அச்சிடுவதில் தாமதமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தீர்மானம் ! on Friday, January 03, 2025
அச்சிடுவதில் ஏற்பட்டிருந்த தாமதம் காரணமாக, தற்போது நிலுவையில் உள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களை ஒரு மாதத்திற்குள் அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார்.
அதற்கமைய, அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ள சுமார் 1,30,000 சாரதி அனுமதிப்பத்திரங்களை ஜனவரி மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர அலுவலகத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்குவும் கலந்துகொண்டார்.
நிறுவனத்தில் இணையவழி முறை மூலம் சேவைகளை பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அலுவலகத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த பிரதியமைச்சர்கள், தற்போதைய தொழில்நுட்ப முறைகளுக்குப் பதிலாக, அதிக திறன் வாய்ந்த நவீன முறைகளைப் பயன்படுத்தி, வினைத்திறனான பொதுச் சேவையை வழங்கும் ஒரு அரச நிறுவனமாக மாற்றத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனர்.