தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை தனியார் தத்து எடுப்பதாக சர்ச்சை எழுந்தது ஏன்? உண்மை என்ன?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் ‘ஸ்பான்ஸர்’ செய்யும் என வந்த செய்தியால், அவை தனியாருக்கு அளிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. உண்மையில் நடந்தது என்ன?
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் அருகில் உள்ள 500 அரசுப் பள்ளிகளைத் தேர்வு செய்து அவற்றுக்குத் தேவையான கட்டமைப்பு உதவிகளைச் செய்வதாக தனியார் பள்ளிகள் சங்கம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் செயல் என தமிழ்நாடு மாநில பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு எனப் பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த சங்கங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து பெரும்பான்மையான சங்கங்கள் ஒன்றுகூடி, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற புதிய சங்கம் ஒன்றை உருவாக்கின.
இந்தச் சங்கத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷும் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒரு தீர்மானத்தில் “வரும் கல்வியாண்டில் 500 அரசுப் பள்ளிகளைத் தேர்வு செய்து அவற்றுக்கு அருகிலுள்ள தனியார் பள்ளிகள், அந்த அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளைச் செய்து தரும்” எனக் கூறப்பட்டிருந்தது. சி.எஸ்.ஆர் நிதியின் மூலம் இதைச் செய்து தர முயல்வதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
`பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி எங்கு செல்கிறது?’
இந்தச் செய்தி வெளியானதும் சில அரசியல் கட்சிகள் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தன.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி எங்கு செல்கிறது எனக் கேள்வியெழுப்பினார்.
“தமிழக அரசின் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு, இந்த ஆண்டு மட்டும் ரூ.44,042 கோடி. தனது தேர்தல் வாக்குறுதிகளில், சிதிலமடைந்த 10,000 அரசுப் பள்ளிக் கட்டடங்களைப் புதிதாகக் கட்டிக் கொடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, நான்கு ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை,” என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
மேலும், “சமீபத்தில் மாவட்டக் கல்வி அலுவலகங்களின் இணைய இணைப்புக் கட்டணமான ரூ.1.5 கோடியைக்கூட கட்டாமல், இணைப்பு துண்டிக்கப்படும் நிலைக்குச் சென்றது பள்ளிக் கல்வித் துறை. கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.44,042 கோடி எங்குதான் செல்கிறது?” என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
அதோடு, அந்தக் கண்டன அறிக்கையில், “நாட்டின் நாளைய தூண்களான மாணவ சமுதாயத்தின் கல்விக்குக்கூட, தனியார் அமைப்புகளிடம் உதவி கேட்கும் நிலையில் திமுக அரசு தள்ளப்பட்டிருக்கிறதா?” என்றும் குறிப்பிட்டார் அண்ணாமலை.
`நியாயமற்ற நடவடிக்கை’
தி.மு.கவின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்கூட இந்த விவகாரத்தில் கண்டனக் குரலை எழுப்பியது.
“இதன் நோக்கம் படிப்படியாக அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைப்பதோடு கல்வியை தனியார்மயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாகத் திணிக்கும் முயற்சி,” என்று அக்கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி கொடுப்பது அரசின் முதன்மையான கடமையாக இருக்க வேண்டுமே தவிர, அரசுப் பள்ளிகளுக்குச் செலவிடாமல் அதிலிருந்து தப்பிப்பது, நிதிச் சுமையைக் காரணம் காட்டி தனியாருக்கு தத்துக் கொடுப்பது முற்றிலும் நியாயமற்ற நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
“இந்த நடவடிக்கையை அரசு உடனே கைவிட வேண்டும்” எனக் குறிப்பிட்ட கே. பாலகிருஷ்ணன், “இம்மாதிரி வசதிகளை மேம்படுத்த அரசே கூடுதல் நிதியை ஒதுக்கும்” என்றும் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இது தொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார்.
உதவி செய்வதாகச் சொன்னதற்கு நன்றி தெரிவித்ததை வைத்துக்கொண்டு அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக் கொடுப்பதாகச் சொல்வது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார் அவர்.
