நீண்ட ஆயுட்காலத்துடன் வாழும் ரகசியத்தை சொல்லும் சிங்கப்பூர் மக்கள்
- எழுதியவர், லிண்ட்ஸே காலோவே
- பதவி,
-
நீண்ட ஆயுட்காலம் என்று வரும் போது, தெற்காசியாவில் உள்ள இந்த தீவு நகரைப் போன்று ஒரு சில இடங்கள் மட்டுமே உலக அளவில் எதிர்பாராத மாற்றத்தை அடைந்துள்ளன.
சிங்கப்பூரில் 1960-ஆம் ஆண்டில் பிறந்தவர்களின் சராசரி ஆயுட்காலம் என்பது 65 ஆண்டுகள்தான். ஆனால் இன்று சிங்கப்பூரில் பிறக்கும் ஒரு குழந்தை 86 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், கடந்த பத்தாண்டுகளில், அதாவது 2010-2020 காலகட்டத்தில் சிங்கப்பூரில் நூறு வயதைத் தாண்டியவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகியுள்ளது.
திட்டமிடப்பட்ட அரசு கொள்கைகள் மற்றும் முதலீடு காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சமீபத்திய மாற்றமே, “ப்ளூ ஸோன்” பட்டியலில் ஆறாவதாக சிங்கப்பூரை இணைக்க போதுமானதாக அமைந்துள்ளது. சிங்கப்பூர் இந்த பட்டியலில் 2023-ஆம் ஆண்டு இணைந்தது.
இந்த ப்ளூ ஸோன் என்ற பதத்தை நேஷனல் ஜியாகிரஃபி ஊடகவியலாளர் டான் ப்யூட்னெர் அறிமுகம் செய்தார். கலாசாரம், வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் சமுதாயம் போன்ற அம்சங்களின் கூட்டு விளைவாக அதிக காலம் ஆரோக்கியமாக மக்கள் உயிர்வாழும் பகுதிகள் ‘ப்ளூ ஸோன்’ என கருதப்படும்.
கடந்த சில பத்தாண்டுகளில் இந்த பட்டியலில் இடம் பெற்ற முதல் நாடு சிங்கப்பூர் ஆகும். இந்த பட்டியலை ப்யூட்னெர் ‘ப்ளூ ஸோன் 2.0’ என்று அழைக்கிறார். சிங்கப்பூர் மற்ற நாடுகளில் இருந்து தனித்து தெரிவதாக குறிப்பிடுகின்றனர்.
மற்ற நாடுகளில் பொதுவாக நன்றாக விரிவாக்கம் செய்யப்பட்ட கலாசார பழக்கவழக்கங்கள் தான் இந்த நீண்ட ஆயுட்காலத்தை உறுதி செய்கின்றன. உதாரணத்திற்கு க்ரீஸில் உள்ள இகரியா, கோஸ்டரிகாவில் உள்ள நிகோயா போன்ற பகுதிகளை குறிப்பிடலாம்.
ஆனால் சிங்கப்பூரில் மக்களின் ஆயுட்காலம் நீடிப்பதற்கு முன்னோக்கி சிந்திக்கும் கொள்கைகளே காரணம் என்று கூறப்படுகிறது.
எத்தனை ஆண்டுகள் வாழ்கின்றனர் என்பதோடு, எவ்வளவு தரமான வாழ்க்கையை இவர்கள் வாழ்கிறார்கள் என்பதும் இங்கே முக்கியமான ஒன்றாகும்.
எந்தெந்த கொள்கைகள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது என்று புரிந்து கொள்வதற்காக சிங்கப்பூர் மக்களிடம் பேசினோம். மேலும், நீண்ட காலம் வாழ்வதற்காக அவர்கள் வழங்கும் பரிந்துரைகளையும் கேட்டோம்.
ஒரு ஆரோக்கியமான மாற்றம்
அரசின் கொள்கைகள் காரணமாக ஆரோக்கியம் மற்றும் நலன்களில் ஏற்படும் மாற்றத்தை மக்கள் உணர்ந்திருந்தனர்.
நான் இங்கேயே பிறந்து வளர்ந்த காரணத்தால், இந்த சமூகத்தில் ஆரோக்கியம் தொடர்பான உணர்வுகளில் ஏற்பட்ட மாற்றங்களை நேரடியாக பார்த்தேன் என்று கூறுகிறார் ஃபிர்துஸ் ஸ்யாஸ்வானி.
நிதி ஆலோசனை வழங்கும் இணையமான ‘டாலர் பீரோவை’ நடத்தி வரும் அவர், “சிகரெட் மற்றும் மதுபானங்கள் மீது விதிக்கப்பட்ட கடுமையான விதி மற்றும் பொது இடங்களில் புகைபிடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை போன்றவை தனி நபர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் பொது இடங்களை தூய்மையாகவும் வைக்க உதவியது” என்று குறிப்பிடுகிறார்.
சர்க்கரை, உப்பு, தேங்காய்பால் போன்றவற்றை அதிகமாக உணவுகளில் பயன்படுத்துவதால், ப்ளூ ஸோன் அங்கீகாரம் வழங்கப்பட்ட பிறகு அவர் மிகவும் ஆச்சரியம் அடைந்துள்ளார். ஆனால் தற்போது கொள்கைகள் காரணமாக அதுவும் மாறி வருகிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.
தரமான உட்பொருட்களை கொண்ட உள்ளூர் உணவுகளை கருத்தில் கொண்டு, ஆரோக்கிய மேம்பாட்டு வாரியம், மக்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை பின்பற்ற தேவையான முன்னெடுப்புகளை மேற்கொண்டது என்று அவர் தெரிவிக்கிறார்.
“உணவுப்பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துக்களை பட்டியலிடுதல் கட்டாயமாக்கப்பட்டது. மேலும் குளிர்பானங்களில் சர்க்கரை அளவை குறைக்க வலியுறுத்தப்பட்டது. இதன் காரணங்களால் பொது ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன.
ஆனால் உண்மையில் இது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் ஊட்டச்சத்து பட்டியலிடப்பட்ட குளிர்பானங்களில் சர்க்கரை பெயர் இருப்பதை பார்த்தால் அதனை நான் தொடுவது கூட கிடையாது” என்று அவர் விளக்கினார்.
தரமான பராமரிப்பு சேவைகள் மற்றும் செலவுகளைக் கட்டுப்படுத்தும் திறன் போன்ற விசயங்களுக்காக சிங்கப்பூரின் சுகாதார அமைப்பு உலக அரங்கில் பல பாராட்டுகளைப் பெற்றன.
2023 ‘லெகட்டம் ப்ரோஸ்பெரிட்டி இண்டெக்ஸ்’ பட்டியலில், ஆரோக்கியம் மற்றும் சுகாதார சேவைகளை அணுகுவதற்கான சிறந்த நாடு என்ற பெயரைப் பெற்றது சிங்கப்பூர். எந்த நிதிச்சுமையும் இல்லாமல், அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை கிடைப்பதை சிங்கப்பூர் உறுதி செய்கிறது. அதே நேரத்தில், அவசர தேவைக்காக கையில் இருந்து பணம் செலவாவதை தடுக்கும் வகையில் தனியார் சேவைகள் மற்றும் சேமிப்பு நிதி திட்டங்களையும் அந்த நாடு கொண்டுள்ளது.
பசுமையான இடங்களுக்கு கவனம்
சுகாதார சேவைகள் மட்டுமே மக்களின் நீண்ட ஆயுட்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கவில்லை. பலமான பொது போக்குவரத்து திட்டங்கள், நடக்க மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட சில கொள்கைகளும் முக்கியமான பங்களிப்பை செய்து வருகின்றன.
சிங்கப்பூர் சுத்தமாகவும், அழகாகவும் இருக்க முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அது மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் அமைதியை வழங்குகிறது.
“நகர்ப்புற பகுதிகளில் பூங்காக்கள், தோட்டங்கள் மற்றும் இயற்கை காப்புகாடுகளை அறிமுகப்படுத்த அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது. அதனால் சிங்கப்பூர் தோட்ட நகரம் என்ற புகழைப் பெற்றுள்ளது” என்று கூறுகிறார் சாரு கோகடே.
அவர் சஃப்டி ஆர்கிடெக்ட்ஸ் என்ற நிறுவனத்தின் மூத்த பார்னராக (senior partner) உள்ளார். மேலும், ஸ்கை ஹேபிடட் குடியிருப்பு கோபுரங்கள், ஜூவல் சாங்கி விமான நிலையம் போன்ற புகழ்பெற்ற கட்டடங்களை உருவாக்கிய குழுவிலும் அவர் பணியாற்றினார்.
“15 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் வாழ்ந்த பிறகு, நகர்புற மறுமேம்பாட்டு மையம் எப்படி ஒரு நகரத்தை திட்டமிட்டுள்ளது என்பதை நினைத்து தொடர்ச்சியாக ஆச்சர்யம் அடைகிறேன். நிலைத்தன்மை, சிறப்பான நிலப்பயன்பாடு, நகர்ப்புறங்களில் பசுமையான இடங்களை உருவாக்குதல் போன்றவற்றிற்கு அவர்கள் கவனம் அளிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிங்கப்பூரின் சட்டங்கள் மிகவும் கடுமையானவை. அதுவும் கூட சுத்தமான, நன்கு பராமரிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு வழிவகை செய்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் அவருக்கு பிடித்தமான மற்றொரு இடம் சிங்கப்பூர் தாவரவியல் தோட்டங்கள். நகரத்தின் மத்தியில் அமைந்துள்ளது அந்த தோட்டம். யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள ஒரே ஒரு வெப்ப மண்டல தோட்டம் இதுவாகும்.
“அங்கே உள்ள ஆர்கிட் பூக்களின் வகைகள், தாவர ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்புக்காக கொடுக்கப்படும் கவனம் போன்றவை, அமைதி மற்றும் அழகை தேடும் இயற்கை ஆர்வலர்கள், குடும்பங்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கு ஒரு புகலிடமாக மாறியுள்ளது,” என்று சாரு கூறுகிறார்.
மக்கள் ஒன்று கூடும் இடமாக பொதுப்பூங்காக்கள் உள்ளன. நீடித்த ஆயுட்காலம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்கள் பலரும் ஆரோக்கிய வாழ்க்கைக்கு பூங்காக்கள் மிகவும் முக்கியமான ஒன்று என நம்புகின்றனர்.
“இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை, நிறைய பேர் பொது பூங்காக்கள், ஃபிட்னஸ் கார்னர்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களில் உடற்பயிற்சி செய்வதை உங்களால் காண இயலும். நகரம் முழுவதும் எளிமையாக அவற்றை அணுகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது,” என்று ஸ்யாஸ்வானி தெரிவிக்கிறார்.
இங்கே வர வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு, நீண்ட கடற்கரையைக் கொண்ட, நடப்பதற்கும், கடல் காற்றை அனுபவிப்பதற்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ள கிழக்கு கடற்கரை பூங்காவை அவர் பரிந்துரை செய்கிறார்.
என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?
சிங்கப்பூரில் வாழ்க்கை தரம் சிறப்பாக உள்ளது. அதே போன்று இங்கு வாழ்வதற்காக ஆகும் செலவுகளும் விலைவாசியும் அதிகம். உலகிலேயே வாழ்வதற்கு அதிக செலவாகும் நாடுகளில் பட்டியலில் சிங்கப்பூரும் உள்ளது.
பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் இங்கே வாழ்வதால், பன்முகத்தன்மை கொண்ட நாடாக இது அறியப்படுகிறது. சமூக ஒற்றுமைக்கு முன்னுரிமையை வழங்குகிறது அரசு. அவை சட்டங்கள் மற்றும் அமலாக்கத்தின் வாயிலாக நிலை நாட்டப்படுகிறது.
குப்பை போடுதல், பொது இடங்களில் புகை பிடிப்பது, போதைப் பொருட்கள் பயன்பாடு, போக்குவரத்து விதிகளை மீறுதல் உள்ளிட்ட விவகாரங்களுக்கு கடுமையான தண்டனைகளும், அபராதங்களும் விதிக்கப்படுகிறது.
ஆனால், அங்குள்ள மக்கள் பலரும் இத்தகைய சட்டங்கள் நாட்டை பாதுகாப்பானதாகவும், வாழ அழகான பகுதியாகவும் வைத்திருக்க உதவுகிறது என்று நம்புகின்றனர்.
மக்கள் தொகைக்கு தேவையானவற்றை கருத்தில் கொண்டு அரசு இங்கே கொள்கைகளை வகுத்து வருகிறது. வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், பொருளாதாரத்தை நிலை நிறுத்த தேவையான ஆதரவுகளை வழங்கவும், சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்று சாரு கூறுகிறார்.
வர்த்தக முதலீடு, பொருளாதார வளர்ச்சி, சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கும் ஒரு சூழலை உருவாக்குவதில் சிங்கப்பூரின் அரசியல் ஸ்திரத்தன்மை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நாடு அதன் பன்முகத்தன்மையை உணவு மற்றும் ஆண்டு திருவிழாக்கள் மூலம் கொண்டாடுகிறது. சீனப் புத்தாண்டு துவங்கி தீபாவளி வரை, சர்வதேச கலை நிகழ்வுகள் என்று அனைத்தையும் இந்த நாடு கொண்டாடுகிறது.
“வயது வித்யாசம் இல்லாமல் அனைவருக்கும் ஏதோ ஒன்றை இந்த நாடு வழங்கிக் கொண்டே இருக்கிறது. பல கலாசார சமூகமான சிங்கப்பூர் பல்வேறு பாரம்பரியங்களை பின்பற்றுகிறது. உயர்தர, துடிப்புமிக்க கலாசார அனுபவத்தை இங்கே வரும் சுற்றுலாவாசிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் சிங்கப்பூர் வழங்குகிறது,” என்று சாரு குறிப்பிடுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.