யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஒன்றுக்கு சாட்சிக்காக வந்த நபரை வாளால் வெட்ட முயற்சித்த பிரதான சந்தேகநபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
வாள்வெட்டு வழக்கு ஒன்றின் சாட்சிக்காக கடந்த 2024.05.30 அன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு வந்த நபரை, நீதிமன்றத்துக்கு முன்னால் வைத்து வாளால் வெட்டி தாக்க முற்பட்ட மூவரில் இருவர் அன்றையதினம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தலைமறைவாகி இருந்த பிரதான சந்தேகநபர் இன்றையதினம்(02) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறைப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் – ஆரியகுளத்தக்கு அருகாமையில் வைத்துக் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவருக்கு வாள்வெட்டு தொடர்பாக மூன்று திறந்த பிடியாணை உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.