அங்குரிபாய்: கஞ்சா விற்பனையில் ஆதிக்கம் செலுத்திய பெண் – யார் இவர்?
- எழுதியவர், பல்லா சதீஷ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
பெண் ஒருவர் ஹைதராபாத் காவல்துறையிடம் சிக்கியுள்ளார். உள்ளூரில் ‘அங்குரிபாய்’ என பிரபலமாக அறியப்படும் அருணாபாய் என்பவர், ஹைதராபாத்தில் உள்ள தூல்பெட் என்ற இடத்தைத் தளமாகக்கொண்டு, ஒரு சிறிய அளவிலான போதைப்பொருள் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளார் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவர் மீது 13 கஞ்சா வழக்குகள் இருப்பதாக தெலங்கானா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது கைது குறித்த விவரங்களை காவல்துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளனர்.
“அங்குரிபாய் ஒரு காலத்தில் சாதாரண இல்லத்தரசியாக இருந்தார். வட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவரது குடும்பம், ஹைதராபாத்தில் உள்ள தூல்பெட்டில் சாராய வியாபாரம் நடத்தி வந்தது. இந்தத் தொழிலை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததால், இந்தக் குடும்பம் கஞ்சா கடத்தலில் ஈடுபடத் தொடங்கியது,” என்று தெலங்கானா காவல்துறை சிறப்புப்படை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
“அங்குரிபாயும் இந்தத் தொழில் செய்யத் தொடங்கினார்” என்று இந்த சிறப்புப்படை அதிகாரி ஒருவர் கூறினார்.
கஞ்சா விற்பனை நெட்வொர்க்
“ஆரம்பக் காலத்தில், அவர் தனது வீட்டின் அருகே சிறிய பாக்கெட்டுகளில் கஞ்சா விற்று வந்தார். அவரது கணவர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் கொண்டு வரும் கஞ்சா பொருட்களை விற்பதே அங்குரிபாயின் பொறுப்பு,” என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
“கஞ்சா விற்பனை செய்ததற்காக, முதன்முதலில் அங்குரிபாய் 2017ஆம் ஆண்டு காவல் துறையால் பிடிபட்டார். ஆனால், அப்போது அவரிடம் அரை கிலோவுக்கும் குறைவான அளவிலேயே கஞ்சா இருந்ததால், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதன் பிறகு, அவர் இந்தத் தொழிலை மேலும் விரிவுபடுத்தினார். கொரோனாவுக்கு பிறகு அவரது தொழில் இன்னும் வளர்ச்சி அடைந்தது” என்று காவல்துறை சிறப்புப்படையின் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
“திரைப்படங்களில் வருவதுபோல, அவர் தனது கஞ்சா கடத்தல் தொழிலை மிக விரைவாக 10 ஆண்டுகளுக்கு உள்ளேயே விரிவுபடுத்தியுள்ளார். பாக்கெட்டுகளில் கஞ்சா வாங்கி விற்பது என்ற அளவைத் தாண்டி, மிகப்பெரிய அளவில் கஞ்சாவை அவர் இறக்குமதி செய்தார்.
பின்னர் அதை இடைத்தரகர்களுக்கும், சில்லறை வியாபாரிகளுக்கும் பிரித்து விற்பனை செய்தார். குறிப்பாக அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களை வைத்தே கஞ்சா விநியோகத்திற்காக ஒரு நெட்வொர்க்கை உருவாக்கினார்” என்று அந்த அதிகாரி கூறினார்.
இந்த வியாபாரத்தில், அதிகாரிகளுக்கு பெருமளவு லஞ்சம் வழங்கப்பட்டது. காவல்துறை மற்றும் சுங்கத்துறைகளிலும் அவருக்கு உதவ ஆட்கள் இருந்தனர். அவர் காவல்துறையால் கண்டுபிடிக்கப்படுவதைத் தவிர்க்க உள்ளூர்வாசிகள் உதவியாக இருந்தனர்.
