கொழும்பில் சொகுசு அடுக்குமாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவன் ; தாயார் பாடசாலை மீது சட்ட நடவடிக்கை ! on Thursday, January 02, 2025
கொழும்பு கொம்பனித்தெருவில் உள்ள அல்டெயார் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவன் மற்றும் மாணவனின் மரணம் கடந்த சில மாதங்களாக பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், உயிரிழந்த மாணவனின் தாயார் மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு தொடர்ந்து போராடி வருகின்றார்.
பாடசாலையின் கவனக்குறைவு மற்றும் பொறுப்பற்ற செயற்பாடே மாணவனின் மரணத்திற்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.
மாணவன் உயிரிழந்த அன்று நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் கோரி பாடசாலை மற்றும் அதன் உயர் அதிகாரிகளுக்கு பல கடிதங்கள் எழுதியிருந்தார். ஆனால் சுமத்தப்பட்ட அனைத்து உரிமைகோரல்களையும் குற்றச்சாட்டுகளையும் மறுத்து பாடசாலை நிர்வாகம் பதிலளித்துள்ளது.
இதனை அடுத்து, குறித்த தாய் சட்ட நடவடிக்கையை எடுக்க தீர்மானித்துள்ளார்.
அவர் பாடசாலைக்கு அனுப்பிய கடிதத்தில் 500,000,000 ரூபாய் நட்ட ஈடு கோரியுள்ளார். பாடசாலையின் கவனக்குறைவு மற்றும் பொறுப்பற்ற செயற்பாடே மாணவனின் மரணத்திற்கு காரணம் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அல்டெயார் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்த மாணவனும், மற்றொரு மாணவியும் தங்கள் பாடசாலையில் இருந்து மதியம் 2.20 மணியளவில் வெளியேறியதாக பாடசாலையிலுள்ள சிசிரிவி காட்சிகள் சுட்டிக்காட்டினாலும், மாலை 4.32 மணியளவிலேயே வெளியேறியதாக பாடசாலை தனக்கு கூறியதாக தாயார் கூறுகிறார்.
அத்தோடு, பாடசாலை மதியம் 3.00 மணி முதல் மாணவியின் பெற்றோருடன் தொடர்பு கொண்டிருந்தது. எனவே முன்பே அவர்கள் என்னிடம் தெரிவித்திருந்தால், என் மகனைக் காப்பாற்றியிருக்க முடியும். அவரது உயிரைக் காப்பாற்ற எனக்கு ஒரு சிறிய வாய்ப்பு மட்டுமே கிடைத்தது,
ஏனெனில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் எனது மகன் மாலை 4.45 மணியளவில் விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என நான் நம்புகிறேன். மதியம் 3.00 மணி முதல் 4.00 மணி வரை பாடசாலை மற்றும் மாணிவியின் பெற்றோர்கள் எனது மகனுடன் தொடர்பு கொண்டிருந்தனர், அவர்கள் சில ஆபத்தை உணர்ந்ததால், அந்த நேரத்தில் அவர்கள் பொலிஸாரையும் தொடர்பு கொண்டுள்ளனர் என அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.