வங்கதேசம்: இந்தியா, சீனா உடனான உறவு குறித்து அந்நாட்டு ராணுவ தளபதி கூறியது என்ன?

வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்கதேச ராணுவத் தளபதி வக்கார் உஸ் ஜமான்

வங்கதேசத்திற்கு இந்தியா முக்கியமான அண்டை நாடு என்றும், வங்கதேசம் பல விஷயங்களில் இந்தியாவை சார்ந்து இருப்பதாகவும் அந்நாட்டு ராணுவத் தளபதி ஜெனரல் வக்கார்-உஸ்-ஜமான் கூறியுள்ளார்.

வங்கதேச ஊடகமான பிரதம் ஆலோவுக்கு அவர் அளித்த பேட்டியில், ஜெனரல் ஜமான், இந்தியாவும் வங்கதேசத்திடம் இருந்து பல சேவைகளைப் பெறுவதாகக் கூறினார்.

ஜெனரல் வக்கார்-உஸ்-ஜமானிடம் அந்த ஊடகம் ஒரு கேள்வியை முன்வைத்தது. அந்தக் கேள்வி,

“இந்தியாவுடன் பல பிரச்னைகள் உள்ளன. நீர் பகிர்மான பிரச்னை, எல்லைப் பிரச்னை ஆகியவை இதில் அடங்கும். இரு நாடுகளுக்கும் இடையே தீர்க்கப்படாத பல பிரச்னைகள் உள்ளதே. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

இதற்கு பதிலளித்த ஜெனரல் வக்கார்-உஸ்-ஜமான், “இந்தியா ஒரு முக்கியமான அண்டை நாடு. நாம் பல விஷயங்களில் இந்தியாவை சார்ந்து இருக்கிறோம். மறுபுறம், இந்தியாவும் நம்மிடம் இருந்து பல வசதிகளைப் பெறுகிறது. இந்தியாவில் இருந்து ஏராளமானோர் வங்கதேசத்தில் பணிபுரிகின்றனர். இந்தியாவை சேர்ந்த இந்தத் தொழிலாளர்களில் பலர் தினசரி ஊதியம் அடிப்படையிலான வேலை மட்டுமின்றி நிரந்தர வேலைகளையும் செய்கிறார்கள்” என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

“வங்கதேசத்தில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக இந்தியா செல்கின்றனர். இந்தியாவில் இருந்து பல பொருட்களை வாங்குகிறோம். அத்தகைய சூழ்நிலையில், வங்கதேசத்தின் ஸ்திரத்தன்மையில் இந்தியா ஆர்வம் கொண்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் உறவு உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சமத்துவம் மற்றும் நேர்மையின் அடிப்படையில் அமைய வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

இந்தியா தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக மக்கள் நினைக்கக் கூடாது என்று கூறிய ஜெனரல் ஜமான், “எந்த நாடும் மற்றொரு நாட்டைப் பயன்படுத்திக் கொள்ளவே விரும்புகிறது. இதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. சமத்துவ அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையே இன்னமும் நல்லுறவு உள்ளது. இந்தியா நம் மீது ஆதிக்கம் செலுத்துவதாக நாம் நினைக்கக் கூடாது. அப்படி நடந்தால், அது நமது நலன்களுக்கு எதிரானதாகிவிடும்” என்றும் கூறியுள்ளார்.

`இந்தியா முக்கியமான அண்டை நாடு’

வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸுடன் ஜெனரல் ஜமான்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பில் வங்கதேசத்தின் ஒத்துழைப்பு முக்கியமானது. ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் இந்தியா இந்த விஷயத்தில் (பாதுகாப்பு) உதவிகளைப் பெற்றது.

“நமது அண்டை நாட்டினரின் மூலோபாய நலன்களைப் பாதிக்கும் எதையும் வங்கதேசம் செய்யாது. அதுபோலவே, நமது அண்டை நாடும் நமது நலன்களைப் புண்படுத்தும் எதையும் செய்யக்கூடாது என்று எதிர்பார்க்கிறோம். பரஸ்பரம், அவற்றை உறுதி செய்வது இரு நாட்டினரின் பொறுப்பு” என்றும் ஜெனரல் ஜமான் கூறினார்.

சீனாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான ஆழமான பாதுகாப்பு ரீதியான உறவுகள் குறித்து ஜெனரல் வக்கார்-உஸ்-ஜமான் பேசினார்.

”நமது வெளியுறவுக் கொள்கை சிறப்பானது. நம் நாடு அனைவரோடும் நட்புடன் இருக்கிறது. எந்த நாட்டுடனும் பகை இல்லை. வெளியுறவுக் கொள்கையில் சமநிலையைப் பேண வேண்டும். நமது முன்னேற்றத்தில் சீனா ஒரு பங்குதாரராக உள்ளது” என்றார்.

”சீனா வங்கதேசத்தில் முதலீடு செய்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், சீனா நமக்கு மிகவும் முக்கியம். வங்கதேசத்தில் சீன ஆயுதங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. நமது விமானப்படையும் சீன ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது. கடற்படையும் சீன ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது. ஒப்பீட்டளவில், சீன ஆயுதங்கள் மலிவானவை” என்று அவர் விவரித்தார்.

வங்கதேச அரசியலில் ராணுவம் தலையிடுமா?

வங்கதேசம் கோரிக்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷேக் ஹசீனாவை இந்தியாவிடம் இருந்து நாடு கடத்த வங்கதேசம் கோரிக்கை விடுத்துள்ளது

இந்தக் கேள்விக்கு பதிலளித்த ஜெனரல் வக்கார்-உஸ்-ஜமான், “அரசியலில் ராணுவம் கண்டிப்பாக தலையிடக்கூடாது. அரசியலில் ஈடுபடுவது ராணுவத்திற்குத் தீங்கு விளைவிக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இது கடந்த காலத்தில் நடந்தது, கடந்த காலத்தில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டோம். கடந்த காலங்களில் அதன் விளைவுகளை நாம் அனைவரும் அறிவோம். நான் ராணுவத் தளபதியாக இருக்கும் வரை அரசியலில் ராணுவம் தலையிடாது. அரசியலுக்கு மாற்றாக அரசியல் மட்டுமே இருக்கும் என்று நான் நம்புகிறேன், ராணுவம் இல்லை” என்றார்.

வங்கதேசத்துக்கு இந்தியா எவ்வளவு முக்கியம்?

வங்கதேசம் `இந்தியா லாக்ட்’ (India Locked) நாடு என்று அழைக்கப்படுகிறது. வங்கதேசம் தனது 94 சதவீத சர்வதேச எல்லையை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்கிறது. இந்தியாவும் வங்கதேசமும் 4,367 கிலோமீட்டர் நீளமான எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. அதாவது வங்கதேசம் கிட்டத்தட்ட எல்லா பக்கங்களில் இருந்தும் இந்தியாவால் சூழப்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், வங்கதேசம் பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்திற்காக இந்தியாவையே சார்ந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களுக்கு மலிவான மற்றும் எளிதான போக்குவரத்து இணைப்பைப் பெற வங்கதேசம் இந்தியாவுக்கு உதவுகிறது.

வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இணைப்பதில் வங்கதேசம் முக்கியப் பங்கு வகிக்கிறது. வங்கதேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் நீர் பகிர்மானம், எல்லை வர்த்தகம் மற்றும் அகதிகள் பிரச்னைகள் முக்கியமானவை. இரு நாடுகளின் பகிரப்பட்ட நிலவியல் அமைப்பு காரணமாக இந்தச் சிக்கல்கள் நிலவுகின்றன.

வங்கதேச ராணுவ தளபதி ஜெனரல் வக்கார்-உஸ்-ஜமான் இந்தியா குறித்து என்ன சொன்னார்?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, வங்கதேச பயணத்தின் போது, ​​முகமது யூனுஸை சந்தித்த இந்தியாவின் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி

அரிசி, கோதுமை, வெங்காயம், பூண்டு, சர்க்கரை, பருத்தி, தானியங்கள், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம், மின்சார உபகரணங்கள், பிளாஸ்டிக், எஃகு ஆகியவற்றுக்கு வங்கதேசம் இந்தியாவை சார்ந்துள்ளது. வங்கதேசம் சீனாவுடன் நெருங்கிவிடக்கூடும் என்பது இந்தியாவுக்கு எப்போதுமே கவலையளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது.