கஞ்சா விற்பனை மையமாக இருந்த ஹைதராபாத்
“அங்குரிபாயின் தொழிலை ஹைதராபாத்தில் இருந்து வட மாநிலங்கள் வரை விரிவுபடுத்துவதற்குத் தேவையான பொருட்கள் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டன. சொந்த வாகனங்கள் மட்டுமின்றி, இதர தனியார் வாகனங்கள் மூலமும் இந்தப் பொருட்கள் கொண்டு வரப்பட்டன.”
“அவர் கஞ்சாவை ஹைதராபாத்திற்கு கொண்டு வந்து, அருகே உள்ள தனது குடியிருப்பில் மறைத்து வைத்திருப்பார். அங்கிருந்து தெலங்கானா மற்றும் வட இந்திய மாநிலங்கள் முழுவதும் கஞ்சா விநியோகிக்கப்பட்டது” என்று காவல் துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
தெலங்கானா அரசு சில காலமாக போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கஞ்சா மற்றும் பிற போதைப்பொருள் கடத்தல்களைத் தடுக்க காவல்துறை சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளது.
இந்த விவகாரத்தில், தெலங்கானா காவல்துறை பல்லாயிரக்கணக்கான நபர்களைக் கைது செய்துள்ளது. மேலும் ஏராளமான கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
ஆனால் மற்றவர்களைப் போல அங்குரிபாய் எளிதில் காவல்துறையின் பிடியில் சிக்கவில்லை. போலீசாரின் பார்வையில் இருந்து தப்பிக்க, அவர் தனது தொலைபேசியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, தனது சொந்தத் தொடர்புகளைப் பயன்படுத்தி வந்ததாக காவல்துறை தெரிவித்தது.
அவரைப் பிடிக்க காவல்துறை அதிகாரிகள் தனி கவனம் செலுத்தினர். அவரை சில நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க முயற்சிகள் நடந்தன.
“அங்குரிபாயின் சொத்து மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கிறது. அவருக்குச் சொந்தமாக பண்ணை வீடுகளும் உள்ளன. ஆந்திரா மற்றும் ஒடிசாவில் கஞ்சா பயிரிடும் விவசாயிகளின் முதலீட்டுக்குத் தேவையான பணத்தை வழங்கும் அளவுக்கு அவர் உயர்ந்தார். அதன் பிறகு இந்த விவசாயிகள் அந்த கஞ்சா பயிர்களை அங்குரிபாயிடம் விற்று விடுவார்கள். விசாரணை முடிந்ததும் இந்த வழக்கின் முழு விவரங்கள் பற்றித் தெரிய வரும்” என்றும் சுங்கத்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்தக் கைது நடவடிக்கையில் சுங்கத்துறை சிறப்புப்படை அதிகாரி அஞ்சி ரெட்டி முக்கியப் பங்கு வகித்தார். சிறப்புப்படையின் தலைவர் கமலாசனா ரெட்டி அங்குரிபாயை கைது செய்ய உதவிய காவல்துறை அதிகாரிகளைப் பாராட்டினார்.
அங்குரிபாயின் மகன்கள், மருமகன்கள் மற்றும் உறவினர்கள் எனப் பலர் இந்தத் தொழிலைச் செய்து வருகிவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“அவரது வீட்டைச் சுற்றி சிசிடிவி கேமராக்கள் இருக்கும். அங்கு நாய்களும் உள்ளன. இவை தவிர அங்குரிபாய் தனக்கென பாதுகாவலர்களையும் நியமித்துள்ளார்” என்று அந்த அதிகாரி கூறினார்.
அவரைப் பிடிக்க காவல்துறை ரோந்துப் பணியில் ஈடுபட்டது. பல காவல்துறையினர் இந்தப் பணியில் நியமிக்கப்பட்டனர். இறுதியாக டிசம்பர் 12ஆம் தேதியன்று அங்குரிபாய் ஹைதராபாத்தில் கர்வான் என்ற பகுதியில் கைது செய்யப்பட்டார்.
“காவல்துறையிடம் பிடிபடாமல் இருக்க அவர் அடிக்கடி இடம் மாறுவார். தொலைபேசியைப் பயன்படுத்தாமல் இருந்தார். பல்வேறு சிம் கார்டுகளை மாற்றுவார். இது போன்ற பல காரணங்களால் அவரைக் கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக” அதிகாரிகள் தெரிவித்தனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.