இந்தியாவில் ரயில்களுக்கு எதன் அடிப்படையில் பெயரிடப்படுகிறது? பொது மக்களும் பெயர்களை தேர்ந்தெடுக்கலாமா?
- எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
- பதவி, பிபிசிக்காக
வைகை, நெல்லை, கன்னியாகுமரி, பொதிகை, கோதாவரி, கிருஷ்ணா, நாகாவலி, ஷதாப்தி, மும்பை, சென்னை, விசாகப்பட்டினம், திருமலை, பூரி, கரீப் ரத், சிம்ஹாத்ரி…
இவை அனைத்தும் ஆறுகள், மலைகள், நகரங்கள், கோவில்களின் பெயர்கள் மட்டுமல்ல, இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் ரயில்களின் பெயர்களும் கூட.
ஆனால், யார் இந்த ரயில்களுக்கு பெயர் சூட்டுவது? பெயர்களை வழங்கும்போது என்ன காரணிகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன?
அனைத்து ரயில்களுக்கும் அதிகாரப்பூர்வமாக பெயர் உள்ளனவா? பெயர் இல்லாத ரயில்கள் உள்ளனவா? பெயர் வழங்குவதற்கு பின்னால் நடைபெறும் பணிகள் யாவை?
ரயில்களின் தனித்துவமான பெயர்கள்
கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தின்,ரயில்வே பயனர்கள் ஆலோசனைக் குழுவின் (ZRUCC) உறுப்பினரான காஞ்சுமூர்த்தி ஈஸ்வர், ரயில்களுக்கு பெயர் கொடுக்கும் முறை குறித்து பிபிசியிடம் விளக்கினார்.
“ரயில்வே, நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பு. இந்த அமைப்பு, தினமும் ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்கி, கோடிக்கணக்கான பயணிகளை கொண்டு செல்கிறது.” என்கிறார் அவர்.
ரயில்களுக்கு தனிப்பட்ட பெயர்கள் உள்ளன. நீங்கள் ஷதாப்தி, ராஜ்தானி, வந்தே பாரத், வைகை, அனந்தபுரி, கோதாவரி மற்றும் திருமலா போன்ற பெயர்களைக் கேள்விப்பட்டிருக்கலாம்.
“பொதுமக்கள் வழங்கும் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் தவிர, ரயில்களுக்கு பெயர் வைப்பது தொடர்பாக பல காரணங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன.” என்கிறார் ஈஸ்வர்.
“அதாவது, ரயில்கள் இயக்கப்படும் பகுதிகளின் தனிச்சிறப்புகள், ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்ட சமயம், ரயில்கள் இயக்கப்படும் பகுதிகளின் அம்சங்கள், அங்குள்ள வழிபாட்டு இடங்கள், மற்றும் நதிகள் போன்றவை கருத்தில் கொள்ளப்படுகின்றன” என ஈஸ்வர் கூறுகிறார்.
கோதாவரி எக்ஸ்பிரஸ்: இந்த ரயில் பிப்ரவரி 1, 1974 அன்று தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
ஆரம்ப காலத்தில் மேற்கு கோதாவரி மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள 9 ரயில் நிலையங்களில் இந்த ரயிலின் சேவை வழங்கப்பட்டது. இதனால் கோதாவரி மாவட்ட மக்கள் அதில் வந்து செல்வது வழக்கம். அதன் பிறகு, இந்த ரயிலுக்கு அதிகாரப்பூர்வமாக கோதாவரி நதியின் பெயரால் கோதாவரி என்று பெயரிடப்பட்டது.
கரிப் ரத்: ஏழைகளின் தேர் என்று பொருள். ஏழை மக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் குளிரூட்டப்பட்ட பயணத்தை வழங்கும் நோக்கத்தில் 2005-ஆம் ஆண்டு ரயில்வே துறையால் இது தொடங்கப்பட்டது. ஏழைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ரயில் என்பதால் அதற்கு கரிப் ரத் (கரீப் என்றால், தமிழில் ஏழை என்று பொருள்) என்று பெயர் சூட்டப்பட்டதாக முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்திருந்தார்.
