனது கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அதற்கான பணிகளை ஆரம்பித்ததன் பின்னரே அறிவிக்க முடியும் என அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சுக்கள் ஆரம்பிக்கையில் தேசியப்பட்டியல் மூலம் மீள நாடாளுமன்றினுள் எம்.ஏ.சுமந்திரன் நுழையலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.