by adminDev2

இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் இருக்கும் ஒரு சில கோமாளிகள் ஒரு சில கோமாளி ஊடகங்களை வைத்து கட்சிக்குள் பிரச்சினைகள் இருப்பதுபோன்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்தமுனைவதாக தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் மாபெரும் இரத்ததானமுகாம் நேற்று (29) நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் பாரியளவிலான இரத்தப்பற்றாக்குறையினை குறைக்கும் வகையில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினருடன் இணைந்து இந்த இரத்ததான முகாம் பெரியகல்லாறு இந்துக்கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் தலைவர் அ.அகிலன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் விவேக், பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தின் வண்ணக்கர் கமல்ராஜ், பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயம் மற்றும் வடபத்திரகாளியம்மன் ஆலய தலைவர் சி.பேரின்பராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த சாணக்கியன்,

இலங்கை தமிழரசுக்கட்சியானது பழமை வாய்ந்த கட்சியாகும். 75 ஆவது ஆண்டு நிறைவு பவளவிழாவினை நடாத்தும் பொறுப்பும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தரப்பட்டிருக்கின்றது.

75 ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ள ஒரு பழம்பெரும் கட்சிக்கான கோட்பாடுகள், கட்டுப்பாடுகள், நடைமுறைகள் உள்ள கட்சியாகும்.

தமிழரசுக் கட்சிக்குள் தொடர்ந்து குழப்பம் இல்லை. ஒருசில கோமாளிகள் தாங்கள் விரும்பிய விடயத்தை ஊடகத்தில் கூறவிரும்பினால் எவரயாவது அழைத்து பேட்டி கொடுக்கின்றனர். இவர்கள் யாரென்றால் கட்சியில் உருப்படியான எந்தப் பதவியும் இல்லாதவர்கள்.

கட்சி சம்பந்தமாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்க முடியாதவர்கள். ஆனால் ஒருசில கோமாளி ஊடகங்கள் ஒரு சில கோமாளிகளை வைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சிக்குள் குழப்பங்கள் இருப்பதாக சமூகவலைத்தளங்கள், யூடியூப் சனல்களில் போலியான செய்திகளை வெளியிடுகின்றனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியானது இன்னும் ஒருசில மாதங்களில் பவளவிழாவை கொண்டாடும் அளவிற்கு ஒரு பழைமையான கட்சியாகும். அந்த பவளவிழாவை நடத்தும் பொறுப்பும் மட்டக்களப்பிற்குத் தரப்பட்டுள்ளது. அதனை மிகச்சிறப்பாக செய்வதற்கு நாங்கள் எத்தனிக்கின்றோம்.

75 வருடங்களாக இருக்கின்ற கட்சிக்கென்று சில கோட்பாடுகள், கட்டுப்பாடுகள், முறைகள் இருக்கின்றன. கடந்த ஒருசில வருடங்களாக கட்சியின் தலைவராக இருந்த மாவை.சேனாதிராஜா அவர்கள் எந்தவொரு விடயத்திற்கும் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் கட்சித் தீர்மானங்களுக்கு வலுவில்லாத வகையில் கட்சித் தீர்மானங்களை அவரே மீறி கட்சிக்குள் கட்டுப்பாடுகள் இல்லாத வகையில் நான்கு வருடங்களாக கட்சியை கொண்டு சென்றதன் காரணமாகவே கட்சிக்குள் குழப்பங்கள் இருப்பதுபோல தெரிந்தது.

நேற்றைய தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய புதிய தலைவராக அல்லது கட்சியினுடைய மூத்த உறுப்பினர் சி.வி.கே.சிவஞானம் ஐயா அவர்களை தெரிவு செய்திருக்கின்றனர்.கட்சியினுடைய அடுத்த மாநாடு வரை அவருக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது குழப்பமான ஒரு செயற்பாடல்ல.

கட்சி யாப்பின்படி கட்சியினுடைய விதிகளை மீறி கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களை நீக்குவதற்கு யாப்பிலே இடமிருக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தலிலே கட்சித் தீர்மானத்திற்கு மாறாக தமிழரசுக் கட்சியை அழிக்க வேண்டும், உடைக்க வேண்டும் என்று நினைத்தவர்களுடன் இணைந்து கட்சிக்கு முரணாக நடந்துகொண்ட பொது வேட்பாளராக களமிறங்கிய அரியநேத்திரன் அவர்களை கட்சியிலிருந்து நீக்கியிருக்கின்றோம்.

இதனை ஒரு குழப்பம் என்று யாரும் சொல்ல முடியாது. இதனை கட்சியை சுத்தப்படுத்தும் ஒரு செயற்பாடாகவே பார்க்க வேண்டும்.

வைத்தியர் சிவமோகன் அவர்கள் பாராளுமன்றத் தேர்தல் நடந்தபோது கட்சியினுடைய வேட்பாளருக்கு எதிராக பல போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வன்னி மாவட்டத்தில் எமது கட்சிக்கு பின்னடைவு வரக்கூடிய வகையில் செயற்பட்டவர்.

வேறுசில முறைப்பாடுகளும் அவரைப்பற்றி வந்தது. அதனை ஊடகத்தில் நான் சொல்வது பொருத்தமில்லை. அந்த முறைப்பாடுகளை விசாரிக்கும் வரை அவரை இடைநிறுத்தியிருக்கின்றோம்.

ஒரு கட்சியினுடைய வளர்ச்சிக்கு முரணாக,கட்சியை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கின்ற ஒருவரை விசாரணை செய்ய வேண்டும். அதுவரை அவரை இடைநிறுத்தியிருக்கின்றோம். இனிவரும் காலங்களில் கட்சிக்குள் நான் தவறு செய்தாலும் என்னையும் இடைநிறுத்தி விசாரியுங்கள். அப்படியான கட்டுக்கோப்புடன் இருந்தால்தான் கட்சிமீது மக்களுக்கு நம்பிக்கை வரும்.

நேற்றைய தினம் நடந்த இந்த செயற்பாடுகளின் காரணமாக சில ஊடகவியலாளர்களுடைய தேவைக்காக கட்சியைப்பற்றி தவறான கருத்துக்களை தெரிவிக்கும் நபர்கள் அதனை செய்வதற்கு யோசிப்பார்கள். இது நடக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலின் போதும் பாராளுமன்றத் தேர்தலின்போதும் கட்சியின் தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டவர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. கட்சியினுடைய தலைவரா, செயலாளரா, பொருளாளரா என்ற பாகுபாடின்றி கட்சித் தீர்மானத்திற்கு மாறாக செயற்பட்ட அனைவருக்கும் எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும்.

இதுதான் நேற்றைய தினம் நடந்தது. தயவு செய்து தமிழரசுக் கட்சிக்குள் தொடர்ந்து குழப்பங்கள் என்ற மனநிலையிலிருந்து வெளியில் வந்து தமிழரசுக் கட்சி சரியான பாதையில் செல்கின்றது என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்