சிகிரியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

by wamdiness

சிகிரியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! சிகிரியா பிரதேசத்திற்கு விடுமுறைகாலமான இந்த நாட்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் அதிக எண்ணிக்கையில்  வருகை தருவதாக மத்திய கலாசார நிதியத்தின் சிகிரியா திட்ட முகாமையாளர் துசித ஹேரத் தெரிவிக்கின்றார்.

கடந்த 22ஆம் திகதி முதல் நாளாந்தம் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக 10 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நிலப்பரப்பையும், உயிர் பல்வகைமை மற்றும் மத, கலாசார விழுமியங்களைக் கொண்ட ஒரு நாடாக இருப்பதால் இங்கு அதிகளவு சுற்றுலாத் துறையினர் வௌியில் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பல நாடுகளில் குளிர் காலநிலை நிலவுகின்ற நிலையில், பூமத்திய ரேகைக்கு அருகில் இலங்கை அமைந்துள்ள காரணத்தால்  இந்த நாட்டில் சிறந்த காலநிலை, வானிலை போன்றன காணப்படுகிறது. இதனால் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது.

இதேவேளை, நாளாந்தம் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிகிரியாவை பார்வையிட வருவதாக மத்திய கலாசார நிதியத்தின் சீகிரியா திட்ட முகாமையாளர் துசித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், வருட இறுதி விடுமுறைக் காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதுடன் சிலரது செயற்பாடுகளினால் சில சுற்றுலாத் தலங்கள் அழிவடைய கூடிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகச் சுற்றுலாத்துறை அமைச்சுக்குப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதன்காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத் தலத்தின் பாதுகாப்பு தொடர்பில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் அக்கறையுடன் செயற்படுமாறு சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி ருவன் ரணசிங்க கோரியுள்ளதாகவும் திட்ட முகாமையாளர் துசித ஹேரத் தெரிவித்தார்.

இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் அனேகர் சீகிரியா மற்றும் கண்டிப் பகுதிக்கு வருகை தந்துள்ளனர். எனவே, குறித்த சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடந்து கொள்ளும் படி  சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் கோரியுள்ளதாக திட்ட முகாமையாளர் துசித ஹேரத் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்