புத்தாண்டு உறுதிமொழிகள் தோல்வியடைவது ஏன்? வெற்றிகரமாகப் பின்பற்ற என்ன செய்ய வேண்டும்?
- எழுதியவர், க.சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியன்று, உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்று உறுதிமொழி எடுத்தேன். அதற்கு அடுத்த இரண்டு புத்தாண்டுகளிலும் இதே உறுதிமொழியை எடுத்தேன்.
கடந்த 2022-ஆம் ஆண்டில் நான் நான்காவது முறையாக அதே உறுதிமொழியை எடுக்கும்போது என் உடல் எடை 93 கிலோ. முதல்முறை உறுதிமொழி எடுக்கும்போது இருந்ததைவிட 10 கிலோ கூடியிருந்தேனே ஒழிய சிறிதும் குறையவில்லை.
இப்போது 2024இன் இறுதியை நெருங்கிவிட்டோம். அதிலிருந்து 20 கிலோ குறைத்துள்ளேன். முதல் மூன்று புத்தாண்டுகளில் முயன்றபோது என்னால் நிறைவேற்ற முடியாத உறுதிமொழி, அதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் சாத்தியமானது எப்படி?
நாம் புத்தாண்டுகளில் எடுக்கும் உறுதிமொழிகளின் தன்மை மற்றும் சாத்தியக்கூறுகளின் அடிப்படையிலேயே, அதை நம்மால் பின்பற்ற முடியுமா என்பதும் அடங்கியிருப்பதாக வல்லுநர்கள் நம்புகின்றனர்.
புத்தாண்டு உறுதிமொழி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? அதை வெற்றிகரமாகப் பின்பற்ற நாம் என்ன செய்ய வேண்டும்? இதைத் தெரிந்துகொள்ள சில நிபுணர்களிடம் பேசினோம்.
மக்கள் புத்தாண்டு உறுதிமொழிகளை எடுப்பது ஏன்?
புத்தாண்டு உறுதிமொழி என்பது ஒருவர் தனது சுய வளர்ச்சிக்காக, சுய நன்மைகளுக்காக நிர்ணயிக்கும் ஓர் இலக்கு. அத்தகைய இலக்கை ஆண்டின் எந்தக் காலகட்டத்தில் வேண்டுமானாலும் நிர்ணயிக்கலாம். ஆனால், அதை ஏன் ஆண்டின் முதல் நாளில் நிர்ணயிக்க வேண்டும்?
இந்தப் பழக்கம் உலகம் முழுவதும் பல்வேறு கலாசாரங்களில் இருக்கிறது. 4,000 ஆண்டுகளுக்கு முன்பு பாபிலோனிய நாகரிகத்தில் இது முதல்முறையாகப் பதிவு செய்யப்பட்டதாகப் பல்வேறு ஆய்வுகள் கூறினாலும், இந்தப் பழக்கம் அதற்கும் முந்தையதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
உலகம் முழுக்கப் பல்வேறு கலாசாரங்களில், மக்கள் புத்தாண்டின்போது உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. ஆனால், பெரும்பாலோனோர் அவற்றைப் பின்பற்றுவதில் தோல்வியைச் சந்திப்பதாகக் கூறுகிறார் மனநல மருத்துவர் கௌதம் தாஸ்.
மக்கள் புத்தாண்டு உறுதிமொழிகளை எடுப்பது ஏன் என்பது குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய அவர், “புதிய ஆண்டு தொடங்குவது என்பது மக்களிடையே ஒரு புதிய தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. ஆகையால் அந்த நாளில் வாழ்வில் புதிதாக ஒரு விஷயத்தைத் தொடங்க வேண்டியுள்ளதாகக் கருதுகின்றனர்,” என்று கூறினார்.
அப்படி ஆண்டின் முதல் நாளில் தொடங்கப்படும் ஒரு விஷயம், ஆண்டு முழுவதும் நல்லபடியாக நடக்கும் என்றும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்றும் ஒரு நம்பிக்கை நிலவுவதாகக் கூறுகிறார் மருத்துவர் கௌதம் தாஸ்.
“புதிய ஆண்டின் தொடக்கத்தில் தங்களது தனிப்பட்ட வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் வரும். அதற்குக் காரணம், அன்றைய தினத்தில் இருக்கும் நேர்மறையான, மகிழ்ச்சியான சூழல்,” என்கிறார் உளவியல் நிபுணரான சித்ரா அரவிந்த்.
அதோடு, “பெரும்பான்மை மனிதர்களுக்கு சுயக் கட்டுப்பாடு சவாலான ஒன்றாக இருப்பதாக” குறிப்பிட்ட கௌதம் தாஸ், “தங்கள் சுயக் கட்டுப்பாட்டிற்கு வெளியிலிருந்து ஓர் உந்துதல் தேவை என நினைக்கின்றனர். அப்படிப்பட்ட ஓர் உந்துதலாக புத்தாண்டு உறுதிமொழி இருக்கிறது” என்று விளக்கினார் கௌதம் தாஸ்.
பொதுவாக, உறுதிமொழிகள், புதிய தொடக்கம் போன்ற விஷயங்கள் புத்தாண்டுடன் இணைக்கப்படுகின்றன. ஆனால், இவை அத்துடன் மட்டுமே நின்றுவிடுவதில்லை.
புதிய தொடக்கம் என்பது ஒவ்வொரு வாரத்தின் முதல் நாளாகவும் கருதப்படும் திங்கள் கிழமைகளில்கூட நடப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதன்படி, மக்கள் புத்தாண்டுகளின்போது மட்டுமின்றி வாரத் தொடக்க நாளான திங்கள் கிழமைகளிலும் தங்கள் சுய இலக்குகளை நிர்ணயிப்பதாகத் தெரிய வந்தது.
அதாவது எந்தவிதமான விடுமுறைகளாக இருந்தாலும், அது முடிந்த பிறகு இத்தகைய இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளும் பழக்கம் மக்களிடம் இருக்கிறது.
காணாமல் போகும் உறுதிமொழிகள்
உடல் எடையைக் குறைக்க வேண்டும், தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும், பணம் சேமிக்க வேண்டும், உணவுமுறையைச் சீராக்க வேண்டும், விரும்பிய தொழிலைச் செய்ய வேண்டும், குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும், புதிய பொழுதுபோக்கைத் தொடங்க வேண்டும், புகைப்படிப்பதை அல்லது குடிப்பதை நிறுத்த வேண்டும்.மக்கள் பெரும்பாலும் தங்களுக்கென நிர்ணயித்துக் கொள்ளும் இலக்குகளில் ஒன்றாக இவை இருக்கின்றன.
ஆனால், இதில் மில்லனியல் (1980களின் தொடக்கம் முதல் 1990களின் பிற்பகுதி வரை பிறந்தவர்கள்) தலைமுறையினர்தான் புத்தாண்டு உறுதிமொழிகளை அதிகம் எடுப்பதாகவும் அடுத்தபடியாக அவர்களுக்கு முந்தைய தலைமுறை இருப்பதாகவும் யுகவ் தரவுத்தளம் கூறுகிறது.
அப்படி எடுக்கப்படும் புத்தாண்டு உறுதிமொழிகளில், உடல் ஆரோக்கியம், பழக்கங்களை மாற்றுவது ஆகியவையே பெரும்பான்மையாக இடம்பெறுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
கடந்த 2020-ஆம் ஆண்டில் இதுகுறித்துப் பரவலாக நடத்தப்பட்ட ஆய்வு, உறுதிமொழி எடுப்பவர்களில் 55 சதவீதம் பேர் மட்டுமே அதைத் தொடர்ந்து பின்பற்றுவதாகக் கூறியது. ஆனால் மனநல மருத்துவர் கௌதம் தாஸ் மற்றும் ஆலோசகர் சித்ரா அரவிந்த், நடைமுறையில் இந்த அளவு இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்கின்றனர்.
அதற்குக் காரணம், மக்கள் எடுக்கும் உறுதிமொழிகள் நடைமுறைச் சாத்தியமில்லாத வகையில் இருப்பதே என்கிறார் மருத்துவர் கௌதம் தாஸ்.
உறுதிமொழிகளை பின்பற்ற முடியாதது ஏன்?
மக்கள் தங்கள் வாழ்வில் மாற்றங்களைச் செய்துகொள்ள நினைக்கும்போது அதற்கென அவர்களுக்கு ஒரு தொடக்கப் புள்ளி தேவைப்படுகிறது. புத்தாண்டு அந்தத் தொடக்கப்புள்ளியாகச் செயல்படுவதால், பெருவாரி மக்கள் அதைச் செய்கின்றனர்.
ஆனால், அப்படி எடுக்கும் உறுதிமொழிகளைப் பின்பற்ற முடியாமல் போவது ஏன்?
உறுதிமொழிகளைச் சரியாகப் பின்பற்றுவது சவாலாக இருக்கக் காரணம், நடைமுறைச் சாத்தியமில்லாத, திட்டமிடப்படாத இலக்குகளே என்கின்றனர் மனநல வல்லுநர்கள்.
மருத்துவர் கௌதமின் கூற்றுப்படி, இரண்டு விதமான உறுதிமொழிகள் உள்ளன. ஒன்று, சுய அவமானத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவன. இரண்டாவது, சுய ஆர்வத்தின் பெயரில் அல்லது உள்ளார்ந்த தூண்டுதலின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவன.
ஒருவர் தனது புகைப்பிடிக்கும் பழக்கம் அல்லது குடிப்பழக்கம் குறித்த பிறரின் வசைப் பேச்சுகள் அல்லது அவமானகரமான பேச்சுகளால் அதை நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்து, உறுதிமொழி எடுத்தால், அது சுய அவமானத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் இலக்கு.
இத்தகைய உறுதிமொழிகளை முற்று முழுதாகப் பின்பற்றுவது மனிதர்களுக்குச் சவாலானது என்கிறார் மருத்துவர் கௌதம். “ஏனெனில், இது அவர்களுக்குச் சுய அக்கறையின் பெயரில் வருவன அல்ல, தன் மீதான பிறரின் பார்வையால் வந்தவை. இத்தகைய எதிர்மறையான இலக்குகள் ஒருவரை முன்னோக்கிக் கொண்டு செல்ல வழிவகுக்காது,” என்கிறார்.
ஆனால், அதே உறுதிமொழியை எடுக்க ஒருவர் தனது உடல் ஆரோக்கியம் மீதான சுய அக்கறையால் உந்தப்பட்டால், அதில் நேர்மறையான தாக்கம் இருக்கும். இத்தகைய உறுதிமொழிகள் ஆண்டு முழுவதும் பின்பற்றப்பட வாய்ப்புகள் உள்ளன என்றும் விவரித்தார் கௌதம்.
இருப்பினும், அத்தகைய உறுதிமொழி நடைமுறைச் சாத்தியமானதாக இருக்க வேண்டும்.
“ஒவ்வொரு புத்தாண்டின்போதும் உடற்பயிற்சிக் கூடங்களில் கட்டணம் செலுத்திப் பதிவு செய்வோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், அதை தொடர்ந்து பின்பற்றுவோர் எண்ணிக்கை குறைவாக இருக்கும்
முறையான திட்டமிடல் இல்லாததும், தன்னால் எது முடியும், முடியாது என்பதை உணராததும்தான் இதற்குக் காரணம்” என்கிறார் மனநல ஆலோசகர் சித்ரா.
உறுதிமொழிகளை வெற்றிகரமாகப் பின்பற்ற என்ன செய்ய வேண்டும்?
மனநல ஆலோசகர் சித்ராவின் கூற்றுப்படி, தள்ளிப்போடுதல் குணமே, உறுதிமொழிகள் தோல்வியடைய முக்கியக் காரணம். “இன்று ஒருநாள் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, நாளை முதல் உடற்பயிற்சி செய்துகொள்ளலாம் என்று நினைப்பதில் இது தொடங்குகிறது.”
ஒருவர் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்வது மட்டுமே முக்கியமில்லை, அதை எப்படிப் பின்பற்றுவது, தினசரி எப்படிச் செயல்படுத்துவது என்பதைத் திட்டமிட வேண்டும் என வலியுறுத்துகிறார் மருத்துவர் கௌதம்.
“உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்று முடிவு செய்வதைவிட, தன்னால் எந்த அளவிலான உடற்பயிற்சிகளைச் செய்ய முடியும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப திட்டமிட வேண்டும்,” என்கிறார் அவர்.
அதாவது, அளவுக்கு மீறிய உடற்பயிற்சிகளைச் செய்தால், உடல் வலியால் ஒன்றிரண்டு நாட்களில் வேண்டாம் என்ற மனநிலை வந்துவிடும். அதுவே, தினசரி 10 அல்லது 20 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து, அதைச் சீராகச் செய்து வந்தால் அதன் பலன்களைக் காணும்போது, அந்த ஆர்வம் அதிகரிக்கும்.
அப்படியின்றி, “புத்தாண்டின் குதூகலத்தில் முடிவெடுத்து ஜிம்மில் சேர்ந்து, ஒன்றிரண்டு நாட்களில் அதீதமாக உடற்பயிற்சி செய்துவிடுவார்கள். அதன் விளைவாக ஏற்படும் உடல் வலியைத் தாங்க முடியாமல் ஒரே வாரத்தில் அதை நிறுத்தியும் விடுவார்கள்,” என்கிறார் சித்ரா.
இதைத் தவிர்க்க, “எந்தவித உறுதிமொழியாக இருந்தாலும், அதில் தனது அப்போதைய நிலையை உணர்ந்து, அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். அதன்படி, ஒரு மாதம், ஆறு மாதம், ஒரு வருடம் என இலக்குகளைப் பிரித்து நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்,” என்று அறிவுறுத்துகிறார் கௌதம்.
குறிப்பாக எந்தவொரு பழக்கத்தையும் 21 நாட்கள் தொடர்ந்து செய்தால் அது பழகிவிடும் என்ற கூற்றை எடுத்துரைக்கிறார் சித்ரா. “அனைத்து விதமான பழக்கங்களுக்குமே 21 நாட்கள் என்ற காலக் கணக்கீடு பொருந்தாது. ஒவ்வொரு பழக்கத்தின் தன்மைக்கும் ஏற்ப நமது மூளையின் நரம்பியல் மண்டலம் அதை ஏற்றுக்கொள்ளும் காலமும் மாறுபடும். ஆனால், சராசரியாக 21 நாட்களுக்கு அதை ஒருநாள் விடாமல் தொடர்ச்சியாகச் செய்வதற்கு முதலில் பழகுவது அடிப்படையானது. அப்படி இடையில் ஒருநாள் தவிர்த்தாலும், அந்தச் செயல்முறையை மீண்டும் தொடங்க வேண்டும்,” என்று கூறுகிறார்.
தன்னால் இயன்ற ஒரு குறிப்பிட்ட இலக்கைத் தீர்மானிப்பது, அதை அடைவதற்கு நடைமுறைச் சாத்தியமான திட்டத்தை வகுப்பது, தவிர்க்க வேண்டிய விஷயங்கள் மீதான ஈடுபாட்டைத் தூண்டும் சந்தர்ப்பங்களைத் தவிர்ப்பது, தடைகளை உணர்ந்து அவற்றை ஏற்றுக்கொண்டு முன்னோக்கிச் செல்லத் தயாராக இருப்பது போன்ற படிநிலைகளைப் பின்பற்றுவது மிக முக்கியம் என்று வலியுறுத்துகிறார் கௌதம்.
இப்படியாக, ஒருவர் நிர்ணயிக்கும் புத்தாண்டு உறுதிமொழிக்கு ஏற்ப, சாத்தியப்படக்கூடிய இலக்குகளைத் திட்டமிட்டு சிறுகச் சிறுக, ஆனால் தொடர்ச்சியாகச் செய்தால், உறுதிமொழியை வெற்றிகரமாகப் பின்பற்ற முடியும் என்று மனநல வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
புத்தாண்டு உறுதிமொழிகளால் ஏற்படும் பின்விளைவுகள்
புத்தாண்டு உறுதிமொழிகளை வெற்றிகரமாகப் பின்பற்றுவதால் நன்மைகள் ஏற்படுவதைப் போலவே, அதைச் சரியாகப் பின்பற்றாமல் தவிர்ப்பதால் எதிர்மறை விளைவுகளும் இருப்பதாகக் கூறுகிறார் மனநல மருத்துவர் கௌதம்.
“இப்படிக் கற்பனை செய்து பாருங்கள். ஒருவர் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒரே உறுதிமொழியை ஏற்கிறார். ஆனால், ஒவ்வோர் ஆண்டும் அதை அடைவதில் தோல்வியடைகிறார்.”
“இது அவரது மனநலனின் மீது எதிர்மறையாகத் தாக்கம் செலுத்தும். அவரது தன்னம்பிக்கையை அது பாதிக்கும்,” என்கிறார் கௌதம்.
”நடைமுறையில் சாத்தியமே இல்லாத ஓர் உறுதிமொழியை எடுக்கும்போதே, ஒருவரின் தோல்வியும் முடிவாகிவிடுகிறது. அந்தச் சூழ்நிலையில், ஒருவருக்குத் தன் மீதே நல்ல அபிப்ராயம் ஏற்படாது. தன்னை தோல்வியின் அடையாளமாகப் பார்க்கத் தோன்றும்.”
இதனால், புத்தாண்டு உறுதிமொழிகள் சரியானவையாக இல்லையென்றால், அது ஒருவருக்கு நன்மைகளைவிட பின்விளைவுகளையே அதிகம் கொண்டு வரும் என்கிறார் மருத்துவர் கௌதம்.
உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்று நான் முடிவு செய்த முதல் மூன்று புத்தாண்டுகளில் இதே மனநிலையில்தான் இருந்தேன். ஆனால், நான்காவது முறையாக அதே உறுதிமொழியை எடுக்கும்போது எனது எடை மற்றும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச உடற்பயிற்சியை தினசரி செய்யலாம் என்று முடிவெடுத்தேன்.
அதன் விளைவாக, முதலில் அன்றாடம் ஏதாவதொரு உடற்பயிற்சியை செய்வதில் வெற்றி கண்டேன். அடுத்தபடியாக உணவுமுறையை மாற்ற வேண்டுமென்று இலக்கு நிர்ணயித்தேன்.
இப்படியாக சிறுகச் சிறுக அடையக்கூடிய இலக்குகளை நிர்ணயித்து அதை வெற்றிகரமாகச் செய்து, என் முழுமுதல் இலக்கான உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதில் வெற்றி கண்டேன்.
இந்த அணுகுமுறை குறித்துப் பேசியபோது, “எந்தவொரு விஷயத்தையும் நம்மால் ஒரே பொழுதில் அல்லது ஒரே ஆண்டில் செய்துவிட முடியாது. அதற்குத் தேவைப்படும் கால அளவை உணர்ந்து, அந்தத் தொலைவு வரை பயணிக்கத் தம்மைத் தயார் செய்துகொள்வதே, புத்தாண்டு இலக்குகளை நிர்ணயிப்பதில் இருக்கும் முதல் படி,” என்றார் மனநல மருத்துவர் கௌதம் தாஸ்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.