துரந்தோ எக்ஸ்பிரஸ்: பெங்காலி மொழியில் துரந்தோ என்றால் ‘எந்தப் பிரச்னையும் இன்றி சீராகப் போகிறது’ என்று பொருள். இந்த ரயில் குறைந்த ஸ்டேஷன்களில் நின்று, நீண்ட தூரம் பயணிக்கிறது. அதனால் இந்த ரயிலுக்கு துரந்தோ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஷதாப்தி எக்ஸ்பிரஸ்: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நூற்றாண்டு விழாவில் 1989இல் தொடங்கப்பட்டது. அதனால் இதற்கு ஷதாப்தி என்று பெயர். (ஷதாப்தி என்ற சொல்லுக்கு தமிழில் நூற்றாண்டு என்று பொருள்)
திருமலா எக்ஸ்பிரஸ்: இது விசாகப்பட்டினத்திலிருந்து திருப்பதிக்கு செல்லும் ரயில். திருப்பதியில் பெருமாளை தரிசிக்கும் பக்தர்களை மனதில் வைத்து இந்த ரயில் இயக்கப்பட்டதால் இதற்கு திருமலை என்று பெயர்.
சபரி எக்ஸ்பிரஸ்: இந்த ரயில் ஹைதராபாத் மற்றும் திருவனந்தபுரம் இடையே இயக்கப்படுகிறது. இந்த ரயில் சபரிமலை செல்லும் பயணிகளுக்கு ஏற்றது. அதனால் சபரி என்று பெயர் சூட்டப்பட்டது.
திருமலை, பூரி, சபரி போன்ற தனித்துவமான பெயர்கள் குறைவு. பெரும்பாலான ரயில்களுக்கு அவை சென்று சேரும் இடங்களே பெயர்களாக மாறுகின்றன. உதாரணத்திற்கு பெங்களூர்-சென்னை மெயில், சென்னை-ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ், ஹவுரா-மும்பை மெயில் போன்றவை.
பெயர் வைப்பதற்கு முந்தைய நடைமுறைகள்
“எந்தவொரு ரயிலுக்கும் பெயர் சூட்டும்போது, அந்த ரயில் பயணிக்கும் பகுதிகளில் உள்ள மக்களின் கருத்துகளுக்கே ரயில்வே துறை முன்னுரிமை அளிக்கிறது. அதனால்தான் ரயில்வே துறை அவர்களின் ஆலோசனைகளையும் எடுத்துக் கொள்கிறது.”
“ஒரு ரயிலுக்கு குறிப்பிட்ட பெயர் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று மக்கள் கருதினால், உள்ளூர் ரயில் நிலையத்திலோ அல்லது உள்ளூர் ரயில்வே அலுவலகத்திலோ உள்ள ஆலோசனைப் பெட்டியில் தங்கள் யோசனைகளைச் சமர்ப்பிக்கலாம். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கும் கொண்டு செல்லலாம்” என்று ஈஸ்வர் கூறுகிறார்.
விசாகப்பட்டினம் – மகபூப்நகர் இடையே இயக்கப்படும் ரயிலுக்கு வால்டையர் எக்ஸ்பிரஸ் எனப் பெயரிட கோரிக்கை எழுந்துள்ளது.
விசாகப்பட்டினம் மற்றும் மும்பை இடையே இயங்கும் (18519/18520) ரயிலுக்குப் ‘ருஷிகொண்டா எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் வைத்திட பல கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த ரயில்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்படுவதால், அந்தக் குழுவின் சார்பில் அந்தக் கோரிக்கைகள் முதலில் வால்டையர் பிரிவுக்கு (கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தின் கீழ் உள்ள மூன்று ரயில்வே கோட்டங்களில் ஒன்று) அனுப்பப்படும்.
வால்டையர் பிரிவு அதிகாரிகள் அவற்றை புவனேஸ்வரில் உள்ள கிழக்கு கடற்கரை மண்டல தலைமையகத்திற்கு அனுப்புவார்கள். தேவைப்பட்டால், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகள் இணைக்கப்பட்டு, ரயில்வே அமைச்சகத்துக்கு அனுப்பப்படும்.
அங்கு அதிகாரிகள் ஆலோசித்து பெயர்களை முடிவு செய்வர். மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள பெயர்களை விட சிறந்த பெயர் ஏதேனும் இருந்தால், அவர்கள் அதற்கு முன்னுரிமை வழங்குவர்.
“பரிந்துரைகள் பெரும்பாலும் நதிகளின் பெயர்களுடன் வருகின்றன. அதாவது அனகப்பள்ளியில் உள்ள சாரதா நதியின் பெயரை ஒரு ரயிலுக்கு (சாரதா எக்ஸ்பிரஸ்) வைக்க கோரிக்கைகள் வந்துள்ளன” என்கிறார் ஈஸ்வர்.