ஷேக் ஹசீனா பிரதமராக இருந்த வரையில், சீனா மற்றும் இந்தியா உடனான உறவில் அவர் சமநிலையைப் பேணி வந்தார். ஆனால் இப்போது இந்தியாவின் கவலை அதிகரித்துள்ளது. இப்போது வங்கதேசம் சீனாவுடன் மட்டுமின்றி பாகிஸ்தான் உடனும் நெருக்கமாக இருப்பதைக் காண முடிகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, பாகிஸ்தானின் சரக்குக் கப்பல் ஒன்று கராச்சியில் இருந்து வங்கதேசத்தின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள சிட்டகாங் துறைமுகத்துக்கு வந்தது. 1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போருக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் கடல்வழித் தொடர்பு இது.

முன்னதாக, சிங்கப்பூர் அல்லது கொழும்பு வழியாக இரு நாடுகளுக்கும் இடையே கடல்வழி வர்த்தகம் நடைபெற்றது. பாகிஸ்தானுடன் நெருங்கி வருவதற்கான உறுதியான தொடக்கமாக இது பார்க்கப்படுகிறது.

வங்கதேசத்தில் அதிக முதலீடு செய்யும் நாடு சீனா. வங்கதேசம் சீனாவின் `பெல்ட் அண்ட் ரோடு’ முன்முயற்சியின் ஒரு பகுதியாக உள்ளது.

சீனா வங்கதேசத்தில் ஏழு பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. 2023இல் சீனா வங்கதேசத்துக்கு 22 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஏற்றுமதிகளைச் செய்தது.

ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், Getty Images

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகஸ்ட் 5 முதல் இந்தியாவில் இருக்கிறார். ஷேக் ஹசீனாவை இந்தியாவிடம் இருந்து நாடு கடத்த வங்கதேசம் கோரிக்கை விடுத்துள்ளது. ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளது இது முதல் முறையல்ல.

முன்னதாக 1975இல், அவர் இந்தியாவில் அடைக்கலம் பெற்று வாழ்ந்தார். அவரது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டார். அந்தக் காலகட்டம் ஹசீனாவுக்கு சோகங்கள் நிறைந்ததாக இருந்தது.

அப்போது, ​​வங்கதேச ராணுவத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நெருக்கம் அதிகரித்ததாகப் பேசப்பட்டது. அத்தகைய சூழ்நிலையில், ஹசீனாவுக்கு அங்குள்ள நிர்வாக அமைப்பை நம்பும் சூழல் இல்லை.

ஷேக் முஜிபுர் ரஹ்மான் தொடங்கிய அவாமி லீக் கட்சி எப்போதும் இந்தியாவுடன் நெருக்கமாக இருந்து வருகிறது. ஹசீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கத்தால் இரு நாடுகளும் பயனடைந்துள்ளன. 1996இல் ஹசீனா முதன்முதலில் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே இந்தியாவுடன் 30 ஆண்டுகளுக்கான தண்ணீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.

வங்கதேசம் `நதிகளின் நாடு’ என்று அழைக்கப்படுகிறது, ஆனால் பெரும்பாலான நதிகள் இந்தியா வழியாக வங்கதேசத்தை அடைகின்றன. இந்த நதிகள் மீது இந்தியாவின் கட்டுப்பாடு இருப்பதாகச் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த 1996ஆம் ஆண்டு தண்ணீர் தொடர்பாக வங்கதேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதாக வங்கதேசத்தில் பலர் நம்பினர். ஆனாலும், ஹசீனா ஆட்சியில் இருந்த போதெல்லாம், இந்தியா உடனான உறவுகள் நிலையானதாகவே இருந்தன.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு