பாகிஸ்தானில் தாய்க்கு 2-வது திருமணம் செய்து வைத்த மகன்: சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு

by smngrx01

தாய்க்கு 2-வது திருமணம் செய்து வைத்த மகனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளைஞர் அப்துல் அஹத். இவரும், இவரது தாயாரும் இஸ்லாமாபாதில் வசித்து வருகின்றனர். அப்துல் அஹத்துக்கு தந்தை இல்லை.

இந்நிலையில் தனது தாயின் விருப்பப்படி அவருக்கு 2-வது திருமணத்தை அப்துல் அஹத் செய்து வைத்துள்ளார். இதுதொடர்பான பதிவும், வீடியோவும் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. தாய்க்கு 2-வது திருமணம் செய்து வைத்த மகனுக்கு ஏராளமானோர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்துல் அஹத் கூறும்போது, “நான் எனது தாயார் மீது அளவு கடந்த அன்பை வைத்துள்ளேன். அதைப் போலவே, எனது தாயாரும், என்னை தனது உயிரினும் மேலாக பார்த்து வருகிறார். கடந்த 18 ஆண்டுகளில் என்னால் இயன்றவற்றை செய்து எனது தாயாரின் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்ற முயற்சி செய்து வருகிறேன். கடந்த 18 ஆண்டுகளாக அவர் எனக்குச் செய்தவற்றை வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாது.

அவர் எங்களுக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்துள்ளார். எனது தாயார் அமைதியான வாழ்க்கைக்கு தகுதியானவர். இந்நிலையில் எனது தாயாரை, ஒருவர் விரும்பித் திருமணம் செய்ய முடிவு செய்து அதை என்னிடம் தெரிவித்தார். இதையடுத்து தாயின் ஒப்புதல் பெற்று அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தேன். ஒரு மகனாக நான் சரியான செயலைச் செய்தேன் என்று நினைக்கிறேன். 18 ஆண்டுகளுக்கு பிறகு காதலிலும், வாழ்க்கையிலும் 2-வது வாய்ப்பை பெற என் தாயாரை ஆதரித்தேன்.

எனது தாயாரின் 2-வது திருமணம் குறித்து வெளியுலகுக்குச் சொல்வதற்கு பல நாட்களாக பயந்து கொண்டிருந்தேன். ஆனால் இப்போது நீங்கள் காட்டும் அன்பும், பாசமும் என்னை உணர்ச்சி பெருக்கில் மூழ்கடிக்கிறது. எங்களது இந்த முடிவுக்கு மதிப்பளித்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்துல் அஹத்தின் இந்த வீடியோ வைரலான நிலையில் அப்துல் அஹாத்தின் முற்போக்கான நடவடிக்கையை இணையதளத்தில் பலரும் பாராட்டி பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்