இதற்கு சென்னையிலிருந்து, திருச்சிராப்பள்ளி வழியாக மதுரை செல்லும் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ ரயிலையும் ஒரு உதாரணமாக கூறலாம்.
“பல ரயில்களுக்கு நதிகளின் பெயர்கள் உள்ளன. கோதாவரி எக்ஸ்பிரஸ், கிருஷ்ணா எக்ஸ்பிரஸ், நாகாவலி எக்ஸ்பிரஸ் என பட்டியல் நீள்கிறது. லாலு பிரசாத் யாதவ் எப்படி ‘கரீப் ரத்’ என்ற பெயரைப் பரிந்துரைத்தாரோ, அதேபோல் சந்திரபாபு நாயுடு ‘ஜனம்பூமி எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரைப் பரிந்துரைத்தார். மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள பெயர்களுக்கு ரயில்வே துறை முன்னுரிமை அளிக்கிறது” என்கிறார் ஈஸ்வர்.
பெயர்கள் இல்லாமல் ரயில்கள் இயங்குகின்றனவா?
“சில ரயில்களுக்கு பெயர் இல்லை. பொதுவாக சிறப்பு ரயில்களுக்கு பெயர்கள் இருக்காது. ஏனெனில் போக்குவரத்தை மனதில் கொண்டு வாரத்தில் ஓரிரு நாட்கள் அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு அந்த ரயில்கள் இயக்கப்படும். ஆனால் சிறப்பு ரயில்களைத் தவிர, வழக்கமான சில ரயில்களுக்கும் பெயர்கள் இல்லை” என்று கூறும் ஈஸ்வர், “அவை ரயில்வே துறையின் குறிப்பிட்ட எண்களுடன் இயங்குகின்றன. இது வால்டையர் பிரிவிலிருந்து இயங்கும் 17 ரயில்களுக்கும் பொருந்தும்,” என்கிறார்.
“அப்போதைய வால்டையர் கோட்ட ரயில்வே மேலாளர் அனுப் சத்பதி, 2022 ஜூலையில் ரயில்வே துறைக்கு கடிதம் எழுதினார். அதில் 17 பெயர்களைக் குறிப்பிட்டிருந்தார், ருஷிகொண்டா எக்ஸ்பிரஸ், ஸிம்ஹாச்சலம் எக்ஸ்பிரஸ், குருசுரா எக்ஸ்பிரஸ், சாகரகன்யா எக்ஸ்பிரஸ், கோஸ்தனி எக்ஸ்பிரஸ், சவுத் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் (இது விசாகப்பட்டினத்தை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய ரயில்வே மண்டலத்தின் பெயர்). இந்த கோரிக்கை குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை,” என்றும் ஈஸ்வர் பிபிசியிடம் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மண்டலத்திலும் பெயர்கள் இல்லாமல் எண்களால் குறிப்பிடப்பட்டுள்ள ரயில்கள் உள்ளன.
“ரயில்களின் எண்களை நினைவில் வைத்துக்கொள்வது மிகவும் கடினமானது. இதனால் பயணிகள் குறிப்பிட்ட ரயில்களைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதிலும் பயணசீட்டுகளை வாங்குவதிலும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்” என்கிறார் ஈஸ்வர்.
புதிய ரயிலின் பெயரை மக்கள் எப்படி அறிவார்கள்?
மக்களின் ஆலோசனைகள், அதிகாரிகள் மற்றும் சங்கங்களின் முயற்சியால் ரயில்களுக்கு பெயர் வைக்கப்பட்டாலும், அந்தப் பெயர்களை மக்களுக்கு தெரியப்படுத்துவது ரயில்வே துறையின் பொறுப்பு.
ரயிலுக்கு புதிய பெயர் வைத்தால், நாளிதழ், தொலைக்காட்சி போன்றவற்றில் விளம்பரம் செய்து அறிவிக்கப்படும். அதன் மூலம் ரயில்களின் பெயர்கள் பிரபலமடையும். பயணசீட்டுகளில் ரயிலின் பெயரை அச்சிட்டு வெளியிடுவதால் பொதுமக்களுக்கு அந்த ரயிலின் பெயரை புரிந்துகொள்வது எளிதாகிறது.
மேலும், ஆன்லைன் பயணச்சீட்டு முன்பதிவு தளத்தில் புதிய பெயருடன் பயணச்சீட்டுகளை வெளியிடுவதன் மூலம், சம்பந்தப்பட்ட ரயில்களின் பெயரை பொதுமக்கள் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு