மன்மோகன் சிங்கை அரசு அவமதித்துவிட்டது! – இறுதிச் சடங்கு இட விவகாரத்தில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு “மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குக்கு இடம் ஒதுக்காமல், நிகம்போத் காட் எரியூட்டுத் தலத்தில் நிகழ்த்த வேண்டிய நிலையை உருவாக்கியதன் மூலம் அரசு அவரை முற்றிலுமாக அவமதித்துவிட்டது” என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்திய அன்னையின் மகத்தான புதல்வரும், சீக்கிய சமூகத்தின் முதல் பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகளை நிகம்போத் காட்டில் நிகழ்த்த வேண்டிய நிலையை ஏற்படுத்தியதன் மூலம் தற்போதைய அரசு அவரை முற்றிலும் அவமதித்துள்ளது. அவர் 10 ஆண்டு காலம் இந்தியாவின் பிரதமராக இருந்தவர். அவரது பதவிக் காலத்தில் நாடு பொருளாதார வல்லரசாக மாறியது. அவரது கொள்கைகள் இன்னும் நாட்டின் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஆதரவாக உள்ளன.
இதுவரை, அனைத்து முன்னாள் பிரதமர்களின் கண்ணியத்துக்கு மதிப்பளித்து, அவர்களின் இறுதிச் சடங்குகள் அங்கீகரிக்கப்பட்ட நினைவிடங்களில் நடத்தப்பட்டன. இதனால் ஒவ்வொரு நபரும் எந்தவித சிரமமும் இன்றி அஞ்சலி செலுத்தினர். டாக்டர். மன்மோகன் சிங் நமது உயரிய மரியாதைக்கும் தனி நினைவிடத்துக்கும் தகுதியானவர். தேசத்தின் இந்த மகத்தான மகனுக்கும் அவரது புகழ்பெற்ற சமூகத்துக்கும் அரசு மரியாதை காட்டியிருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குக்கு இடம் ஒதுக்காததன் மூலம் அரசு தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்திவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “டாக்டர் மன்மோகன் சிங் போன்ற ஒரு சிறந்த ஆளுமையின் தகனம் மற்றும் நினைவிடம் தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாங்கம் தேவையற்ற சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு நாட்டு மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அதன்பின், மக்களின் உணர்வுகளின் அழுத்தத்தால், பாஜக அரசு நினைவிடம் கட்ட எதிர்காலத்தில் இடம் ஒதுக்கப்படும் என அறிவித்தது. மரியாதைக்குரிய ஒரு நபரின் தகனத்தை எந்த விசேஷ இடத்திலும் நடத்தாமல் நிகாம் போத் மயானத்தில் இந்திய அரசு நடத்துகிறது.
2010-ல், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் இறந்தபோது, பாஜகவின் கோரிக்கை இன்றி, காங்கிரஸ் அரசு, அவரது குடும்பத்தினரிடம் பேசி, ஜெய்ப்பூரில் அவரது இறுதிச் சடங்குகளுக்காக உடனடியாக ஒரு சிறப்பு இடத்தை ஒதுக்கி, அங்கு நினைவிடம் கட்டப்பட்டது. 2012-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் பால் தாக்கரேவின் மரணத்துக்குப் பிறகு, காங்கிரஸ் அரசு அவரது இறுதிச் சடங்குகளுக்காக மும்பை சிவாஜி பூங்காவில் ஒரு சிறப்பு இடத்தை ஒதுக்கியது. அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் காங்கிரஸ் எப்போதும் மரியாதையுடன் விடை அளித்துள்ளது. ஆனால், மன்மோகன் சிங் விஷயத்தில் பாஜகவின் இத்தகைய நடத்தை துரதிருஷ்டவசமானது” என்று தெரிவித்துள்ளார்.