பாக்ஸிங் டே டெஸ்டில் தோல்வி: கோலி, ரோஹித்தை விமர்சிக்கும் ரசிகர்கள் – டெஸ்ட் சாம்பியன் பைனலுக்கு இந்தியா முன்னேறுமா?
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 184 ரன் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலிய அணி.
இரண்டாவது இன்னிங்ஸில் 340 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய அணி 79.1 ஓவர்களில் 155 ரன்களுக்கு ஆட்டமிழந்து 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடைசி 7 விக்கெட்டுகளை 34 ரன்களுக்கு, 20 ஓவர்களில் இந்திய அணி இழந்தது.
இந்திய அணி சேர்த்த 155 ரன்களில் ஜெய்ஸ்வால் மட்டும் 84 ரன்கள் சேர்த்துள்ளார்.
இதன் மூலம் 5 போட்டிகள் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 3வது முறையாக விளையாடுவதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளனவா?
தோல்விக்கான காரணம் என்ன?
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாகக் கருதப்பட்ட டாப்ஆர்டர் பேட்டர்கள் கேப்டன் ரோஹித் சர்மா(8), கே.எல்ராகுல்(0), விராட் கோலி(5), ஜடேஜா(2), ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது தோல்விக்கு முக்கியக் காரணமாகும்.
121 ரன்கள் வரை இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து மட்டுமே வலுவாகத்தான் இருந்தது. ஆனால், அடுத்த 34 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளையும் இந்திய அணி பறிகொடுத்துள்ளது. ரிஷப் பந்த், ஜெய்ஸ்வால் கூட்டணி 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை ஓரளவுக்கு காத்து நின்றனர். அதன்பின் வந்த பேட்டர்கள் யாரும் ஜெய்ஸ்வாலுக்கு ஒத்துழைத்து பேட் செய்யவில்லை.
இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தங்களால் இயன்ற சிறந்த பங்களிப்பை இந்த டெஸ்ட் தொடர் முழுவதும் அளித்து வருகிறார்கள். குறிப்பாக பும்ரா இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிராஜ், ஆகாஷ் தீப் இருவரும் சிறப்பாகவே பந்துவீசி வருகிறார்கள்
ஆனால், பேட்டிங்கைப் பொருத்தவரை முன்னணி வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ஜடேஜா, ரிஷப் பந்த் ஆகியோர் இதுவரை தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கவில்லை.
ஜெய்ஸ்வால் முதல் போட்டியில் 150 ரன்களை அடித்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். இந்த டெஸ்ட் போட்டியில் 84 ரன்கள் சேர்த்து இந்த அளவு போராடினார்.
டிரா செய்வதற்கான வாய்ப்பு
ரிஷப் பந்த், ஜெய்ஸ்வால் கூட்டணி ஆட்டத்தை டிராவை நோக்கி மெல்ல நகர்த்தியது. இதனால் வெற்றி கிடைக்காவிட்டாலும் டிரா செய்யலாம் என்று ரசிகர்கள் ஆறுதல் அடைந்தனர்.
ஆனால், டிராவிஸ் ஹெட் வீசிய பந்தை தேவையில்லாமல் அவுட்சைட் ஆஃப் திசையில் சென்ற பந்தை லாங் ஆன் திசையில் தூக்கி அடிக்க ரிஷப் பந்த் முயன்றார், ஆனால், பவுண்டரி எல்லையில் மார்ஷால் கேட்ச் பிடிக்கப்பட்டார்.
போட்டியில் ஒரு பேட்டர் ஆட்டமிழந்தவுடன் பந்துவீச்சாளர் உள்ளிட்ட எதிரணியினர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கமானது. ஆனால், ரிஷப் பந்த் ஆட்டமிழந்தவுடன் டிராவிஸ் ஹெட் அதைக் கொண்டாடும் வகையில் ரசிகர்களை நோக்கி காட்டிய செய்கை முகம் சுழிக்கும் வகையில் இருந்தது.
கோலி, ரோஹித் ஏமாற்றம்
பார்டர் – கவாஸ்கர் கோப்பைத் தொடரை இந்திய அணி தக்கவைக்குமா அடுத்து கடைசியாக நடக்கவுள்ள சிட்னி டெஸ்டில்தான் தெரியும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்திய அணி முன்னேறுமா என்பதும் அப்போது தெளிவாகும். அதே நேரத்தில் ரோஹித் சர்மா, கோலி, ஜடேஜா ஆகியோரின் டெஸ்ட் வாழ்க்கையும் முடிவுக்கு வருமா என்பது சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
இதுவரை ரோஹித் சர்மா 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியும் மொத்தமாக 100 பந்துகளைக் கூட சந்திக்கவில்லை. 2வது இன்னிங்ஸில் 9 பந்துகளை மட்டுமே சந்தித்துள்ளார். கோலி முதல் போட்டியில் சதம் அடித்தபின் பெரிதாக எந்த போட்டியிலும் ஸ்கோர் செய்யவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் இருவருமே ஜாம்பவான்களாக திகழ்பவர்கள்தான்.
ஆனால், இப்போது இருவரும் ஃபார்மின்றி தவிப்பதுடன் அணிக்கு சுமையாக மாறிவிட்டார்கள் என்று ரசிகர்கள் ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பு உள்ளதா?
இந்திய அணி மெல்போர்ன் டெஸ்டில் அடைந்த தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு குறைந்துவிட்டது. தற்போது இந்திய அணி 18 போட்டிகளில் 9 வெற்றி 7 தோல்வி, 2 டிரா என 114 புள்ளிகளுடன் 52.78 வெற்றி சதவீதமாகக் குறைந்து 3வது இடத்தில் இருக்கிறது.
இந்த டெஸ்டில் பெற்ற வெற்றியால் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி சதவீதம் 61.46 ஆக உயர்ந்துள்ளது.
இந்திய அணிக்கு இன்னும் ஒரு டெஸ்ட் மட்டுமே மீதமிருக்கிறது. ஆனால், ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு பயணம் செய்து 2 டெஸ்ட்களில் விளையாட இருக்கிறது. அதில் ஒரு டெஸ்டில் வென்றாலோ அல்லது டிரா செய்தாலோ பைனலுக்கு தகுதி பெற்றுவிடும்.
சிட்னி டெஸ்டில் இந்திய அணி வென்றால் டெஸ்ட் தொடர் 2-2 என்று சமனில் முடியும். அப்போது இந்திய அணி 55.26 சதவீதத்துடன் முடிக்கும். இலங்கை அணி 1-0 என்று ஆஸ்திரேலிய அணியை வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றினால், இந்திய அணிக்கு வாய்ப்புள்ளது.
எனவே இந்திய அணி கடைசி டெஸ்டில் கட்டாயமாக வென்றால் மட்டும் போதாது, ஆஸ்திரேலிய அணியை 1-0 என்று இலங்கை அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றினால்தான் வாய்ப்புக் கிடைக்கும்.
ஒருவேளை சிட்னி டெஸ்டில் இந்திய அணி டிரா செய்தால் 51.75 சதவீதத்துடன் முடிக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பு பறிபோய்விடும்.
அவ்வாறான சூழலில், ஆஸ்திரேலிய அணி இலங்கையிடம் டெஸ்ட் தொடரை இழந்தாலும் அந்த அணி பைனல் செல்வதில் எந்த சிக்கலும் இல்லை. ஆதலால், சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி டிரா செய்தாலே அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் செல்வது உறுதியாகிவிடும்.
‘வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டோம்’
தோல்விக்குப் பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. நாங்கள் முழுமையான போராட்டக் குணத்தை வெளிப்படுத்தி விளையாடவில்லை, கடைசிப் பந்து வரை போராட நினைத்தோம். ஆனால், எங்களால் முடியவில்லை.” என்றார்.
கடைசி இரு செஷன்களிலும் ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றார்போல் விளையாடுவது கடினமாக இருந்தது என்று கூறிய அவர், “இந்த டெஸ்ட் முழுவதையும் கவனித்தால் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது, ஆனால், நாங்கள் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை.” என்று கூறினார்.
“ஆஸ்திரேலிய அணியை 2வது இன்னிங்ஸில் 90 ரன்களுக்கு 6 விக்கெட் என்று நிலைக்கு கொண்டுவந்தோம். ஆனால் அதன்பின் ஆட்டத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியவில்லை, சில விஷயங்கள் கடினமானவை என எங்களுக்குத் தெரியும். கடினமான சூழலில் நாங்கள் கடினமான கிரிக்கெட்டை விளையாட விரும்பினோம்.”
“போதுமான அளவு எங்களின் திறனையை வெளிப்படுத்த முடியவில்லை, இது குறித்து அணி வீரர்களிடமும் ஆலோசித்தோம். கடைசி விக்கெட் வரை போராடியும் எங்களால் வெல்ல முடியவில்லை. 340 ரன்கள் இலக்கு கடினமானது என எங்களுக்குத் தெரியும். கடைசி இரு செஷன்களில் விக்கெட்டை கைவசம் வைத்திருக்க விரும்பினோம். ஆனால், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சிறப்பாகப் பந்துவீசினர். வெற்றி பெறுவதற்கான வழியை தேடுவதில் நாங்கள் தோற்றுவிட்டோம்.” என்றும் கூறினார் ரோஹித் சர்மா.
நிதிஷ் குமார் பற்றி பேசிய ரோஹித், “இங்கு முதல் முறையாக வந்துள்ளார். இந்த சூழல் கடினமானதுதான். ஆனால் அவர் அருமையாக விளையாடினார் பேட் செய்தார். அவரின் சிறப்பான ஆட்டத்தை அளித்தார்.” என்று கூறினார்.
மேலும், “பும்ராவின் பந்துவீச்சு இந்தத் தொடரில் அற்புதமாக இருக்கிறது. அவருக்கான பணியை சிறப்பாகச் செய்தார். நாட்டுக்காக, அணிக்காக விளையாடக் கூடியவர் பும்ரா, சுய சாதனையை விரும்பாதவர், ஆனால், அவருக்கு துணையாக மற்ற பந்துவீச்சாளர்கள் பந்துவீசவில்லை” எனத் தெரிவித்தார் கேப்டன் ரோஹித் சர்மா.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.