உயிர்களை பாதுகாக்கும் வகையில் விசேட போக்குவரத்து நடவடிக்கை !

by smngrx01

உயிர்களை பாதுகாக்கும் வகையில் விசேட போக்குவரத்து நடவடிக்கை ! உயிர்களை பாதுகாத்து வீதிப்போக்குவரத்து கட்டுப்பாடுகளை உறுதிப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (02)  முதல் மறு அறிவித்தல் வரை மூன்று மணித்தியாலங்கள் என்ற அடிப்படையில் நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

‘கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய வேலைத்திட்டத்துக்கு இணையாக உயிர்களை பாதுகாக்கும் நோக்கில் வீதிப்போக்குவரத்து கட்டுப்பாடுகளை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸார் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன என்பது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய பொலிஸாருக்கு விடுத்துள்ள விசேட சுற்றறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வீதிப்போக்குவரத்துக்களின் போது உயிர்களை பாதுகாக்கும் வகையில் போக்குவரத்து கட்டுப்பாட்டையும் வீதி கட்டுப்பாட்டையும் உறுதிப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இந்த விசேட போக்குவரத்து நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் ஆபத்துகளை ஏற்படுத்தும் உதிரிப்பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை கண்டறிய நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான வாகனங்கள் வீதியில் செலுத்தப்பட்டாலும் அதனை பொலிஸார் கண்டும் காணாத மாதிரி செயற்படுகின்றமை மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வாறான வாகனங்களை கண்டறிந்து அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க மூன்று மணித்தியாலங்கள் என்ற அடிப்படையில் நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதேபோன்று பொதுபோக்குரவத்து சேவைகளை முன்னெடுக்கும் வாகனங்களை சோதனை செய்யும் போது பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் செயற்படுமாறும் பொலிஸ் மா அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் பொலிஸாரினால் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

கொழும்பு, களுத்துறை, காலி உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. நீண்ட தூர சேவையில் ஈடுபடும் பஸ்கள் நேற்று முன்தினம் இரவு விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது பாதுகாப்பற்ற வாகன உதிரிப்பாகங்கள் அகற்றப்பட்டதுடன் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது பொருத்தமற்ற உதிரிபாகங்கள் பொருத்தப்பட்டிருந்த மூன்று முச்சக்கர வண்டிகளும் வேன் ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

தொடர்புடைய செய்திகள்