வியாழக்கிழமையன்று செய்தியாளர்கள் இது தொடர்பாகக் கேள்வியெழுப்பியபோது, அதற்குப் பதிலளித்த அன்பில் மகேஷ், “அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்வில் என்ன நடந்தது என்பது குறித்து செய்தி வந்தால், அதன் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும். தாரைவார்க்கிறார்கள், தத்தெடுக்கிறார்கள் என்று நிகழ்ச்சியில் பேசப்பட்டதா என்பதைத் தெரிந்துகொண்டு பேச வேண்டும். எடுத்த உடனே வன்மையாகக் கண்டிக்கிறோம் என்கிறார்கள். இப்படி உண்மையை அறியாமல், பேசுவதை நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன்,” என்றார்.
அதோடு, “சிஎஸ்ஆர் நிதி மூலம் உதவி செய்கிறோம் என்தற்கு நன்றி என்பதோடு அந்த விவகாரம் முடிந்தது. இதற்குப் பிறகு, தனியார் பள்ளிகள் சங்கமே இது தொடர்பாக விளக்கம் அளித்தார்கள். இவ்வளவுக்குப் பிறகும், தாரை வார்ப்பதாக செய்தி வருகிறது. அரசுப் பள்ளிகள் எங்களின் பிள்ளைகள். அவற்றைத் தத்துக் கொடுக்கவில்லை. கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.
`அரசுப் பள்ளி மாணவருக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்’
இந்த விவகாரத்தில் அண்ணாமலை தெரிவிக்கும் எதிர்ப்புக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவிக்கும் எதிர்ப்புக்கும் வித்தியாசம் இருப்பதாகக் கூறுகிறார் பொதுக் கல்விக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
“அண்ணாமலை முதலில் சைனிக் பள்ளிகள் தனியார்மயமாவதை எதிர்த்துவிட்டு, இது குறித்து கருத்து சொல்லட்டும். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் எதிர்ப்பதற்கான காரணம் வேறு. புதிய கல்விக் கொள்கையில் இரட்டையர் (twinning) திட்டம் என்ற ஒரு திட்டம் இருக்கிறது. அதாவது ஒரு அரசுப் பள்ளியை தனியார் பள்ளியோடு இணைப்பதுதான் அந்தத் திட்டம். அதைப் போலத்தான் இந்தத் திட்டம் இருக்கிறது,” என்கிறார் அவர்.
அரசுதான் மக்களிடம் வரியை வசூலிக்கிறது, ஆகவே அரசுதான் இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு. “அரசுக்கு நிதி நெருக்கடி இருக்கிறதென்றால், எந்த அளவுக்கு நிதி நெருக்கடி இருக்கிறது என்பது குறித்து வெள்ளை அறிக்கை அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் உதவியைக் கோரும்போது, அந்த உதவிகள் மொத்தமாக அரசுக்குத்தான் அளிக்கப்பட வேண்டும். அரசுதான் அதை பள்ளிகளுக்குப் பிரித்து அளிக்க வேண்டும்,” என்றும் தெரிவித்தார்.
இப்படி தனியார் பள்ளியே நேரடியாக அரசுப் பள்ளிக்கு அளிக்கும்போது, “தனியார் பள்ளியில் படிக்கும் மாணவருக்கு உயர்வு மனப்பான்மையும் அரசுப் பள்ளி மாணவருக்கு தாழ்வு மனப்பான்மையும் ஏற்படாதா?” என்றும் கேள்வி எழுப்புகிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
அதோடு, இப்படியாக உள்ளே நுழையும் தனியார் பள்ளிகள், ஒரு கட்டத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள மைதானத்தை பயன்படுத்துகிறோம், அரங்கத்தைப் பயன்படுத்துகிறோம் என ஆக்கிரமிப்பார்கள் என்றும், உதவி செய்பவர்கள் என்பதால் பள்ளித் தலைமை ஆசிரியர்களால் மறுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றும் கூறுகிறார்.
