இலங்கை: பில்லியன் டாலர் கடன்; இந்தியா, சீனாவின் செல்வாக்கு – புதிய ஆண்டில் ஜனாதிபதிக்கு காத்திருக்கும் சவால்கள்
- எழுதியவர், அன்பரசன் எத்திராஜன்
- பதவி, தெற்காசிய பிராந்திய ஆசிரியர்
இலங்கையின் புதிய இடதுசாரி அதிபரும் அவரது கட்சியும் பெற்ற பிரமிக்க வைக்கும் தேர்தல் வெற்றி அந்நாட்டு அரசியல் சூழலை மாற்றியுள்ளன.
ஆனால், இலங்கையில் நிதி நெருக்கடி நிலவும் நிலையில் அந்நாட்டின் புதிய தலைவர்கள், தங்கள் பிரசார வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குக் கடினமான சூழல் நிலவுகிறது.
செப்டம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவின் குறிப்பிடத்தக்க வெற்றியைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் அவரது தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைத்தது.
ஒரு புதிய ஆண்டு தொடங்கும் வேளையில், மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் பல ஆண்டுகளாக தவறான ஆட்சியில் இருந்து மீள முயற்சிக்கும் நாட்டுக்கு இது ஒரு திருப்புமுனையாக இருக்க வேண்டும் என்று அவரும் அவரது ஆதரவாளர்களும் விரும்புகிறார்கள்.
எவ்வாறாயினும், புதிய அரசாங்கத்திடம் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்ட வாக்காளர்களுக்கு, தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சூழல், சற்று கடினமாகவே உள்ளது.
கடந்த 2022இல் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு பின்னர், இலங்கையின் பொருளாதார எழுச்சி பலவீனமாகவும் முழுமையற்றதாகவும் உள்ளது.
நவம்பரில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி (NPP) 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில்159 இடங்களை வென்றது. மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அடைந்தது.
இந்த வெற்றி திஸாநாயக்கவுக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வலுவான அதிகாரத்தை வழங்குகிறது.
சர்வதேச நாணய நிதியக் குழுவுடனான அதிபரின் சந்திப்பு
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சர்வதேச நாணய நிதியக் (IMF) குழுவுடனான சந்திப்புக்கு புதிய ஜனாதிபதி தயாராக வேண்டியிருந்தது. முந்தைய அரசாங்கம் இலங்கையின் பொருளாதாரத்தை உறுதியாக்கும் விதமாக 2.9 பில்லியன் டாலர் (2.31 பில்லியன் யூரோ) நிதித் தொகைப் பெறுவதற்காக, ஐ.எம்.எஃப் உடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
கடுமையான சிக்கன நடவடிக்கைகள், வரி உயர்வு மற்றும் எரிசக்தி மானியங்களை குறைவாக வழங்குவதற்கு, ஐஎம்எஃப் ஒப்பந்தம் வழி வகுத்ததால் சர்ச்சைக்குரியதாக மாறியது. மேலும், இது பொதுமக்களின் வாழ்வில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
தேர்தல் பிரசாரத்தின் போது திஸாநாயக்கவும் அவரது கூட்டணியும் ஐஎம்எஃப் உடன்படிக்கையின் சில பகுதிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதாக உறுதியளித்தனர்.
ஆனால், நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையில், தனது நிலைப்பாட்டை முற்றிலும் மாற்றிக்கொண்டார்.
“பொருளாதாரம் மிகவும் பலவீனமாக உள்ளது, ஒரு சிறிய மாற்றம் கூட பேரழிவை ஏற்படுத்தும்…தவறு செய்வதற்கு எந்த வாய்ப்பையும் வழங்க முடியாது,” என்று திஸாநாயக்க கூறினார்.
“(ஐஎம்எஃப் கடனின்) விதிமுறைகள் நல்லதா அல்லது கெட்டதா, ஒப்பந்தம் நமக்கு சாதகமாக உள்ளதா, இல்லையா என்பதைப் பற்றி விவாதிக்க இது நேரம் அல்ல. இந்தச் செயல்முறை சுமார் இரண்டு ஆண்டுகள் எடுத்தது, இதனை எங்களால் மீண்டும் தொடங்க முடியாது” என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாக்காளர்களின் அமோகமான தீர்ப்பு, பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்ட மக்கள் எழுச்சியின் விளைவாக பார்க்கப்படுகிறது.
இந்த எழுச்சி, 2022 கோடையில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேற்ற வழிவகுத்தது.
மேலும், வெளிநாட்டு நாணயத்தின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டபோதும், உணவு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை அரசு போராடியது.
சுமார் 46 பில்லியன் டாலர் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், இலங்கை திவாலானதாக அறிவிக்கப்பட்டது. இலங்கையின் நிதி நெருக்கடியை சமாளிக்க இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் பில்லியன் கணக்கான டாலர்களை கடனாக வழங்கியுள்ளன.
மக்களின் கோபத்தை பிரதிபலித்தத் தேர்தல் முடிவுகள்
பொருளாதார சரிவைக் கையாளத் தவறிய முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மீதான மக்களின் கோபத்தையும் சமீபத்திய தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன.
