ஏமன்: கேரள செவிலியரின் மரண தண்டனைக்கு அதிபர் ஒப்புதல் – காப்பாற்ற உள்ள ஒரே வழி என்ன?

 நிமிஷா

படக்குறிப்பு, ஏமன் நாட்டில், 2017இல் நடந்த ஒரு கொலை வழக்கில் மரண தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நிமிஷா
  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்

கேரளாவின் செவிலியர்கள் பலரும் வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதை கண்டு, தன்னுடைய குடும்பத்தை ஏழ்மையில் இருந்து மீட்கும் கனவுகளுடன் 2008இல் ஏமன் நாட்டிற்கு சென்றவர் செவிலியர் நிமிஷா பிரியா.

ஆனால், இன்று நிமிஷாவை ஏமனில் இருந்து மீட்டுக் கொண்டுவர போராடி வருகிறது அவரது குடும்பம்.

ஏமன் நாட்டில், 2017இல் நடந்த ஒரு கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நிமிஷா.

அவரை மீட்க ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்’ (Save Nimisha Priya International Action Council) என்ற குழுவும், நிமிஷாவின் தாய் பிரேமா குமாரியும் பல்வேறு முயற்சிகள் எடுத்துவந்தனர். இதற்காக மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று கடந்த ஏப்ரல் மாதம் ஏமன் சென்றார் பிரேமா குமாரி.

ஏமன் நாட்டில் ஷரியத் சட்டம் நடைமுறையில் உள்ளதால், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினரிடம் ‘ப்ளட் மணி’ (Blood money) எனும் இழப்பீடு தொகை கொடுத்து மன்னிப்பு பெறுவதன் மூலம் மட்டுமே நிமிஷாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற முடியும்.

இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் நாட்டு அதிபர் மெஹ்தி அல் மஷாத் (ஹூதி பிரிவு)ஒப்புதல் அளித்துள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

நிமிஷா பிரியா எங்கே?

நிமிஷா பிரியா தற்போது ஏமனில் சனா நகரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உள்நாட்டுப் போரால் பிளவுபட்டுள்ள ஏமன் நாடு தற்போது 3 பிரிவினரால் ஆளப்படுகிறது.

சனா உள்ளிட்ட ஏமனின் ஒரு பகுதி ஹூதி கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஹூதிக்களின் அரசியல் பிரிவு தலைவராக உள்ள மெஹ்தி அல் மஷாத், அந்த கிளர்ச்சிக்குழு அமைத்துள்ள ஏமன் குடியரசின்(சனா) அதிபராக செயல்படுகிறார்.

சௌதி அரேபியா ஆதரவுடன் செயல்படும், ஐ.நா. அங்கீகாரம் பெற்ற அரசு ஏமனின் மற்றொரு பகுதியை கட்டுப்படுத்துகிறது. இந்த அரசின் தலைவராக, அதிபர் ரஷாத் அல் அலிமி செயல்படுகிறார்.

மேற்கண்ட இரண்டும் அல்லாத, ஐக்கிய அரபு அமீரக ஆதரவு பெற்ற சதர்ன் டிரான்ஸிஷனல் கவுன்சில் (Southern Transitional Council) ஏடன் துறைமுகம் உள்ளிட்ட ஏமனின் பகுதிகளை கட்டுப்படுத்துகிறது.

நிமிஷா பிரியா வழக்கின் பின்னணி என்ன?

நிமிஷா பிரியாவின் தாயார் பிரேமா குமாரியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசிய போது, இந்த வழக்கு குறித்த முழு விவரங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

“கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த 35 வயதான நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார். அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர் வர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு கணவருடன் ஏமன் சென்றார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். செவிலியர் பணியில் குறைந்த ஊதியமே கிடைத்தது என்பதால் நிமிஷாவின் குடும்பம் அங்கு வசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. எனவே 2014ஆம் ஆண்டு, தனது மகளுடன் கேரளா திரும்பினார் டோமி தாமஸ். நிமிஷா தொடர்ந்து ஏமனில் பணிபுரிந்தார்.” என்று அவர் கூறினார்.

“மீண்டும் தனது குடும்பத்தை ஏமனுக்கு அழைத்து வர, நிதி நிலையை மேம்படுத்த வேண்டும் என்பதால், அங்கு சொந்தமாக ஒரு சிறு மருத்துவமனை தொடங்க விரும்பினார் நிமிஷா. ஆனால், ஏமன் நாட்டுச் சட்டப்படி மருத்துவமனை தொடங்க உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் கட்டாயம் பங்குதாரராக இருக்க வேண்டும். எனவே 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். இந்த மருத்துவமனைக்காக, நிமிஷா தனது நண்பர்கள், உறவினர்களிடம் 50 லட்சம் வரை கடன் வாங்கினார்” என்று பிரேமா குமாரி தெரிவித்தார்.

அதன் பிறகு கணவரையும் மகளையும் ஏமன் அழைத்து வருவதற்கான வேலைகளை அவர் தொடங்கிய போதுதான் அங்கு உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது. அதனால், அவர்களால் ஏமன் செல்ல முடியவில்லை. 2015இல் ஏமனில் வசித்த ஆயிரக்கணக்கான இந்தியர்களை ‘ஆபரேஷன் ரஹாத்’ என்ற பெயரில் மீட்டது இந்திய அரசாங்கம். அப்போது ஏமனில் இருந்து வெளியேறாமல், அங்கேயே தங்க முடிவு செய்த சில இந்தியர்களில் நிமிஷாவும் ஒருவர்.

மருத்துவமனை தொடங்கப்பட்டு, அது சிறப்பாக செயல்படத் தொடங்கியதும் நிமிஷாவுக்கும் உள்ளூர் பங்குதாரர் மஹ்திக்கும் இடையேயான முரண்பாடுகள் அதிகரித்தன என்றும், இது குறித்து பல புகார்களை தொலைபேசியில் பேசும்போது நிமிஷா தெரிவித்தார் என்றும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

பிரேமா

படக்குறிப்பு, நிமிஷாவின் தாயார் பிரேமா, இந்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று ஏமன் சென்றுள்ளார்

கடந்த வருடம், நிமிஷாவின் தாயாரை ஏமன் அனுப்ப அனுமதி கோரி, ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்’ டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “மஹ்தி, உடல் ரீதியாக நிமிஷாவை கொடுமைபடுத்தியதாவும், மருத்துவமனை வருமானம் மொத்தத்தையும் எடுத்துக் கொண்டதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல சந்தர்ப்பங்களில், “மஹ்தி, துப்பாக்கியை வைத்து நிமிஷாவை அச்சுறுத்தியதாகவும்” மற்றும் “நிமிஷா நாட்டை வெளியேறாமல் தடுக்க அவரின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து வைத்துக் கொண்டதாகவும்” அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிமிஷா ஏமன் காவல்துறையிடம் புகார் அளித்த போது, “மஹ்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நிமிஷாவை ஆறு நாட்கள் சிறையில் அடைத்து வைத்ததாகவும்” கூறப்பட்டுள்ளது.

“தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடமிருந்து மீட்க, அவருக்கு மயக்க மருந்து செலுத்த நிமிஷா முடிவு செய்தார். ஆனால் தவறுதலாக மயக்க மருந்தின் அளவு கூடியதால், மஹ்தி உயிரிழந்தார். இந்த வழக்கில் நிமிஷாவும் பாதிக்கப்பட்டவர் தான். அவரை குற்றவாளியாகக் கருத முடியாது” என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் கே.எல்.பாலச்சந்திரன்.

2018இல், கேரளாவின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆணையத்தில் (NRI Commission) நிமிஷா சார்பில் ஆஜரானவர் வழக்கறிஞர் கே.எல்.பாலச்சந்திரன்.

“இந்த வழக்கின் தொடக்கத்தில் நிமிஷாவுக்கு ஏமனில் சட்ட உதவிகள் முறையாக கிடைக்கவில்லை. இதனால் அவர் தரப்பு நியாயத்தைக் கூற முடியவில்லை. மொழி தெரியாமல், அவர்கள் காட்டிய ஆவணங்களில் எல்லாம் அப்போது அவர் கையெழுத்திட்டுவிட்டார்” என்று கூறுகிறார் பாலச்சந்திரன்.

தலோல் அப்டோ மஹ்தி கொலை வழக்கில், 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிமிஷா சிறையில் அடைக்கப்பட்டார்.

2020ஆம் ஆண்டில், ஏமன் தலைநகர் சனாவில் உள்ள நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து நிமிஷா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை ஏமனின் உச்ச நீதிமன்றம் நவம்பர் 2023இல் தள்ளுபடி செய்து, மரண தண்டனையை உறுதி செய்தது.

நவம்பர் 2023இல் உறுதி செய்யப்பட்ட தண்டனையை நிறைவேற்ற ஏமன் அதிபர் மெஹ்தி அல் மஷாத் (ஹூதி பிரிவு) தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

ஏமனில் ஷரியத் சட்டம் அமலில் உள்ளதால், மஹ்தியின் குடும்பம் மன்னிப்பு வழங்கினால், நிமிஷாவால் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும்.

ஏமன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஏமன் செல்ல விரும்புவோர் இந்திய அரசிடமிருந்து தடையில்லா சான்றிதழை பெற வேண்டும்

காப்பாற்ற உள்ள ஒரே வழி என்ன?

நிமிஷா பிரியா வழக்கை ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஜெரோம். பல ஆண்டுகளாக ஏமன் நாட்டில் வானூர்தி ஆலோசகராக பணிபுரியும் ஜெரோம், மஹ்தியின் குடும்பத்தினரின் மன்னிப்பைப் பெறுவதற்கான முயற்சியில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

“கடந்த ஏப்ரலில் இந்தியா வந்து, நிமிஷாவின் அம்மா பிரேமாவை ஏமன் அழைத்து சென்றோம். அவர் இரண்டு முறை சிறையில் நிமிஷாவை சந்தித்துப் பேசினார்.” என்று கூறுகிறார் ஜெரோம்.

நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்ற ஏமனின் அதிபர் மெஹ்தி அல் மஷாத் (ஹூதி பிரிவு) ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதைப் பற்றி பேசிய ஜெரோம்,

“கடந்த வருடம் இந்திய அரசு விடுத்த கோரிக்கையை மதித்து, பல மாதங்களாக அந்த உத்தரவில் கையெழுத்திடாமல் இருந்தார் ஏமன் அதிபர். ஆனால் மன்னனிப்பு பெறுதற்கான செயல்முறையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இப்போது இறுதியாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது” என்கிறார்.

மன்னிப்பு பெறுவதற்கான செயல்முறையில் பணம் பிரதானமல்ல என்று கூறும் ஜெரோம், “ப்ளட் மணி (Blood money) என்பது மன்னிப்பிற்கான ஒரு அடையாளம் மட்டுமே. வேறு சில வழக்குகளில் 5 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 42 கோடிகள்) கொடுத்தும் கூட பாதிக்கப்பட்ட ஏமன் குடும்பங்கள் மன்னிப்பு வழங்கவில்லை. எனவே தான் மஹ்தியின் குடும்பத்தாருடன் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது” என்கிறார்.

சாமுவேல் ஜெரோம்

படக்குறிப்பு, நிமிஷா பிரியா வழக்கை ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஜெரோம்

இந்த மன்னிப்பின் முக்கியத்துவம் குறித்து பேசும் ஜெரோம், “ஏமன் அதிபர் அளித்துள்ள ஒப்புதல், அரசு வழக்கறிஞரின் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். பிறகு அவர் மரண தண்டனையை நிறைவேற்ற ஆணை பிறப்பிப்பதற்கு முன், மஹ்தியின் குடும்பத்தை அழைத்து ‘நிமிஷாவுக்கு தண்டனை வழங்குவதில் ஆட்சேபம் உள்ளதா எனக் கேட்பார்’. அவர்கள் விருப்பமில்லை அல்லது நிமிஷாவை மன்னிக்கலாம் என்று கூறிவிட்டால் உடனே தண்டனை நிறுத்தப்படும்” என்று கூறுகிறார்.

மஹ்தியின் குடும்பத்திடம் மன்னிப்பு கோருவதற்கான பேச்சுவார்த்தைக்கு ஏமனைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்கள் உதவினர் என்றும் ஜெரோம் கூறுகிறார்.

“இந்த பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்வதற்கான செலவுகள் 40,000 அமெரிக்க டாலர்கள் (Pre-negotiation expense- இந்திய மதிப்பில் 34 லட்சம்) இரு தவணைகளாக, இந்திய வெளியுறவுத் துறையால் நியமிக்கப்பட்ட ஏமன் நாட்டின் வழக்கறிஞரின் கணக்கில் செலுத்தப்படும் என்பதே ஒப்பந்தம்.”

“ஆனால் இரண்டாம் தவணை பணம் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை. இதனால் மஹ்தியின் குடும்பத்தினர் விரக்தி அடைந்தனர்” என்கிறார் ஜெரோம்.

ஏமன் வழக்கறிஞருக்கு பணம் அனுப்புவதில் தாமதம்

சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்

பட மூலாதாரம், Save Nimisha Priya International Action Council

படக்குறிப்பு, நிமிஷாவை மீட்பதற்கு தேவையான நிதியை ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்’ நன்கொடை மூலம் திரட்டியது

நிமிஷாவை மீட்பதற்கு தேவையான நிதியை ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்’ நன்கொடை மூலம் திரட்டியது.

நிமிஷாவின் தரப்பில் இருந்து மன்னிப்பு கோருவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க, இந்திய தூதரகத்தால் நியமிக்கப்பட்ட ஏமனிய வழக்கறிஞரின் கணக்கில் பணத்தை செலுத்துவதில் ஏன் தாமதம் ஏற்பட்டது?

இதுகுறித்து சேவ் நிமிஷா குழுவின் நிர்வாகியும், கேரளாவைச் சேர்ந்தவருமான பாபு ஜான் பிபிசி தமிழிடம் விளக்கினார்.

“ஏமனில் அரசியல் ஸ்திரமற்ற தன்மை நிலவுகிறது. 2015இல் வெடித்த உள்நாட்டு போருக்குப் பிறகு, இந்தியா தனது ஏமன் தூதரகத்தை மூடிவிட்டது. எனவே இந்த செயல்முறையில் பல சவால்கள் இருந்தன.”

“பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தேவையான நிதியை நாங்கள் திரட்டி விட்டோம். ஆனால் ஏமன் நாட்டின் வழக்கறிஞருடன் எங்களுக்கு நேரடி தொடர்பு கிடையாது. எனவே அதை வழக்கறிஞருக்கு அனுப்புவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. இதில் யார் மீதும் குற்றம் சொல்ல முடியாது” என்கிறார்.

ஏமனின் பல பகுதிகளை ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கும் ஏமன் அரசுக்கும் இடையே நீண்ட காலமாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. ஹூதி கிளர்ச்சியாளர்களை இந்தியா அங்கீகரிக்கவில்லை.

இந்திய குடிமக்கள் ஏமனுக்கு செல்வது ஆபத்தானதாக இருக்கும் என இந்திய அரசு கருதுவதால், இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு செல்வது போல ஏமனுக்கு சென்று வர இந்தியர்களுக்கு அனுமதியில்லை.

ஏமன் செல்ல விரும்புவோர் இந்திய அரசிடமிருந்து தடையில்லா சான்றிதழை பெற வேண்டும். இதற்காகவே, நிமிஷாவின் தாயார் பிரேமா, ஏமன் செல்ல சிறப்பு அனுமதி கோரி டெல்லா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டியிருந்தது.

ஹூதி கிளர்ச்சியாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஏமனின் பல பகுதிகளை ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்படுத்தி வருகின்றனர்

முழு நிதியும் திரட்டப்பட்ட பிறகும் கூட மொத்தமாக பணத்தை ஏமன் வழக்கறிஞரின் கணக்கில் செலுத்தாமல், இரு தவணைகளாக செலுத்த முடிவு செய்யப்பட்டது ஏன்?

“முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் நேர்மறையாக சென்றால் மட்டுமே, அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பணம் தேவைப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறையால் நியமிக்கப்பட்ட ஏமன் வழக்கறிஞர் கூறியதால்தான் முதல் தவணையை மட்டும் கடந்த ஜூன் மாதம் இந்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம். அதை அரசு அந்த வழக்கறிஞருக்கு அனுப்பியது” என்கிறார் பாபு ஜான்.

இரண்டாவது தவணை டிசம்பர் 27ஆம் தேதி இந்திய அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டது என்றும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு முன்பாகவே ஏமன் அதிபரின் ஒப்புதல் உத்தரவு வெளியாகிவிட்டது என்றும் பாபு கூறுகிறார்.

நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஏமன் அதிபர் மெஹ்தி அல் மஷாத் (ஹூதி பிரிவு) ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று (31.12.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நிமிஷா பிரியா குறித்து வெளியாகியுள்ள உத்தரவு குறித்தும், அவரை மீட்க அவரது குடும்பத்தினர் எடுக்கும் முயற்சிகள் குறித்தும் அறிவோம். இந்திய அரசாங்கம் இவ்விவகாரத்தில் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

“ஏமனைப் பொருத்தவரை, குற்றவாளியின் தண்டனையை நிறைவேற்ற பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தின் (மஹ்தியின் குடும்பம்) ஒப்புதல் முக்கியம். எனவே அவர்களுடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளோம்.” என்கிறார் சாமுவேல் ஜெரோம்.

“நேரம் குறைவாக உள்ளது, ஆனால் கடைசி நேரத்தில் மஹ்தியின் குடும்பம் மனது வைத்தால் எதுவும் மாறலாம் என்பதால் நிமிஷாவை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. நிமிஷாவின் தாய் பிரேமா அந்த நம்பிக்கையில் தான் போராடி வருகிறார்”.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.