இதுதவிர, தனியார் பள்ளிக்கூடங்கள் சிஎஸ்ஆர் நிதியில் இந்த உதவிகளைச் செய்வதாகச் சொல்கின்றன. அப்படியானால், “பள்ளிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் என்பதையும் அவற்றை ஒரு லாபமீட்டக் கூடிய தொழிலாகச் செய்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறார்களா? அரசுப் பள்ளிக்கு ஏதோ சிறிய உதவியைச் செய்துவிட்டு, படிக்கும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணத்தை வசூலித்தால், அங்கு குழந்தைகளைப் படிக்க வைக்கும் பெற்றோரால் அதைத் தாங்க முடியுமா?” எனவும் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி எழுப்புகிறார்.
இந்தியா சுதந்திரமடைந்ததில் இருந்து மாநிலத்தின் நிதிநிலை எவ்வளவோ மேம்பட்டுவிட்டது என்று கூறும் அவர், இந்த நேரத்திலும், “அரசுப் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர் அடுத்தவர் தானத்தில் படிக்க வைப்பதைப் போல் உணரச் செய்வது சரியா என்ற கேள்வியும் இருப்பதாக” குறிப்பிட்டார்.
`எந்தப் பள்ளியையும் தத்து எடுப்பதாகச் சொல்லவில்லை’
ஆனால், சிஎஸ்ஆர் உதவிகள் பலவிதங்களில் நடப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், “சிலர் ஒரு பள்ளிக்கு மேசை வாங்கித் தருவதாகச் சொல்கிறார்கள். சிலர் பாடம் நடத்த முன்வருகிறார்கள். சிலர் அரசிடம் நேரடியாகத் தருகிறார்கள். இப்படிப் பல வகைகளில் உதவி செய்கிறார்கள். இதில் குற்றம் தேடுவது சரியல்ல” என்றார்.
தனியார் பள்ளிகளின் சங்க நிர்வாகிகள், ஒரு சாதாரண விஷயம் அளவுக்கு மீறிப் பெரிதாக்கப்பட்டதாகச் சொல்கின்றனர்.
“தற்போது தனியார் பள்ளிகளை நடத்துபவர்கள் எல்லோரும் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள். ஆகவே எங்கள் சங்கத் துவக்க விழாவில் அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான சிறு சிறு உதவிகளைச் செய்வதாகச் சொன்னோம்.
அதாவது, மேசை, நாற்காலிகள் வாங்கித் தருவது, கழிப்பறை இல்லாவிட்டால் கட்டித் தருவது என்பது போன்ற உதவிகளைச் செய்வதாகச் சொன்னோம். இப்போதே அதுபோன்ற உதவிகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறோம் என்றாலும் அதை ஒரு தீர்மானமாக நிறைவேற்றினோம். அதற்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார். அவ்வளவுதான்,” என்றார் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார்.
ஆனால், “பள்ளிக்கூடங்களைத் தாரைவார்ப்பதாகக் கூறி இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது. அதைப் பார்த்து அண்ணாமலையும் எதிர்ப்புத் தெரிவித்தார். நாங்கள் எந்தப் பள்ளியையும் தத்து எடுப்பதாகச் சொல்லவில்லை. ஏற்கெனவே செய்துகொண்டிருக்கும் உதவிகளைத்தான் தீர்மானமாகச் சொன்னோம். அதைப் பெரிய சர்ச்சை ஆக்கிவிட்டார்கள்” என்கிறார் அவர்.
இந்நிலையில், இன்று ஊடகங்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன், “ஊடகங்களில் வந்த செய்தியின் அடிப்படையில் எதிர்ப்பு தெரிவித்தோம்,” என்று தெரிவித்தார்.
“அரசுப் பள்ளிகளைத் தத்துக் கொடுக்கப் போகிறார்கள் என ஒரு செய்தி வெளியானது. மதியம் வரை அதை அரசோ, அமைச்சரோ மறுக்கவில்லை. ஆகவே அதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டோம். அப்படி ஒரு செய்தி வெளியான உடனேயே அமைச்சர் மறுத்திருக்கலாம். இப்போது மறுத்திருக்கிறார், நல்லது. ஆனால், நேரடியாக பள்ளிகளுக்குச் செய்யாமல், அரசு மூலம் செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை” எனக் கூறியுள்ளார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு