க்ரிம்ஸி தீவு

பட மூலாதாரம், Alamy

  • எழுதியவர், மிஷெல் கிராஸ்
  • பதவி,

ஐஸ்லாந்தின் வடக்கு கடற்கரையில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்தச் சிறிய தீவு ஐரோப்பாவின் மிகவும் தொலைதூர குடியிருப்புகளுள் ஒன்று. இங்கு அதிக எண்ணிக்கையிலான பறவை வகைகள் மிகவும் செழிப்பாக வாழ்ந்து வருகின்றன.

ஆகஸ்ட் மாத இறுதியில் ஒரு வெயில் நாளில்கூட, க்ரிம்ஸி தீவில் ஒரு நபரையே தூக்கி வீசும் அளவிற்கு வலுவாகக் காற்று வீசுகிறது.

க்ரிம்ஸி தீவில் உள்ள அழகான, காற்றோட்டமான கடற்கரைக்கு மரத்தால் ஆன கம்புகளை ஏந்திக்கொண்டு நானும் எனது கணவரும் வந்தோம். இந்தக் கம்புகள் பலத்த காற்றை எதிர்த்து நடக்க உதவுவதற்காக அல்ல. அவை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளைத் தொந்தரவு செய்யும் ஆர்டிக் டெர்ன் பறவைகளை விரட்ட உதவும்.

நாங்கள் மெதுவாக அந்தத் தீவின் வியத்தகு பசால்ட் பாறைக் குன்றுகளைச் சுற்றி நடந்தோம். அப்போது இன்னும் வலசைப் பயணத்தைத் தொடங்காமல் இருந்த பஃபின் பறவைகளை நாங்கள் பார்த்தோம். அவை தற்போது கடலுக்குச் சென்று ஏப்ரல் மாதம் மீண்டும் க்ரிம்ஸி பகுதிக்குத் திரும்பி வரும்.

ஐஸ்லாந்தின் வடக்குக் கடற்கரையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் 6.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த க்ரிம்ஸி தீவு அமைந்துள்ளது. ஐஸ்லாந்தின் வடக்கே மக்கள் வசிக்கும் இடமாக இந்தத் தீவு இருக்கிறது. அதோடு, ஆர்டிக் வட்டத்திற்குள் அமைந்துள்ள ஐஸ்லாந்தின் ஒரே சிறிய பகுதியும் இத்தீவும் இதுதான்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கடந்த 1931ஆம் ஆண்டு வரை, இந்தத் தீவுக்கு வரும் கடிதங்களைக் கொடுக்க ஆண்டுக்கு இரண்டு முறை சிறிய படகு ஒன்று வரும். க்ரிம்ஸி தீவை அடைய ஒரே வழி இந்தச் சிறிய படகில் ஏறி வருவது மட்டுமே. ஆனால் தற்போது, வடக்கு ஐஸ்லாந்து பகுதியில் உள்ள அகுரேரி நகரத்தில் இருந்து 20 நிமிட விமான பயணத்தின் மூலமாகவும், டால்விக் கிராமத்தில் இருந்து மூன்று மணிநேர கப்பல் பயணத்தின் மூலமாகவும் இந்தத் தீவுக்கு வர முடியும்.

இங்கு வருபவர்கள் பெரும்பாலானோர் ஐரோப்பாவின் தொலைதூர குடியிருப்புகளையும், இங்குள்ள பல்வேறு கடல் பறவைகள் மற்றும் காட்டுயிர்களையும் பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

காமிகேஸ் ஆர்டிக் டெர்ன்கள் மற்றும் செழிப்பான பஃபின் பறவைகள் தவிர்த்து இங்கு கருங்கால் கிட்டிவேக்ஸ், ரேஸர்பில்ஸ், கில்லெமோட் என்னும் பறவை வகைகள் உள்ளன. அதுபோக, ஐஸ்லாந்து குதிரைகள், செம்மறி ஆடு போன்றவையும் அதிகமாகக் காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி, இங்கு கடல் பறவைகளின் எண்ணிக்கை மக்கள் தொகையைவிட சுமார் 50,000 மடங்கு அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

“நீங்கள் இதை நம்ப மாட்டீர்கள், ஆனால் இந்தப் பகுதியின் மக்கள்தொகை வெறும் 20 நபர்கள் மட்டுமே” என்று உள்ளூர் சுற்றுலா வழிகாட்டியும் ஆர்டிக் ட்ரிப் நிறுவனத்தின் உரிமையாளருமான ஹல்லா இங்கோல்ஃப்ஸ்டோட்டிர் விளக்கினார்.

