கிராம அலுவலர் மீது தாக்குதல் சம்பவம் ; மட்டக்களப்பில் போராட்டம் ! on Tuesday, December 31, 2024
கடமையில் இருந்த கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை கண்டித்து, மட்டக்களப்பு மாவட்ட கிராம சேவை உத்தியோகத்தர்கள் நேற்று(30) ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்பட்ட நாசிவன் தீவு கிராமப் பிரிவு உத்தியோகத்தர் ஒருவர், கடந்த 20ஆம் திகதி ஆறு நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையிலேயே, மட்டக்களப்பு மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்னால் மகாத்மா காந்தி பூங்காவில் ஒன்று திரண்ட மாவட்டத்தின் கிராம சேவை உத்தியோகத்தர் சங்க உறுப்பினர்கள் தாக்குல் நடத்திய நபர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் பேராட்டம், மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராமிய உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டம் காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 346 கிராம சேவை உத்தியோகத்தர் அலுவலகங்களும் மூடப்பட்டிருந்தன.
மகாத்மா காந்தி பூங்காவில் ஆரம்பமான இப் போராட்டம் சுமார் 2 மணி நேரம் இடம்பெற்று, பின்னர் மாவட்ட செயலகத்தை நோக்கிச் சென்றது.
இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உத்தியோத்தர்கள், மாவட்ட செயலக வளாகத்தில் கூடிநின்று, மாவட்ட அரசாங்க அதிபர், கிழக்கு மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிக்கான மகஜரொன்றையும் கையளித்தனர்.