- எழுதியவர், ஸ்டீவ் ரோசன்பெர்க்
- பதவி, ஆசிரியர், பிபிசி ரஷ்ய சேவை
-
என்னால் 1999-ஆம் ஆண்டு புத்தாண்டை மறக்கவே முடியாது.
பிபிசியின் மாஸ்கோ அலுவலகத்தில் தயாரிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அன்றைய தினம் யாரும் எதிர்பார்க்காத ஒரு அவசர செய்தி வந்தது.
‘ரஷ்ய அதிபர் போரிஸ்யெல்ட்சன் பதவி விலகினார்’ என்னும் செய்திதான் அது.
அவரது ராஜினாமா முடிவு மாஸ்கோவில் இயங்கி வந்த பிரிட்டிஷ் பத்திரிகை குழு உள்பட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
செய்தி வெளியான நேரத்தில் அலுவலகத்தில் செய்தியாளர் யாரும் இருக்கவில்லை. ஆகையால் பிபிசிக்கான எனது முதல் ரிப்போர்ட்டிங்கையும் செய்தி ஒளிபரப்பும் பணியையும் நானே செய்யத் தயாரானேன்.
“முழு பதவிக் காலத்தை நிறைவு செய்வேன் என போரிஸ் யெல்ட்சன் கூறி வந்தார். ஆனால், இன்று அவர் தனது மனதை மாற்றிக்கொண்டதாக ரஷ்யர்களிடம் கூறியுள்ளார்” என்று நான் எழுதினேன்.
அன்று ஒரு செய்தியாளராக என் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினேன். அதேநேரம், ரஷ்யாவின் அதிபராக விளாதிமிர் புதினின் ஆட்சிக்காலமும் ஆரம்பமானது.
யெல்ட்சன் ராஜினாமாவை தொடர்ந்து, ரஷ்ய அரசியலமைப்பின்படி பிரதமர் புதின் தற்காலிக அதிபரானார். மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
அதிபர் மாளிகையான கிரெம்ளினை விட்டு வெளியேறும்போது, யெல்ட்சன், “ரஷ்யாவை கவனித்துக் கொள்ளுங்கள்!” என்று புதினிடம் கேட்டுக்கொண்டார்.
கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கிய யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள நேரம் நெருங்கும் நிலையில், முன்னாள் அதிபர் யெல்ட்சனின் அந்த அறிவுரை எனக்கு மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறது.
யுக்ரேன் மீதான அதிபர் புதினின் முழு அளவிலான படையெடுப்பு பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதே அதற்குக் காரணம்.
முதன்மையாக, யுக்ரேன் அதன் நகரங்களில் மிகப்பெரிய அழிவையும் உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளது. அதன் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 20 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, ஒரு கோடி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
கால் நூற்றாண்டுக்கு முன்பு புதின் ஆட்சிக்கு வந்ததில் இருந்து நான் அவரைப் பற்றிச் செய்தியளித்து வருகிறேன்.
ரஷ்யாவில் புதிதாகப் பதவியேற்கும் அதிபர் 25 ஆண்டுகள் கழித்தும் ஆட்சியில் இருப்பார் என்றோ, யுக்ரேன் மீது போர் தொடுத்ததோடு மேற்குலகுடனுன் மோதும் என்றோ, 1999 டிசம்பர் 31-ஆம் தேதியன்று யார் நினைத்திருப்பார்கள்?
யெல்ட்சன் தனக்குப் பிறகு, புதினுக்கு பதிலாக வேறு ஒருவரைத் தேர்வு செய்திருந்தால் வரலாற்றின் போக்கு முற்றிலும் மாறியிருக்குமா என்று நான் அடிக்கடி சிந்தித்து உள்ளேன். இந்தக் கேள்வி நிச்சயமாக ஓர் ஊகம் மட்டுமே. வரலாறு என்பதே ‘ஆயின், ஆனால், இருக்கலாம்’ என்பவற்றால் நிறைந்ததுதானே!
இருப்பினும் என்னால் ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும்: கடந்த 25 ஆண்டுகளில் நான் வெவ்வேறு புதின்களை பார்த்துள்ளேன்.
அப்படி வெவ்வேறு புதின்களை பார்த்திருப்பது நான் மட்டுமே அல்ல.
“நேட்டோ-ரஷ்யா கவுன்சிலை உருவாக்குவது, வணிகத்தின் மீது கவனம் செலுத்துவது, நேட்டோவுடன் ஒத்துழைப்பது போன்றவற்றில் கவனம் செலுத்திய புதினை நான் சந்தித்தேன். அவர், நாம் இப்போது பார்க்கும் தனது சொந்த அதிகாரத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்தும் தற்புகழ்ச்சி கொண்ட புதினில் இருந்து முற்றிலும் வேறுபட்டவராக இருந்தார்,” என்று முன்னாள் நேட்டோ தலைவர் லார்ட் ராபர்ட்சன் 2023இல் என்னிடம் கூறினார்.
“மே 2002இல் எனக்குப் பக்கத்தில் நின்று, யுக்ரேன் தனது பாதுகாப்பு பற்றிய சொந்த முடிவுகளை எடுக்கவல்ல ஓர் இறையாண்மை கொண்ட, சுதந்திரமான தேசம் என்று கூறியவர், இப்போது யுக்ரேன் ஒரு தனிநாடு அல்ல என்கிறார்.”
“விமர்சனங்களை ஏற்காத விளாதிமிர் புதினுக்கு தனது நாடு குறித்து மிகப்பெரிய லட்சியம் உள்ளதாக நான் நினைக்கிறேன். சோவியத் யூனியன் உலகின் இரண்டாவது வல்லரசாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், அப்படியொரு பெயரை ரஷ்யாவால் பெற முடியவில்லை. இது புதினின் ஈகோவை காயப்படுத்தி இருக்கும் என்று நான் கருதுகிறேன்,” என்றார் ராபர்ட்சன்.
புதினிடம் நாம் கண்டுள்ள இந்த மாற்றத்திற்கு அதுவொரு காரணமாக இருக்கக்கூடும். “ரஷ்யாவை மீண்டும் சிறந்ததாக்க வேண்டும்” (அதோடு, பனிப்போரில் ரஷ்யா தோல்வியடைந்து விட்டதாகப் பலர் கூறுவதை ஈடு செய்ய வேண்டும்) என்பதே அவரது லட்சியமாக இருந்தது. அண்டை மற்றும் மேற்கு நாடுகளுடன் தவிர்க்க முடியாத மோதல் போக்கு சூழ்நிலையில் ரஷ்யாவை இது தள்ளியது
ஆனால், ரஷ்ய அதிபர் மாளிகையிடம் இதற்கு வேறு விளக்கம் உள்ளது.
‘பல ஆண்டுகளாக ரஷ்யா பொய்யுரைக்கப்பட்டு, அவமரியாதைக்கு ஆளாகப்பட்டுள்ளது, அதன் பாதுகாப்புக் கவலைகள் மேற்கு நாடுகளால் நிராகரிக்கப்பட்டது’ போன்ற உணர்வுகளால் தனக்கு ஏற்பட்ட மனக்கசப்பின் விளைவாக புதின் செயல்படுவதைப் போல, அவரது உரைகள், கருத்துகள் இருக்கின்றன.
ஆனால், “ரஷ்யாவை கவனித்துக் கொள்ளுங்கள்” என்ற யெல்ட்சனின் கோரிக்கையைத் தான் நிறைவேற்றி விட்டதாக புதின் நம்புகிறாரா?
அதைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ஒன்று சமீபத்தில் கிடைத்தது.
ரஷ்ய அதிபர் புதின் ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும், அந்த ஆண்டில் நடந்த நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிப்பது வழக்கம்.
அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான செய்தியாளர் சந்திப்பு நான்கு மணிநேரத்திற்கும் மேலாக நடந்தது. புதின் என்னை ஒரு கேள்வி கேட்பதற்கு அழைத்தார்.
“ரஷ்யாவை கவனித்துக் கொள்ளுங்கள் என்று போரிஸ் யெல்ட்சன் உங்களிடம் கூறினார்” என்று அதிபருக்கு நினைவூட்டிய நான், “ஆனால் நீங்கள் மேற்கொண்டுள்ள ‘சிறப்பு ராணுவ நடவடிக்கையால்’ ஏற்பட்டுள்ள கணிசமான இழப்புகள், குர்ஸ்க் பிராந்தியத்தில் இருக்கும் யுக்ரேனிய படைகள், பொருளாதாரத் தடைகள், அதிக பணவீக்கம் ஆகியவற்றுக்கு என்ன பதில்? உங்கள் நாட்டை நீங்கள் நன்றாக கவனித்துக் கொண்டதாகக் கருதுகிறீர்களா?” என்று கேள்வியெழுப்பினேன்.
அதிபர் புதின் அதற்கு “ஆம்” என்று பதிலளித்தார். அதோடு, “நான் என் நாட்டைக் கவனித்துக்கொள்வது மட்டுமில்லை, அதை பாதாளத்தின் விளிம்பில் இருந்து காப்பாற்றியுள்ளேன்,” என்று குறிப்பிட்டார்.
அவர் யெல்ட்சன் ஆட்சியில் இருந்த ரஷ்யா அதன் இறையாண்மையை இழந்து கொண்டிருந்த ஒரு நாடாகச் சித்தரித்தார்.
“ரஷ்யாவை தனது சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொண்ட” மேற்கு நாடுகள் அதனால் யெல்ட்சனுக்கு “ஆதரவாக இருந்ததாக” அவர் குற்றம் சாட்டினார். ஆனால் ரஷ்யா ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடு என்பதை உறுதிப்படுத்த தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வதாக புதின் கூறினார்.
புதின் தன்னை ரஷ்ய இறையாண்மையின் பாதுகாவலராகக் காட்டிக் கொள்கிறார்: இது யுக்ரேன் போரை நியாயப்படுத்தும் முயற்சியில் அவருக்குக் கிடைத்த பார்வையா? அல்லது நவீன ரஷ்ய வரலாற்றில் புதின் உண்மையாகவே இப்படி நம்புகிறாரா?
அது இன்னும் எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், இதுவொரு முக்கியக் கேள்வி என்பதை நான் உணர்கிறேன்.
அதற்கான பதில், போரின் முடிவு எப்படி இருக்கப் போகிறது, ரஷ்யாவின் எதிர்கால திசை எதை நோக்கி இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்தே அமையும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.