- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
2024-ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட்டிலும், சர்வதேச கிரிக்கெட்டிலும் புதிய சாம்பியன், அணிகளின் மறக்க முடியாத வெற்றிகள், அதிர்ச்சி தரும் தோல்விகள், புதிய எழுச்சி அணிகள், நட்சத்திர வீரர்களின் ஓய்வு என பல சுவாரஸ்யமான சம்பவங்களும், மறக்க முடியாத நிகழ்வுகளும் நடந்தேறின.
அந்த வகையில், இந்த ஆண்டு கிரிக்கெட் உலகில் நடந்தேறிய பல முக்கியமான சுவாரஸ்யமான தருணங்களை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்கலாம்.
இந்திய அணி 2வது முறையாக டி20 சாம்பியன்
இதில் முதலாவதாக அனைவரின் மனதிலும் நீடித்திருப்பது டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 2007-ஆம் ஆண்டு தோனி கேப்டன்ஷியில் இந்திய அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்றிருந்தது.
2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என எதிர்பார்த்திருந்த நிலையில் ஆமதாபாத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. 2024ம் ஆண்டு கரீபியன் தீவுகளில் நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
விராட் கோலியின் பேட்டிங், சூர்யகுமார் யாதவின் கேட்ச், ஹர்திக் பாண்டியாவின் கடைசி ஓவர், பும்ராவின் மின்னல் வேகப் பந்துவீச்சு என பைனல் ஆட்டத்தை இந்திய ரசிகர்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்த வெஸ்ட் இண்டீஸ்
2024, ஜனவரி 25 முதல் 28ம் தேதிவரை பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை உலக கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்கமாட்டார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வீரர்களின் மின்னல் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி 8 ரன்னில் தோல்வி அடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷமர் ஜோஸப் 7 விக்கெட்டுகளை 2வது இன்னிங்ஸில் கைப்பற்றி வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.
கடந்த 1997-ஆம் ஆண்டுக்குப்பின் ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிடைத்த முதல் டெஸ்ட் வெற்றியாக அமைந்தது. அது மட்டுமல்லாமல் பகலிரவு டெஸ்டில் முதல்முறையாக ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தது. உலக டெஸ்ட் சாம்பியனாக வலம் வந்த ஆஸ்திரேலிய அணியை இளம் வெஸ்ட் இண்டீஸ் அணி மண்ணைக் கவ்வ வைத்தது டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்து சென்றது.
ஜெய்ஸ்வால் எழுச்சி
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து, கிரிக்கெட் மீதான தீராக் காதலால் மும்பைக்கு வந்து மைதானத்திற்கு வெளியே பானிபூரி விற்பனை செய்து கிரிக்கெட் கற்றவர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். ஐபிஎல் டி20 தொடர் முதல் இந்திய கிரிக்கெட்டுக்குள் அறிமுகமான ஜெய்ஸ்வாலுக்கு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் தொடர்ந்து இரு டெஸ்ட்களிலும் இரட்டை சதம் அடித்து உலக கிரிக்கெட்டையே திரும்பிப் பார்க்க வைத்தார். விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது டெஸ்டில் ஜெய்ஸ்வால் 209 ரன்களும், ராஜ்கோட்டில் நடந்த 3வது டெஸ்டில் 214 ரன்களும் சேர்த்தார். ஜெய்ஸ்வால் இந்திய அணிக்கு தேடிக் கிடைத்த முத்தாக அமைந்தார்.
2024-ஆம் ஆண்டு ஜெய்ஸ்வாலுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய எழுச்சியை ஏற்படுத்தி, அது ஆஸ்திரேலியப் பயணம் வரை நீடித்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் தொடரிலும் முதல் டெஸ்டில் 150 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.
ஐபிஎல் – கேகேஆர் சாம்பியன்
2024ம் ஆண்டு சீசனின் சாம்பியனாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உருவெடுத்தது. ஒருபுறம் புதிய சாம்பியன் உதயமானாலும், சிஎஸ்கே, ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் பைனலை விட உச்சக்கட்ட பரபரப்பு தந்தது.
முதல் பாதியில் சொதப்பிய ஆர்சிபி அணி பிற்பாதியில் சிறப்பாகச் செயல்பட்டு அனைத்து அணிகளுக்கும் சவாலாக மாறியது. சிஎஸ்கே அணியை ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லவிடாமல் தடுத்த ஆர்சிபியின் ஆட்டம் இரு அணி ரசிகர்களையும் சமூக வலைத்தளத்தில் மோதவிட்ட ஆட்டமாக மாறியது. ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றதைப் போன்று சிஎஸ்கை அணியை தோற்கடித்ததை ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அது மட்டுமல்லாமல் மும்பை அணிக்கு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதை அந்த அணியின் ரசிகர்கள் ஏற்கவில்லை. ஒரு கட்டத்தில் ஹர்திக்கை கடுமையாக விமர்சித்து ரசிகர்கள் வசைபாடியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆர்சிபி அணிக்கு முதல் சாம்பியன் பட்டம்
ஆடவர் ஐபிஎல் டி20 தொடரில் ஆர்சிபி அணி சாம்பியனாவது இலவு காத்த கிளியாக தொடர்கிறது. ஆனால், மகளிர் ஐபிஎல் டி20 தொடரில் முதல் முறையாக ஆர்சிபி மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 8 ரன்களில் வென்று ஆர்சிபி அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
டி20 உலகக்கோப்பை – அதிர்ச்சிகள்
டி20 உலகக் கோப்பை தொடரில் அதிர்ச்சிக்குரிய முடிவுகள் பல போட்டிகளில் நடந்தன. அதில் முக்கியமானது முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி முதல் சுற்றோடு வெளியேறியதுதான். அதிலும் வலிமையான பந்துவீச்சு, பேட்டிங்கை வைத்திருக்கும் பாகிஸ்தான் அணி சூப்பர் ஓவரில் முதல் முறையாக தொடரில் பங்கேற்ற அமெரிக்க(யுஎஸ்ஏ) அணியிடம் தோற்றதுதான்.
சூப்பர் ஓவரில் அமெரிக்க அணி 5 ரன்களில் பாகிஸ்தானை அதிர்ச்சித் தோல்வி அடையச் செய்தது. இ்ந்த உலகக் கோப்பைத் தொடரில் அமெரிக்க அணியின் பேட்டிங், பந்துவீச்சு ஆகியவை, அணியின் எழுச்சி, பெற்ற திடீர் வெற்றிகள் மறக்க முடியாததாக அமைந்தது.
அது மட்டுமல்லாமல் டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் அணி முதல்முறையாக தகுதி பெற்றதை அந்த நாடே கொண்டாடியது. ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் பொது வெளியில் வைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று ஆப்கானிஸ்தான் மோதும் ஆட்டத்தை பார்த்து ரசித்தனர். ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்ததை சாம்பியன் பட்டம் வென்றதைப் போல அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்திய அணியில் மாற்றம்
இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றபின் அணியின் கேப்டன்சியில் எதிர்பாராத மாற்றம் ஏற்பட்டது. ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த நிலையில் புதிய இளம் வீரர்கள் அணிக்குள் வரத் தொடங்கி, புது ரத்தம் பாய்ச்சப்பட்டு அணி தயார் செய்யப்பட்டது.
இலங்கை மகளிர் அணி ஆசிய சாம்பியன்
மகளிருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் இலங்கையில் நடந்தது. இதில் தம்புலா நகரில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இலங்கை அணியின் கேப்டன் சமாரி அட்டப்பட்டு 5 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 305 ரன்கள் சேர்த்து அந்த அணி புதிய ஆசிய சாம்பியனாக உருவெடுக்க முக்கியக் காரணமாக அமைந்தார்.
நியூசிலாந்து புதிய உலக சாம்பியன்
மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் வங்கதேசத்தில் நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால், உள்நாட்டு அரசியல் குழப்பத்தால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. 10 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணியும், தென் ஆப்பிரிக்க அணியும் தகுதி பெற்றன.
துபாயில் நடந்த இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை நியூசிலாந்து மகளிர் அணியினர் வென்றனர். 2000-ஆம் ஆண்டில் ஒருநாள் உலகக் கோப்பையை நியூசிலாந்து வென்றபின் பெரிதாக ஐசிசி கோப்பையை வெல்லாமல் இருந்து வந்தது.
டி20 உலகக் கோப்பையை வெல்ல இருமுறை நியூசிலாந்து மகளிர் அணிக்கு வாய்ப்புக் கிடைத்தும் அதை தவறவிட்டிருந்தது. ஆனால் இந்த முறை நியூசிலாந்து அணி ஐசிசி டி20 உலகக் கோப்பை சாம்பியனானது.
‘குட் பை’ சொன்ன நட்சத்திரங்கள்
2024-ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் பல நட்சத்திர வீரர்கள் ஓய்வு அறிவித்தனர். சிலர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும், சிலர் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டுக்குமே முழுக்குப் போட்டனர்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையே பார்டர் – கவாஸ்கர் கோப்பை நடந்து வரும் நிலையில் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி ஸ்டைலில் திடீரென அறிவித்தார்.
டி20 உலகக் கோப்பை முடிந்தபின் டி20 போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா அறிவித்தனர். ஷிகர் தவண், சித்தார்த் கவுல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அனைத்துவிதமான போட்டிகளிலும் இருந்து ஓய்வை அறிவித்தார்.
சர்வதேச அளவில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்ஸன், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், நீல் வேக்னர், பாகிஸ்தானின் இமாத் வாசிம், முகமது அமீர், இங்கிலாந்தின் டேவிட் மலான்,மேற்கிந்தியத்தீவுகள் அணியின் ஷேனன் கேப்ரியல், மொயின் அலி ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தனர்.
நியூசிலாந்து ஆல்ரவுண்டர் டிம் சவுத்தி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மட்டும் ஓய்வு அறிவித்தார். வங்கதேச வீரர்கள் மகமதுல்லா, சகிப் அல் ஹசன் இருவரும் டி20 போட்டியிலிருந்து மட்டும் ஓய்வு அறிவித்தனர்.
மோசமான தோல்வி
இந்தியாவுக்கு பயணம் செய்து நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடியது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆகி மோசமான தோல்வியை பதிவு செய்தது. நியூசிலாந்து அணி முதல்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று, அதுவும் ஒயிட்வாஷ் செய்து சாதித்தது.
நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் மிட்ச்செல் சான்ட்னர், ஈஷ் சோதி, படேல் ஆகியோரின் துல்லியமான சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய பேட்டர்கள் ஏமாற்றம் கண்டனர். சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றபடி, ஆடுகளத்தை இந்திய அணிக்காக அமைத்த நிலையில், அதே ஆடுகளத்தில் இந்திய அணியை புரட்டி எடுத்துச் சென்றது நியூசிலாந்து அணி.
ஐசிசியில் மீண்டும் இந்தியர்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக பிசிசிஐ முன்னாள் செயலர் ஜெய்ஷா தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார். இதற்கு முன் ஐசிசி தலைவராக இந்தியாவில் இருந்து ஜக்மோகன் டால்மியா, என் ஸ்ரீனிவாசன், ஷசாங் மனோகர், சரத் பவார் ஆகியோர் பதவி வகித்துள்ள நிலையில் தற்போது ஜெய் ஷா அந்த பதவியில் இருக்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.