இளைஞருக்கு மரண தண்டனை: கல்லூரி மாணவி கொலையில் தண்டனை கிடைப்பதை உறுதி செய்தது எப்படி? விசாரணை அதிகாரி தகவல்
- எழுதியவர், அம்ரிதா பிரசாத்
- பதவி, பிபிசி தமிழ்
கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் ரயில் முன்பு தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சதீஷ் என்ற இளைஞர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இரண்டு ஆண்டுகள் விசாரணை நீடித்த இந்த வழக்கில், நீதிமன்றம் இன்று (டிசெம்பர் 30) தீர்ப்பு வழங்கியது. சதீஷ் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கில் இதுவரை என்ன நடந்தது? நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?
வழக்கின் பின்னணி
சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த மாணிக்கம் – ராமலட்சுமி தம்பதியின் மகள் சத்யப்ரியா. இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிபிஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அந்த சமயத்தில் ராமலட்சுமி, தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வந்தார்.
இவர்களது வீட்டிற்கு எதிரே, ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் தயாளன் என்பவர் வசித்தார். இவரது மகன்தான் தற்போது நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள சதீஷ்.
சதீஷூக்கும் சத்யப்ரியாவுக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்ததாகவும், ஒரு கட்டத்தில் இருவரும் பிரியும் நிலை ஏற்பட, அதனை ஏற்காத சதீஷ் சத்யப்ரியாவை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் காவல்துறையினர் கூறினர். அதன் தொடர்ச்சியாகவே, பரங்கிமலை ரயில் நிலையத்தில் அந்த கொடூரம் நடந்தது.
2022ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி பிற்பகலில், சத்யப்ரியா கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது சதீஷூம் அங்கு வந்தார்.
ரயில் நிலைய நடைமேடையிலே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, அந்த நேரத்தில் ரயில் நிலையத்திற்குள் வந்து கொண்டிருந்த ரயில் முன்பாக சத்யப்ரியாவை சதீஷ் தள்ளிவிட்டுள்ளார். ரயில் மோதியதில் சத்யப்ரியா அங்கேயே உயிரிழந்தார். சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தமிழ்நாடு காவல்துறை தனிப்படை அமைத்து தேடி, 24 மணி நேரத்திற்குள் சதீஷை கைது செய்தது.
சத்யப்ரியா இறந்த அதே நாளில், அவரது தந்தை மாணிக்கம் துக்கம் தாளாமல் தற்கொலை செய்துகொண்டார். பல நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த அவரது தாயும் அடுத்து வந்த நாட்களில் உயிரிழந்தார்.
தொடக்கத்தில் ரயில்வே காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கானது, சில நாட்களிலேயே சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியான சத்யப்ரியாவின் தோழி உட்பட 70க்கும் மேற்பட்டவர்களின் சாட்சியங்களையும், தடயவியல் சான்றுகளையும் மற்றும் சிசிடிவி ஆதாரங்களையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது. 2 ஆண்டு விசாரணை முடிவில் நீதிபதி ஸ்ரீதேவி இன்று தீர்ப்பு அளித்தார்.
நீதிமன்ற தீர்ப்பு என்ன?
இந்த வழக்கில் சதீஷ்தான் குற்றவாளி என்பது நிரூபணமாகி இருப்பதாக அறிவித்த நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அத்துடன், அவருக்கு 25,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
தமிழக அரசின் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சதீஷூக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பின் மேல் முறையீட்டு நேரம் முடிந்த பிறகு மொத்த அபராத தொகையில் இருந்து 25,000 ரூபாய், சத்யப்ரியாவின் சகோதரிகளுக்கு அளிக்கப்படும்.
தமிழ்நாடு அரசு , சத்யப்ரியாவின் சகோதரிகளுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சதீஷ் குடும்பத்தினர் பேச மறுப்பு
“சதீஷ் அங்கிருந்து உடனடியாக தப்பிச் செல்லவில்லை. சத்யப்ரியாவின் உடல் மீது ரயில் ஏறி செல்லும்வரை காத்திருந்து அவரது இறப்பை உறுதிப்படுத்திய பின்பே சென்றுள்ளார். இதுபோன்ற சில அம்சங்களையும், கொலைக்கான திட்டத்தையும் ஆதாரங்களையும் கருத்தில் கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது”, என்று செய்தியாளர்களிடம் அரசு தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரநாத் ஜெயபால் குறிப்பிட்டுள்ளார்.
சதீஷின் குடும்பத்தினர் நீதிமன்றத்திற்கு வந்திருந்த போதிலும், இது குறித்து அவர்கள் பேச மறுத்துவிட்டனர்.
இளைஞருக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்தது எப்படி?
பிபிசி தமிழிடம் பேசிய விசாரணை அதிகாரியான சிபிசிஐடி டி.எஸ்.பி. ரம்யா, “பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட சிசிடிவி காட்சிகளை வைத்து சதீஷை அடையாளம் கண்டு குண்டர் சட்டத்தில் அவரை கைது செய்தோம். அவரை பிணையில் எடுக்க முடியாத அளவிற்கு 90 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர் சிறையில் இருக்கும் போதே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது”, என்றார்.
“நீதிமன்றம் விதித்துள்ள 3 வருட சிறைத் தண்டனையில், சதீஷ் ஏற்கனவே சிறையில் இருந்த இரண்டு வருட காலம் கழித்து கொள்ளப்படும்.” என்று டி.எஸ்.பி. ரம்யா தெரிவித்தார்.
“மரண தண்டனையை வைத்து எதுவும் செய்ய முடியாது”
பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட குற்றத்திற்கு நீண்ட காலத்திற்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், இந்த மரண தண்டனையை தான் ஆதரிக்கவில்லை என்று பெண் உரிமைகள் செயல்பாட்டாளர் ஷாலின் மரியா லாரன்ஸ் கூறுகிறார்.
“இதுபோன்ற சில குற்றங்கள் நடக்கையில் மக்களிடையே அதிக கோபம் இருக்கும். நீதிமன்றம் விதித்துள்ள மரண தண்டனை மக்களின் அப்போதைய கோபத்தை தணிக்கவே உதவும். ஆனால் எந்த விதத்திலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதில் இது பலன் தராது. காவல்துறை குடியிருப்பில் வசித்து வந்த ஒரு பெண்ணுக்கே இப்படியான ஒரு கொடூரம் நிகழ்ந்திருப்பது, இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்புகிறது” என்று ஷாலின் மரியா லாரன்ஸ் தெரிவிக்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.