க்ரிம்ஸி தீவு

பட மூலாதாரம், Alamy

ரீக்யாவிக் நகரில் பிறந்த ஹல்லா இங்கோல்ஃப்ஸ்டோட்டிர், தென்கிழக்கு ஐஸ்லாந்தில் வளர்ந்தார். அவரது சகோதரி க்ரிம்ஸி தீவைச் சேர்ந்த மீனவர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடிபெயர்ந்தார். அதன் பின்னர், ஹல்லா க்ரிம்ஸி தீவில் நீண்ட காலம் தங்கத் தொடங்கினார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக க்ரிம்ஸி தீவில் அவ்வப்போது வாழ்ந்து வந்த பிறகு, ஹல்லா இங்கோல்ஃப்ஸ்டோட்டிர் 2019ஆம் ஆண்டு இந்தத் தீவிலே முழுமையாகத் தங்க முடிவு செய்ததாக அவர் கூறுகிறார்.

“நான் இங்கு காதலுக்காக வந்ததாக மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் நான் இந்தத் தீவு மீது காதல் கொண்டு வந்தேன்” என்று அவர் விளக்கினார். “இங்கு ஒரு மாயாஜாலம் உள்ளது. இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை, தீவில் இருப்பவர்கள் மற்றும் இயற்கை ஆகியவற்றை நான் நேசித்தேன். இங்கு இயற்கை மிகவும் சக்திவாய்ந்தது; குளிர்காலத்தில் அது வேறுவிதமாக இருக்கும். அப்போது இரவு நேரத்தில் வடக்கு ஒளிகள் எனப்படும் அரோரா போரியாலிஸ், நட்சத்திரங்கள் வானில் தெரியும். வசந்த காலத்தில் சூரிய ஒளியோடு பறவைகளும் வருகின்றன; இங்கு ஒவ்வொரு பருவகாலமும் சிறப்பு வாய்ந்தது” என்று அவர் கூறினார்.

ஒரு சுற்றுலா நிறுவனத்தை நடத்துவதோடு மட்டுமின்றி, ஹல்லா தனது வீட்டிற்கு வெளியே ஒன்பது அறைகள் கொண்ட விருந்தினர் மாளிகையையும் சொந்தமாக நடத்தி வருகிறார். சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக இருப்பதையும், அவர்களைக் கவனித்துக் கொள்வதையும் செய்யாமல் இருக்கும்போது, அவர் ஒரு நாளைக்கு ஒருமுறை க்ரிம்ஸியின் மின் நிலையத்திற்குச் சென்று இந்தத் தீவுக்குப் போதுமான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு செயல்பாடுகள் சரியாக நடக்கிறதா என்பதை உறுதி செய்வார்.

க்ரிம்ஸி தீவு

பட மூலாதாரம், Alamy

ஐஸ்லாந்தின் பிரதான நிலப்பரப்பு புவிவெப்ப ஆற்றல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பெரிதும் சார்ந்திருக்கும் போது, க்ரிம்ஸி தீவு மிகவும் தொலைவில் இருக்கிறது. அதனால் முழுத் தீவுமே டீசலில் இயங்கும் ஒரே ஜெனரேட்டரில் இயங்குகிறது.

“இந்த வேலை எனக்கு சலிப்பாக இருக்கிறதா என்று சுற்றுலாப் பயணிகள் என்னிடம் அடிக்கடி கேட்பார்கள். ஐஸ்லாந்தில் இருப்பவர்களைப் போலவேதான் நாங்களும் இங்கு வாழ்கிறோம். நாங்களும் வேலைக்குச் செல்கிறோம், ஜிம்முக்கு செல்கிறோம், உடற்பயிற்சி செய்கிறோம். இங்குள்ள இயற்கை சூழலுக்காகவே நான் இங்கு தங்கியுள்ளேன்” என்று ஹல்லா இங்கோல்ஃப்ஸ்டோட்டிர் தெரிவித்தார்.

க்ரிம்ஸி தீவில் மருத்துவமனை, மருத்துவர் அல்லது காவல் நிலையம் என எதுவும் இல்லை. அவசர நிலை ஏற்பட்டால், எப்படி நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென தீவில் வாசிப்பவர்களுக்கு கடலோர காவல்படையும் அவசரக்கால சேவைக் குழுவும் பயிற்சி அளித்துள்ளதாக அவர் கூறுகிறார்.

“நீங்கள் இங்கு வசிக்கும்போது, சூழ்நிலைக்கேற்ப மாறுவதற்குத் தயாராக இருக்க வேண்டியது அவசியம். நாங்கள் அதுபோல எதற்கும் தயாராக இருக்கிறோம். அவசரநிலை ஏற்பட்டால், முதலில் எவ்வாறு செயல்பட வேண்டுமென எங்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார்கள். மேலும் மூன்று வாரங்களுக்கு ஒருமுறை மருத்துவர் ஒருவர் விமானத்தில் எங்களுக்காக வருகிறார்” என்றும் ஹல்லா கூறுகிறார்.

இந்தத் தீவின் தென்மேற்குப் பகுதியில் ஒரு சிறிய வீடுகளின் தொகுப்பு இருக்கிறது. அதிலும் பல வீடுகள் சுற்றுலாப் பயணிகளுக்கான விருந்தினர் இல்லங்களாகவும் அவ்வப்போது பயன்படுத்தப்படும். சாண்ட்விக் என்று அழைக்கப்படும் இந்தக் குடியிருப்பில், ஒரு பள்ளிக்கூடம் மற்றும் ஒரு கஃபே இருக்கின்றன. தினமும் ஒரு மணிநேரம் திறந்திருக்கும் ஒரு சிறிய மளிகைக் கடையும் உள்ளது. அத்துடன் ஒரு பார், நீச்சல் குளம், நூலகம், தேவாலயம், விமான ஓடுதளம் (இங்கு பெரும்பாலும் பறவைகளும் வந்து தரை இறங்குகின்றன) ஆகியவையும் இருக்கின்றன.

க்ரிம்ஸி தீவு

பட மூலாதாரம், Michelle Gross

ஐஸ்லாந்தில் உள்ள பல சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களைப் போலவே, க்ரிம்ஸி தீவின் வரலாறு உள்ளூர் கதைகளில் வேரூன்றியுள்ளது. அதன்படி, மேற்கு நார்வேவின் சோக்ன் மாவட்டத்தில் இருந்து கப்பலில் வந்ததாக நம்பப்படும் க்ரிமூர் என்ற நோர்ஸ் குடியேறியை வைத்து இந்தத் தீவின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது.

க்ரிம்ஸியை பற்றிய மிகப் பழமையான குறிப்பு 1024ஆம் ஆண்டைச் சேர்ந்தது. நார்வேவின் மன்னர் ஓலாஃபர், க்ரிம்ஸி தீவை நட்பின் அடையாளமாகக் கோரியதாக பழங்கால ஐஸ்லாந்தின் வரலாறான ஹெய்ம்ஸ்கிரிங்லாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு மீன் மற்றும் பறவைகள் அதிகமாக இருந்ததால், க்ரிம்ஸி தீவு மிகவும் மதிப்புமிக்கது என்று கருதி அதை விட்டுக்கொடுக்க உள்ளூர் தலைவர்கள் மறுத்துவிட்டனர்.

கடந்த 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நிமோனியா பாதிப்பு மற்றும் மீன்பிடிப் படகுகளின் விபத்துகள் காரணமாக க்ரிம்ஸி தீவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட சரிந்தது. இருப்பினும், முதன்மை நிலப்பரப்பில் இருந்து தொடர்ந்து வந்த மீனவர்கள் மற்றும் ஐஸ்லாந்தின் வடக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஹூசாவிக்கில் இருந்து வர்த்தகம் செய்ய வந்தவர்கள் காரணமாக அங்கிருந்த மக்கள் இதைக் கடந்து வந்தனர்.

கடந்த 2009ஆம் ஆண்டில், அகுரேரி நகராட்சியின் ஒரு பகுதியாக க்ரிம்ஸி தீவு மாறியது. இருப்பினும் தீவின் சில உள்ளூர்வாசிகள் இந்தத் தீவின் தனித்துவமான அடையாளத்தைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள்.

“இன்று, க்ரிம்ஸி தீவின் நிலம் குடியிருப்பாளர்களுக்கும், அகுரேரி நகரத்துக்கும் ஐஸ்லாந்துக்கும் சொந்தமானவை. அவர்கள் இந்தத் தீவின் பாரம்பரியத்தையும், இயற்கை வளங்களையும், இங்குள்ள மக்கள் சமூகத்தையும் பாதுகாக்க முயல்கின்றனர்” என்று க்ரிம்ஸியின் சுற்றுலா திட்ட மேலாளர் ஹெச் ட்ரிக்வாடோட்டிர் கூறினார்.

க்ரிம்ஸி தீவு

பட மூலாதாரம், Michelle Gross

இந்தத் தீவுக்கு வருகை தரும் பலரைப் போலவே, ட்ரிக்வாடோட்டிரும் க்ரிம்ஸி தீவுடன் ஒரு தொடர்பை வளர்த்துக் கொண்டார். “க்ரிம்ஸி தீவு மிகவும் தொலைவில் இருப்பது, அதன் தனித்துவமான துருவ ஒளி மற்றும் நம்பமுடியாத பறவை வகைகள் ஆகியவையே அதனிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்கள்” என்று அவர் கூறினார்.

“இந்தத் தீவின் செங்குத்தான பாறைகளில் அலைந்து திரிவதில் உண்மையிலேயே ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான கடற்பறவைகளால் சூழப்பட்ட இந்தத் தீவில் உள்ள அமைதியை என்னால் உணர முடிகிறது. ஆனால் இங்குள்ள மக்களின் அரவணைப்பு மற்றும் வரவேற்பு தன்மையும் இந்தத் தீவை உண்மையிலேயே சிறப்பானதாக உணர வைக்கிறது”, என்றும் அவர் தெரிவித்தார்.

பஃபின் பறவைகளைத் தவிர, தீவின் மற்ற முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக இருப்பது அதன் நிலவியல் அமைப்பு. 66° வடக்கு அட்சரேகையில் அமைந்துள்ள க்ரிம்ஸி தீவு, ஆர்டிக் வட்டத்தில் அமைந்துள்ள ஐஸ்லாந்தின் ஒரே பகுதி என்ற சிறப்பைப் பெறுகிறது. 2017ஆம் ஆண்டில், ஆர்டிக் வட்டம் மற்றும் க்ரிம்ஸி இணையும் கற்பனைக் கோட்டைக் குறிக்க 3,447 கிலோகிராம் எடைகொண்ட கான்கிரீட் கலைப்பொருள் ஒன்று இந்த மிக உயரமான, வடக்குப் பகுதியில் நிறுவப்பட்டது.

“இது, இந்தத் தீவை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க ஒரு சிறந்த அம்சமாக இருந்து வருகிறது, ஆனால் அதை நகர்த்துவது சாத்தியமில்லை. அதை நகர்த்துவதற்கு பிரதான நிலப்பரப்பில் இருந்து சிறப்பு உபகரணங்களைக் கொண்டுவர வேண்டும்” என்று இங்கோல்ஃப்ஸ்டோட்டிர் கூறினார்.

“ஆர்டிக் வட்டத்திற்கான மற்றொரு நினைவுச் சின்னம் இங்கு உள்ளது. இது 1970 முதல் இங்கு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்,” என்றும் அவர் கூறினார்.

க்ரிம்ஸி தீவு

பட மூலாதாரம், Alamy

பூமி 23.5 டிகிரி சாய்ந்த அச்சில் சுழல்வதால், ஆர்டிக் வட்டத்திற்கான அட்சரேகை கோட்டிற்கு ஏற்ப அதையும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 14 மீட்டருக்கு நகர்த்த வேண்டும். தற்போது, அது 130 மீட்டர் வரை தெற்கு நோக்கி அதிகபட்சமாக நகர்த்தப்பட்டுள்ளது.

இந்தத் தீவு, 2047ஆம் ஆண்டில் நிலவியல் ரீதியாக ஆர்டிக் வட்டத்திற்குள் அடங்காது. அப்போது இந்த நினைவுச் சின்னத்தை ஒரு குன்றில் இருந்து உருட்டி கடலுக்குள் அனுப்புவது திட்டமாக இருக்கிறது.

இந்தத் தீவு பூமியின் வடக்கு திசையில் இருப்பதால், இங்குள்ள மக்கள் துருவ இரவுகளை அனுபவிக்கிறார்கள். இந்தத் தீவில் டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து பிப்ரவரி மாத நடுப்பகுதி வரை பல மாதங்கள் முழுவதுமாக இருள் சூழ்ந்து இருக்கும்.

“எனக்கு இந்த இருள் ஒரு பிரச்னையாக இல்லை. ஆனால் சிலருக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அது பிரச்னையாக இருக்கிறது. இருந்தாலும், இருள் நீங்கி மீண்டும் சூரிய ஒளி வரும் என்று எங்களுக்குத் தெரியும்,” என்று ருனோல்ஃப்ஸ்டோட்டிர் கூறினார்.

இந்த இருளைச் சமாளிக்க தீவில் இருப்பவர்கள், செயற்கையான ஒளியைப் பயன்படுத்துகின்றனர். “நாங்கள் இருளை ஒளிரச் செய்ய விரும்புவதால், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சீக்கிரம் அலங்கரிக்கத் தொடங்குகிறோம். எங்கள் வீடுகளை கிறிஸ்துமஸ் விளக்குகளால் அலங்கரிக்கிறோம். இது ஒரு சிறிய கிறிஸ்துமஸ் நகரம் போல் அப்போது காட்சியளிக்கும். பிப்ரவரி மாதம் வரை அந்த விளக்குகளை நாங்கள் அகற்ற மாட்டோம்,” என்று இங்கோல்ஃப்ஸ்டோட்டிர் கூறினார்.

க்ரிம்ஸி தீவின் எதிர்காலத்தைப் பொறுத்தவரை, அடுத்த கோடைக் காலத்தில் சில புதிய வளர்ச்சிக்கான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளதாகக் கூறுகிறார் இங்கோல்ஃப்ஸ்டோட்டர். இதில் எழுத்தாளர்கள் மற்றும் பிற படைப்பாளிகள் இத்தீவில் வந்து நீண்ட காலம் தங்குவதற்கு வீடுகளைப் புதுப்பிக்கும் திட்டங்களும் அதில் அடங்கும்.

நாங்கள் அங்கு சென்றிருந்தபோது எங்களை ஆர்டிக் டெர்ன் பறவைகள் தாக்கவில்லை. ஆனால் க்ரிம்ஸி தீவில் நாங்கள் சிறிது காலம் கழித்ததன் மூலம், அங்கு வாழும் சமூகத்தைப் பற்றிய முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்ள முடிந்தது. மேலும் அங்கு நீண்ட நாட்களுக்கு இருக்கும் வகையில் மீண்டும் பயணிக்க வேண்டும் என்ற அவா எழுந்துள்ளது.

“தீவில் வெகுஜன சுற்றுலா தளங்களை நாங்கள் விரும்பவில்லை” என்று இங்கோல்ஃப்ஸ்டோட்டிர் கூறினார். “இந்தத் தீவில் அதிக அளவில் மக்கள் இல்லாதது எனக்குப் பிடித்துள்ளது. இங்கு அதிக அளவில் மக்கள் சுற்றுலா வருவதற்கு அனுமதி இல்லை. அது தீவுக்கு நல்லது, மேலும் ஐஸ்லாந்தில் உள்ள மற்ற சுற்றுலா பகுதிகளும் இந்தத் தீவிடம் இருந்து அதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.”

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.