“அதிகமான வரிவிதிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு ஏற்படுத்திய நெருக்கடி காரணமாக மக்களுக்கு சில பொருளாதார நிவாரணங்களை வழங்குவதே திஸாநாயக்கவின் முன்னுரிமைகளில் ஒன்றாகும். கடன் மேலாண்மை மற்றொரு பெரிய சவாலாகும்,” என்று மூத்த அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட பிபிசியிடம் கூறினார்.
குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், கொழும்பின் புறநகர் பகுதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தாயான நிலுகா தில்ருக்ஷி போன்றவர்கள் இன்னும் போராடி வருகின்றனர். தினசரி கூலித் தொழிலாளியான அவரது கணவரும், குடும்பத்தினரும் அன்றாடம் வாழ்வதற்கு சிரமப்படுகின்றனர்.
ஜனவரி 2022 இல், பெருமளவில் போராட்டம் வெடிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு, விலைவாசி உயர்வு பற்றி பிபிசி அவரிடம் பேசியது.
அப்போது, தனது குடும்பத்தினர் மூன்று வேளை சாப்பிடுவதற்கு பதிலாக இரண்டு வேளை மட்டுமே சாப்பிடுவதாகவும், மீன் மற்றும் இறைச்சியின் விலை அதிகமாக இருப்பதால், தங்கள் குழந்தைகளுக்குக் காய்கறிகள் மற்றும் அரிசி உணவுகளை மட்டுமே வழங்குவதாகவும் அவர் கூறினார்.
“நாங்கள் வாழ்க்கையைச் சமாளிக்க இன்னும் போராடுகிறோம், எதுவும் மாறவில்லை. முக்கிய உணவான அரிசியின் விலை மேலும் அதிகரித்துள்ளது. அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை” என்று தில்ருக்ஷி கூறுகிறார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்க புதிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவரைப் போன்ற மக்கள் விரும்புகின்றனர். இலங்கை இறக்குமதியை சார்ந்த நாடு. உணவு மற்றும் மருந்து போன்ற பொருட்களை இறக்குமதி செய்ய அதற்கு வெளிநாட்டு நாணயம் தேவைப்படுகிறது.
தற்போது, கொழும்பு தனது கடனைத் திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்தி அதன் நாணய இருப்புகளை பராமரிக்கிறது.
இலங்கையில் அதிகரித்து வரும் சீனாவின் தாக்கம்
அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கும்போது உண்மையான போராட்டம் தொடங்கும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றால், ஜனாதிபதி திஸாநாயக்க மற்றும் அவரது புதிய அரசாங்கம் பற்றிய மக்களின் பார்வை மாறலாம்.
“மக்கள் அவருக்கு ஒரு மிகப்பெரும் தீர்ப்பை வழங்கியுள்ளனர். சமூக நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க அவரை அனுமதிப்பதன் மூலம் சர்வதேச நாணய நிதியம் அதற்கு மதிப்பளிக்க வேண்டும்” என்கிறார் பேராசிரியர் உயங்கொட.
திஸாநாயக்க, இலங்கையில் இந்தியா மற்றும் சீனாவின் செல்வாக்கை சமநிலைப்படுத்தும் சவாலை எதிர்கொள்கிறார். இரண்டு நாடுகளும் சமீபத்திய ஆண்டுகளில் இலங்கையில் கணிசமான முதலீடுகளைச் செய்துள்ளன.
“இந்தியாவும் சீனாவும் இலங்கையை தங்கள் செல்வாக்கின் கீழ் கொண்டு வர முயற்சிக்கும். புதிய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை யாருடனும் இணையாமல் நடைமுறைக்குரியதாகவும் யதார்த்தமானதாகவும் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்,” என்கிறார் பேராசிரியர் உயங்கொட.
டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் தனது முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவை தேர்வு செய்ததன் மூலம் திஸாநாயக்க ஒரு ராஜதந்திர நகர்வை மேற்கொண்டார்.
இந்த பயணத்தின்போது, இலங்கை மின் உற்பத்தி நிலையங்களுக்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை வழங்குவதற்கும், நீண்ட கால ஆற்றல் சார்ந்த ஒத்துழைப்புக்காக இரு நாடுகளின் மின் கட்டமைப்புகளை இணைக்கும் பணிகளை மேற்கொள்வதாகவும் இந்தியா உறுதியளித்தது.
இலங்கையில் அதிகரித்து வரும் சீனாவின் தாக்கம், குறிப்பாக சீன “ஆராய்ச்சி” கப்பல்கள் இந்தியாவின் தெற்கு முனைக்கு அருகில் உள்ள தீவின் துறைமுகங்களுக்கு வருகை தருவது இந்தியாவுக்குக் கவலை அளித்துள்ளது.
“இந்தியாவின் நலனுக்கு பாதகமான வகையில் எங்களது நிலத்தை எந்த வகையிலும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று நான் இந்திய பிரதமரிடம் உறுதியளித்துள்ளேன்,” என்று நரேந்திர மோதியுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் திஸாநாயக்க கூறினார்.
இந்த உறுதிமொழியால் இந்தியா மகிழ்ச்சியடையும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் சீனாவுக்கு பயணம் செய்யும்போது சீனா என்ன எதிர்பார்க்கிறது என்பதை திஸாநாயக்க அறிந்துகொள்வார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு