உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குச் செல்ல இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளதா?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குச் செல்ல இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளதா?
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் 184 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வியடைந்ததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியுமா என கேள்வி தற்போது எழுந்துள்ளது.
மேலும், அடுத்த போட்டியில் வென்று, பார்டர்-கவாஸ்கர் தொடரையாவது இந்தியா தக்க வைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பார்டர்-கவஸ்கர் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒரு போட்டியை வென்று 1-1-க்கு என இந்த தொடர் சமனிலிருந்த நிலையில், மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில், தொடக்கத்திலிருந்தே ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தி, முதல் இன்னிங்ஸில் 474 ரன்களை குவித்திருந்தது.
மறுமுனையில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் மற்றும் கீழ் வரிசை பேட்ஸ்மேன்களான நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாகச் செயல்பட்டு போட்டியை இந்திய அணிக்குச் சாதகமானதாக திருப்பினர்.
ஃபாலோ ஆன் பெறும் அபாயத்தில் இருந்த இந்திய அணியை நிதிஷ் குமார் சதம் விளாசியும், வாஷிங்டன் அரைசதம் அடித்தும் ஆபத்தில் இருந்து காப்பாற்றினர்
இதன்பின்னர், ஆஸ்திரேலிய அணியை இரண்டாவது இன்னிங்ஸில் குறைந்த ரன்களுக்குள் ஆல்-அவுட் செய்தால் இந்திய அணி வெற்றியை நோக்கி கூட நகரலாம் எனும் சூழல் உருவானது.
இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள், அதிலும் குறிப்பாக பும்ரா சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.
ஆஸ்திரேலிய அணி 36 ஓவரில், 6 விக்கெட்களை இழந்து, 91 ரன்களை மட்டுமே குவித்தது. ஆனால், ஆஸ்திரேலிய லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களுடன் லாபுஷேன் பாட்னர்ஷிப்களை அமைத்தார். குறிப்பாக கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நேதன் லயன் மற்றும் போலண்ட் இந்திய அணியை விரக்தியடையச் செய்தனர். அவர்களது பங்களிப்பால் ஆஸ்திரேலிய அணி முன்னூறுக்கும் அதிகமான இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயிக்க முடிந்தது.
இன்று ஆட்டத்தின் கடைசி நாளில் 340 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை அடுத்தடுத்து ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் எடுத்தனர். குறிப்பாக அனுபவ வீரர்கள் ராகுல், கோலி, ரோகித் அணிக்கு கை கொடுக்க தவறினர்.
26 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 33 ரன்களை மட்டுமே இந்திய அணி குவித்திருந்தது. இந்நிலையில், ஜெய்ஸ்வால் மட்டுமே சிறப்பாக ஆடினார். ஜெய்ஸ்வால் – ரிஷப் பண்ட் உறுதியாக களத்தில் நின்றதால் ஆட்டம் டிராவை நோக்கிச் செல்லும் வாய்ப்பு அதகிரித்தது.
ஆனால் ஹெட் பண்ட்டின் கதையை முடித்தபிறகு, இந்தியாவின் விக்கெட்கள் மளமளவென சரிந்தால் இந்திய அணி 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது.
கடந்த அக்டோபர் மாதம் நியூசிலாந்து தொடருக்கு முன் இந்திய அணிய உலக சாம்பியன்ஷிப் போட்டிகளின் தரவரிசையில் முதலிடத்திலிருந்தது. நியூசிலாந்து தொடரில், மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சொந்த மண்ணிலேயே இந்திய அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மிக முக்கிய பங்கு வகிக்கும் சூழல் உருவானது.
பார்டர்-கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இது இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான நம்பிக்கையை அதிகரித்தது. பிங்க்பால் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற, இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு மீண்டும் கேள்விக்குள்ளாக்கியது.
இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளில் எந்த இரண்டு அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் எனவிருந்த சூழ்நிலையில், இந்திய அணிக்கு மீதமுள்ள போட்டிகள் முக்கியமான போட்டிகளாகின.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்குடனான மூன்றாவது டெஸ்ட் போட்டி, மழையால் ட்ரா ஆனது. இதனால், அடுத்த இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.
தென்னாபிரிக்கா சமீபத்தில் பாகிஸ்தானை வென்று இறுதிப்போட்டிக்கு அதிகாரபூர்வமாக தகுதி பெற்றுவிட்டது. இந்தச் சூழலில் இந்திய அணி 3-1 என ஆஸ்திரேலிய அணியை வென்றால் மட்டுமே நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பு அதிகரிக்கும் எனும் சூழல் உருவானது.
இந்நிலையில், நான்காவது டெஸ்டில் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால், உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தவறவிடும் தருவாயில் உள்ளது. ஆஸ்திரேலிய அணியுடனான ஐந்தாவது போட்டியில் வென்றாலும், இந்திய அணி இதர போட்டிகள் முடியும் வரை காத்திருக்க வேண்டும்.
அதாவது, ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியுடனான இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தால் அல்லது ஒரு போட்டியில் தோல்வியடைந்து மற்றொரு போட்டி சமனில் முடிந்து இலங்கையிடம் தொடரை இழந்தால் மட்டுமே இந்திய அணி உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியும்.
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை, அவர்கள் இனி ஆடவுள்ள மூன்று போட்டிகளில் எதாவது ஒரு போட்டியை வென்றாலே WTC இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியும்.
இந்திய அணியின் செயல்பாட்டை விமர்சிக்கும் வகையில் பதிவிட்டுள்ள ஹர்ஷா போக்லே தனது எக்ஸ் பக்கத்தில், “முன்னணி வீரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எப்போதும் கடிமானது. அதே வீரர் கேப்டனாக இருக்கும்போது அது மேலும் கடினமாகிறதா? தேர்வுக்குழுவினரிடம் இருந்து பெரிய அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வரவுள்ளது,” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரோஹித் ஷர்மா, “பேட்ஸ்மேனாக மற்றும் கேப்டனாக சில முடிவுகள் எதிர்பார்த்தவாறு வராமல் இருப்பது ஏமாற்றமாக உள்ளது. மேலும் மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இப்போது ஒரு அணியாக இதை நாங்கள் அணுக வேண்டும்” எனக் கூறினார்.
மேலும் விவரம் காணொளியில்…
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.